வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 1 - 05 - 2005

குறும்பாக்கள்

விதை

தன்னை விழுங்கி
ஏப்பம் விட்டதற்காக
வேப்பம்பழம்
சாகத்தைப் பார்த்துக்
கவலைப்படவில்லை
காகத்தின் எச்சத்தில் இருந்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்தது..
உச்சத்தை நோக்கி.

சென்கவி - வள்ளியூர். நன்றி : வள்ளியூர் தென்றல் (57)


உரை வீச்சுகள்

பார்வையற்றோர் பள்ளி
சுதந்திர தினவிழா
நிறமில்லா கொடி.

நாணற்காடன்


கைநிறைய குங்குமம்
வைத்துக் கொள்ள
மனமில்லை.
மகள் விதவை !

வி.சங்கீதா.

விழுவது எழுவதற்கே
உணர்த்துகிறது
மழைத் துளி.

இரா. தேவசேனா.

நன்றி :-
குறிஞ்சி வட்டம் (1)


அம்மா

முகிலைப் பிழிந்தால் மழை
ஆடு தின்னும் தழை
ஊக்கம் கொண்டு உழை.
அம்மா என்றே அழை.

கீரை கடையும் மத்து
சண்டையில் விழுந்திடும் குத்து
நமக்கு வேண்டும் சத்து.
நல்லோர் அறிவே சொத்து.

பெற்றெடுத்தவள் தாய்
படுக்க உதவும் பாய்
கனிக்கு முன்னர் காய்
வீட்டைக் காக்கும் நாய்.

கு.அ.தமிழ்மொழி - ஆறாம் வகுப்பு
நன்றி : மணிக்குயில - மேழம் இதழ்.இன்பத் தமிழ்

பாரதிதாசன் கவிதைகள் (தமிழ்)

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்.!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்.!
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்.
தமிழ் எங்கள் உயிருக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்.
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

நன்றி : மீண்டும் கவிக்கொண்டல் இதழ் - ஏப் 2005பாரதிதாசன் கவிதைகள் ( ஆங்கிலம்)

Sweet Tamil -

Tamil too is known as nectar - That
Tamil. is extolled as per with our lives !
Tamil means the moon - that
Tamil. to our society, is a percious boon
Tamil means fragrance - That
Tamil is our peoples peaceful home
Tamil is an intoxicating charm - That
Tamil is the root of all our liberty"

Tamil is the cause of our valour - That
Tamil for the scholars, is a powerful arrow !
Tamil lifts up high above the sky - that
Tamil is an invigorating honey sweet !
Tamil is the companion of our wisdom - That
Tamil, to our verses, is a diamond sword !
Tamil, mother, carried us in her woumb- That
Tamil is a powerful and enthusing flame !
Translated By M.S.venkatachalam. Trhichyமண்

கிழிந்த டிராயருடன்
அழுக்கேறிய மஞ்சள் பையில்
சிலேட்டைப் போட்டபடி
பள்ளிக்குச் சென்ற காலங்கள்
இன்னமும் நினைவில்.

பாதையோற மரங்களில்
கோனப்புளியங்காய்களை
அடித்துத் தின்றதும்
பைசாவிற்கு அஞ்சு நாலு மிடடாய்களை
வாங்கிச் சப்பியவாறு
பள்ளிக்குச் சென்றதும்
இப்போதும் நினைவில் ஆனந்தம் தரும்.

ஒற்றை மாட்டு வண்டியில்
பையினை மாட்டியபடி
தொங்கிச் சென்றதும்
பச்சியம்மன் கோவிலில் படையலுக்கு வைத்த
பொங்கலைத் தின்று போனதும்
நினைவில் மோத நெகிழ்ச்சியுண்டாகும்.

தற்போது -
ஆட்டோவில் திணித்துக் கொண்டு
அயர்ந்து போய் வருகிறான் மகன்
மண்சார்ந்த அடையாளங்கள் ஏதுமின்றி.

சூர்யநிலா ( கனவு )
நன்றி : பசுமைத் தாயகம் - ஏப்ரல் 2005அழிக்கும் மதம்

அருள் வழங்கும் சாமிகளின்
படங்களைத் தொங்க வைக்க
ஆணிஅடித்தே அழிந்து போனது
சுவற்றின் அழகும் உறுதியும்.

திருப்பதி மலையில்
மழிக்கப்படுகிறது
மூவேந்தர் முடியும்
முத்தமிழ்ப் பண்பாடும்.

தமிழர்களின் அடையாளம்
மானம்
ஆரியர்களின் அடையாளம்
நாமம்

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது
கிராமங்களில் வாழ்பவர்கள்
இந்தியாவில் சாகிறார்கள்

லாரிகளில் ஏறுகின்றன மாடுகள்
வயல்களில் இறங்குகின்றன
டிராக்டர்கள்.

பண்பாட்டை மரபை
பக்குவமாய் அழிக்கிறது
மதமும் அறிவியலும்.

வையவன்.
கயவன்பால் செல்லாதீர் கற்பு இழப்பீர்

தாடியொடு நீறணிந்து காவி பூண்டு
தண்ணருள்செய் துறவிஎனக் கோலம் தாங்கி
வேடுவன்போல் கண்ணிவைத்துப் பெண்கள் தம்மை
வீழ்த்துகின்றான் ஒருகயவன், அவனை நம்பி
ஓடுகிறார் நம்பெண்கள், இருட்ட றைக்குள்
உருக்குலைந்து திரும்புகின்றார் பல்லாண் டின்பின்
ஏடுகளில் அவன்செய்தி தெரியு மட்டும்
இந்நிலைதான் நீடிக்கும், அழியும் வாழ்க்கை
.
உயர்கல்விப் பெருந்தாடி முகத்தில் தாங்கி
உலகுக்கே அருள்புரியும் தோற்றம் காட்டிப்
பெயர்விளங்கப் பகட்டுவதால் அன்றோ ஏழைப்
பெற்றோர்கள் ஆங்கிலத்தின் அடியில் வீழ்வார்.
உயிர்மேலாம் தமிழ்மானம் இழப்பார், உண்மை
உணர்ந்ததனால் எச்சரிக்கை செய்கின் றோம்யாம்
கயவன்அவன்! துறவியல்லன்! அந்தோ மக்காள்
காலில்போய் வீழாதீர், கற்பி ழப்பீர்.

திருமுருகனார்

நன்றி : தெளிதமிழ் - மேழம் இதழ்போர்ப்படை சீறிப் புறப்பட்டது.

ஏற்றம்மிகு நற்றமிழே
எங்கும் எதிலுமென
நாற்றிசையுங் காணமெய்
நாட்டுதற்(கு) ஆற்றல்சால்
போர்ப்படை சீறிப்
புறப்பட் டதுகண்டு
வேர்ப்புற்றார் மாற்றார் விதிர்த்து !

தெள்ளுதமிழ் காக்கும்
திடமனத்துக் கொண்டவராய்க்
கொள்கை மறவர்
கொதித்தெழுந்தார் - எள்ளிமிக
நக்க லடித்தவர்கள்
நாணித் தலைகவிழ்ந்தார்
திக்கெங்கும் பார்த்தே திகைத்து

இறைக்குருவனார்

நன்றி : தென்மொழி மேழம் இதழ்உலக நியதி

புல்லாங்குழலும் கால்ப்பந்தும் அரிதாகச் சந்தித்தன.
கால்ப்பந்து புல்லாங்குழலைப் பார்த்து
வேதனையுடன் சொன்னது.
உன்னிடமும் காற்றுதான் இருக்கிறது..
என்னிடமும் காற்றுதான் இருக்கிறது...
உன்னை எல்லோரும் மதிக்கிறார்கள்,
என்னை எல்லோரும் எட்டி உதைக்கிறார்களே..
ஏன் இந்த அவல நிலை ?

அதற்குப் புல்லாங்குழல் சொன்னது.

" நீ சொல்வது சரிதான்
என்னிடமும் காற்றுதான் இருக்கின்றது
ஆனால் நான் என்னிடமுள்ள காற்றை
என் துளைகள் வழியே செலுத்தி
பிறருக்கு இன்னிசையை வழங்குகிறேன்.
ஆனால் நீ பதுக்கி வைத்திருக்கிறாய்.
அதனால் எட்டி உதைக்கப்படுகிறாய்.

பிறருக்குக் கொடுக்கும் நான் மதிக்கப்படுகிறேன்.
பதுக்கி வைத்துள்ள நீ எட்டி உதைக்கப்படுகிறாய்.
இதுதான் உலக நியதி" என்றது.

கால்ப்பந்து உடனே நழுவிச் சென்றது.

படித்து மகிழ்ந்தவர் : கிருபா சுப்பையா - ஜெர்மனி.

நன்றி : பூவரசு - ஜெர்மெனிகழுதையினைச் சுமக்கிறாய்

குட்டுதற்குப் பாண்டியனும் இல்லையடா,
பிழைகண்டால் குடைந்து காதை
வெட்டுதற்கு வில்லியில்லை எனும்நினைவில்
யாப்புவிட்டு வேற்றுச் சொற்கள்
கொட்டிவைத்த கூடையெனப் பாட்டெழுதும்
பாவலர்காள் ! கொஞ்சம் கேளீர் !
கட்டவிழ்ந்த விளக்குமாறு சிந்தியது
போலெழுதிக் கலக்கு கின்றார்.

தடித்திட்ட நூல்நிரப்பும் யாப்பில்லாப்
பாடல்களால் தமிழ்சி தையும் !
அடிக்கின்ற காற்றினிலே, காற்றாடி
மேல்பறக்கும்! அடிக்கும் காற்று
நொடிப்பொழுது நின்றாலும் சாய்க்கடையில்
வீழ்ந்துவிடும்! நீங்கள் செய்யும்
இடிமுழக்க விளம்பரத்தால் நில்லாவே !
எதிர்காலம் ஏசும் உம்மை !

நாளேடு நடத்துவோர்க்குக் கடுகளவும்
புலமையில்லை ! நச்சு வாலின்
தேளோடு பிறந்தவர்கள் பிழை கொடுக்கால்
கொட்டுகின்றார் செவியின் உள்ளே !
வாளோடு பிறந்தவினம் வழிமாறிப்
போனதுவே ! வணிக நோக்கில்
தோளோடு வேல்சுமக்க மாட்டாமல்
கழுதையினைச் சுமக்கின்றாயே.

பாவலர் - மணிவேலன்
நன்றி : தமிழ்க்குயில் - முதல் இதழ்.பாலியலில் நம் போலி முகங்கள்

எருது வண்டி இழுக்கும் இரண்டாம் வகுப்பில் இப்படி எழுதித்தான் கல்வியைத் தொடங்கினோம். ஏன் காளை வண்டி இழுக்கும் என்று சொல்வதில்லை?

ஏனெனில், காளையை வண்டியில் பூட்டி வேலை வாங்கினோம் என்று வைத்துக் கொள்வோம். வழியில் எங்காவது பசுமாட்டைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான், வண்டியாவது, பாரமாவது என்று தூக்கி மல்லாத்திவிட்டு பசுமாட்டின் பின்னால் ஓடிவிடும்.

அப்படியென்றால் எருதுக்கும் காளைக்கும் என்ன வேறுபாடு ?

பாலியல் உணர்வை அடக்காமல் சுதந்திரமாய் இருந்தால் காளை, பாலியல் உணர்வை வெளிப்படுத்தும் உறுப்பை நசுக்கிக் காயடித்து அடிமையாய் வைத்திருந்தால் அதற்குப் பெயர்தான் எருது.

ஜல்லிக்கட்டுக் காளை என்கிறோம். ஜல்லிக்கட்டு எருது என்று யாரும் சொல்லவில்லை. ஜல்லிக்கட்டுக் காளைக்கும் காயடிப்பதில்லை. அதே சமயத்தில் பசுமாட்டிடம் உறவு கொள்ள அனுமதிப்பதும் இல்லை.

பாலியல் உணர்வை இயல்பாய் வெளிப்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டதால் அதற்கு வெறிபிடித்து விடும். அந்த வெறிபிடித்த காளையை அடக்கி விளையாடும் விளையாட்டே ஜல்லிக்கட்டு.

இப்போது இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா ?

சமுதாயத்திற்கு அடங்கி அடிமையாயக் கிடக்கவேண்டும் என்பதற்காக மதங்களின் உதவியுடன் மனித மனங்களில் இப்படிக் காயடிக்கப்பட்ட உணர்வு ஒன்று உள்ளது. அந்த உணர்வே பாலியல் உணர்வு. கண், காது, மூக்கு என மேலேயுள்ள உறுப்புகள் எல்லாம் புனிதமானவை. இடுப்புக்குக் கீழேயுள்ள உறுப்புகள் எல்லாம் அசிங்கமானவை. அருவருப்பானவை என்று போதிப்பதன் மூலம் இந்தக் காயடித்தல் நிகழ்த்துகிறது.

பார்த்தால் அசிங்கம். தொட்டால் தோசம் என்று புறக்கணிக்கப்பட்டதால் இந்தப் பகுதிக்குப் போதிய கவனிப்பின்றி அழுக்கேறி நாற்றமெடுக்கத் தொடங்கிவிட்டது. அந்த நாற்றத்தின் வெளிப்பாடே இன்றைய வக்கிரமான சுவரொட்டிகள், ஆபாசமான திரைப்படங்கள், அருவருப்பான பாடல்கள், வசனங்கள்.

முன்னேறிய நாடுகள் அனைத்தும் இந்தக் காயடித்தலை வெகுவிரைவில் புரிந்து கொண்டன. இந்தப் பாலியல் உணர்வை அறிவுபூர்வமாய் அணுகித்தீர்வு காணாமல் மூடிமூடி வைத்தால் மனித இனம் வெறிபிடித்து அலையும். சமுதாய முன்னேற்றம் பாதிக்கப்படும். என்பதை உணர்ந்து சிறுவயது முதலே முறையான பாலியல் கல்வி பாலியல் உணர்வுகளுக்கு மரியாதை ஒரு குறிப்பிட்ட எல்லைவரை பாலியல் உரிமை என வரையறுத்து நெறிபடுத்தி வைத்துள்ளனர்.

நம் தாய்த்திருநாட்டிலோ எந்த ஒன்றிற்கும் திட்டமிட்ட அணுகுமுறை கிடையாது. அப்படியே திட்டமிட்டாலும் ஊழல் நிகழாமல் திட்டமிட்டபடியே செயல்படுத்தும் துப்பும் கிடையாது.

எனவே. இந்தப் பாலியல் உணர்வு விடயமும் திட்டமிடப்படாததால் மூடிமூடி வைக்கப்பட்டு, தற்பொழுது புண் புரையோடிது போல் சீழ்பிடித்துக் கிடக்கிறது......

பள்ளிகளில் பன்னிரெண்டு வயது முதல் குழந்தைகளுக்குப் பாலியல் பற்றிய தெளிவான அறிவை ஊட்டவேண்டும். அதைக் கூச்சப்படக்கூடிய குற்ற உணர்ச்சியாக வளர்க்கக்கூடாது. வீடுகளில் ஆண்பிள்ளைகளை உயர்வாகப் பாலிப்பதும் அதிகச் சலுகைகள் அளிப்பதும், பெண் பிள்ளைகளைத் தாழ்வாகப் பார்ப்பதும் அடக்கி வளர்ப்பதுமான ஒருதலைப்பட்ச முறையை ஒழிக்கவேண்டும்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் விடயத்தில் காட்ட வேண்டிய பொறுபுணர்வை, அக்கறையைத் தம் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் உணர்த்தவேண்டும். மற்ற விடயங்களில் தாம் பெற்ற அனுபவ அறிவைத் தம் பிள்ளைகளுக்கு உணர்த்தி வழிகாட்டுகிறோமோ, அதேபோல பாலியல் உணர்வு விடயத்திலும் தமக்கு ஏற்பட்ட சிக்கல்களைத் தம் பிள்ளைகளுக்கு நேராமல் பெற்றோர்கள் அறிவுபூர்வமாய் வழிகாட்ட வேண்டும்.

காமம் என்பது....
உடலளவில் உடலுறவுக்கு ஏங்கும் பாலுணர்வுப் பசியாக உள்ளது.
மனத்தளவில் அன்புக்கு ஏங்கும் அன்புப் பசியாக உள்ளது.
உயிரளவில் இறையருளுக்கு ஏங்கும் ஆன்ம அருட்பசியாகவும்
உயர்ந்து கொண்டே செல்கிறது.
எனவே குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் இருந்தால் பாலியல் உணர்வு நோயாக மாறாது, வளர்ச்சியாக மாறும்

இரா.கனகசுப்புரெத்தினம் - கவனகர் முழக்கம்

நன்றி : நாளை விடியும் - இதழ் 45தமிழரை வீழ்த்திய சோதிடக்கலை

..... சோதிடக் கலையால் தமிழர்கள் எவ்வாறு வீழ்ச்சியுற்றனர் என்பது ஆராயத் தக்கது. தன்னுடைய எதிர்காலம் தன் மகள், மகனின் எதிர்காலம் பற்றிச் சோதிடம் வழிஅறிய விரும்பும் தமிழர், தம் சமுதாய எதிர்காலம் பற்றித் தொலை நோக்கோடு சிந்திக்காமல் போவது வியப்பிற்குரியது.

இவருக்குத் தேவையான உணவு , உடை, உறைவிடம், வாழ்க்கை வசதி திருமண ஏற்பாடு குடும்பச்சடங்குகள் அனைத்தையும தீர்மானிப்பது யாரோ அல்ல என்பதைத் தமிழர் தெரிந்து வைத்திருக்கத் தவறினர். தனக்கு வந்திருக்கும் வறுமை நோய் ஆகியவற்றிற்குரிய காரணத்தைத் தனக்குப் புறமாகவும் அரசியல் பொருளாதார அமைப்புக்கும் புறமாகவும் போய்த் தேடுகிறார். போய்த் தேடினார். அதனால் உண்மைக் காரணத்தை அவர் கண்டறியவில்லை.

நோய் பற்றிய மருத்துவவியல் வளருகிற வரை நோய்க்குக் காரணம் பங்காளி செய்த பில்லி சூனியம் செய்வினை என்று நம்பினர். தன்வீட்டுச் சுற்றுப்புறச் சுகாதாரம் இன்மை என்பதை அறியத் தவறி, கடவுளே காரணம் என்று நம்பினர். கண்கண்ட அசுத்தச் சூழல் காரணம் என்று அறியார்.

அதனைப்போலவே தனக்கு ஏற்பட்டிருக்கும் சமுதாய பொருளாதாரத் துன்பங்களுக்குக் காரணம் கடவுளும் அல்ல, சனிக்கிரகமும் அல்ல, செவ்வாய்த் தோசமும் அல்ல. தன்னை ஆளாக்குகின்ற அமைப்பே என்பதை அறிந்து கொள்ளத் தமிழர் தவறினர்.தொடர்ந்து தவறிக்கொண்டே உள்ளனர். எனவே தான் அவருக்கு வீழ்ச்சி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பகையை ஒழிக்காமை என்பது மட்டுமல்ல, பகையார் என்று தெரியாமையும் பெருங்குற்றமாகும்.

க.ப.அறவாணன், தமிழியல் துறைத் தலைவர், புதுவை பல்கலைக்கழகம்.

நன்றி : சமுதாய பகுத்தறிவு - ஏப்ரல் 2005.
லண்டன் பல்கலைக் கழகத்தில்

தமிழை விருப்பப் பாடமாக்கக் காந்தியடிகளின் கோரிக்கை.

தி.வ. மெய்கண்டார்.

காந்தியடிகள் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் விருப்பப் பாடமொழியாக வைக்கப்படவேண்டும் என்று 1906 இல் லண்டன் பல்கலைக் கழகத்துக்குக் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை இண்டியன் ஒப்பீனியன் இதழில் 24-2-1906 இல் வெளியிட்டார். குடியேற்ற நாடுகளிலுள்ள பல தமிழ் மாணவர்கள் அப்பல்கலைக் கழகத்தில் பயிலும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் தம் தாய் மொழியைப் பயிலவேண்டும் என்பதற்காகவே இக் கோரிக்கையை வைத்தார்.

தமிழ் குடியேற்றப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் சார்பாக, வெளிநாட்டு மொழிகளில் ஒன்றான தமிழை, லண்டன் பல்கலைக் கழக மெட்ரிகுலேசன் தேர்வுக்கு விருப்பப் பாடமாக வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தமைக்கு லண்டன் பல்கலைக் கழக வெளி விவகாரப் பதிவாளரின் செயலாளரிடமிருந்து நாம் மறுமொழி ஒன்றைப் பெற்றுள்ளோம், இக்கோரிக்கை தொடர்பாகக் கூட்டு மன்றங்கள், பல்கலைக் கழக ஆட்சிக் குழுவுக்குப் பரிந்துரை செய்ய இயலாவிடினும் இக்கோரிக்கை கைவிட்டுவிடவேண்டிய ஒன்று என நாம் கருதவில்லை.

லண்டன் பல்கலைக் கழகம் போன்ற பழமையில் ஊறிய அமைப்புகளை ஏற்கச் செய்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் உலகம் முழுமையும் பரந்து கிடக்கிற தமிழ் இனமக்கள் இம்முயற்சியை உறுதியாகத் தொடர்ந்தால், சிறந்த இலக்கிய வளம் நிரம்பிய இந்தியாவின் தலைமை மொழியான தமிழ், இறுதியாக லண்டன் பல்கலைக் கழக மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தில் இடம்பெறும் என்பதில் எந்தவிதமான அய்யமுமில்லை.

இண்டியன் ஒப்பீனியன் 24-2-1906 (தென்னாப்பிரிக்கா)

நன்றி : சர்வோதயம் - மலர் 3 இதழ் 4 ஏப்ரல் 1 - 2005
தண்ணீர் ஓர் வாழ்வுரிமைத் தேவை.

நீரின்றி அமையாது உலகு என 2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவனும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என இளங்கோவடிகளும், வாழ உலகினில் பெய்திடாய் என ஆண்டாளும் புராண காலங்களிலேயே நீரின் அருமையை உணர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஒன்று மிகுதியாய் காணப்படும் பொழுது அதன் முக்கியத்துவம் நமக்கு எளிதில் தெரிவதில்லை. ஆனாலும் நீர் மிகுதியாய் நிரம்பி வழிந்த சூழலில் தான் மேற்கண்ட பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் நீர்வளம் குன்றிவிட்ட இன்றைய சூழலில் நம்மால் நீரின் முக்கியத்துவமும், நீரின் உயர் தன்மையும் நம்மால் உணரப்பட்டுவிட்டதா? என்றால் இல்லை என்றே விடை கிடைக்கும்....

தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டுப் பன்னாட்டு நிறுவனங்களால் வேகமாக சுரண்டப்படுகிறது. தமிழகத்திலுள்ள 39,000 ஏரி, குளங்கள் 1,80,000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப் பட்டுவிட்டன.

சூயஸ், விவாண்டி, தேம்ஸ், பெப்சி, கோக் பேன்ற பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் இங்கே தண்ணீர் விற்பனையில் முற்றுரிமையாளர்களாகக் கோலோச்சி வருகின்றனர். இங்கே விளைநிலங்களும், நீராதாரப் பகுதிகளும் வீட்டடி மனைகளாக, அயலக தொழிற்சாலைகளாக, தனியார் கட்டிடங்களாக வணிக வளாகங்களாக உருமாற்றம் பெற்று வருகின்றன.

தண்ணீர் பணம் கொழிக்கும் தொழிலாகவும், இலாபகரமான பண்டமாகவும், மாற்றப்பட்டுவிட்டது.

1994 ஆம் ஆண்டில்தான் பாட்டில் நீர் பரவலாக்கம் இங்கு துவங்கப்பட்டது. அதன் பின்பு தான் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான அளவு தண்ணீரை மிகக் குறைந்த செலவில் மிகுதியாக ஈட்டிக் கொள்கின்றனர். இங்கே நீர் எளியவர்களிடமிருந்து திட்டமிட்டு சட்டப்பூர்வமாக அபகரிப்பு செய்யப்படுகிறது. தாரளமயம் எனும் பெயரில் இங்கே சுற்றுச் சூழல் மிகுதியாக சீர்கேட்டிற்குள்ளாக்கப் பட்டுள்ளது. பாலின் விலையைக் காட்டிலும் தண்ணீரின் விலை இங்கே அதிகம். அந்த அளவிற்குத் தண்ணீரின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இ.இ.ராபர்ட் சந்திர குமார் -(இந்தியா டுடே)
நன்றி : மனித உரிமைக் கங்காணி இருதிங்களிதழ் மார்ச் 2005www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061