வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 05 - 2005

குறும்பாக்கள்

மகர ஜோதி
மயக்கும் ஜோதிகா
மண்ணை மறந்த தமிழன்.
- மு. குமாரசாமி - திருநெல்வேலி.


கொடியின் கீழ் தொண்டர்கள்
கோடியிலே தலைவர்கள்
தேசியக் கொடி.
- கி. காயத்திரிதேவி - புதுகை


பட்டுப்போன மரம்
கிளையில் ஒற்றைப்பூ
குருவிக்கூடு.
- குவளை மு.வீரமணி.மரம் வளர்க்க பாடம்
ஆசிரியர் கையில்
பிரம்பு.
- பழனிகம்பன் - உளுந்தூர்பேட்டை.


மலையகம்
கொழுந்துகள்
கிள்ளப்படுகின்றன.
- தமிழ் ஈழமுருகதாசன் - யேர்மனி


குடமுழுக்கு நடக்கின்ற
கோயிலுக்கு அருகில்
கூரையில்லா பாடசாலை.
- கா.ந.கல்யாணசுந்தரம், செய்யாறு.நீந்திச் சென்றவர்கள்
மூழ்கிவிட்டார்கள்
மதுப்பழக்கம்
விஜயலட்சுமி மாசிலாமணி - ரியாத்

அவள் உறங்கச் சென்றாள்
தூங்கிப்போன என்மனதை
தட்டி எழுப்பிவிட்டு.
- சந்தோசம் - சிதம்பரம்

வயிறு நிறைய சாப்பிட்டும்
மனது நிறையவில்லை
முதியோர் இல்லத்தில்
- தாமோதரன் - புதுச்சேரி.

நன்றி : ஏழைதாசன் - புதுக்கோட்டை


அன்பு

குழந்தையைச்
அழகுபடுத்தினாள்
தாய்.

பொம்மையை
அழுகுபடுத்தியது
குழந்தை

இரண்டிலும்
வெளிப்பட்டது
அன்பு

பொன்.குமார் - சேலம்
நன்றி : நீல நிலா.தொலைக்காட்சி

அறிவியல் கண்டுபிடிப்பில்
மூடநம்பிக்கை முடைநாற்றம்
தொலைகாட்சித் தொடர்கள்.
மக்களை முட்டாளாக்குவது
போட்டா போட்டி
தொலைக்காட்சி.
வீட்டுக்குள்ளேயே
மூளையைத் திருடும்
தொலைக்காட்சி.
நேரம் பொன் போன்றது
பொன்னை விரயம் செய்வது
தொலைக்காட்சி.

- இரா. இரவி - மதுரை
நன்றி : தாய்மண் இதழ்வட்டம்

பிறந்த வீட்டில்
பெற்றோரின் வட்டத்துள்
புகுந்த வீட்டில்
மற்றோரின் வட்டத்துள்
சொந்த வீட்டில்
சொந்தங்களின் வட்டத்துள்
எந்த வீட்டில் பெண்
தன் வட்டத்திற்குள்
வாழப்போகிறாள்.

- ப. பாரதி
அருங்கரைஅம்மன் கலை அறிவியல் கல்லூரி, கரூர்.
நன்றி : புதுக்கவிதைப் பூங்காஉலக வழக்கும் உன் வழக்கும்

அவன் பேசும் மொழி ஆங்கிலம்
அவனது தேசிய இனம் ஆங்கிலேயர்
அவன் நாடு இங்கிலாந்து.

அவன் பேசும்மொழி சப்பானி மொழி
அவனது தேசிய இனம் சப்பானியர்
அவன் நாடு சப்பான்.

என் தாய்மொழி தமிழ். இந்தி அல்ல
எனது தேசிய இனம் தமிழர்
பஞ்சாபியர் அல்லர்.

எனது நாடு இங்கிலாந்தா ?
சப்பானா ? இந்தியாவா ?
திராவிடநாடா ? தமிழ்நாடா ?

நன்றி : நமது வேர்கள், தமிழ்ப் பாவைதொந்தரவு

ஊர் கண்ணே என்மீது விழுந்தது,
நல்ல நிறத்தோடு பருத்திருந்தேன்.

பதமான பருவமாம் அக்கம் பக்கம் சென்னது.

பார்த்தோரெல்லாம் என்னைப்
பறித்துப் போகத் துடித்தனர்.
வளர்ந்த விதத்தை வளர்த்தவர் சொல்லி
உயர்த்தி மதிப்பிட்டே பேசி முடித்தனர்
அவருக்கே என்று நிச்சயமும் ஆனது.

உரிமையாக்கியவரும் சுவைக்கத்தான் நினைத்தார்.
எனை விற்றவருக்கும் எனை வாங்கியவருக்கும்

புரியாமல் போனது உள்ளே குடையும்
புழுவின் குடைச்சல் - புலம்பியது மாம்பழம் -

செந்தில் பாலா கவிதைகள்
நன்றி : குறிஞ்சி வட்டம் இதழ் 2தண்டனை

பண்ணை வீட்டில்
வேலை செஞ்ச
முருகையன்
முங்கி எந்திருச்சதும்
தீட்டாயிடுச்சாம்
குளம்.

தெருக்கம்பத்தில்
கட்சி வச்சி
கரும்புள்ளி குத்தி
சாணிப்பால் திணித்ததில்
திணறிச் செத்தானாம்.

அதே
அந்தக் குளத்தில்தான்
இப்போது
பேரன் பேத்திகளின்
பீத்துணி அலசுகிறாள்
சேரித்தெரு
பீச்சாயி கிழவி.

- கதிர் நிலவன் -
நன்றி : பயணம் இதழ்.


திருக்குறள்

வேட்டி யாருக்கு வேண்டும் ?
அப்பாவுக்கு.
புடைவை யாருக்கு வேண்டும் ?
அம்மாவுக்கு.
இட்டளி யாருக்கு வேண்டும் ?
அம்மா, அப்பா உள்ளிட்ட அனைவருக்குமே.

பைபிள் யாருக்க உரியது ?
கிறித்தவர்கட்கு.
குர்ரான் யாருக்கு உரியது ?
இசுலாமியர்கட்கு.
இராமாயணம் பாரதம் யாருக்கு உரியது ?
இந்துக்கட்கு.
திருவாய்மொழி, திவ்யபிரபந்தம் யாருக்கு உரியது?
வைணவர்கட்கு.
தேவாரம் திருவாசகம் யாருக்கு உரியது ?
சைவர்கட்கு.

திருக்குறள் யாருக்கு உரியது ?
கிறித்தவர்கள் - இசுலாமியர்கள் - இந்துக்கள்
வைணவர்கள் - சைவர்கள் உள்ளிட்ட
அனைவருக்குமே - ஆம்
திருக்குறள் ஓர் இட்டளி.

(குறிப்பு : இட்டு அவிப்பது இட்டவி ஆயிற்று. இட்டு அளிப்பது இட்டளி ஆயிற்று. இட்லி, இட்டிலி, இட்டலி என்பன தவறான வடிவங்கள் ஆகும் )

- குடந்தய் - வை.மு.கும்பலிங்கன் -
நன்றி : தமிழ் மூவேந்தர் முரசு, சிந்தனையாளன்.தமிழ் உம் உயிரென்றால்

பாட்டெழுதும் பாமறவீர்
பைந்தமிழ்உம் உயிரென்றால்
வேட்டெஃகம் கையேந்தி
விரைந்தெழுக துணிவாக
காட்டெருமைப் பகைவீழ்த்த
களங்காணப் புறப்படுக.
ஏட்டளவில் வீரத்தை
எடுத்தெறிக இந் நொடியே.

மேடையிலே அரிமாப்போல்
மேன்மையுடன் முழங்குகிறீர்
ஓடைதரு குளிரான
ஒண்டமிழ்மேல் பற்றிருந்தால்
கோடையிடிக் குரலெடுத்துக்
கொல்புலிபோல் பாய்ந்தெழுந்து
கேடுகளைக் களைந்திடுவீர்
கிழித்திடுவீர் தமிழ்ப்பகையை.

ஆட்சியிலே உள்ளவர்க்கும்
அருந்தமிழ்மேல் பற்றில்லை
மாட்சியுள்ள செந்தமிழை
வாழ்விக்கும் நோக்குமிலை.
ஏட்டளவில் பேச்சளவில்
எல்லாரும் ஈங்கிருந்தால்
மாட்டவருந் தமிழ்ப்பகையை
மாய்த்திடுதல் எப்போது ?

- பாவலர் இலக்கியன் -
நன்றி : தமிழர் முழக்கம் இதழ்


சிறை வாழ்க்கை

எத்தனை நாளைக்கு ? இன்னும்
எத்தனை நாளைக்கு ?
கரைத்த கூழும், நீர்த்த குழம்பும்
எத்தனை நாளைக்கு ?
அரிந்து போடும் கறிகாய் இல்லை
அரிசிச் சோறோ புழுக்கை புழுக்கையாய்
கரிந்து காணும் களிமண் உருண்டையாய்
களியின் வடிவம் மொத்தை மொத்தையாய்
எத்தனை நாளைக்கு ?
தொட்டுக் கொள்ளும் துவையலைப் போலே
சோற்றைக் கிள்ளிப் போடுவான் பாவி
பட்ட மரமாய் மரத்திடும் நெஞ்சம்
பார்த்துப் பார்த்துச் சலித்திடும் காட்சி
எத்தனை நாளைக்கு ?
கலங்கிய குளத்தில் கெண்டைமீன் குஞ்சாய்
கறிகாய் மிதக்கும் ஒன்றோ இரண்டோ
விலங்கினும் கீழாய் அடைபடக் கிடந்து
வீணாய்க் கழியும் சிறையினில் வாழ்க்கை
எத்தனை நாளைக்கு ?
காய்ந்த தாமரைச் சருகினைப் போல
கருகித் தீய்ந்த சப்பாத்தி ரொட்டியும்
தேய்ந்து பற்கள் மெலியினும் சிதையினும்
தின்னவே முடியா கிழட்டாட்டுக் கறியும்
எத்தனை நாளைக்கு ?
கள்ள மனத்துடன் காவலன் விரட்டலும்
காசு காசென அங்காந்து நிற்றலும்
வெள்ளுடைக காவலன் உருட்டல் மிரட்டலும்
வெவ்வேறு வகையான ஒவ்வொரு கூத்தும்
எத்தனை நாளைக்கு ? இன்னும் எத்தனை நாளைக்கு ?

பேராசிரியர் . க. நெடுஞ்செழியன்
நன்றி : தென் ஆசியச் செய்தி இதழ்இவனா தமிழன்.

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.

கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....

தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா.
நன்றி : செம்பருத்தி மே 2005மூன்றாம் மொழிப்போர் அறிவிப்பு

திருச்சி பொன்மலைத்திடலில் 26-3-2005 இல் ஓர் இலக்கம் தமிழ் ஆர்வலர்கள் திரண்ட மக்களிடையே, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1. வரும் மே 23 ஆம் நாள் பிறமொழியிலுள்ள வணிக விளம்பரங்களைப் பெரியார் வழியில் தார்பூசி அழிப்பது.
2. தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் முதல் நாளன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது.
(குறிப்பு : திருக்குறளைத் தேசிய இலக்கியமாக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளையும் விசாரித்து நிறைவேற்றி தமிழ் மக்களின் பாராட்டைப் பெறும் என்று நம்புகிறோம். ஆசிரியர் - மாமணி - முகம் இதழ் )கண்ணகி கோயிலை தமிழக அரசு மீட்குமா ?

தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு, தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்தவர் கருணாநிதி.
தெலுங்கு - கன்னட ஆண்டுப் பிறப்பான உகாதிக்குத் தமிழ்நாட்டில் எதற்கு விடுமுறை என்று ஆப்பு வைத்தவர் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா.
மூலை, முடுக்கு, முக்கு, முச்சந்தி எல்லாவற்றிலும் ஆங்கிலப் பள்ளிகளை சகட்டுமேனிக்குத் திறக்க வழிவகுத்தவர் கருணாநிதி.
25,000 நர்சரிப் பள்ளிகளையும், 800 பதின்மர் பள்ளிகளையும் இழுத்து மூட ஆணையிட்டார் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா. தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமான கண்ணகி கோயில் மலையாளிகளிடம் சிக்கியுள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி அன்று கண்ணகியை வழிபடப்போகும் தமிழர்கள் படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இது போதாதென்று மலையாளிகள் தமிழக எல்லையைச் சுருக்கி கள்ளத்தனமாக கேரள எல்லையை விரிவாக்கிவரும் கொடுமையும் நடக்கிறது. கண்ணகி கோயிலை தமிழர்களுக்கு மீட்டுக் கொடுக்கத் தமிழக முதல்வர் முயன்றால் தமிழர்தம் நெஞ்சில் அவர் பால் வார்ப்பார்.
நன்றி : நம் வேர்கள் இதழ் மேழம் 2036 (மே 2005)இலண்டன் பத்திரிகையாளர் ஈ.கே. இராஜகோபால் நேர்காணலில்...

தற்பொழுது ஐரோப்பாவில் ஒரு புதிய தலைமுறை உருவாகி இருக்கிறது அவர்கள் மத்தியில்
தமிழ் படிக்கிற ஆர்வம் எப்படி இருக்கிறது ?


ஐந்து வயதில், பத்து வயதில் அங்கே அகதிகளாக குடிபெயர்ந்தவர்கள் வளர்ந்து இன்று ஒரு புதிய தலைமுறையாக உருவாகி இருக்கிறார்கள். அங்கே பெரியவர்களும் சரி, சிறியவர்களும் சரி தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். வெளியிடங்களுக்குப் போகும் போதும், பாடசாலைக்குப் போகும் போதும் தவிர்க்கமுடியாமல் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் அழிந்துவிடும் என்ற நிலை அங்கு இல்லை. இங்கே தமிழ்நாட்டில்தான், தமிழ் மக்களும் சரி, தமிழ் ஊடகங்களும் சரி தமிழை ஒழுங்காகப் பேசுவது இல்லை. ஆங்கிலம் கலந்து பேசுவது மட்டுமல்லாமல் தமிழை உச்சரிக்கும் விதத்தைப் பார்க்கும்பொழுது வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது, தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்ற குரலும் இப்போது ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் லண்டனில் தமிழ்ப் பாடசாலைகள் நடத்துகிறார்கள். தமிழ் பண்பாட்டின்படி பல நிகழ்வுகளும் நடத்துகிறார்கள். எல்லோரும் ஒன்றாகக்கூடி நல்ல தமிழைப் பேசி தமிழை வளர்க்கிறார்கள். தமிழ் நாட்டைவிட அங்கே உள்ளவர்களுக்குத் தமிழ் பேசுகிற, தமிழ் படிக்கிற ஆர்வம் நிறைய இருக்கிறது என்றே சொல்லலாம்.

நன்றி : இனிய நந்தவனம் - மே 2005முருகப் பெருமானே இறங்கி வந்து பேசுகிறார்...

நான்தான் முருகன் பேசுகிறேன்.

எந்த முருகன் பேசுவது என்று நீங்கள் கேட்பது நன்றாகவே எனக்குக் கேட்கிறது.

உங்கள் பாட்டனான, தொன்மத்தின் ஊற்றான அதே பத்துமலை முருகந்தான் பேசுகிறேன்.

இது தைப்பூச காலமில்லையா...

மறந்து விட்டீர்களா என்னை ?

கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.

எனது பழம் பெருமைகளைச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு உங்கள் முன்னோர் பத்துமலை திருத்தலத்தை உருவாக்கினார்.

நானும் கொஞ்ச காலம் அங்கே அமைதியாக இருந்தேன்.. இன்று என் நிலை..

வெறும் கல்லென்று என்னை நினைத்ததனால் வந்த விளைவுதான் இது.

ஆண்டுக்கு ஒருமுறை எனக்கென்று தைப்பூசத் திருவிழாவை என் சந்நதியிலே எனக்காகச் செய்கின்றீர்கள்..
மகிழ்ச்சியடைகிறேன்..

உங்கள் பக்தியை மெச்சுகிறேன்.

தைப்பூசத்தில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே நன்கு தெரியும். அதைப்பற்றி நான் இங்குப் பேசவரவில்லை. சரி, அதைவிடுவோம். எல்லாம் என் தலையெழுத்து அப்படி.

பல ஆண்டுகளாக என்னை வைத்து நிர்வகித்து வரும் மாரியம்மன் கோவில் நிருவாகத்தினர் நான்கு கல்விக் கூடங்களை வழிநடத்தி வந்தனர்.

உங்களுக்கு இந்தச் செய்தி மறந்து போயிருக்கலாம். நடந்து முடிந்தது. நடந்து கொண்டிருப்பது. நடக்கப்போவது அனைத்தும் நான் அறிவேன். நான் எதையும் மறக்க மாட்டேன்.

நான் இருக்கும் பத்துமலைத் திருத்தலத்தை மிகப் பெரும் சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பணமும் நேரமும் இருக்கிறது. ஆனால அழிந்துவரும் அப்பர் தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லையே.

என் அருகிலேயே இருக்கின்ற பத்துமலை தமிழ்ப்பள்ளியும் முறையாக இயங்குகின்றதா என்பதில் கேள்விக்குறியே. மலேசியாவின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் எடுத்துக்காட்டாகவும, சிறப்பாகவும் திகழவேண்டிய பத்துமலை தமிழ்ப்பள்ளி இன்று மிகச் சாதாரண நிலையிலேயே இருந்து வெறும் கவனக் குழந்தையாக மாறி வருகிறது.

இந்த இரு தமிழ்ப்பள்ளிகளையும்கூட உங்களால் தூரநோக்குப் பள்ளிகள் தரத்திற்கு வளர்த்தெடுக்க முடியவில்லையே.

இலட்சக்கணக்கான வெள்ளி செலவு செய்து, அடிக்கணக்கில் எனக்குச் சிலை எழுப்பி வருகின்றீர்கள், எனக்காகச் செலவிடும் இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு தமிழ்ப் பள்ளியை எழுப்பி இருந்தால் நான் இன்றும் மகிழ்ந்திருப்பேன்.

மலேசியாவின் மோசமான நிலையில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைத் தத்து எடுத்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருந்தால் பெருமையடைந்திருப்பேன்.

மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்பார்கள். நம் மக்களுக்கு நீங்கள் செய்யும் பணிதான் எனக்குச் செய்யும் உண்மையான சேவையாக நான் மதிக்கிறேன்.

அதை விடுத்து அடிக்கணக்கில் சிலையும், ஆண்டுக்கொரு திருவிழாவும உங்கள் பக்தியை வியாபாரமாக்கி வருவதைக் கண்டு வருந்துகிறேன், வேதனைப் படுகிறேன்....

நன்றி : தமிழினி - செம்பருத்தி இதழ் - கோலாலம்பூர்.

( தமிழ்க் கடவுளான முருகன் தமிழ்ப்பள்ளிகளுக்காகப் பேச முன்வந்திருப்பது வாழ்த்துதற்குரியதே - நசன் )சாத்தானின் மாநாடு.

21 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களை அணுகுவது குறித்து ஆலோசிக்க சாத்தான் தன் பரிவாரங்களின் உலகளாவிய மாநாட்டைக் கூட்டினான். அவன் தன் துவக்க உரையில் சொன்னான். நம்மால் கிறித்துவர்களை ஆலயம் செல்லாமல் தடுத்து நிறுத்த இயலாது. அவர்கள் வேதம் வாசிப்பதையோ, அதன் மூலம் சத்தியத்தை அறிந்து கொள்வதையோ தடுக்க இயலாது. இதனால் அவர்கள் தங்கள் ரட்சகரோடு அன்யோன்னிய நட்பை உருவாக்குவதைத் தடுக்க இயலாமல் போகும். கிறித்துவோடு அவர்கள் நல்லுறவை உருவாக்கும் பட்சத்தில் அவர்கள் மீதான நமது வல்லமை செயலிழந்து போகும். இதைத் தடுப்பதற்கு நாம் கிறித்துவர்களின் நேரத்தை திருடுவது அவசியமாகிறது. நாள் முழுக்க இறைவன் மீது அவர்கள் கண்கள் பதிந்திராதபடி, அவர்களை திசை திருப்புவதே முக்கியமானது.

இந்தத் துவக்க உரைக்குப் பின்பு நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டன. வாழ்விற்குத் தேவையான காரியங்களில் கிறித்துவர்கள் Busy ஆக வைத்திருப்பதே ஒரே வழி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மனதில் கிறித்துவின் சிந்தனை இல்லாமல் செய்வதற்குப் புதிய உத்திகளும் அணுகுமுறைகளும் பரிசீலிக்கப்பட்டு, கீழ்க்கண்ட செயல்திட்டம் உருவானது.

1. கிறித்துவர்களை ஆடம்பர செலவு செய்யவும், அதைச் சமாளிக்க அதிகமாகக் கடன் வாங்கவும் வைக்க வேண்டும். இதற்காகக் கிரெடிட் கார்டுகளை இயன்றவரை அவர்கள் மீது திணிக்கவேண்டும்.
2. அதிகப்படியான செலவுகளைச் சமாளிக்க கணவனையும் மனைவியையும் ஒரு நாளில் 10 மணி முதல் 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கவேண்டும். இந்நிலை வாரத்தின் 6 நாள்கள் - ஏன் 7 நாள்கள் கூடத் தொடரவேண்டும். இதனால் கணவனும், மனைவியும், குழந்தைகளும், பெற்றோரும் இணைந்து நேரம் செலவழிப்பது குறைந்து குடும்பம் சீர் குலையும்.
3. எப்பொழுதும் பரபரப்பான மனநிலையில் இருக்கும்போது, அவர்களால் நேசரின் அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்க இயலாது. எனவே வாகனங்களில் செல்லும்போது அவர்களை FM ரேடியோ கேட்கத் தூண்டவேண்டும். வீட்டில் இருக்கும் நேரத்தில் கேபிள் டிவி, விசிடி, கம்யூட்டர், இண்டர்நெட் இவைகள் மீது மனம் லயிக்க வைக்க வேண்டும்.
4. சாலையோர டீக்கடை முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை அவர்கள் செல்லும் இடமெல்லாம் வேதாகம சம்பந்தமற்ற இசைகள் ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் காலையில் காபி குடிக்க அமரும்போது கூட கையில் செய்தித்தாளோ, பரபரப்பான புலனாய்வுப் பத்திரிகையோ வைத்துக் கொள்ளச் செய்வது அவசியம்.
5. ஊடகங்கள் மூலமாகக் கவர்ச்சிப் படங்கள், கணவர்களின் கண்களில் படுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இதனால் அவர்கள் புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கும் அதே நேரத்தில், மனைவிகள் வேலைப் பளுவினால் மாலைக்குள் களைப்புறுமாறு செய்யவேண்டும். கூடவே அவர்களுக்குத் தலைவலி வருமாயின் நல்லது. இதனால் குடும்ப உறவு சீக்கிரம் உடைபடும்.
6. கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தைக் குழந்தைகள் அறியாதவாறு அவர்களுக்குக் கிறிஸ்துமஸ் தாத்தாவை அறிமுகப்படுத்தவேண்டும்..
7. அரிதாய் ஓயவு கிடைக்கும் பட்சத்தில்கூட இயற்கையை இரசித்து இறைவனின் படைப்பாற்றலைக் கண்டுணராதவாறு அவர்களைத் தீம் பார்க்குகளுக்கும், தியேட்டர்களுக்கும் அனுப்பவேண்டும்.
8. ஆவிக்குரிய ஐக்கியங்களில் பிறர் பற்றிய கிசுகிசுக்களை அதிகமாகப் பேசும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
- சாத்தானின் செயல் திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது குறித்துச் சொல்ல வேண்டிய நீதிபதி நீங்கள் தான். Busy என்பதற்கு ஒருவேளை கீழ்க் கண்ட அர்த்தமும் பொருந்தக்கூடும்.

B - being U- under S- satans Y yoke.
நன்றி : உன்னத சிறகுகள் - இதழ் எண் 20அடிமாடு

கருப்பனுக்கு அன்று நாளே சரியில்லை. என்று தோன்றியது. முதலாளி வந்து வேலைக்குக் கிளம்பும்போது அடியுடன் திட்டுகளுடன் தொடங்கியது. செவ்வட்டைக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு அவ்வளவா புத்தி போதாது. நல்ல வயிறு புடைக்கச் சாப்பிடுவான், வேலை செய்வான், கிடைக்கும் நேரம் போக ஓய்வு எடுத்துக் கொள்வான்.

செவ்வட்டைக்கு முந்தி வேலைக்கு வந்தவன் நான். நான் வந்த பிறகு தான் முதலாளிக்கு நல்ல முன்னேற்றம். அவரே சொல்வார். கருப்பன் வந்த ராசி கையில நல்ல காசு நிக்குது என்று. நான் வரும்போது புறம்போககு இடத்தில இருந்தவரு, நல்ல இடமாப் பாத்து வாங்கி குடிசை போட்டாரு. அதையே இப்ப மெத்த வீடா ஆக்கிட்டாரு. இரண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணாரு. பையனுக்கு லோடு ஏத்தற மூணு சக்கர ஆட்டோ வாங்கிக் கொடுத்தாரு. இதுக்கெல்லாம் ஈடு கொடுத்தது எங்க உழைப்பும் ஒரு காரணம்.

நான் கிராமத்துல இருந்து அவருகிட்ட வரும்போது, நல்ல உடல்வாகோடு இருந்தேன். அவரும் எனக்கு எது பிடிக்குமோ அதையே வாங்கி வயிராற கொடுப்பாரு. எங்கள ஒழுங்கா கவனிக்கலன்னா பொண்டாட்டி புள்ளங்கள கண்டபடி திட்டுவாரு. - நம்ம தின்ற சோறே அதுங்க உழைப்பிலதான். அதுங்கள கவனிக்கலன்னா நல்ல கதி காணமாட்டீங்க - என்று. மழை வெயில் படாம பத்திரமா பாத்துகிட்ட மனுசன் ஒரே நிமிசத்தில எல்லாத்தையும் மறந்துட்டு - காசிகிட்ட - அன்சர் பாயை வரச்சொல்லு இனி கருப்பன் நமக்கு சரிப்பட்டு வராது, கணக்கு தீர்த்திடனும், உடனே ஆவரதைப் பார் - என்று.

காசி - அண்ணே நல்ல யோசண பண்ணி சொல்லு, ஊட்லேயும் பையன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிணு செய் - என்றான்.

நான் யாரைக் கேக்கணும். அவங்க யாரும் நம்ம முடிவுல தலையிட மாட்டாங்க. நீ போயி அன்சர கூட்டிகினு வரியா இல்ல நானே ேப்ாயி பாத்துகிட்டா. என்று முதலாளி சொன்னதுதான் தாமதம் காசி மனோகரன், சைக்கிள் கடையில் வாடகை சைக்கிள் எடுத்துகிட்டு உடனே கிளம்பிட்டான்.

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. இந்த இடம் இனிமேல் நமக்கு அன்னியமாகப் போகின்றது. நமக்கு வேலை இல்லை. அடுத்து நடக்கப் போவதை நினைத்தவுடன் உடம்பு லேசாக நடுங்கியது. காலே இற்றுப்போய் கீழே விழுந்து விடுவேன் என்று தோன்றியது. செவட்டையோ எதைப்பற்றியும் கவலைப் படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். என் தவறு ஏதும் இல்லை. தொழிலில் போட்டி, வாய்ப்பும் குறைந்து, வருமானமும் குறைந்தது. வயதாக ஆக இளமை கூடுமா? குறையுமா? அப்படியே வயதாகினாலும் அனுபவத்தால் நேக்காக எந்தக் குறையுமில்லாமல் இட்ட வேலைகளை முடியாவிட்டாலும் மூச்சு பிடித்து செய்து வருகிறேன். என்னுடைய உழைப்பை உறிஞ்சி விட்டாச்சு. இனிமேல நான் தேவையில்லை. என்னைவிட இளமையான பலசாலியைத் தேடுவார்கள். அவனுக்கும் எனக்கு ஏற்பட்ட நிலைதான். நன்றி கெட்ட மனிதரிடம் யார் நியாயம் சொல்வது?

நான் என்னைத் தேற்றிக் கொண்டேன். மனதில் எந்த எண்ணமும் எழவில்லை. நிர்மலமாக இருந்தேன்.

என்னுடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்று தெரிந்து விட்டது. இன்று புதன் கிழமை. சனி, ஞாயிறுக்குள் என் கதை முடிந்துவிடும். நான் அலறவோ, அழவோ இல்லை. எது வந்தாலும் எதிர் நோக்கத் தயாராகிவிட்டேன்.

காசியும் அன்சரும் வந்தார்கள். நான் சற்று தூரத்தில் படுத்திருந்தேன். முதலாளியிடம் பேசினார்கள். பணம் கைமாறியது.

அன்சர் என்னை முதுகில் தட்டி எழுப்பினான். வலி தாங்க முடியவில்லை என்றாலும், முரண்டு பிடிக்காமல் எழுந்து அவனுடன் நடந்து சென்றேன். இப்போது, செவ்வட்டையின் கண்களில் நீர். முதலாளியின் பாக்கெட்டில் பணம்.

என் உழைப்பால் சாப்பிட்ட மனிதர்கள் இப்போது என்னையே சாப்பிடப் போகிறார்கள். வயதானவர்களை மனிதர்கள் சாப்பிடுவதாக இருந்தால், முதியோர் இல்லங்களும், கருணை இல்லங்களும் கூட இருக்காது இல்லையா ?....

- புரிசைக் கிழான் -
நன்றி : குன்றத்தூர் முரசு - சித்திரைச் சிறப்பிதழ்.ஒரு மரத்தின் மரணம்

அன்று எனக்கு விடுமுறை. வாசலில் வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதைப்புத்தகம் படிக்கத் தொடங்கினேன். அது மிக ரம்மியமான பொழுது. வசந்தத்தின் வருகையை அறிவிக்கும்படி வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கின. குயில் ஒருபுறம் பாடிக்கொண்டிருக்க, ஒரு காகம் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தது. நான் அன்னாந்து பார்த்தபோது, குதூகலத்தில் மரம் கலகலக்க, வேப்பம் பூக்களால் நான் அர்ச்சிகப்பட்டேன்.

ஒவ்வொரு நாளும் 60 கி.மீ. பயணித்து, அலுவலகத்தில் 1000 பிரச்சனைகளைச் சந்தித்து, அலுத்துச் சலித்து, வீடு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து... எனச் சக்கரமாய்ச் சுழலும் என் வாழ்க்கையில் ஒரே ஒரு சுகந்தம் எதுவென்றால் என்னுடைய விடுமுறை நாள்தான். அந்த அழகிய நாளில்தான் நான் வேம்பின் நிழலில் லயித்துப் போயிருந்தேன். அருகே கருப்பாயி அப்பத்தா சாவதானமாகக் காலை நீட்டிக் கொண்டு வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தது. அதன் அருகே பணியார, ஆப்ப வியாபாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது.

இரு மழலைகள் பணியாரத்தைப் பிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அருகே கோழிக் குஞ்சுகள் மேய்ந்து கொண்டிருக்க, அவைகளுக்கும் பணியாரத்தைப் பிட்டுப்போட, குஞ்சுகள் போட்டி போட்டுக் கொண்டு உண்பதை தங்களது சிறிய விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 75 வயதான மூக்கையா தாத்தா, வேம்பின் வாசம் பட்டு வந்த தென்றலில் கண் செருகி உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையே ஒருவித உன்னத நிலையில் இருந்தார். கிட்டத்தட்ட 25 - 30 வருடங்களாக எங்களை ஆசுவாசப்படுத்துவது அந்த வேப்பமரம் தான்.

ரசிப்பின் நிலையிலிருந்து மீண்டும் நான் கதைப் புத்தகத்தில் என் கண்களை ஓட்டினேன். அப்போது திடீரென்று 10 பேர் கோடாறி ரம்பத்துடன் வந்து, அந்த வேம்பினை வெட்ட ஆரம்பித்தனர். சாலையில் இடையூறாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். மூக்கையா தாத்தா மெதுவாக எழுந்து தடியினை ஊன்றியவாறு விலகிச் சென்றார். அப்பத்தா வெற்றிலையை மென்றபடி என்ன நடக்கிறது என சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தது. பணியாரக் கடை அவசர அவசரமாக மூடப்பட்டது. அவர்கள் வந்த வேலையை ஆரம்பித்தார்கள்.

காக்கை குஞ்சுகள் அலர ஆரம்பித்தன. குயில்கள் பறந்தோடின. நான் அதிர்ச்சியோடு வீட்டுக்குள் நுழைந்தேன். சூரியன் மறைந்த அந்நேரம் நான் தூக்கக் கலக்கத்தோடு எழுந்து வெளியே வந்தேன். வேப்பமரம் இருந்த இடமே தெரியாது, விறகுகளாக வண்டியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

காக்கைக் குஞ்சுகள் தரையில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் பறக்க இயலாது தவழ்ந்தபடி இருந்தன. தாய்க் காகம் வந்து கதறியபடியே பறந்து கொண்டிருந்தது. மரம் வெட்டப்பட்டதால் பூமி தகித்துக் கொண்டிருந்தது. அப்பத்தா, மூக்கையா தாத்தா, மழலைகள், பணியாரக்கடை, கோழிக் குஞ்சுகள் என எதுவுமே இன்றி அந்த இடம் மயானமாகக் காட்சியளித்தது.

மரம் வளர்ப்போம், வளம் பெறுவோம் என எழுதிவைத்தால் போதுமா? மரங்களைப் பாதுகாக்க வேண்டாமா? நான் ஏதோ குற்றம் செய்தது போல, எனது மனது அரித்துக் கொண்டே யிருந்தது. என்ன செய்யலாம்? யோசித்தேன்.

ஒரு முடிவுக்கு வந்தேன். ஆல், அரசு, வேம்பு, பாதாம், புங்கை போன்ற மரக்கன்றுகளை என் சொந்தச் செலவில் வாங்கி நடுவது என முடிவு செய்தேன். அதற்காக நான் என் விடுமுறை நாளுக்கு டாடா சொல்ல வேண்டி வரும். பரவாயில்லை அதனால் என்ன?

எத்தனையோ அப்பத்தாக்கள், மூக்கையா தாத்தாக்கள், கோழிக்குஞ்சுகள், மழலைகள், பணியாரக் கடைகள், காக்கைக் குடும்பம் என எத்தனையோபேர் மகிழ்வடைவார்கள். நானும் களைப்புற்றிருக்கும் வேளையில் என்னைத் தென்றலால் தாலாட்டப் போவதும் அவைதானே.

- வெ. லட்சமணகுமார் -

நன்றி : சுற்றுச் சூழல் புதிய கல்வி - மே 2005


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061