வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 03 - 2006


தமிழின் முதல் நூல் தொல்காப்பியம்

இன்று இந்தியா முழுவதும் வற்புறுத்திக் கற்பிக்கப்படும் இந்தி மொழியின் ஆதிகாலமே பத்தாம் நூற்றாண்டுதான். அதன் முதல் நூலே 11 ஆம் நூற்றாண்டில் பிருத்விராஜ் ராஸே நூல் தான்.

ஆனால்
தமிழின் முதல் நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். அதன் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு.

தெலுங்கு முதல் நூல் - ஆந்திர மகாபாரத நன்னயப்பட்டு கி.பி. 1030
கன்னடம் - கவிராஜ மார்க்க - கி.பி. 850
மலையாளம் - ராம சரிதம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு
அஸ்ஸாமி - ஆதியுகம் நாட்டுப்பாடல்கள் 950 - 1300
ஒரியா - கேசவ கோயிலி - மார்த்தாண்டர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
குஜராத்தி - பரதேஸவர் பாஹூ பரிராஸ - கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
சிந்தி - முதற்காலம் 1000 - 1522
பஞ்சாபி - பாபா பரீத்ஷகர் கஞ்ச் 1173
மராத்தி - விவேகசிந்து முகந்தராசர் - 1188
வங்க மொழி - பெளத்த சர்யா பதங்கள் - 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லை.

இவை யாவும் இந்தி மொழிகள் பற்றி அவ்வம் மொழி வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி : வளரும் தமிழ் உலகம் 15 சனவரி 2006
குடியரசுத் தலைவரின் தாய்மொழிப் பற்று

முனைவர் மலையமான்

தாய்ப்பால் ஊட்டும் பொழுதே, பாசத்தோடும் பரிவோடும் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதே தாய்மொழி. இது இறுதி மூச்சு இருக்கும் வரை இதயத்தில் பதிந்திருக்கும். இது நெஞ்சின் மூலையில் என்றும் நின்று நிலைத்திருக்கும். ஆனால், சில சமயம், சூழ்நிலை மாறுபாட்டால், கல்வி வேறுபாட்டால், தாய்மொழியின் பயன்பாட்டிற்குச் சிதைவு நேருவதுண்டு.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இருக்கிறார். அவரைச் சுற்றிலும் இந்தியின் வல்லாண்மை வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. அயலக ஆங்கில மொழிக் கழுகுகளும் தொடர்புப் பார்வையால் தம் பெருமையை நிலைநாட்டியுள்ளன. ஆதிக்கத் தடைகள் முற்றுகையிட்டிருக்கும் போதும், ஆட்சிநடைமுறை அவரை நெருக்கியபோதும், அப்துல் கலாம் தாய்மொழியாகிய தமிைழ் மறக்க வில்லை. எந்தெந்த முறைகளில் அவர் தமிழ்ப் பற்றைக் காட்ட முடியுமோ, அந்தந்த வழிகளில் அதைத் துணிந்து வெளிப்படுத்தி வருகிறார்.

அவருக்குத் தொலைபேசித் தொடர்பு வரும். அதை அவருடன் இணைப்பதற்காகச் சில நொடிகள் ஆகக்கூடும். அந்த இடைவெளியில், அலைபாயுதே கண்ணா என்ற தமிழ்ப் பாட்டிசை, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றவரின் காதில் விழும். அப்படி, விழச் செய்துள்ளார் அப்துல்கலாம். தொடர்பு கொண்டவர், யாராக இருந்தாலும் அவர் தமிழ்ப்பாட்டைக் கேட்டுத்தான் காத்திருக்க வேண்டும்.

அவருடைய இணையத்தில் அவர் தமிழில் எழுதியுள்ள 17 பாட்டுகளில் ஐந்து பாட்டுகள் இடம் பெற்றுள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவு, கும்பகோணத்துக் கொடுந்தீயில் மடிந்த சிறுவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை, பொறுப்புணர்ச்சி, இளைஞர்கள், விண்ணைத் தொடும் அவர்களின் கனவுகள் ஆகியவற்றைப் பற்றிய அந்தப் பாட்டுகளில் தமிழ்மண்ணின் வாசனை வீசுவதை உணர முடியும்.

அவருடைய வரவேற்பரையில் விளம்பரப் பலகை இருக்கிறது. அதில் ஆட்சி பற்றிய திருக்குறள் பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்து உரையுடன் விளங்கும்.

பாராளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் அவர் பேசும்போது உரையின் தொடக்கத்தில் மற்ற மொழிச் சொற்களுடன் தமிழிலும் அவர் வணக்கம் என்று கூறுவார். இதன்மூலம் தன் தாய்மொழி தமிழ் என்பதைக் குறிப்பாக வெளிப்படுத்துவார். தன் தாய்மொழியை மதிப்பவர் என்ற உண்மையையும் புலப்படுத்துவார்.

அவர் தன் உரையில் தவறாமல் திருக்குறளைச் சொல்லுவார். அவர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பொது தமிழில்தான் பேசுவார். இந்தியாவின் தலைநகரில் வாழும் அவரைச் சந்திக்க வரும் தமிழ்நாட்டாரிடம் தமிழில்தான் பேசுவார். தமிழ்நாட்டுப் பொங்கலும் இட்டலியும்தான் அவர் விரும்பிச் சாப்பிடுகிறார். தமிழ்நாட்டு உடையான வேட்டியையே அவர் கட்ட விரும்புகிறார். ஆனால் குண்டு துளைக்காத உடை அணிய வேண்டிய கட்டாய நிலையால் அவருடைய விருப்பம் நிறைவேற முடியாத நிலைமை உள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வாஷிங்டனில் சிறப்பான முறையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அதற்கு இணையதளத்தின் மூலம் தன் சொற்பொழிவை அப்துல்கலாம் வழங்கினார். அதில் அவர் முக்கியமான கருத்து ஒன்றைச் சொன்னார். திருக்குறள் இந்தியாவின் நல்வழி நூல். இதற்குப் பல உரைகள் உண்டு. பல மொழி பெயர்ப்புகள் உண்டு. ஆனால், இன்று உலக அளவில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் பேசப்படுவது போல, திருவள்ளுவரும் திருக்குறளும் பேசப்படுகிறதா என்பது சிந்தனைக்கு உரியது என்றார்.

இதன் மூலம் தன் தாய்மொழியில் பிறந்த, தலை சிறந்த நூல், உலக அறிஞர்களால் இன்னும் உணரப்பட வில்லையே என்ற தன் வேதனையை வெளிப்படுத்தினார். அந்த உரையில் அவர் தன் பட்டறிவையும் குறிப்பிட்டார். அவருடைய ஆசிரியரான சதீஷ் தவான் இவரிடம் ஒரு திட்டத்தை ஒப்படைத்தார். அப்போது திட்டத்தைச் செயற்படுத்துகையில் இடையூறுகள் வரும். அவற்றைக் கட்டுப்படத்தி இலக்கை அடைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். உடனே அப்துல் கலாமின் மனத்தில்..

இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் - குறள் 623

என் திருக்குறள் மின்னியது. 2000 ஆண்டுக்கு முன்பே கூறப்பட்ட அந்தப் பாடல் தன்னை வழிநடத்தியது என்றார்.

அவர் தாய்மொழியில் - தமிழில் - சிந்திக்கிறார். தமிழருடன் தமிழில் உரையாடுகிறார். தமிழில் கவிதை எழுதுகிறார். திருக்குறளைப் பரப்புகிறார். சாதகமே இல்லாத சூழ்நிலையில் தமிழை வளர்க்கிறார். சாதனை புரிகிறார். இவருடைய முறைகளைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும், கடைபிடிக்க வேண்டும்.

நன்றி : எழுகதிர் - பிப்ரவரி 2006
நமது கடமை.

நம்மை ஆண்ட ஆங்கிலேயன் நம்மை விட்டுப் போனாலும் பல செயல்களில் அவனுடைய விலாசங்களையே நமது முகவரிகளாகச் சொந்தமாக்கிக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

ஆங்கிலப் புத்தாண்டு வருகிறது என்றால் பொருள்களுக்கெல்லாம் தள்ளுபடி விற்பனை செய்வதாக விளம்பரங்கள் மக்களை மொய்த்து மயக்குகின்றன. டிசம்பர் 31 நடுஇரவு வரை விழித்திருந்து, நண்பர்களுடன் குடித்துக் கும்மாளமிட்டு சாலைகளில் அலைவதுதான் நாகரிகமென கருதப்படுவது வருத்தத்திற்குரியது. ஆங்கிலப் புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்குத் தான் நமக்கல்ல.

பிப்ரவரி 14 வாலன்டைன்ஸ்டே - காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதல் எவ்வளவுக் கெவ்வளவு கொச்சைப்படுத்தப்படுகிறதோ அதனின் உச்ச நிலைதான் காதலர் தினக் கொண்டாட்டம். முடிந்தவரை காதலை சினிமா சீரழித்து வருகிறது. அதனைப் பார்த்து இருபாலரும் வாழ்க்கையை அழித்துக் கொள்வதுதான் மிச்சமாக இருக்கிறது. உண்மையான காதலை ஒருவருக்கொருவர் பரிமாறி, கடைசி வரை காதல் ததும்பும் கணவன் மனைவியாக, பாரதிதாசன் காட்டும் காதலர்களாக வாழ்ந்து காட்டுவதில்தான் காதலின் கெளரவம் நிலைபெறும்.

ஆபாசக் களியாட்டங்களுக்கு மேடை அமைத்து பண்பாட்டுச் சீரழிவிற்குத் துணை போகும் இவ்விரண்டு கொண்டாட்டங்களையும் தவிர்ப்பதே நமது கடமை.

நன்றி : ஆசிரியர் உரை - மதுமலர் காலாண்டிதழ் - அக் -டிச 2005
வேலூர் சிப்பாய் கலகம்ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஆற்காடு நவாப் முகமது அலியின் குடும்பச் சண்டையில் தலையிட்டு 1760 இல் வந்தவாசியில் நடத்திய சண்டையில் ஆங்கிலேயருக்கு வெற்றி கிடைத்தது. இதனால் ஆங்கிலேயருக்கு நாடு பிடிக்கும் ஆசை உருவானது. இந்த வெற்றிக்குப்பின் நவாப் முகமது அலி ஆங்கிலேயரைச் சார்ந்திருக்க நேர்ந்தது. ஆங்கிலேயர்கள் , திருநெல்வேலி சீமை வரை பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் போய் எதிர்த்தவர்களை எல்லாம் கடுமைய்ாகத் தண்டித்தனர். இதனை எதிர்த்து ஹைதர் அலி பல இடங்களில் போரிட்டு, 1782 இல் வேலூர் கண்ணமங்கலம் கணவாய் அருகே தங்கி இருந்தபோது, நோயுற்று அம்மூர் நரசிங்காயபுரத்தில் மரணமடைந்தார்.

1782 இல் ஹைதர் அலி காலமானதும் அவருடைய மகன் திப்புசுல்தான் அரியணை ஏறினார். திப்பு தென்னகத்தில் ஆங்கிலேயரை எதிர்க்கும் வல்லமை மிக்க வீரனாக விளங்கினார். திப்புவிற்கு பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவும் இருந்தது. திப்புவை வீழ்த்துவதற்கு ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப், ஐதராபாத் நிஜாம், மராட்டிய மன்னன் ஆகியோருக்குப் பல ஆசைகள் காட்டி அவர்களை துணை சேர்த்துக் கொண்டார்கள். 1799 இல் நடைபெற்ற நான்காவது மைசூர் போரில், திப்பு மரணமடைந்தார். திப்புவின் 12 மகன்களும், 6 மகள்களும் வலிமைமிகு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

ஸ்ரீரங்கப்பட்டிணம் சண்டைக்குப் பின் ஆங்கிலேயர் ஆற்காடு நவாபுகளின் உரிமையில் தலையிட்டு நவாப் என்னும் அதிகாரத்தைப் பறித்து ஆற்காடு இளவரசர் என்றாக்கி, சென்னை அமீர் மகாலில் குடியேற வைத்தனர். 1801 இல் ஆங்கிலேயர்கள், கர்நாடகத்தின் முழு ஆதிக்க அதிகாரத்தைப் பெற்றனர். இதே ஆண்டில், வட ஆற்காடு மாவட்டம் உள்ளிட்ட சென்னை மாகாணம் திருநெல்வேலியிலிருந்து ஓங்கோல் வரை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் இந்த வளர்ச்சி கண்ட ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர் மீது வெறுப்புக் கொண்டனர். திப்புவின் மரணமும், நவாப்புகள் அவமானப்படுத்தப் பட்டதும் குறிப்பாக முஸ்லீம் மக்களிடையே எதிர்ப்பு உணர்வை வளர்த்தன.

வேலூரில் இருந்த ஆங்கிலேயப் படையில் 1500 க்கு மேலான இந்திய வீரர்களும் 370 ஐரோப்பிய வீரர்களும் இருந்தனர். 1806 இல் மதராஸ் படைக்கு முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சர்ஜான் கிரடேக் என்பவன் பல விதிமுறைகளைப் புகுத்தினான். அந்த விதிமுறைகள் யாவும் தம் பண்பாட்டிற்கு ஒவ்வாதது எனக் கருதிய இந்திய வீரர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர்.

1806 மே மாதத்தில், லெப்படினென்ட் கர்னல் டோலி என்வர், இந்திய வீரர்களுக்கு இராணுவ அணிகலன்களின் மாற்றங்களில் மனநிறைவு இல்லை என மதராசுக்குத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து புது ஆணையை எதிர்ப்பவர்கள் மதராசுக்கு அனுப்பப்பட்டு தண்டனை பெற்றார்கள், புரட்சி செய்யும் படையாளியை நீக்கி 23 ஆவது ரெஜிமென்டில் சேர்த்தனர். இந்நிலையில் முகமதிய பக்ரிகள், மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆங்கிலேயரை ஒழித்துக் கட்ட பிரச்சாரம் செய்தனர்.

வேலூரில், சிப்பாய்கள் புரட்சியை 1806 இல் ஜூலை 14 ஆம் நாள் தான் நடத்த முன்பு திட்டமிட்டிருந்தனர். முஸ்தபா பேக் என்பவர் கர்னல் போர்பஸ் என்பவரிடம் புரட்சி செய்வது தொடர்பான இரகசிய திட்டங்களை தெரிவித்து விட்டான். மேலும், 1806 இல் ஜூலை 9 ஆம் நாள், வேலூர் கோட்டையில் நடைபெற்ற திப்பு சுல்தானின் மகள் திருமணத்தில் மக்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அன்று இந்திய வீரர் ஆங்கில அதிகாரியை அணிவகுப்பில் அவமரியாதை செய்துவிட்டார். இச்சூழலில், ஆங்கிலேயர்கள் என்ன செய்வார்களோ என பயத்தினால் திடீர் எனப் புரட்சியைத் தொடங்கினர்.

1806 ஜூலை 10 ஆம் நாளன்று அதிகாலை 4 மணிக்கு, இந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதை நடக்கும் இடத்திற்கு வந்தனர். ஆங்கிலேயர்கள் இந்திய வீரர்களைச் சுடுகின்றனர் என்று புரளி கிளப்பினர். இதனால் இந்திய வீரர்கள் கொதித்தனர். ஆங்கிலேயரின் இருப்பிடங்களுக்குச் சென்று அதிகாரிகளைக் கொன்றனர். பல ஆங்கிலேய வீரர்களும் மாணடனர். திப்புவின் மகன் பட்டே ஐதரை அரசனாக்கினர். திப்புவின் கொடியை ஏற்றி யூனியன் ஜாக் கொடியை கீழே இறக்கினர்.

இத்தகவல்., வேலூர் கோட்டைக்கு வெளியில் இருந்த மேஜர் கூட்ஸ் என்பவருக்குத் தெரிந்தது. அவர் இராணிப் பேட்டையிலிருந்த பெரும் குதிரைப்படைக்குத் தெரிவித்தார். கர்னல் இகின்லஸ்பி தனது படை மற்றும் காலப்பர் துப்பாக்கிகளைக் கொண்ட பெரும் படையுடன் வந்து, துப்பாக்கியால் வேலூர் கோட்டையின் வலிய கதவுகளைத் தகர்த்து உள்ளே சென்றான். தலைமை இல்லாது புரட்சி செய்த சுமார் 800 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்டத்தின் மற்ற இடங்களில் 600 வீரர்கள் அகதிகளாகக் காவலர்களால் பிடித்து வேலூர், திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டனர். 17 இந்திய அலுவலர்கள் கோட்டைக்கு மேற்கில் தூக்கிலிட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்

இந்த சிப்பாய் கலகம்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நன்றி : அமைப்புசாரா தொழிலாளர் இதழ் - பிப்ரவரி 2006
நச்சுப் பொருள்களின் குப்பைக் கூடையல்ல.


பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான க்ளெமென்ஸ் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. குசராத் மாநிலத்தில் உள்ள அலங் தளத்தில் கப்பல் உடைப்பு பணிக்காக இது வருகிறது.

ஆபத்தான இரசாயன கழிவுகள் அடங்கிய இந்தக் கப்பல் இந்தியாவுக்கு வருமானால் புற்றுநோய், நுரையீரல் சிதைவு மற்றும் பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக கிரின்பீஸ் என்னும் சுற்றுச் சூழல் இயக்கம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்தப் பிரச்சனை உச்சநீதி மன்றத்திற்கு எடுததுச் செல்லப்பட்டு அதன் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டு நச்சுக் கழிவுகள் அடங்கிய கப்பல் மட்டுமல்ல பலவகையிலுமு இந்தியா குப்பைக் காடாக மேலை நாடுகளால் கருத்ப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் போபாலில் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட நச்சுக் காற்றின் விளைவாக ஆயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே.

இந்தியாவெங்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட தோல் மேற்கு நாடுகளுகுகு ஏற்றுமதி ஆகிறது. ஆனால் இத்தொழிலில் வெளியாகும் கழிவு நீர் நமது நிலத்தை முற்றிலுமாகக் கெடுக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நமது தொழிலாளர்கள் தோல் நோய்களுக்கு ஆளாகி நலிகிறார்கள்.

திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் வெளியாகும் சாயநீர் ஆற்று நீரோடு கலந்து விவசாய நிலங்களை பாழ்படுத்தியதை உயர்நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனாலும் இந்தப் போக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கொகோ கோலா குளிர்பான தயாரிப்புத் தொழிற்சாலைகள் இந்தியாவெங்கும் உருவாக்கப்பட்டு நமது நீர் ஆதாரங்களை உறிஞ்சிக் கொழுக்கின்றன. நமது நிலத்தடி நீர் முற்றாகச் சுரண்டப்படுகிறது. இந்தக் குளிர்பானமும் நச்சுத்தன்மை வாய்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னேறிய மேல நாடுகள் மேலே கண்டது போன்ற தொழில்களைத் தமது நாடுகளில் தடை செய்துவிட்டன. ஆனால் பின்தங்கிய நாடுகளில் இத்தகைய நாசகார தொழில்களைத் தொடங்கும்படி ஊக்குவிக்கின்றன.

ஏகாதிபத்தியங்களாக இருந்த போது நமது வளங்களை எல்லாம் கொள்ளையடித்த ஐரோப்பிய நாடுகள், இப்போதும் மறைமுகமாக அதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய போக்கிற்கு நாம் முடிவுகட்டியாக வேண்டும். நமது நாடு நச்சுப் பொருள்களைச் சுமக்கும் குப்பைக் கூடை அல்ல. நமது மக்கள் சோதனைக் கருவிகளும் அல்லர். பிரான்ஸ் நாட்டுக் கப்பல் இந்தியா நுழைவதற்குள் தடை விதிக்க வேண்டும். நச்சுத் தொழிற்சாலைகள் அறவே தடுக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் பசுமை இயக்கம் போன்றவை உருவாக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது. சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் இத்தகைய தொழில்களுக்கு எதிராக மக்களே கொதித்தெழுந்து போராடும் சூழலை பசுமை இயக்கங்கள் ஏற்படுத்துகின்றன.

அதனால்தான், அந்நாடுகளில் நச்சுத் தொழிற்சாலைகளுக்கு இடமில்லை. அதைப் போல நமது நாட்டிலும் பசுமை இயக்கங்கள் உருவாக்கப்பட்டு, மக்கள் அணி திரட்டப்படவேண்டும். அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருந்து பயனில்லை. மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இத்தகைய போக்குகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராட வேண்டும். அப்போது தான் இது போன்ற தீமைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

நன்றி : தென்ஆசியச் செய்தி - பிப்ரவரி 16-28 ஆசிரியர் உரை.


சங்ககால பெண்பாற்புலவர்கள்

தொகுத்தவர் : புலவர். மது. நாராயணசாமி.

1. ஒளவையார்
2. அள்ளூர் நன்முல்லையார்
3. காக்கை பாடினியார்
4. காவற்பெண்டு
5. நக்கண்ணையார்
6. வெண்ணிக்குயத்தியார்
7. குறுமகள் இளவெயினி
8. குறிஎயினி
9.தாயங்கண்ணியார்
10. பூங்களுத்திரையார்
11. பொன்முடியார்
12. போந்தைப்பசலையார்.
13. பூதப்பாண்டியன்தேவி
14. பெருங்கோப்பெண்டு
15. பெருங்கோழி நாயகன்மகள்
16. நக்கணையார்.
17. பாரிமகளிர்
18. பேய்மகள் இளவெயினி
19. ஒக்கூர்மமாசாத்தியார்.
20. நல்வெண்ணியார்
21. ஆதிமந்தியார்.
22. நெட்டிமையார்.
23. நப்பசலையார்
24. வெள்ளிவீதியார்.
25. காமக்கணிப்பசலையார்.
26. கழாழ்க்கீரன் எயிற்றியார்
27. கச்சிப்பேட்கு நன்னாகையார்
28. ஊன்பித்தையார்.
29. மாற்பித்தையார்.
30. பூங்கண் உந்திரையார்.
31. வெறிபாடிய காமக்கணியார்.
32. அஞ்சி அத்தைமகள் நாகையார்.

நன்றி : குறள் மணம் - பிப்ரவரி 2006

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061