வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 01 - 04 - 2006கருக்கலில்


எம். சிவபாரதி

இன்னிக்கு யாரும்
உழவுக்கோ,
தண்ணீர் பாய்ச்சவோ,
களையெடுக்கவோ,
வண்டிக்கோ,
செல்லக் கூடாதாம்.

அப்படிச் சென்றால்
ஆயிரம் அபராதமாம்.
கண்மாய்
கருவேல மர
பஞ்சாயத்து ஏலக் கூட்டமாம்
தண்டரா
போட்டுச் சொன்னான் காளி,

பக்கத்து வீட்டு
லெட்சுமியக்காவோடு
கருக்கலில்
எழுந்திருக்கனும்
காலைக்கடன் கழிக்க...


நன்றி - கணைாயாழி - மார்ச் 2006
நீரில் அலையும் முகத்தில்
அ.வெண்ணிலா


அங்கப் போகாதே
அதை எடுக்காதே
கீழே இறங்கு,
மேலே ஏறாதே,
பேசாம இரு,
சத்தம் போடாதே,
தூங்கு சீக்கிரம்
தொண தொணன்னு பேசாதே
இவற்றோடு
லேசான ஒரு கையுயர்த்தலும்
போதுமானதாயிருக்கிறது
குழந்தைகள்
நம் உலகத்திற்கு
அழைத்துக் கொள்ள...

கரும்பலகையில் எழுதாதவையில்
பழ.புகழேந்தி


சார்...
நடுவிரல் தூக்கியபடி எழுந்தான்
அனுப்பினேன்
சார்...
உடனே மற்றொருவன்
அதட்டினேன்
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுவதும்
நாற்றமடித்தது
என் அதிகாரம்.

கவின்குறு நூறுவில்
ஈரோடு தமிழன்பன்


இரண்டு மிட்டாய் தானே
வேணும்
இதோ என்று ஒன்றையே
உடைத்து
இரண்டாக்கித் தந்தார் அப்பா
அடுத்த நாள்
ஒன்றுக்கு இரண்டு பேனா
மேசைமேல்
அவன்
அப்பா பார்த்தார்
வாசலில்
விளையாடிக் கொண்டிருந்தான்
அவன்

நன்றி - குறிஞ்சி வட்டம் - இதழ் 11, 12.
கம்ப்யூட்டா யுகத்தில் காட்டுமிராண்டிகள்


முஸ்லீம்கள் பெரிதும் மதிக்கும் முகம்மது நபியைக் கிண்டல் செய்யும் கேலிச் சித்திரமாக வரைந்த டேனிஷ் நாட்டு கார்டூனிஸ்ட் மீது, உலக முஸ்லீம்களின் ஆத்திரம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் உ.பி. மாநில அமைச்சர் முகமதுயாகூப் குரோஷி. டேனிஷ் கார்டூனிஸ்ட் தலைக்கு விலை வைத்தார். அந்தக் கார்டூனிஸ்ட் தலையைக் கொய்து தருபவர்களுக்கு ரொக்கப்பரிசும், தங்கமும் தருவதாக அறிவித்தார். பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் இந்த ஆவேசப் பேச்சு முஸ்லீம் - மதவாதிகளைத் தூண்டிவிடும். அமைச்சர் முஸ்லீம் மத தீவிரவாதி என்ற வட்டத்திற்குள் அடைபடுவார்.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு மாநில அமைச்சரே இப்படி வன்முறைக்குத் தூபம் போடும் வகையில் சீறினால், பெரும்பான்மை மதவாதிகள் சும்மாவா இருப்பார்கள்?

இந்து மதக் கடவுள்களையும், பெண் தெய்வங்களையும் ஆபாசமாக வரைந்த ஓவியர் எம்.எப்.உசேன் கண்களைத் தோண்டி எடுத்து, படம் வரைந்த வலது கை கட்டை விரலை வெட்டி எடுப்பவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசு அளிக்கிறேன். பாரத மாதாவை அசிங்கமாக வரைந்த ஓவியரை சும்மா விடமுடியாது என்று முழங்கியுள்ளார், பா.ஜா.வின் தலைவர் ஜசுபாய் பட்டேல். குவைத் மாநிலத்தவரான இவர் உசேன் வரைந்த இந்துக் கடவுள்களின் படம், மத நம்பிக்கையாளர்களின் மனதை புண்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

தலையைக் கொய்துவா என்று ஒருவரும், கண்ணைத் தோண்டி வலதுகை கட்டை விரலை வெட்டிவா என்று ஒருவரும் முரசு கொட்டுவதைப் பார்த்தால், கசாப்புக் கடைக்காரர்களைத் தான் இந்தப் பிரமுகர்கள் வரவேற்பதாகத் தெரிகிறது. அடிக்குஅடி, கொலைக்கு கொலை என்று பகவத்கீதையும், குரானும் போதிக்கவில்லை. அப்பாவிகளின் மத நம்பிக்கையை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தும் சூழ்ச்சியாளர்களை வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும்.

நன்றி - குமரிக்கடல் மார்ச் இதழ் 2006
ஆங்கலம் இனி பயன்படாது

ஆங்கில மொழி தனது சொந்த நாட்டிலேயே செல்வாக்கிழந்து வருகிறது. என பிரிட்டிஷ் அரசு அமைத்த குழு அறிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டு காலத்திற்கு மேலாக பிரிட்டனில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கதிரவன் மறையாத பிரிட்டிஷ் பேரரசு என ஆங்கிலேயர்கள் மார் தட்டிக் கொள்வது வழக்கம். ஆப்ரிக்கா. ஆஸ்திரேலியா, ஆசியா, அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு கண்டங்களில் பிரிட்டன் அரசியல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்ததன் விளைவாக ஆங்கில மொழியும் ஆதிக்க மொழியாக மாறிற்று. ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

பிரிட்டிஷ் பேரரசில் அடிமைப் பட்டிருந்த அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றுவிட்டன. பிரிட்டனின் அரசியல் ஆதிக்கம் சுருங்கி விட்டது. இதன் விளைவாக அதன் வணிக வளர்ச்சி சரிந்து விட்டது. இந்த நிலையில் பிரிட்டனில் உள்ள குழந்தைகள் ஆங்கிலம் மட்டும் கற்றால் போதாது என்று சீனம், அராபி, போன்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டுமென இக்குழு ஆலோசனை வழங்கி உள்ளது.

பிரிட்டனில் சீனமொழி கற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவும், சப்பானும் தொழில் வணிகத் துறையில் மிகவேகமாக வளர்ச்சியடைந்து பிரிட்டன் போன்ற நாடுகளை மிஞ்சிவிட்டன. எனவே அம்மொழிகளை அறிந்து கொள்ளாமல் பொருளாதாரத்துறையில் முன்னேற முடியாது என்ற உண்மையை உணர்ந்ததன் காரணமாகவே பிரிட்டனில் உள்ள மாணவர்கள் அம்மொழிகளைக் கற்கத் தொடங்கி உள்ளனர்.

ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக ஏற்காவிட்டால் நமது இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகிவிடும் என நமக்கு சிலபேர் அறிவுரை கூறுகிறார்கள். ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலக நாடுகளுக்கெல்லாம் போய் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள். பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஆங்கலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் ஆங்கிலக் கல்வி மட்டுமே தங்களுக்கு உதவாது என்று உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கே உதவாத ஆங்கிலம் நமக்கு மட்டும் எப்படி உதவப்போகிறது ?

நன்றி : தென்ஆசியச் செய்தி - 1-15 மார்ச்சு 2006
தமிழ் சோறு போடுமா?


தமிழ் ஏடுகளை நான் தொடுவதேயில்லை. தமிழ்ப் படங்களை நான் பார்ப்பதேயில்லை, தமிழ் நிகழ்ச்சிக்கு கூட்டங்களுக்கு நான் போவதேயில்லை. தமிழா சோறு போடும்? என்றெல்லாம் நாறியும் கூறியும் தம் வக்கிரத்தை வாரிக் கொட்டுபவர்களாய்த் தமிழர்களிடையிலேயே நிற்கும் பல தன் முனைப்புத் தமிலர் களை நாம் அறிவோம்.

இப்படி, தமிழ் சோறு போடுமா என்கிற வகையிலேயே, அண்மையில் மேற்கொண்டவொரு பயணத்தின்போது எதிர் இருக்கையிலிருந்த இரண்டு தமில் பேர்வழிகளின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. வேரிலேயே வெந்நீர் பாய்ச்சுவது போன்ற அந்த வெட்டித்தன மட்டிகளின் பேச்சுகள் அடுத்து வந்த இரயில் நிலையத்தில் இறங்கியதால் ஓய்ந்தும் தொலைந்தது.

காற்று சோறு போடுவதில்லை. ஆனால் நுகர்கிறோம். கனல் சோறு போடுவதில்லை ஆனால் விரும்புகிறோம். புனல் சோறு போடுவதில்லை ஆனால் பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழிடம் மட்டுமென்ன சோறும் எதிர்பார்ப்பும்?

சோறும் சாறும் மட்டுமே வாழ்க்கை என்று தக்கையாய் - சக்கையாய்க் கிடப்பவர்கள்தான் இப்படிப்பட்ட மொக்கையான கருத்துக்களை மொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

பிறப்பது உண்பது உறங்குவது மடிவது முடிவதுமான நிலைப்பாடுகள் உயிர்களாகிய எல்லாவற்றுக்குமே உரியதுதான். ஆனால் நிலம் வாழ்வன நீர் வாழ்வன உள்ளிட்ட வேறுபல இனங்களிலிருந்து மாந்தனை வேறுபடுத்திக் காட்டுவதே அவனது சிந்தனையும் சீரார்ந்த அறிவும் செறிவார்ந்த ஆற்றலும் சமூகச் சார்பும் சாதனைகளும்தான். இவற்றுக்கு மூலமாகும் முதன்மைக்குரியது மொழியே.

விலங்குகள் விலங்குகள்தான். விலங்குகள் வரலாற்று உரியனவாய் வாழ்வதில்லை. வரலாறு படைப்பதில்லை. ஆனால் வரலாறு படைக்கும் வலியும் வகையும் வளமும் வனப்பும் மனிதனுக்கு மட்டுமே உண்டு.

மனிதன் பேசத்தெரிந்தவொரு பிறவி. மற்ற உயிர்களிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் விந்தைக்குரியது. அவன் பேசுகின்ற மொழி எனும் ஒரு தன்மைதான். அப்படிப்பட்ட சிறப்புக்குரிய மொழிகளில் செம்மொழி எனும் சிகரம் தொட்டிருக்கும் மொழி தமிழ்மொழி, தாய்மொழி, ஏற்றமுறு பலமொழியினரும் எக்கலைச் சார்பினரும் எல்லாக் கலையும் இதன்பால் உள என ஒப்புக் கொண்டிருக்கும் உன்னதமொழி.

எண்ணியதைச் சொல்லிட, எழுதிட, படித்திட, பாடிட, பழகிட எனப் பலவகைப் பயன்பாட்டுக்குமுரிய தாய்மொழியைப் போற்றல் பரத்தல் வளர்த்தல் வாழ்த்தல் என்பது அம்மொழியாளர்களுக்குரிய கடன் - நன்றிக் கடன். முதன்மை தொன்மை, வன்மை, மென்மை, நன்மை எனும் பன்மைத் தன்மைக்குரிய தாய்மொழியாம் தமிழைப் பேணல் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொரு தமிழருக்குமுரிய கட்டாயக் கடன்

தமிழ் என்பது மொழிமட்டுமல்ல. அது அழகின் நாதம். அறிவின் கீதம், அன்பின் வேதம், நம் உயிரோட்டமுடன் இருக்கவேண்டிய உயர்வு, உணர்வு, உறவு.

தமிழ் சோறு போடுகிறதோ இல்லையோ, தாயைப் போற்றும் தரமுடையார் யாவரும் தாய்மொழியாம் தமிழைப் போற்ற மறப்பதற்கில்லை. மறுப்பதற்குமில்லை.,

சோறு தேவைதான். ஆனால் சோற்றுக்காகவே வாழ்க்கையா? மொழிப்பற்று இனப்பற்று ஏதுமேயில்லாது அப்படியென்ன ஒரு பிறவி. பிழைப்பு தழைப்பு? பேசத் தெரிந்தவொரு மிருகம் போல் வெறும் சோற்றுத் துருத்திகளாய் வாழ்வதைவிட சுடுகாட்டுக் குவியல்களில் ஒன்றாய்க் கிடக்கலாமே ?

நன்றி : ஊற்று பெங்களூர்த் திங்களிதழ் - ஆசிரியர் உரை - கும்பம் இதழ் 2037
அமெரிக்காவின் போக்கு உலக அமைதிக்கு உகந்ததல்ல.


ஈராக் அழிவுக்கான ஆயுதங்களையும் பயங்கர உயிரியல் ஆயுதங்களையும் வைத்திருப்பதாகக் கூறி 2003 இல் அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப்போர் இன்று வரை நின்றபாடில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான சொத்திழப்புகளும் ஏற்பட்டுவிட்டன. நாடுகளுக்கிடையே பகையுணர்ச்சியும் முரண்பாடுகளும் சண்டை சச்சரவுகளும் மேலோங்கி வருகின்றன. வேடிக்கை என்னவென்றால் ஈராக்கிடம் பயங்கர அழிவுக்கான ஆயுதங்கள் இருந்ததாக இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஈரான் அணு ஆயுதப் பரவலுக்காக அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. சர்வதேச அணுசக்தி ஏஜென்சி போர்டு கூட்டத்தில் அமெரிக்காவோடு சேர்ந்து சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்சு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளன. இந்த வாக்களிப்பு ஈரான் நாடு அணு ஆயுதப் போட்டியில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தானே யொழிய அமெரிக்காவோடு சேர்ந்துகொண்டு ஒரு சார்பாகச் செயல்படுவதற்காக அன்று.

இதற்கிடையில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள், விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஈரானின் அணு ஆயுத உற்பத்திக்கான இடங்களை அழித்து ஈரானின் அணு ஆயுதப் பரவல் செய்யும் முயற்சியைத் தடுத்து நிறுத்தப் போவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா தன்னிச்சையாக அவ்வாறு செய்யுமானால் அந்தச் செயல் உலக அமைதிக்கு ஊறுவிளைவித்து விடும். அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் தாக்கலாம், அடிபணியச் செய்யலாம் என்ற ஆதிக்க சக்திக்கு வழிகோலிவிடும.

இதில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்சு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஐ.நா.சபை மூலமாக ஈரானோடு சுமுகமாகப் பேச்சு வார்த்தை நடத்தி அந்த நாட்டை உலகக் கருத்தோடு ஒத்துப் போகச் செய்வதே சாலச் சிறந்த முறையாகும். - ஆசிரியர் -

நன்றி : சுற்றுச் சூழல் புதிய கல்வி மார்ச் 2006 - ஆசிரியர் உரை
முல்லைப் பெரியாறு அணை - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்தலாம் என்று 27-2-06 திங்கள் அன்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள மிகத் தாமதமான நீதி இது,

தமிழகத்தின் வறண்ட தென்மாவட்டங்களின் நலன் கருதி 1874 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக், கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிச் சென்று கடலில் கலந்த பெரியாறு முல்லை நதிகளுக்கு இடையே அணையைக் கட்டும் பணியைத் துவங்கினார். அடர்ந்த வனப் பகுதியில் 35,000 அடி உயரத்தில் அரசு உதவியுடன் நடைபெற்று வந்த அணை கட்டுமானப் பணிபல இடர்பாடுகளால் தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதனால் அரசின் நிதி உதவியும் நின்று போனது, ஆனால் பென்னிகுயிக் தனது சொந்தச் செலவில் 1895 ஆம் ஆண்டு அணையைக் கட்டி முடித்தார். இவ்வணை நீர்தான் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு அடித்தளமாக இருந்து வருகிறது.

அணை கட்டி முடிக்கப்பட்டு நூறாண்டுகள் கழித்து 1979 இல் கேரளத்து ஏடுகள் அணையில் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்ட சில தவறான செய்திகளைத் தொடர்ந்து கேரள அரசும் அணையின் பாதுகாப்பு குறித்து ஐயத்தையும் அச்சத்தையும் எழுப்பியது. இதையடுத்து மத்திய நீர்வளக்குழுமம் ஆய்வு செய்து அணையைப் பலப்படுத்த சில பரிந்துரைகளைத் தமிழகத்திற்குத் தெரிவித்தது. அதன்படி நீர்மட்டம் 156 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு மற்றும் பலப்படுத்தும் வேலைகள் செய்தபின் நீர் மட்டத்தை 145 அடியாக உயர்த்தலாம் என்பதுவே பரிந்துரை.

பலப்படுத்தும் பணி முடிவடைந்த நிலையில் கேரள அரசு அணையில் நீர் மட்டத்தை 136 அடியிலேயே வைத்திருக்க வலியுறுத்தி வந்தது. இதனால் தமிழகத்திற்குக் கடந்த காலங்களில் ரூ240 கோடி பயிர் பாதிப்பும் ரூ100 கோடி மின்உற்பத்தி பாதிப்பும் ஏற்பட்டது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி 19-5-2000 இல் நடுவணரசு தமிழக - கேரள முதல்வர்களைச் சந்திக்கச் செய்து பேசி முடிக்க ஏற்பாடு செய்தது. அச்சந்திப்பில் கேரள அரசு இணங்க மறுத்தது.

இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து தக்க பரிந்துரை தர நடுவணரசு வல்லுநர் குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டம 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் கேரளாவின் கெடுமதியால் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்கப்படாமல், வீணாகக் கடலில் சென்று கலந்துள்ளது. இவ்வாறாகக் கடலில் கலந்து தண்ணீர் வீணானாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கூடுதலாகத் தமிழகத்துக்கு வர விடமாட்டோம் என்று கேரள ஆட்சியாளர்கள் கொக்கரிக்கின்றனர்.

ஆறுகள் உற்பத்தியாகும் இடத்திற்கும் கேரளாவில் அவை கடலில் கலக்கும் இடத்துக்கும் இடைப்பட்ட 120 கிமீ தூரத்தில் வேளாண்மை செய்யக்கூடிய சமபரப்பு என்பது மிகவும் குறைவே என்பதும் கணிப்பில் கொள்ளவேண்டிய கருத்து.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு, தென்மாவட்ட விவசாயிகளின் கடந்த 25 ஆண்டுகால பல்வேறு கட்டப் போராட்டங்கள் மற்றும் தொடர் முயற்சிகளின் விளைவு என்றாலும் அணையின் முழு அளவான 152 அடிக்கு உயர்த்தினால் தான் ஓரளவு முழுமையான பயனை எட்ட முடியும். இல்லையேல் அரக்கிணறு தாண்டிய கதையாகவே இது முடியும் என்றே அவ்விவசாயிகள் கருதுகின்றனர்.

நன்றி : இலட்சியப் போராளி - மார்ச்சு 2006 ஆசிரியர் உரை
சிறுபிள்ளைகளின் கற்கும் திறனைக் குடிக்கும் கணினிகள்


பெரும்பான்மையான பெற்றோர்கள் கணினியால் கல்விக்கும், வருங்காலத்தில் தொழில் நுட்பத் துறையிலும் பயன் உள்ளது எனக் கருதி பிள்ளைகளுக்குக் கணினி வாங்கிக் கொடுக்கின்றனர். உலக அளவில் கணினியின் பயன்பாடு உயர்ந்த வண்ணம் இருப்பதை நாமும் உணர்கிறோம்.

ஆனால் ஆய்வாளர்களின் கூற்று நம்மையெல்லாம் திடுக்கிட வைக்கின்றது. கணினி உண்மையில் பிள்ளைகளின் கல்விக்கு உதவாது என்றே அவர்களின் முடிவு. அளவுக்கு அதிகமான நேரத்தைக் கணினித் திரையில் செலவழித்தால் சிறு பிள்ளைகளின் மனவளர்ச்சியைப் பாதிக்கும், இளவயதிலேயே கணினியைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு ஆக்க சக்தி, கற்பனை, தன்முனைப்பு, கவனம், ஆசைகள் ஆகியவற்றின் ஆர்வத்தைக் குறைக்கின்றது.

இதன் தொடர்பாகக் கணினி சிறுவர்களின் கல்விக்கு உதவாது என்ற முழு விளக்கக் கட்டுரை கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத செம்பருத்தி இதழில் வெளியிடப் பட்டிருந்ததை நீங்கள் படித்திருக்கலாம்.

1) கணினி குழந்தைகளின் அறிவு வளர்ச்சியைக் குறைக்கும்
2) எண்ணம், கற்பனை, படைப்பாற்றல் திறன்களைக் குறைத்து தடையை ஏற்படுத்துகின்றது.
3) எழுத்து, சொல்வளம், வாசிப்புத்திறன் குன்றிப் போகும்.
4)மொழி, எழுத்துத் திறன், வலிமை குறையும்.
5) ஒருமுகச் சிந்தனை குறையும்.
6) கணினி பிள்ளைகளின் சமுதாய வளர்ச்சியைப் படிப்படியாக அழிக்கவல்லது.
7) விட்டுக் கொடுத்து சகித்துக் கொள்ளும் பண்பை குறைக்கச் செய்கிறது.
8) கூடிப்பழகும் தன்மையைக் குறைக்கவும் தனித்த நிலைமையையும் உருவாக்கும்.

என்ற கருத்தினை முன்வைத்து அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

அதே கருத்தடிப்படையில் எழுதப்பெற்றுள்ள கட்டுரை பயனீட்டாளர் குரலில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையை, செம்பருத்தி வாசகர்களின் பயனுக்காக இங்கே வெளியிடுகின்றோம்.


மலேசியாவில் கல்விக்கூடங்களில் கணினியைப் பயன்படுத்தக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நமது நாட்டில் தற்பொழுது உள்ள மொத்த விவேகப் பள்ளிகளின் எண்ணிக்கை 90. சென்ற வருடம் இறுதி வரைக்கும் சுமார் 300 பள்ளிக்கூடங்களை விவேகப் பள்ளிக்கூடங்களாக மாற்றி அமைக்கவிருப்பதாக செப் 2002 இல் தி ஸ்டார் நாளேட்டில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்வித் துறையில் கணினியின் பயன்பாடு நாளுக்கும் நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அது உண்மையிலேயே எந்த அளவுக்குப் பயந்தரக்கூடியது என்பதனை ஜெர்மெனியின் இரு கல்வி நிபுணர்களான தோமஸ் ஃபச் மற்றும் ரோஜர் வோஸ்மேன் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடைய ஆய்வுகளின் முடிவுகளைச் சுருக்கித் தந்துள்ளனர். "பள்ளிக்கூடங்களில் கணினியால் சிறார்களின் கல்வி வளர்ச்சியில் பெரிதான மாற்றம் எதையும் செய்து விட முடியாது. சிறார்கள் வீட்டில் பயன்படுத்தும் கணினியோ அவர்களுடைய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு விளைவிக்கும்" - இதுவே அவர்களுடைய ஆராய்ச்சிகளின் முடிவு.

இவர்கள் ஏதோ சும்மா பொதுவான ஒரு முடிவுக்கு வந்துவிடவில்லை. 31 நாடுகளைச் சேர்ந்த 15 வயதுள்ள 1,00,000 சிறார்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள்தாம் இவை. முடிவுகள் வருமாறு.

வாரத்தில் சில நேரங்களில் கணினி உபயோகிக்கும் மாணவர்கள் வாசிப்பு மற்றும் கணக்குப் பாடத்தில் பின்தங்கியிருக்கிறார்கள்.

வீடுகளில் கணினி உள்ள மாணவர்களின் கல்வித் தரம் இன்னும் மோசமாகவே உள்ளது. வீடுகளில் புத்தகங்கள் நிறைய உள்ள சிறார்களின் கல்வித் தரத்தில் மேம்பாடு காண முடிகிறது.

கணினி அதிகம் உள்ள வீடுகளில் சிறார்களின் கல்வித் தரம் குறைவாகவே இருக்கிறது.

ஒரு மாணவனின் வாழ்க்கையில் கணினி கவர்ச்சியான ஒரு சாதனமாகத் திகழ்ந்தாலும், குறிப்பிட்ட மாணவனின் வேலையைக் கணினியே செய்து முடிக்கும் ஒரு நிலை உருவாகுமானால் மாணவனின் முழுமையான அனுபவப் படிப்புக்கும் வளர்ச்சிக்கும் அங்குத் தடை இருக்கிறது என்றே அர்த்தம். அளவுக்கு அதிகமான கணினிப் பயன்பாடு மாணவரின் கற்பனா சக்தியையும் கலைத் தன்மையையும் முடக்கி விடுவதை யாரும் அறிவதில்லை.

பவர் பொயின்ட் என்ற கணினி மென்பொருள் மூலம் மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை மிகவும் கவர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதைப் பள்ளிக்கூடங்கள் பெருமையாகக் கொள்கின்றன. சற்று ஆழ்ந்து நோக்கு வோமேயானால், மாணவர்களின் கற்பனை வளம் பவர் பாயிண்ட் மென்பொருளின் உபயோகத்தில் உள்ள வரையறைகளோடு நின்று விடுகிறது. அதே மாணவரிடத்தில் கிரேயான், கலர் பென்சில், கத்தரிக்கோல், பசை போன்றவற்றைக் கொடுத்தால் கணினி செய்வதைவிட இன்னும் பிரமாதமாகவும் அதே வேளையில் அதிக செலவினங்களை ஏற்படுத்தாமலும் செய்து முடிப்பார்கள்.

சிறார்களுக்குக் கணினி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்தப் பாதிப்புகள் பின்வருமாறு:

1) மூளை வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது
2) கற்பனை வளம், உந்து சக்தி மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை அழிக்கின்றது.
3) எழுதுதல், எழுத்துக்கூட்டுதல் மற்றும் வாசிப்புத் திறனைக் குறைக்கிறது.
4) உன்னிப்பாகக் கவனிக்கும் திறனைக் குறைக்கிறது. பொறுமையின்மையை அதிகரிக்கிறது,

சிறார்கள் ஆழமாகச் சிந்திப்பதற்கு உதவாத, மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு ஐடப்பொருளாகக் கணினி இருக்கிறது என்பதில் ஐயமில்லை. கணினியே உலகமாகக் கிடக்கும் மாணவர்கள் மொழித் திறனை வளர்ப்பதில்லை. மனிதனோடு ஒன்றி வாழும் கலைக்கான கால அவகாசம் குறைக்கப்படுகிறது.

1990 இல் ஜேன் ஹேலி எழுதிய "என்டேன்ஜர்ட் மைன்ஸ்" என்ற நூலில் ஒரு பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்டிருந்தது. ஓர் ஆங்கில ஆசிரியர் எந்த மாணவர் சுயமாகச் சிந்தித்திருக்கிறார், எந்த மாணவர் கணினியின் துணைகொண்டு இணையத்திலிருந்து பொறுக்கி எடுத்து எழுதியிருக்கிறார் என்று எளிதாக இனங்கண்டு கொள்ள முடியும். கணினியின் துணை கொண்டு எழுதுகின்னறவர்கள் "ஒன்றை எழுதிவிட்டு, பிறகு ஒன்றை எழுதுவார்கள். சிந்திப்பதில் ஒரு கோர்வை இருக்காது. எழுதுவதில் ஓர் அர்த்தத்தையு புரிந்துணர்வையும் உருவாக்கிக் கொண்டு இருக்கமாட்டார்கள்"

கணினிமூலம் கற்பித்தல் கற்பித்தலில் உண்மையான உலகை மாணவர்கள் புரிந்து கொள்ள வழிவகுப்பதில்லை. விதவிதமான விளையாட்டுகள், சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களிடையே பழகி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இயற்கையை நேசித்தல், பலவிதமான கலைகளை கற்றுக் கொள்ளுதல் எல்லாம் அறிவை வளர்ப்பதோடு, மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, பக்குவப்பட்ட மாணவர்களையும் எதிர்காலச் சமுதாயத்தையும் உருவாக்க உதவிபுரியும்.

நன்றி : செம்பருத்தி இதழ் - மார்ச் 2006
பணம் சம்பாதிப்பது மட்டுமே கல்வியின் நோக்கமா?ஜே.கிருஷ்ணமூர்த்தியின் திஸ் மேட்டர் ஆப் கல்ச்சர் என்ற புத்தகத்திலிருந்து

கல்வி என்பதன் பொருள் என்ன என்று என்றேனும் நம்மை நாம் கேட்டிருக்கின்றோமா? - என நான் வியக்கிறேன். நாம் ஏன் பள்ளிக்குச் செல்கிறோம், பல்வேறு பாடங்களைப் படிக்கின்றோம், தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒருவரோடொருவர் நல்ல மதிப்பெண்களுக்காகப் போட்டியிடுகின்றோம்?

கல்வி என்று அழைக்கப்படும் இது எதைக் குறிக்கிறது? எதனைப் பற்றியது? மாணவர்களுக்கு மட்டுமேயன்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் இந்தப் புவியினை நேசிக்கும் அனைவருக்குமே இது மிகவும் முக்கியமானதொரு கேள்வியாகும். கற்பிக்கப்படுதல் எனும் இந்தப் போராட்டத்தை நாம் ஏன் ஏற்கிறோம்? சில தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் வேலையைப் பெறுவதற்கும் மட்டுமா? அல்லது நாம் இளையவராக இருக்கும் போதே இந்த வாழ்வின் முழுமையான வழி முறைகளைப் புரிந்து கொள்ள நம்மைத் தயார் செய்வதே கல்வியின் நோக்கமா?

வேலையைப் பெறுவதும், வாழ்வின் அடிப்படைத் தேவைகளை சம்பாதிப்பதும் அவசியமே. எனினும் அவ்வளவுதானா? நாம் அதற்காக மட்டும்தானா கற்பிக்கப் போகிறோம்? வாழ்க்கை என்பது ஒரு அசாதாரணமான பரப்பையும், உயர்வையும் கொண்ட ஒரு பெரிய புதிர். வாழ்க்கை நாம் மனிதர்களாக செயல்படும் ஒரு பரந்த பரப்பேயன்றி நிச்சயமாக வெறும் ஒரு வேலையோ, தொழிலோ வாழ்க்கை என்றாகாது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளை சம்பாதிப்பதற்கு மட்டுமே நம்மை நாம் தயார் செய்து கொள்வோமானால், வாழ்வின் முழு அர்த்தத்தினையும் நாம் தொலைத்து விடுவோம். வாழ்வைப் புரிந்து கொள்ளுதல் என்பது பரீட்சைகளுக்குத் தயார் செய்து, கணிதம், இயற்பியல், அல்லது நீங்கள் விரும்பும் ஏதோ ஒரு பாடத்தில் வல்லுநராகுதல் என்பதைக் காட்டிலும் மிக மிக முக்கியமானது. எனவே ஆசிரியர்களோ, மாணவர்களோ நாம் எவராக இருப்பினும் ஏன் கற்பிக்கின்றோம் என நம்மை நாமே கேட்டுக் கொள்வது முக்கியமானதல்லவா?

வாழ்க்கை ஒரு கிடைத்தற்கரியது. பறவைகள், மலர்கள், செழிக்கும் மரங்கள், வான்வெளி, நட்சத்திரங்கள், நதிகள் மற்றும் அதிலுள்ள மீன்கள் என இவை அனைத்துமே வாழ்க்கையாகும். இந்த ஏழ்மையும், செழுமையும் வாழ்க்கை. குழுக்களும், இனங்களும், நாடுகளும் இடையிலான போராட்டங்களும் வாழ்க்கை. தியான நிலையும் வாழ்க்கை.

நன்றி - வசந்த இதழ் - பிப் - மே 2006
புலம் பெயர் நாடுகளில் தலைமுறை இடை...வெளி


இளைய அப்துல்லாஹ் லண்டன்.

லண்டனில் ஒரு பிரபல்யமான கோவில் ஒன்றில் வைத்து ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கேட்டான். சாதி என்றால் என்ன? உண்மையில் சாதி பற்றி பெரிய அறிவு என்னிடம் இல்லை. ஆனால் இளைஞர்களுக்குப் பதில் சரியாகச் சொல்ல வேண்டும் என்ற கருத்து எனக்குண்டு.

தொழில்களை வைத்துச் சாதிகளை பிரித்து விட்டார்கள் எமக்கு முந்தியவர்கள் என்றேன்.

ஏன் அப்படிச் செய்தார்கள் என்று அவர் கேட்கும் போது என்னிடம் விடை இல்லை.

தனது வீட்டில் அம்மா சொன்னவ - ரூபன் வீட்டிலை சாப்பிடக்கூடாது - அவை குறைஞ்ச சாதி என்று - என அந்த மாணவன் சொல்லும் போது நான் அதிர்ச்சியடைய வில்லை.

புலம் பெயர் நாடுகளில் சாதி பார்ப்பது அற்றுப் போய்விடவில்லை. பத்திரிகை விளம்பரங்களில் பார்க்கிறோம். சாதி பெயர் சொல்லி விளம்பரம் செய்திருப்பார்கள். திருமணம் முடிப்பது சுப காரியங்களுக்கு சொல்வது என்று தங்கள் சாதிக்குள் மட்டும் அழைப்பு விடுப்பது தொடர்கிறது.

அங்கு பிறந்தவர்களுக்கு சாதிகள் பற்றித் தெரியாத நிலையில் பெற்றோர்கள் அதனை வளர்த்து விடப் பார்த்தாலும் பிள்ளைகள் சாதி தொடர்பாக அலட்டிக் கொள்வதில்லை.

பெற்றோர் ஒரு நிலையும், பிள்ளைகள் ஒரு நிலையும் எடுக்கும் பொழுது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிறழ்வு தோன்றுகிறது. அதனை பின்னர் ஒட்டமுடியாமல் போய்விடுவதுண்டு. பிள்ளைகளுக்கு ஒவ்வாத விடயங்களில் பெற்றோர்கள் சொல்லும் பொழுது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நேரடி பிளவு வந்துவிடுகிறது.

ஒரு நண்பனின் மகள் அவரது சாதி அல்லாத வேறு ஒரு சாதி காதலனைத் தெரிவு செய்வதற்காக நண்பர் மகளை அடித்து விட்டார். ஒரு சிறிது நேர ஆத்திரம் மகளை அவரை விட்டு பிரித்துவிட்டது. மகளுக்கு வயது பதினெட்டு. அவள் தனியே சென்றுவிட்டாள். அம்மா அழுதபடி இருக்கிறார். மகள் இனிமேல் வீட்டுக்கே வரமாட்டாளாம்.

புலம் பெயர் நாடுகளில் சாதிகள் தொடர்பான சர்ச்சை இந்தளவுக்குப் போய் விட்டது. ஊரில் உள்ள சாதிகளின் பெயரால் சண்டையும் சில இடங்களில் நடந்ததுண்டு.

மூன்றாவது தலைமுறையில் வளர்ந்த ஒரு சமுதாயம் புலம் பெயர்நாடுகளில் வேரூன்றி விட்டதனைப் பார்க்கிறோம். அவர்கள் தமிழ்ப் பெயர்களில் உள்ள ஆங்கிலம் அல்லது டொச் அல்லது டச் அல்லது பிரெஞ் இப்படி இன்னேரன்ன மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எமது ஊர்க்கட்டுப்பாடுகள் என்று சொல்லப்படுபவை தெரியாதவர்கள் இவர்களிடம் எதனையும் திணிக்க முடியாது. இவர்கள் தாமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்.

ஒரு சமூக சேவகரின்மகள் சொன்னாள் - அப்பா நான் திருமணம் முடிக்கப் போறவரது நடைமுறைகள் பழக்க வழக்கங்களை அவதானிக்க அவரோடு ஒரு வருடம் வாழ்ந்து பார்த்துவிட்டுத்தான் முடிவு சொல்வேன் எனக்குப் பிடிக்கும் அல்லது பிடிக்காது. என்பதை.

அப்பா அதிர்ந்து போய் இருக்கிறார். இப்படியான வாழ்க்கை முறையோடு ஒன்றிப் போனால் ஒன்றுங்கள் அல்லது எங்களை விட்டு விடுங்கள் என்று முன்னாலேயே சொல்லிவிட்டு அவர்கள் போய்விடுகிறார்கள்.

இங்கு போல அப்பா ஒருவர் வேலை செய்து பணம் சம்பாதிக்க வீட்டில் பிள்ளைகள் இருந்து சாப்பிடுவது, செலவுக்கு அப்பாவை நம்பி இருப்பது என்பது இல்லை. ஒவ்வொருவரும் சுயமாக சம்பாதிக்கிறார்கள். எவர் மீதும் எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பெற்றோருக்கும் பிள்ளைளுக்குமான அவ நம்பிக்கை பல இடங்களில் வந்து விடுவதுண்டு. ஒன்று தான் கண்டிப்பான அப்பா என்பதைக் காட்டப்போக, வேறு சில இடங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான மொழிப் பிரச்சனை.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்த நாட்டு மொழி தெரியாமை அவர்கள் புலம் பெயர் நாடுகளில் அந்நியப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும்.

லண்டனில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அண்ண்ன், தங்கை இருவரின் குடும்பமும் சந்திக்கிறார்கள். அண்ணன் பிரான்ஸ். தங்கை லண்டன். இருவரின் பிள்ளைகளில் ஒருவருக்கு மட்டும் பிரெஞ்சு தெரியும். மற்றவருக்கு ஆங்கிலம் மட்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கிறார்கள்.

உறவு முறையைச் சொல்லிக் கொள்ளக்கூட மொழி இல்லை. மெளனம்.

இந்தப் பிரச்சனை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே தூரத்தை அதிகப்படுத்துகிறது. தாய்மொழி மீதான அக்கறையை வெளிப்படுத்தாததன் விளைவு இப்போது நாம் அனுபவிக்கிறோம். வீட்டில் தமிழில் பேசுவது தொடர்பான எந்தக் கரிசனையும் இல்லை. அடுத்த தலைமுறைக்குத் தமிழே தெரியாது தான் வளரும் நாடுகளின் மொழியை உள்வாங்கிக் கொண்டு அதனூடே சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.. இதன் மூலம் தமிழ் அழிந்துவிடும்.

ஒரு பிரபலமான சிறுகதையாளர் நந்தினி சேவியர் அவர் சொன்னார். தமிழ் மொழி பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் பிள்ளை பெத்துக் கொண்டுதானே இருக்கிறோம் இங்கு.

இந்த உத்தரவாதத்தை மீறின அச்சம் புலம் பெயர் நாடுகளைப் பார்க்கும் பொழுது இருக்கிறது. இங்கு ஒரு பிரபல்யமான பத்திரிகையாளரின் மனைவி சொன்னார் - என்ரை மகன்களுக்குத் தமிழ் பேச வராது, தேவையில்லை. அதனை அவ பெருமையாக நினைக்கிறா.....

நன்றி - வடக்கு வாசல் பிப்ரவரி 2006

அகழாய்வு காட்டும் தமிழக வரலாறு


நடன.காசிநாதன்., தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர்.

தமிழகத்தில் இந்திய நடுவண்அரசு தொல்லியல் துறையாலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையாலும், சென்னைப் பல்கலைக் கழகத் தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல் துறையாலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையாலும் கிட்டத்தட்ட 100 இடங்களில் நில அகழாய்வு நடைபெற்றிருக்கின்றன. மேலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையாலும், இந்திய நடுவண் அரசு தொல்லியல் துறையாலும், கோவாவிலுள்ள தேசிய கடலாய்வு நிறுவனத்தாலும் சில கடலகழ்வாய்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன.

மேலே குறிப்பிடப்பெற்ற அகழாய்வுகளால் தமிழ்நாட்டின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது, அதாவது சுமார் 2,00,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்காணும் அகழாய்வுகள் நடைபெற்ற இடங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று வரலாற்றுக்கு முந்தைய கால இடங்கள், மற்றொன்று வரலாற்றுக்கால இடங்கள்.

அ) வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இடங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம், அத்திரம்பாக்கம், வடமதுரை, பெரும்போர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சானூர், அமிர்தமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், தருமபுரி மாவட்டம் பையம்பள்ளி, மோத்தூர், திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சாயர்புரம், கோவை மாவட்டம் கொடுமணல், மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி போன்ற அகழாய்வு நடைபெற்ற இடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இடங்களாகும்.

ஆ) வரலாற்றுக்கால இடங்கள்

வரலாற்றுக்கால அகழாய்வு இடங்களாக திருச்சி மாவட்டம் உறையூர், புதுவை மாநிலம் அரிக்கமேடு. நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், பெரியார் மாவட்டம் கரூர், இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், தேரிருவேலி, விழுப்புரம் மாவட்டம் மாளிமைமேடு, திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டி, விருதுநகர் மாவட்டம் மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் வசவசமுத்திரம், தஞ்சை மாவட்டம் வல்லம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், சேந்தமங்கலம், பெரம்பலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு போன்ற முக்கிய இடங்களைக் குறிப்பிடலாம்.

அ) வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இடங்களில் தெரியவந்தவை

1) திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையில் இற்றைக்கு 2,00,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

2) செங்கற்பட்டு மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கத்திலிருந்து பழைய கற்காலக் கருவிகளோடு கல்லாகப் பெற்ற மனிதக்கால் எலும்பு கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் சற்றேறக்குறைய 50,000 லிருந்து 75,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இங்கேயே ஆப்பிரிக்க நாட்டில் கண்டெடுக்கப் பட்ட கல்கோடாரி போன்ற அஷூலியன் வகை கற்கோடாரிகள் கிடைக்கப் பெற்றன. இவை சென்னைக் கைக் கோடரி தொழிற்வகை என்று அழைக்கப்படுகின்றன.

3) குடியம் மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 இயற்கைக் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

4)சாயர்புரம் செம்மண்மேடுகளிலிருந்து நுண்கற்கருவிகள் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் இற்றைக்கும் 4000 ஆண்டுகளிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

5)திருத்தங்கலிலிருந்து நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

6)டி.கல்லுப்பட்டியிலிருந்து செப்புக் கருவிகளும், இரும்புக் கருவிகளும் கிடைத்திருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 1000 லிருந்து கிமு 500 முடிய இருக்கலாம்.

7)ஆதிச்சநல்லூரிலிருந்தும் செப்புத் திருமேனிகளும், செப்பு மற்றும் இரும்பு தங்கப் பொருள்களும் மிகுதியான அளவில் (கிட்டத்தட்ட 4000) திரட்டப் பட்டிருக்கின்றன. அண்மையில் இவ்விடத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியின் உட்பக்க அடிப்பாகத்தில் கிமு 500 ஐச் சார்ந்த பண்டைத் தமிழ் எழுத்துகளில் பெயர் எழுதப் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பெற்றது.

8) பையம்பள்ளியிலிருந்து கிமு 4000 லிருந்து கிமு 2800 ஆண்டு காலங்களில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்களின் குழிமனைகள் கண்டறியப் பட்டிருக்கின்றன.

9)பெரும்போரில் தியான நிலையில் அமர்ந்திருந்த ஒரு எலும்புக் கூட்டோடு ஒரு பெருங் கற்காலச் சவப்பெட்டி கிடைத்திருக்கிறது. இதுவும் மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

10) கானூரிலிருந்து பெருங்கற்காலக் கல்லறைகளிலிருந்தும் விலங்குகளின் (குதிரை உட்பட) எலும்புகள் எடுக்கப்பட்டன.

11) கருங்கல்லில் வடிக்கப்பெற்ற காடுகாள் தெய்வச் சிலை பெருங்கற்காலக் கல்வட்டத்தின் நடுவில் திருவண்ணாமலை மாவட்டம் மோட்டூரிலிருந்தும், விழுப்புரம் மாவட்டம் உடையாநத்தத்திலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் காலம் சற்றேறக்குறைய கிமு 500 ஆக இருக்கலாம்.

12) தருமபுரி மாவட்டம் மோத்தூரிலிருந்து பெருங்கற்காலத்திய சுடுமண் காளை அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

வரலாற்றுக்கால இடங்களில் தெரிய வந்தவை

1) அரிக்கமேட்டிலிருந்து புதிய கற்காலக் கட்டடங்களும் (2002 - 800 பிசி) சுட்ட செங்கற்களால் கட்டப்பெற்ற நெற்களஞ்சியங்களும், (கிமு 200 கிபி 200) துணிகளைச் சாயம் ஏற்றும் சாயத் தொட்டிகளும், குடிநீர் உறை கிணறுகளும், வெளிநாட்டாரோடு தமிழகம் கொண்டிருந்த வணிக உறவை வெளிப்படுத்தும் வெளிநாட்டு மதுக்குடுவைகளும், பானையோடுகளும், விலை உயர்ந்த கல்மணிகளும், சங்ககாலச் சோழர் காசு (கிமு 500 -400) ஒன்றும் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

2) பூம்புகாரிலிருந்து சுட்ட பெரும் செங்கற்களால் கட்டப்பெற்ற கிமு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படகுத் துறைகளும், கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புத்த விகாரமும், கிபி 4-5 ஆம் நூற்றாண்டைய சிறு புத்தர் செப்புத் திருமேனியும் பிராமி எழுத்துகள் எழுதப்பெற்ற பானை ஓடு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளன. எழுத்துப் பொறித்த பானை ஓடு கி.மு 3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.

இங்கு நடைபெற்ற கடலகழாய்விலிருந்து கண்டறியப்பட்டவை

அ) கடற்கரையிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் காவிரியாற்றின் வடபகுதியில் ஒரு கட்டடப்பகுதியும், அதற்கு முன்பாக இரு கட்டடப் பகுதிகளும், பண்டைக் காவிரியாற்றின் தென் பகுதியில் இரு கட்டடப் பகுதிகளும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. இவை கிமு 5-4 ஆம் நூற்றாண்டினதாக இருக்கவேண்டும்.

ஆ) பூம்புகாருக்கருகில் உள்ள சின்னமேடு என்னும் மீனவர் ஊருக்கு எதிரில் ஒன்றரை கிமீ தொலைவில் கடலுள் 36 அடி ஆழத்தில் புத்தர் கற்சிற்பம் கிடைத்திருக்கிறது. இது கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டினதாகக் கருத முடிகிறது.

3) அழகன் குளத்திலிருந்து மக்கள், மரக் கால்களை நட்டும், ஓலைக் கூரை வேய்ந்தும் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததற்கான தடயங்களும், சற்று பிற்காலத்தில் கற்சுவர் எழுப்பிக் கட்டிய வீடுகளில் வாழ்ந்ததற்கான செங்கற்கள். கூரை ஓடுகள் ஆகியவைகளும் கிடைத்திருக்கின்றன. இவற்றின் காலம் கிமு 2-3 ஆம் நூற்றாண்டாகும்

இதற்கும் பிற்பட்ட காலத்தில் மண்சுவர் எழுப்பியும், சுண்ணாம்பினால் மெழுகிய தரையையும் உடைய வீடுகள் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இங்கு கிடைத்துள்ள தொல் பொருள்களில் முத்திரை குத்தப்பெற்ற காசுகள், சங்ககாலப் பாண்டியர் காசுகள், ரோமானியர் காசுகள், கப்பல் உருவம் வரையப்பெற்ற பானையோடுகள், பண்டைத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், எகிப்தியர் சாயலில் காணப்பெறும் பெண்களின் உருவங்கள் உள்ள பானையோடு ஹெலனிஸ்டிக் சாயலில் உள்ள ஒரு குழந்தை உருவமும், அதனை இடுப்பில் ஏந்தியுள்ள தாயின் உருவமும் காணப்பெறும். மண்கிண்ணக் கைப்பிடியும், ஹரப்பன் நரகரிகக் காலக் குறியீடுகளால் காட்டப்பெற்றுள்ள 1,2,3 ஆகிய எண்களைக் கொண்ட தாயக்கட்டை, பண்டைத் தமிழ் எழுத்துகளினூடே சேர்த்து எழுதப்பெற்ற பானையோடு, குதிரை மீதேறி சவாரி செய்யும் போர்வீரன், காளை ஆகிய முத்திரைகள் பதிக்கப்பெற்ற பானை ஓடுகள், வடநாட்டு மோரியர் காலத்தில் வெளியிட்ட பானையோடுகள் ஆகியவை முக்கியமானவைகள் ஆகும்.

4) கொற்கையில் முதுமக்கள் தாழிகளும், பண்டைத் தமிழ் எழுத்து பொறிக்கப்பெற்ற பானையோடுகளும், சங்கு வளையல்களும், பெருங்கற்காலக் குறியீடுகள் கொண்டுள்ள பானையோடுகளும் குறிப்பிடத் தக்கவைகளாகும்.

5) கொடுமணலில் முத்திரை குத்தப்பெற்ற வெள்ளி நாணயம், கார்னீலியன் வகைக் கல்மணிகள் (ஆயிரக்கணக்கில்) தானியக் களஞ்சியங்கள், சதுர நீண்ட வீடுகளின் தரைப்பகுதிகள், இரும்புக் கத்திகள், கேடயங்கள், குதிரை அங்க வடிகள், எலும்பினால் செய்யப் பெற்ற அம்புமுனைக் குவியல், தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன்கள், செம்பினால் செய்யப்பெற்ற புலி, மத்தளம், மணி, வாணல், சாம்பராணிக்கலசம், பண்டைத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பெற்ற பானையோடுகள், வடநாட்டு மோரியர் காலத்துப் பானையோடுகள் ஆகியவை கிடைத்திருக்கின்றன.

6) காஞ்சிபுரத்தில் சங்ககாலம் தொட்டு விசய நகர வேந்தர் காலம் முடிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. புத்த விகாரம், புத்த ஸ்தூபம், ரோமானிய நாட்டைச்சார்ந்த மதுக்குடுவைகள், ரெளலட்டட் வகை பானையோடுகள், உள்நாட்டில் தயார் செய்யப் பெற்ற கூம்பு வடிவ முதுக்குடுவைகள், சாதவாகனர் காசுகள் (கிபி 1-2 நூற்றாண்டு) சோழ மன்னன் முதலாம் இராசராசன் வெளியிட்ட காசு (கிபி 10-11 ஆம் நூற்றாண்டு) இலக்குமி உருவம், முத்திரை குத்தப்பெற்ற காசின் இரு வடிவமைப்புகள், சாதவாகனர், காசின் ஐந்து வடிவமைப்புகள், எலும்பினால் செய்யப்பெற்ற சீப்பு, முடிபிடிப்பு விசய நகர வேந்தர் காலத்திய தங்கக்காசு, பல்லவர் காலத்திய உறைகிணறுகள் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

7) கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் இராசேந்திரன் காலத்தில் எழுப்பப்பெற்ற அரண்மனையின் அடித்தளச் சுவர்கள். மேற்கூரைக்கான மரங்களைப் பொருத்தப் பயன்படுத்திய நீண்ட இரும்பு ஆணிகள். கதவுகளில் பொருத்தப் பெற்ற செப்புக் குமிழிகள், வண்ணம் தீட்டப்பெற்ற சுவர்ச்சிதைவுகள், பீங்கான் ஓடுகள், சோழர் காலத்தியக் கூரை ஓடுகள், சிம்மாசனம், கட்டில், நாற்காலிகள் ஆகியவற்றை அலங்கரித்த தந்தச் சிற்பங்கள், எலும்புச் சிற்பங்கள், கல்லால் செய்யப் பெற்ற பொருட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கத் தொல்பொருள்களாகும்.

8) சேந்தமங்கலத்தில் காடவமன்னன் கோப்பெருங்சிங்கன் அமைத்து வாழ்ந்த மாளிகையின் அடித்தளப்பகுதிகளும், அதேபோன்று படை வீட்டில சம்புவராய மன்னர்கள் கட்டி வாழ்ந்த கோட்டைச் சுவர் மற்றும் அரண்மனையின் அடித்தளப் பகுதிகளம் கண்டறியப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிடப்பெற்ற அகழாய்வுகளிலிருந்து பெறப்பட்டிருக்கின்ற தொல்பொருள்கள் மூலம் பண்டைய தமிழ்ச் சமுதாய வரலாற்றை நாம் உற்று நோக்குவோம்.

தமிழகத்தின் வடிகோடியில் உள்ள வடமதுரையில் மாந்தரினம் இற்றைக்குச் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழத் தொடங்கியிருக்கிறார்கள், அவர்கள் கரடு முரடான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து தங்கள் கருவிகளில் முன்னேற்றம் கண்டு இற்றைக்குச் சுமார் 4000 ஆண்களுக்கு முன்பிருந்தே (புதிய கற்கால மக்கள்) வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல், ஆறுகளில் ஓடங்களில் பயணம் செய்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அவர்களது வீடமைப்பு, எழுத்தறிவு, காசுப்புழக்கம், வாணிகம், தொழில்கள் ஆகியவை சிறந்திருந்தன என்றும் அறிய முடிகிறது.

மொத்தத்தில் தமிழினம் இற்றைக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்திருக்கிறது என்பது அகழாய்வினால் தெரிய வருவதால், தமிழர்கள் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி - என்று கூறப்பெற்று வரும் வழக்கு உண்மையை அடிப்படையாகக் கொண்டதே என்பது உறுதியாகிறது. இற்றைக்குச் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாகரிகம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தாலும், கிமு 500 முதல் உலக மற்ற நாடுகளோடு போட்டி போடக்கூடிய உயர்ந்த நாகரிகத்தோடு எழுத்தறிவுடன் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதை அகழாய்வுகள் புலப்படுத்துகின்றன.

நன்றி - சிந்தனையாளன் மார்ச்சு 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061