வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 04 - 2006தம்பி
திரைப்பட விமர்சனம்

சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறவன் துறவி

சமூகத்திற்காகத் தன்னை எரித்துக் கொள்கிறவன் புரட்சியாளன்.

தம்பி - இரண்டாவது வகை.

தம்பி - பொழைச்சிட்டான் என்று முடிகிறது படம். தம்பி ஜெயிச்சிட்டான் என்று நினைக்கிறது மனம்.

முரட்டுத் தனத்திற்கு வீரம் என்று முடிசூட்டி இருக்கும் தேசத்தில், எது உண்மையான வீரம் என்பதை இப்படம் விளக்குகிறது.

இன்னொருத்தன் உயிரை எடுக்கிறதல்லே வீரம். மத்தவங்களைக் காப்பாத்துறதுக்காகத் தன் உயிரையும் கொடுக்கிறதுதான் வீரம்.

பட்டாசு கொளுத்திப் போட்டதைப் போல, படம் முழுவதும் உரையாடல் வெடி. ஆனால் தம்பி ஏற்படுத்தும் உணர்வோ தாயின் மடி. இம் முரண் தரும் அழகில்தான், இப்படம் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது.

கொள்கைப் படங்கள் என்றாலே வறட்டுத் தனமாய்த்தான் இருக்கும் என்ற வசை இப்படத்தினால் ஒழிந்தது. பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குநரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது.

வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.

இந்த வெளிச்சம் - இருட்டில் வாழும் மக்களுக்குத் தேவையான வெளிச்சம்.

இந்த இரைச்சல் - ஊமைச் சனங்கள் இனியேனும் ஓங்கி ஒலிக்க வேண்டிய இரைச்சல்.

ஓர் உணவகத்தில், கல்லூரி மாணவிகளிடம் கயவர்கள் சிலர் கண்ணியமற்று நடந்து கொள்ள, அகிம்சையைப் போதிக்கும் அந்தக் கதாநாயகியின் முன்னால் போய் நின்று - இப்ப நான் என்ன செய்ய, இப்ப நான் என்ன செய்ய? - என்று தம்பி இரைச்சலிட, அடி, அவனுங்கள அடி - என்று படம் பார்க்கும் மக்கள் திருப்பி இரைகின்றனரே, அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.

கதாநாயகனின் காப்பகத்தில் தையல் வேலை செய்யும் பெண் ஒருத்தியிடம் - உங்க அப்பா என்ன செய்யிறார்? என்று கதாநாயகி கேட்க - ஜெயில்ல இருக்காரு - என்கிறாள் அவள். அடுத்த பெண்ணிடம் அதே கேள்வியைக் கேட்க, எங்க அப்பாவைக் கொன்னுட்டுதான், அவ அப்பா ஜெயில்ல இருக்கிறார் - என்று விடை வருகிறது.

கொல்லப்பட்டவனின் குடும்பம் மட்டுமன்று, கொலை செய்கிறவனின் குடும்பமும் நாதியற்று நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும் என்பதை உணர்த்தும் இக்காட்சியைக் கொண்டே, இன்னொரு படத்திற்குத் திரைக்கதை எழுதலாம் போல் உள்ளது. இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றும் தம்பி, மனித நேயத்தின் மற்றோர் உருவமாய் உயர்ந்து நிற்கிறான்.

பழிக்குப் பழி வாங்குவதைத்தான் நம் படங்கள் இதுவரை சொல்லி வந்துள்ளன. பழிக்குப்பழி வாங்குவது வேலையா இருந்தா பாதி உலகம் சுடுகாடாப் போயிடும் - என்றும் கவலையை இப்படம்தான் வெளிப்படுத்தியுள்ளது.

எங்கப்பாவை நீ கொன்னுட்டே, இன்னிக்கு நான் ஒன்னை வெட்டுவேன். நாளைக்கு ஒன் புள்ள, கத்தியோட என்னைத் தேடி அலைவான். அப்புறம் என் மவன் அவனைத் துப்பாக்கியோட துரத்துவான். வேணாம்.. இந்த வேலையே வேணாம்.. யாராவது ஒருத்தர் எங்கயாவது நிறுத்தனும்..இங்க..இப்போ.. நான் நிறுத்திக்குறேன். என்று வசனம் பேசிய கதாநாயகனை இதுவரை நாம் தமிழ்ப் படத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பார்க்காதவர்கள், தம்பியைப் போய்ப் பாருங்கள்.

சீமான் என்றொரு சிந்தனையாளனும், மாதவன் என்றொரு மாபெரும் நடிகனும், இப்படத்தைச் செதுக்கியுள்ள சிற்பிகளாக உள்ளனர். ஒளிப்பதிவாளரும் ஒரு பெரும் பங்கு உள்ளது.

சாமியை... ....சாக்கடை.....கைகளை மறந்திட்டோம் - என்ற பாடல் வரிகளைத் தந்த முத்துக்குமார் விரல்களுக்கு மோதிரம் சூட்டலாம்.

சே குவாரா, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் படங்கள் தம்பியின் வீட்டில். காரல்மார்க்ஸ், ஜென்னி, பகத்சிங் பற்றிய உரையாடல்கள் தம்பியின் பேச்சில்..

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், தம்பியின் வடிவில்

இப்படியொரு துணிச்சல், மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இயக்குநர் சீமானுக்குத்தான் வரும்.

அந்தத் துணிச்சலின் இன்னொரு வெளிப்பாடுதான், பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இப்படத்தை அர்ப்பணிக்கிறேன் - என்று ஒரு வார இதழுக்கு அவர் வழங்கியிருக்கும் நேர்காணல்

- சுப.வீ -
நன்றி - தென்ஆசியச் செய்தி 16-31 மார்ச்சு 2006
பள்ளிக் கல்விக்கான மக்கள் அறிக்கை

(கல்விக்கான மக்கள் கூட்டமைப்பு)
20 அமைப்புகள் இணைந்து கல்விக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி பள்ளிக் கல்விக்கான மக்கள் அறிக்கை பிபரவரி 2006 என்ற ஓர் அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமான 11 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதனை இங்கே வெளியிடுகிறோம்.

கல்விக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று சேர்ந்திருக்கும் நாங்கள், பல சமுதாய உணர்வு கொண்ட அமைப்புகள், தனி மனிதர்கள் சார்பில், தமிழ்நாட்டின் குழந்தைகள், இளைஞர்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காவும் இந்த அறிக்கையினை வெளியிடுகிறோம். இவை குறைந்தபட்ச, குறைக்க இயலாத் ஆதாரத் தேவைகளாகும்.

1. 6 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் பாதுகாப்பு., வளர்ச்சி, கல்வியும் - அனைவருக்கும் பன்னிரெண்டாவது வகுப்பு வரை கட்டாய, சமதரமுடைய, முற்றிலும் இலவசமான கல்வியும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பாகுபாடற்ற, பொதுப்பள்ளிக் கல்வி அமைப்பு மூலம் திறமையாக அளிக்கப்படவேண்டும்.

2. கல்வி அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.

3. கல்வி தமிழ்வழி அல்லது தாய்மொழிவழி, கற்போரின் விருப்பத்திற்கு ஏற்ப அறிக்கப்பட வேண்டும்.

4. பாடத்திட்டம், பள்ளி விதிமுறைகள், கற்றல் கற்பித்தல் முறைகள் அனைத்தும் நமது அரசியல் சட்ட அமைப்பின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டும், குழந்தைகளுக்கு தண்டனைகளைத் தவிர்த்த, அவர்களை நேசிக்கும் வகுப்பறைகளை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும்.

5. கல்வி பயனுள்ள திறமைகளும், வல்லமையும் அளிக்கும் கருவியாகத் திகழ்வதற்குத் தேவையான முழு நேர, முழு ஊதியம் பெறும் ஆசிரியர், வேண்டிய எண்ணிக்கையில் குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்கு ஓராசிரியர் என்ற விகிதத்தில் நியமிக்கப்படல் வேண்டும்.

6. கல்வி குழந்தைகளிடம் பகுத்தறிவையும், படைப்புத் திறனையும் வளர்ப்பதாக அவர்களை வல்லமையுடையோராக்கும் திறன் கொண்டதாக அமையவேண்டும்.

7.தமிழக அரசின் விதி முறைகள் வகுத்துள்ள தரம் கொண்ட உள்கட்டுமான அமைப்புகள் அனைத்துப் பள்ளிகளிலும் அமைய் வேண்டும்.

8. ஒவ்வொருவரும் வேலைக்கோ, உயர் கல்விக்கோ தம் விருப்பம் போல் செல்வதற்கு உரிய திறனளிக்கும் கல்வி தேவை.

9. சமூக-பொருளாதார நிலையில் பின் தங்கிய மாணவருக்குத் தொழிற்கல்வி முதற்கொண்ட உயர்கல்வி இலவசமாக அளிக்கப்படல் வேண்டும்.

10. மாநிலத்தின் கல்வி கண்காணிப்பு நிர்வாகம் திறம்பட, வெளிப்படையாக, சமுதாயத்தின் நலனை மனதில் கொண்டு இயங்க வேண்டும்.

11. மேலே குறிப்பிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான நிதி ஒதுக்கீட்டினை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும்

முனைவர் வி.வசந்திதேவி
முனைவர் எஸ்.எஸ்.இராசகோபாலன்.
முனைவர் என். மார்க்கண்டன்.

நன்றி - மனித உரிமைக் கங்காணி மார்ச்சு இதழ் 2006

( கல்வியாளர் தவே அவர்கள் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை பயணம் செய்து - இந்தியா முழுமைக்குமான திறன் அடிப்டையிலமைந்த குறைந்த பட்ச கற்றல் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தினார். கடந்த பத்தாண்டுகளாக இது அரசுப்பள்ளிகளில் நடைமுறையிலுள்ளது.
ஆனால் நம் நாட்டிலோ - மெட்ரிகுலேசன், சென்ட்ரல் போாடு, நவோதயா, ஸ்டேட்போர்டு எனத்தனித்தனியான கல்விமுறை வைத்து என்னுடையது உயரியது என அதிக பணம் அறுவடை செய்கிற நிலையை காண்கிறோம். பணம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு தரமாக இருக்கும் என்கிற நிலையை உருவாக்கி விட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கை விழுக்காடு குறைந்து கொண்டே போகிறது. கும்பகோணம் நிகழ்விற்குப் பிறகு சென்ற மாதம் வரை அங்கீகாரம் பெற காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என - பயந்து பயந்து இயங்கி வந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் கொடுத்துவிட்டோம்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைய அரசுத் தொடக்கப்பள்ளிகளை நாம் மூடிவிடுவோம். கல்வி வணிகமயமாகி தனியார் வைத்ததுதான் சட்டம் என மறைமுகமாக ஆகப்போகிறது. பாவப்பட்ட இந்தியக் குடிமகன் அடிப்படைக் கல்வி கற்பதற்கே பல ஆயிரங்களைக் கொட்டி அழ வேண்டிய நிலைதான் உருவாகும்.
எனவே இன்றைய சூழலில் - மெட்ரிகுலேசன், சென்ட்ரல் போாடு, நவோதயா, ஸ்டேட்போர்டு என எந்த வகையான கல்வி முறையாக இருந்தாலும் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்துத் தொடக்கப்பள்ளிகளும் தரமான, ஒரே மாதிரியான, இலவசமான கல்வியைத்தான் அளிக்கவேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு கூட தொடக்கக் கல்விக்கு பணம் கொடுத்துத்தான் படிக்கவேண்டும் என்ற நிலையிருந்தால் அது எத்தகையது?
எனவே இந்திய முழுவதிலும் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளும் இனி இலவசமாகத்தான் பயிற்றுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோமாக.. )
நாட்டியக் கலையின் தந்தை பரதரா? அவிநயரா?

போரா. இராஇமதிவாணன்

பரத முனிவருக்குக் கோயில் கட்டுவது பொருந்துமா? என்னும் வினா எழுந்துள்ளது. நாட்டியக் கலையரசி பத்மா சுப்பிரமணியம் பரத முனிவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டு தமிழக முதலமைச்சர் ஐந்து ஏக்கர் நில்ம் வழங்கியுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பரத முனிவர் யார்?

நாட்டியக் கலையிலுள்ள 108 தாண்டவங்களையும் ஆடிக் காட்டியவர் சிவபெருமான். பிரமனின் வேண்டுகோளின்படி அவர் தண்டு என்னும் முனிவருக்கு நாட்டியம் கற்பித்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்குக் கற்பித்ததால் பரதமுனிவர் வடமொழியில் நாட்டிய சாத்திரம் எழுதினார் என்பது புராணங்கள் வாயிலாகத் தெரியும் செய்தி. இதன்படிப் பார்த்தால் பரத் முனிவர் பரதக்கலையைத் தாமே உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பாளர் அல்லர். முறைப்படி பரதநாட்டியம் கற்பித்த தண்டு முனிவருக்கல்லவா கோயில் கட்டவேண்டும்? என்று கேள்வி கேட்க வேண்டும். அதுவும் பொருத்தமில்லை. ஏனென்றால் தண்டு முனிவருக்கு நாட்டியம் கற்பித்த எண்தோள் வீசி நின்றாடும் தில்லைக் கூத்தனுக்குக் கோயில் கட்ட வேண்டும். சிவனுக்கு ஏற்கெனவே கோயில்கள் உள்ளன. இந்தியாவில் எண்ணிக்கையில் அதிகமான கோயில் சிவன் கோயில். வருமானத்தில் அதிகமான கோயில் பெருமாள் கோயில் என்று கூறுகின்றனர். எனவே கோயில் கட்ட வேண்டும் என்னும் கோரிக்கை சரிதானா? என்பது ஆய்வுக்கு உரியதாகிவிடுகிறது.

பரதக் கலையின் பிறப்பிடம் தமிழ்நாடு

வரலாற்றின்படி பார்த்தால் தமிழ்நாட்டில்தான் பரதக்கலை முதன் முதல் தோன்றியது என்பதை முதலமைச்சரும் சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கது. ஆனால் பரதக் கலைக்குரிய தமிழ் நூல் அவிநயம் என்பதும் அதை இயற்றியவர் அவிநயர் என்பதும் முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், பாணர், ஆகியவர்கள் சங்ககாலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டியக் கலையைக் காத்து வளர்த்து வந்திருக்கின்றனர். பரத முனிவரின் நாட்டிய சாத்திரம் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட நாட்டிய நன்னூலின் மொழிபெயர்ப்பு நூல். மூல நூல் அல்ல. அந்தத் தமிழ் நாட்டிய ந்ன்னூல்தான் அவிநயம். தொல்காப்பியர் காலத்திய அவிநயம் இன்று இல்லையாயினும், சங்ககாலத்தில் சாத்தனார் இயற்றிய கூத்தநூல், அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, மதிவாணர் இயற்றிய நாடகத்தமிழ் போன்ற பல நாட்டியக் கலை நூல்கள் அவிநயத்தின்வழி நூல்களாகத் தோன்றின. சிற்றிசை, பேரிசை, இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு போன்ற ஏராளமான நூல்கள் முத்தமிழ் வளர்த்து நூல்களாகத் திகழ்ந்திருக்கின்றன. கூத்த நூலும், பஞ்ச மரபும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. பரதர் கூறும் 108 கரணம் எனும் தாண்டவ நிலைகள் தமிழுக்குப் புதியன வல்ல.

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அவிநயம் என்பது பலவகைக் கூததுகள் விளக்கும் நூல் எனக் கூறியுள்ளார். அவிநயர் என்னும் சொல்லுக்குக் கூத்தர் எனப்பொருள் இருப்பதைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களின் பெயர்களில் தொல்காப்பியர் பெயர் இடம்பெற்றிருப்பது போலவே அவிநயரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே தொல்காப்பியர் காலத்திலேயே அவிநயனாரால் அவிநயம் என்னும் நாட்டிய நூல் எழுதப்பட்டது எனத் தெரிகிறது. பரத முனிவர் பல்லவர் காலத்தில் கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அதனால் அவிநயருக்குக் கோயில் கட்டுவதே முறையானது. பொருத்தமானது. முற்றிலும் சரியானது. தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பரதக்கலையின் உயிரோட்டமான அபிநய இயல்புகளை மெய்ப்பாடு என்கிறார். நாட்டியக் கலையை நாட்டிய மரபு எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது பரதக்கலை.

நன்றி - தெளிதமிழ் இதழ் மீனம் 2037
அம்பேத்கர் காட்டுகின்ற சாதியின் கொடிய முகம்

பொதுவாகப் பலரும் சாதி ஏற்றத்தாழ்வு என்பதை உயர்வு, தாழ்வு என்ற இரு நிலையிலேயே அணுகுவர். ஆனால் அம்பேத்கர் அவர்கள் அதனை மிக நுட்பமாக ஆராய்ந்து இந்து மதத்தில் சாதி இரு நிலைகளாக - உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகளில் மட்டும் இல்லை. அப்படி இருந்துவிட்டால் அது சாதாரண சமத்துவமில்லாத நிலையாகும். ஆனால் இந்து மதச்சாதி என்பது சமத்துவமில்லாத நிலையிலும் கீழான, மோசமான, படிநிலைத்தன்மை - படிப்படியான சமத்துவமின்னை என்ற நிலையைக் கொண்டதாகும் என்று உணர்த்தினார்.

சமத்துவமின்மையிலான அபாயமானது, படிப்படியான சமத்துவமின்மையான அபாயத்தில் பாதியளவுகூட இல்லை. சமத்துவமின்மைக்குள்ளேயே - அதன் அழிவை ஏற்படுத்தும் வித்துகளும் உள்ளன. சமத்துவமின்னை நீண்டகாலம் நீடிக்காது. ஆனால் படிநிலையான சமத்துவமின்மை முறை, அநியாயத்தை எதிர்த்துப் பொதுவான அதிருப்பதி ஏற்படுத்தாமல் தடுத்துவிடுகிறது.

எனவே அது புரட்சிக்கு மையமாக இருக்க முடியாது. இரண்டாவதாக அதனால் பாதிக்கப் படுவோரிைட்யும் சமத்துவமின்னை இருக்கிறது. இந்த முயைின் நன்மை. தீமைகளைப் பெறுவதிலும் அவர்களிடையே சமமான நிலை இல்லை. எனவே இந்தப் படிநிலைச் சமத்துவமின்மையின் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. என்கிறார் அம்பேத்கர்.

இதனை மேலும் தெளிவாக விளக்கிட வேண்டுமாயின், ஒருவர் ஒருபுறம் மற்றவர்களைவிட உயர்ந்தவராயும், இன்ளொருபுறம் வேறு சிலரைவிடத் தாழ்ந்தவராயும் இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுவோரிலும்கூடி படிநிலையான தன்மை உண்டு. உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிலும் அத்தகைய படிநிலை உண்டு. இந்தப் படிநிலைத்தன்மைதான் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று வேறு சிலரால் கூறப்படும்போது கோபம் அடைந்துவிட முடியாமல் அவர்களைத் தடுத்து விடுகிறது. ஏனெனில் அவர்கள் வேறு சிலரைத் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடிகிறது.

இந்த நிலைமை முற்றிலும் சீரமைக்கப்பட்டால்தான் இந்துமதம் என்னும் விஷச்செடியில் உற்பத்தியாகும் படிநிலைச் சாதிகள் எனப்படும் பூ, காய், பழம், விதை அனைத்தையும் அடியோடு ஒழிக்க முடியும்.

அதற்கான சிந்தனையை அம்பேத்கர் நமக்குக் காட்டியுள்ளார்.

- புதுவை ஞானகுமாரன் -

நன்றி புதிய ஆசிரியன் மார்ச்சு 2006
வெல்லப் போவது யாரு?


தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் என்றால், அதற்கும் அதிகமான எண்ணிக்கையிலான பிரச்சனைகள், சிக்கல்கள், இங்குள்ள தமிழ் மக்களுக்கு உள்ளது. இவை எதையும் சட்டை செய்யாது கொள்கைகளை வாயளவிலும், மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பதில் செயலளவிலும் செய்து வருகிற இந்த அரசியல் வியாபாரக் கட்சிகளை மக்கள் சரியாக இனங்கண்டு கொள்ள இந்தத் தேர்தல் திருவிழாதான் சரியான நேரம். ஒரு புதுக்கவிஞன் சொன்னது போல....

எல்லாத் தேர்தலிலும்
யாரோ ஒருவர்
வெற்றி பெருகிறார்கள்.
ஒவ்வொரு
தேர்தலிலும்
தோற்பது என்வோ
மக்களாட்சிதான்.

நன்றி - கரூர் மக்கள் களம் - மார்ச் 2006
உயிர்ப்பிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்


எழில் அரசு

ஓலைச் சுவடிகள் உயிர்ப்பிக்கப்பட்டதால் தமிழர்கள் 3500 ஆண்டு கால வரலாற்றை உலகிற்கு பறைசாற்ற முடிந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை திருவள்ளுவமும், 3000 ஆண்டு கால வரலாற்றை தொல்காப்பியமும், 3500 ஆண்டுகால வரலாற்றை அகத்தியமும் வரலாற்றுச் சான்றாக எடுத்துரைக்கிறது.

தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியமும். இதைப்போன்று பல நூல்களும் கடற்கோளினால் அழிந்து போய்விட்ட அதிர்ச்சியான தகவல்களை தமிழனால் ஈடுசெய்ய முடியவில்லை. தமிழ் மண்ணில் சமயங்கள் உருப்பெற்று தமிழை வளர்ப்பதற்கு முன்னரே முதல், இடை, கடை என்று முச்சங்கம் நிறுவப்பட்டு, தமிழ் வளர்க்கப்பட்டது. முதல் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் அடிச்சுவடு இல்லாமல் கடல் கோளினால் அழிந்து போய் விட்டன.

தமிழ் இலக்கியங்களாகத் தற்பொழுது எஞ்சியுள்ள இலக்கியங்கள், தமிழ்ப் பெருந்தகைகளின் பெரு முயற்சியால் ஓலைச்சுவடிகளில் இருந்து உயிர்ப்பிக்கப்பட்டன. இதற்கு முழுமுதற் காரணமாக தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் போற்றப்பட்டாலும், இவருக்கு முன்னரே இப்பெரும் பணியில் பலர் ஈடுபட்டு, ஓலைச் சுவடிகளை உயிர்ப்பித்துள்ளனர்.

முதன் முதலாக -திருக்குறள் மூலப்பாடம்- ஓலைச் சுவடியில் இருந்து உயிர்ப்பிக்கப்பட்டு அச்சில் பதிப்பிக்கப்பட்டது. இதற்குக் காரணமானவர் 1812 ஆம் ஆண்டில் சென்னையில் வாழ்ந்து வந்த ஞானப்பிரகாசம் என்பவராவார். இவர் தஞ்சை மாநகரைச் சேர்ந்த மலையப்பன் என்பவரின் மகனாவார்.

திருக்குறள் மூலபாடம் உயிர்ப்பிக்கப்பட்டு 43 ஆண்டுகள் கழிந்து, பிறகுதான் உ.வே.சாமிநாதய்யர் பிறக்கிறார். இவர் பிறந்து வளர்ந்து ஊர் ஊராகத் திரிந்து 1887 ஆம் ஆண்டில் தான் சீவக சிந்தாமணியை ஓலைச் சுவடியில் இருந்து உயிர்ப்பித்து அச்சில் நூலாக்குகிறார்.

அதாவது 1812 ஆம் ஆண்டு முதல் 1887 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 75 ஆண்டு காலம் ஓலைச் சுவடியை உயிர்ப்பித்து, தமிழ் இலக்கியங்கள் மீட்பதிலும் காப்பதிலும் பல தமிழ்ப் பெருந்தகைகள் பெருமுயற்சி செய்துள்ளார்கள்.

1836 ஆம் ஆண்டில் திருவாசகமும், நன்னூலும், 1884 ஆம் ஆண்டில் கலிங்கத்துப்பரணியும், கம்ப இராமாயணத்தில் பால, ஆரண்ய காண்டங்களும் 1947 ஆம் ஆண்டில் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரமும் உயிர்ப்பிக்கப்பட்டன.

உ.வே. சாமிநாதய்யருக்கு முன்னரே 1868 ஆம் ஆண்டில் தொல்காப்பியத்தின் சில பகுதிகளை உயிர்ப்பித்த பெருமைக்குரியவர் சி.வை. தாமோதரன்பிள்ளை ஆவார். இவருக்கு முன்னரே 1847 ஆம் ஆண்டில் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தை உயிர்ப்பித்து பதிப்பித்த மழவை மகாலிங்கம் ஐயரையும் நினைவு கூர்ந்தே ஆகவேண்டும்.

தொல்காப்பியத்தின் பெரும்பகுதியையும் சேர்த்து ஏறக்குறைய பத்து நூல்களை உயிர்ப்பித்த சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்கள் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான இவரின் முயற்சியை, இவர் உயிர்ப்பித்த கலித்தொகையில் பதிப்புரையில் தமிழறிஞர் அ.பாண்டு ரெங்கன் அவர்கள் குறிப்பிடும்போது,

- இளம் பருவத்தில் எனது தந்தையார் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டியிருக்கும் சுவடிகளும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலையைத் தொட்டுப் பார்த்தால் அன்றோ தெரியவரும். கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏடு எடுக்கும் போது துண்டாய்ப் பறக்கின்றது. இனி எழுத்துக்களோடு என்றால் வாலும் தலையும் இன்றி நாலு புறமும் பானைக் கலைப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது - என்று ஓலைச் சுவடியில் இருந்து இலக்கியங்களை உயிர்ப்பித்த கடுந்துயைரை வெளிப்படுத்துகிறார்.

ஓலைச் சுவடிகளை உயிர்ப்பிக்கும் முயற்சிக்கு ஆதரவைத் தேடும் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் பின்வருமாறு ஆதங்கப்படுகிறார்..

எத்தனையோ இலக்கியச் சுவடிகள் ஒன்றன் பின் ஒன்றாக அழிகின்றன சீமான்களே. இவ்வாறு மறையும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? வியப்பு, வியப்பு. அயலான் அழியாக் காண்கினும் மனம் தளும்புகிறதே, தமிழ்மாது நம் தாயல்லவா. இவள் அழயி நமக்கென்ன என்று வாளா இருக்கின்றீர்களே, தேசாபிமானம், மனிதாபிமானம்., மொழியாபிமானம் இல்லாதோர் பெருமையும் பெருமையா? இதனை தயை கூர்ந்து சிந்திப்பீர்களா?

ஓலைச்சுவடிகளை உயிர்ப்பித்திட இந்தளவிற்கு மனம் உருகி பெரு முயற்சிகளை மேற்கொண்ட சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்களே, உ.வே.சாமிநாத ஐயருக்கு இணையாக வரலாற்றில் போற்ற வேண்டும். உ.வே. சாமிநாதஐயரின் பெருமுயற்சியால் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, பத்துப்பாட்டு, பரிபாடல், புறநரனூறு, குறுந்தொகை உள்ளிட்ட தமிழர்களின் முகவரியை பறைசாற்றும் நூல்கள் உயிர்ப்பிக்கப்பட்டன.

இந்த வரிசையில் பல நூல்கள் அழிந்தும் போயுள்ளன. அகத்தியம், ஆட்சிநூல், கணக்கியல், மந்திரநூல், கோள்நூல், சிற்ப நூல், பஞ்சமரபு, வளையாபதி. குண்டலகேசி போன்ற இலக்கிய நூல்களை வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் புத்தகத்தில் நூலாசிரியர் மாத்தளை சோமு அவர்கள் வரிசைப்படுத்துகிறார்.

ஏறக்குறைய 36 தமிழ் இலக்கிய நூல்கள் ஓலைச்சுவடியில் இருந்து உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் அடங்கும். முச்சங்கங்கள் நிறுவி தமிழ் வளர்க்கப்பட்ட சிறப்பைப் போலவே, சைவம், வைணவம், பவுத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் உள்ளிட்ட ஆறு சமயங்கள் தமிழை வளர்த்துள்ளன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத சிறப்பாகும்.

எப்படி ஒருகாலகட்டத்தில் ஓலைச் சுவடிகளின் அருமை பெருமைகள் தெரியாமல் கரையான் அரிக்கவும், ஆற்றில் செல்லவும், தீயில் கருகவும் தமிழர்கள் இடம் கொடுத்தார்களோ, அப்படியே இப்போது பிற மொழிகளின் மயக்கத்தில் தமிழை அழிக்கும் இளித்தவாயர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களை நல்வழிப்படுத்த இனியார் தான் அவதரிக்கப் போகிறார்களோ?

நன்றி - பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழ் - மார்ச் 2006
புகைபிடிக்க நாடு முழுவதும் தடையாம் ?


புகையிலைத் தயாரிப்புகள் சட்டத்தின் கீழ்ப் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் என்பது பொதுமக்கள் செல்லும் இடம்., கலையரங்கம், மருத்துவமனைகள், கட்டிடங்கள், பொழுது போக்கு மையங்கள், உணவகங்கள், பொது அலுவலகங்கள், திறந்த வெளிக் கலையரங்கம், விளையாட்டுத் திடல், நீதிமன்றக் கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், பொதுப் போக்குவரத்துகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களைக் குறிக்கும். சிகரெட் மற்றும் இதர புகையிலைத் தொடர்பான தயாரிப்பாளர்களின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

நேரடி மற்றும் மறைமுக விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சிகரெட் மற்றும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை தயாரிப்பு என்பது சிகிரெட், புகையிலை, சுவைக்கும் புகையிலை. பீடிகள், சுருட்டுகள் உள்ளிட்ட புகையிலை மூலப்பொருள்கள் சேர்ந்த பொருள்களைக் குறிக்கும். மேற்கண்ட விதிமுறைகள் 1-5-2004 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து 25-2-2004 தேதியிட்ட இந்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நலவாழ்வு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சட்ட எச்சரிக்கை வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கூட இச்சட்ட நடவடிக்கையை யாரும் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. எந்த அதிகாரியும் இதனை மதித்ததாகத் தெரியவில்லை. எவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனை தரும் வியப்பான செய்தியாகும்.

நன்றி - பயனாளர் பார்வை - இதழ் 1 (புதுச்சேரி)


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061