வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 01 - 08 - 2006பச்சோந்தி
(பிரெஞ்சுக் கவிதை)

அமாது அம்பாத்தே பா

பச்சோந்தி பெரிய ஆசான்
அதைப் பாருங்கள்
ஒரு திசையில் செல்லும் போது தலையை
திருப்புவதேயில்லை.
அதைப் போலவே செயல்படுங்கள்.
உங்கள் வாழ்வில் ஒரு குறிக்கோளைக்
கொண்டு
எதுவும் அதை திசை திருப்பாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.
பச்சோந்தி தன் தலையைத்
திருப்புவதில்லைதான்.
ஆனால் கண் திரும்பும்
மேலே நோக்கும், கீழே பார்க்கும்.

அதாவது எல்லாவற்றையும்
தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் மட்டுமே இந்த பூமியில்
இருப்பதாக
நினைக்காதீர்கள்

எந்த இடத்துக்க வந்தாலும் அந்த
இடத்துக்கு
ஏற்ப நிறம் மாறும்
இது பச்சோந்தித்தனம் இல்லை
எல்லாவற்றுக்கும் மேலாக
இதுவேதான் சகிப்புத்தன்மை
இதுதான் வாழும் முறையும் கூட
ஒருவருக் கொருவர் மோதிக் கொள்வதால்
எவ்விதப் பயனும் இல்லை
மோதலில் எவ்வித ஆக்கமும்
எப்பொழுதும் ஏற்பட்டதில்லை
மற்றவர்களைப் புரிந்து கொள்ள
முயலவேண்டும்.

நாம் வாழும் அதே வேளையில், மற்றவர்களும்
வாழ்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளப்
பழக வேண்டும்.

பச்சோந்தி நகரும் போது, ஒரு காலைத் தூக்கும்
தடுமாறி விழாமல் இருப்பதை உறுதி செய்யும்
நடக்கும் முறையில் முன்னெச்செரிக்கை என்பது இதுதான்.
ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தாவும்போது
தன்வாலை முதலில் மாட்டும்
தன் கால்கள் திடமாகப் பற்றிக் கொண்டால்
தொங்கியபடியே நிற்கும்
தன் பின்புலத்தை உறுதி செய்தல் என்பது
இதன் பொருள்
எனவே எதிலும் அசட்டையாக இருக்காதீர்கள்

இரையைக் காண நேர்ந்தால் பாய்ந்து
எடுக்கப் பச்சோந்தி அவசரப்படாது
மாறாக, தன் நாக்கை மட்டும் முதலில்
அனுப்பும், முடிந்தால்
நாக்கிலேயே இரை மாட்டிக் கொள்ளும்
இல்லையேல், நாக்கை இழுத்துக் கொண்டு
எவ்வித தீங்கும் நேராமல் தவிர்த்துக் கொள்ளும்.

எதைச் செய்தாலும் அமைதியாக செயல்படுங்கள்.
நிலைத்ததொரு செயலைச் செய்ய எண்ணி இருந்தால்
பொறுமையாக இருங்கள், அன்பாக இருங்கள்
மனிதாபிமானத்தோடு இருங்கள்

சரிதான்...
இனி காட்டுக்குள் செல்ல நேர்ந்தால்
பச்சோந்தியின் பாடத்தை
அறிந்தவர்களிடம் அதனோடு பழகியவர்களிடம்
கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் - சூலை 2006
பால் பேதம்
சி. பன்னீர் செல்வம்

இன்னும் என் ஞாபகத்தில்
அப்படியே இருக்கின்றன
அந்த நாட்கள்.

அம்மாவும் நானும்
அவ்வப்போது அரைப்பட்டினி
ஆயினும் அம்மா என்
இருவயது தம்பிக்கு
அன்னமூட்டுவாள், நிலாகாட்டி
ஆறு மாசத்திலேயே
உன் பால்குடியை மறக்கடிச்சேண்டி
என்றபடியே தம்பிக்குத்
தன் மார்பாலூட்டுவாள் அம்மா....

அப்போது புரியவில்லை
சாகும் வரைக்கும்
மகன்தான் சோறிடுவான் என்ற
மனக்கணக்கு அதுவென்று.

ஐநூறுக்கு
முன்னுற்று எண்பது வாங்கினான் தம்பி
மேற்படிப்புக்கு வயலை விற்றாயிற்று
நானூற்று முப்பது வாங்கிய நான்
பதினொன்றாம் வகுப்பில் சேர மறுக்கப்பட்டு
புளியமர நிழலில்
கயிறு திரிக்கிறேன் நாட்கூலியாக...

அது என்ன
பொட்டச்சிக்கு சொத்தில் பங்கு.
ஒண்ணுங் கெடையாது போ என்று
எகத்தாளம் பேசிய அண்ணா
சொத்துள்ள பெண் தேடி
ஊர் ஊரா அலையிறான்....

புகுந்த வீட்டிலிருந்து
சீதனம் பத்தவில்லையென்று
பொறந்த வீட்டுக்கு வந்து
பொலம்பிகிட்டிருக்கு அக்கா...

கருவறைக்குள் நுழைந்தாலும்
கடவுள் சிலை தொட்டாலும்
தீட்டென்று வக்கரிக்கும்
தேசத்தில் பிறந்தவள் நான்....

கடவுளர்தம் கண்ணெதிரே
நிகழுகின்ற கொடுமைகளைக்
காணாத கற்சிலையாய் வீற்றிருக்க
எந்த மதக் கடவுளிடம்
என் துயரை இறக்கி வைக்க?

நான்
புளிய மரத்தடியிலிருந்துதான்
புதுக்கணக்கைத துவங்கணும்
தென்னை நாரிலிருந்துதான்
வாழும் கணக்கையும் துவங்கணும்

இந்த
பால்பேதக் கணக்கு
புவியிலென்று முடிவடையும்?
மத பேதக் கணக்கு அது
மாற்றுதற்கு என்ன வழி?

நன்றி : மனித உரிமைக் கங்காணி - சூலை 2006
புகை என்னும் பகை

சிகரெட் பிடிப்பது ஒரு நாகரிகத்தின் அடையாளமாகவே இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. ஆனால் இந்த சிகரெட்டின் பின்னால் இருக்கும் தீமைகளைப் பார்த்தால் அது ஒரு மிகப்பெரிய ஆபத்தின் அடையாளமாக உள்ளது. இன்றைய உலகில் மக்கள் மிக மிக அச்சப்படுவது இரண்டு நோய்களுக்குத்தான். ஒன்று கான்சர் அதாவது புற்று நோய். இன்னொன்று எய்ட்ஸ். இது ஒரு வைரஸ் மூலம் பரவும் நோய். இரண்டு நோய்களுமே அபாயகரமான உயிர்க் கொல்லி நோய்களே. இரண்டுக்கும் மருந்துகள் இன்றளவில் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. மனித குலத்தை அச்சுறுத்தும் இந்த இரண்டு நோய்களுமே மனிதனின் பொறுப்பின்மையாலேயே உருவாக்கப்படுகிறது.

எய்ட்ஸ் தனிமனித தவறுகளால் வருகிறது. தனிமனிதனும் பாதிப்புக்குள்ளாகி அவனோடு இணைந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் புற்று நோயோ புகைபிடித்தல் என்னும் கொடிய பழக்கத்தால் ஒரு நபர் ஊதி விடும் புகையால் பக்கத்தில் சும்மா இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்டுகிறார்கள்.

சிகரெட் பெட்டியிலேயே சிகரெட் பிடிப்பது ஆபத்தானது என்று எழுதியும் அதையாரும் கண்டு கொள்ளவதில்லை என்பது வேதனையான விடயம். சிலம் ஜம்பமாக நான் 60 வருடங்களாக புகை பிடிக்கிறேன். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ புற்றுநோயே வரவில்லை, எனக் கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். இது அவர்களின் அறியாமையை தான் குறிக்கிறது. சிலருடைய உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே அமைந்திருக்கும். அவைகள் சிலவகை நோய்கள் வராமல் காப்பாற்றும். இப்படிப்பட்டவர்களே மேற்படி ஜாம்பவான்கள்.

ஆனால் சிலருடைய உடம்பில் புற்று நோய் எதிர்ப்பு சக்தியே இருக்காது. இவர்கள் பிறர் ஊதிவிடும் புகையால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள். புற்றுநோய் வருவதற்கு நூற்றுக்கு நூறு புகைபிடிப்பதுதான் காரணம் என்று கூற முடியாது. ஆனால் ஏறக்குறைய 60 விழுக்காடு சிகரெட் புகையே புற்று நோய்க்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்களும், புற்று நோய் மருத்துவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர்.

சிகரெட் புகை மூலம் 1000 வகை விஷங்கள் நமது உடலினுள் செல்வதாகவும், அவைகளில் பல வேதிப்பொருள்கள் புற்றுநோயைத் தூண்டுவதாக உள்ளன எனவும் அராய்ச்சிகள் கூறுகின்றன. புகையின் மூலம் மலட்டுத்தன்மை, நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவைகள் எளிதாக வருகின்றன. 48 விழுக்காடு ஆண்களுக்கும், 21 விழுக்காடு பெண்களுக்கும் சிகரெட் புகையாலேயே புற்று நோய் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.இதிலும் சென்னை மும்பை போன்ற பெருநகரங்களில் 50 விழுக்காடு புற்றுநோய் புகை பிடிப்பதாலேயே ஏற்படுகின்றது. மேலும் இதில் மாரடைப்பை ஏற்படுத்துவதற்கான விஷப்புகையும் இணைந்துள்ளது. அதிலும் 30 முதல் 49 வயதுடைய புகை பிடிப்பவர்களுக்கு 80 விழுக்காடு மாரடைப்பு வருகின்றதாக இங்கிலாந்து புற்றுநோய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இனியும் நாம் புகைக்கலாமா? நம்மையும் நம் சமுதாயத்தையும் நாமே கெடுக்கலாமா?

நன்றி : குமரிக்கடல் இதழ் - சூலை 2006
தமிழகத்தின் பொன்விழா

மொழிவழியே இன்றைய தமிழகம் முகிழ்ந்தெழுந்த பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாட தமிழினமே இன்றே திரெண்டெழு...

வருகிற நவம்பர் 2006 இன்றைய தமிழகத்தின் பொன்விழா நாளாகும். பழைய சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஆந்திராவும், கருநாடகாவும் கேரளமும் அதனை - இராஜ்யோற்சவப் பொன்விழா- வாகச் சிறப்பாகக் கொண்டாட இப்பொழுதே ஏற்பாடு செய்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், இராஜ்யோற்சவ விழா எடுத்துத் தங்கள் மொழியுரிமையை, மண்ணுரிமையை மற்றும் நமக்கே உரித்தான தனியுரிமைகளை அவை நிலைநாட்டி வருகின்றன. சென்னை மாகாணத்தில் நம்முடனிருந்த மற்ற மொழிக்காரர்கள் பிரிந்து போன பின்னும், தனித்தமிழகமாக நம் தாயகம் உருக்கொண்ட பின்னும, நாம் மட்டும் அந்த விழாவை எடுக்காததால், ஆந்திரா தெலுங்கர் நாடு, கருநாடகா கன்னடர் நாடு, கேரளா மலையாளிகள் நாடு, என்பது போல் தமிழகம் தமிழர் நாடு என்று கருதப்படாமல், பழைய நான்கு மொழிச் சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதி - நான்கு மொழிக்காரர்களுக்கும் சொந்தமான பகுதி என்பதாகக் கருதப்படும் அவலநிலை உள்ளது. தொடக்கக் கல்வி வரைகூடத் தமிழைப் பயிற்சி மொழியாக்க முடியாத பரிதாப நிலை உள்ளது. தமிழன் என்று சொல்வதையே தரக்குறைவு என்றெண்ணும் இழிநிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே நாமும் ஆண்டுதோறும் அவ்விழாவைத் தமிழகப் பெருவிழாவாக எடுப்பதுடன், இந்தப் பொன்விழாவைத் தமிழகத்தின் ஊாதோறும், வீடுதோறும், பீடுபெறக் கொண்டாடவேண்டும். சாதி-மத-கட்சி வேறுபாடுகளைக் கடந்து வீதிதோறும் தோரணங்கள் கட்டியும், கொடியேற்றியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரலாறு படைத்திட இப்பொழுதே அணியமாக வேண்டும் எனத் தமிழ் மக்களையெல்லாம் தாள்பணிந்து கேட்டுக் கொள்கிறோம்,

நன்றி : எழுகதிர் - சூலை 2006
சமுதாயத்தைச் சீரழிக்கும் சின்னத் திரை விளம்பரங்கள்
உலகில் மிக அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான தொலைக்காட்சி ஊடகம் இன்று அறிவைப் புகட்டும் அறிவியல் கருவியாக இல்லை. உலகமய மற்றும் தாராளமயத்துக்கு அடிமையாகி சீரழிவுக் கலாச்சாரத்திற்குத் தன்னை காசுக்காக அர்பணிக்கும் போக்கு தொடர்கிறது.

மக்களின் இன்றியமையாத் தேவைப் பொருள்களுக்கு இந்த விளம்பரங்கள் முக்கியத்துவம் தருவதேயில்லை. ஆடம்பர நுகர் பொருள்களுக்காகச் செய்யப்படும் விளம்பரங்களே அதிகம். இவர்களின் நுகர்வேர்களை ஈர்க்கும் வெறியூட்டல் எப்படியெல்லாம் நம் பாரம்பரிய சமுதாய ஒழுங்கைக் கொச்சைப்படுத்திச் சீரழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது என்பதைக் காட்டுதே இக் கட்டுரையின் நோக்கம்.

இன்றைய சின்னத் திரைகளில் நாய் பிஸ்கட்டிலிருந்து, நடிகை ஐஸ்வர்யாராய் சுழன்று சுழன்றாடி விளம்பரப்படுத்தும் நட்சத்திர வைர விளம்பரம் வரை பார்வையாளரான நம்மை வாங்க முடியாமல் இருக்கிறதே என்ற ஏக்கத்தை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து தன்னம்பிக்கையைச் சிதறடிக்கின்றன.

8 வயது மதிக்கத்தக்க சிறுவன் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பின்புறத்தைப் பார்த்து சூப்பர் ஐட்டம் என்று நினைக்கிறானாம். தங்கள் நிறுவனத்தின் சாக்லெட்டை அச்சிறுவன் சாப்பிட்டதால் அந்தச் சிறுவனுக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டு விட்டது என்கிறது விளம்பரம். 50 காசு சாக்லெட்டை நம் சிறுவர்கள் வாங்க வேண்டிய அவசியத்தை இவ்வளவு ஆபாசமாகக் காட்டுகிறது இந்த விளம்பரம். இதை நம்முடன் அமர்ந்து கொண்டு இந்த விளம்பரத்தைப் பார்க்கின்ற நம் வீட்டுச் சிறுவர்கள் அண்டை வீட்டுப் பெண்களை இப்படி வருணிக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த பிரசார்பாரதிகளும், விளம்பரங்கள் கட்டுப்பாட்டுப் பொறுப்பாளர்களும் உத்திரவாதம் தருவார்களா.

ஓர் ஆயத்த ஆடையகம் தங்கள் தயாரிப்புகளை அணிந்து கொள்ளும் ஆடவனை ஊரில் உள்ள இளம் பெண்கள் எல்லாம் சைட் அடிப்பார்கள் என்று விளம்பரப்படுத்துகிறது. இன்னொரு விளம்பரம் குறிப்பிட்ட உள்ளாடை அணிந்துள்ள இளைஞனை பெண்களின் கழிவறைக்குள் நுழையுமாறு செய்து ஒரு பெண்கள் கூட்டம் அவனுக்கு உடல் முழுவதும் முத்தமாகப் பொழிந்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறது

இன்னொரு விளம்பரமோ ஒரு இளைஞன் தன் இடுப்பு உள்ளாடை அணிவதைப் பார்த்து அந்த உள்ளாடையின் பெயரை ஆச்சர்யத்துடன் கூறி பெண்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளுவதாகச் சித்தரிக்கிறது. உள்ளாடைகளைக் கண்டு மயங்குவதாகப் பெண்களைக் கேவலப்படுத்தும் விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளிக்கப்படுகிறது?

இதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள், பின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க - அதே விளம்பர வாசகங்களை உச்சரித்து விளையாடத் தொடங்கும் போது ஒரு தலைமுறை சமுதாயம் தறுதலைகளின் சமுதாயமாக மாறும். இதனால் சமுதாய ஒழுங்கு பண்பாடு உள்ளிட்டவை கேள்விக்குறியாகிறது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய ஈவ்டீசிங் பெருக்கமும், அதைத் தடுக்கும் சட்டங்களும். இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பாகும். மோசமான நுகர்வுக் கலாச்சாரத்தையும் இந்த மண்ணின் அடிப்படை பண்பாட்டுக் கூறுகளையும் விலை பேசுகிறது சின்னத்திரை. இது மாற மக்கள் என்று எழுவார்கள்? அல்லது இதிலேயே கலந்துவிடுவார்களா?

நன்றி: கரூர் மக்கள் களம் - சூலை 2006
அறியாதோர் அறிந்து கொள்க

உலகில் 2796 மொழிகள் உள்ளன. இவற்றில் இலக்கிய இலக்கணம் பெற்றவை 600 மொழிகள். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகள் தொன்மை வரலாறு உடையவை தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக் என்னும் 6 மொழிகளே ஆகும். இதற்கு அடுத்த நிலையில் சமஸ்கிருதம், பெர்சியன், அரபி, முதலிய மொழிகள் இருக்கின்றன. இதில் இலத்தீனும் ஈபுருவும் செத்துப்போன மொழிகள். ஈபுரு மொழிக்கு உயிரூட்டும் முயற்சியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. கிரீக் என்றுமே பேச்சு வழக்கில் இருந்தது இல்லை. எழுத்து வழக்கு மட்டுமே உண்டு.

இந்தியத் துணைக் கண்டத்தில் பேசப்படும் மொழிகள் 1652. இவற்றுள் 22 மொழிகள் மட்டுமே தேசிய மொழிகள் என்னும் சிறப்புப் பெற்று இந்திய அரசமைப்பின் 8 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ் மட்டுமே தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, தண்மை, மென்மை, தலைமை, அருமை என்னும் பல வகைச் சிறப்புகளை ஒருங்கே உடைய மொழியாக விளங்குகிறது.

இந்திய மொழிகளிலேயே பண்பாட்டு மொழி எனும் தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே உண்டு. இலங்கை, சிங்கப்பூர், நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக ஒளிர்கிறது. மலேசியவில் நாட்டு மொழி, நாடாளு மன்ற மொழியாகத் திகழ்கிறது. தமிழில் படித்துப் பட்டம் பெறுவதை கனடா அரசு அங்கீகரித்துள்ளது. உலக அரங்கில் 57 நாடுகளில் உள்ள தமிழர்களால் பேசப்படும் மொழி தமிழ். உலகு எங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழி தமிழ். எனவே, தமிழ் இன்று சர்வதேச மொழிகளில் ஒன்று எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளது. தமிழர்கள் ஒரு மொழியினர். பன்னாட்டினர் எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளனர்.

இத்தனைச் சிறப்புகள் உள்ள மொழியாகத் தமிழ் இருப்பதால்தான். 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று 1885 இல் முதன் முதலில் அறிவிக்கக் கோரினார். அவருடைய முயற்சிக்குப் பின்புலமாகவும், பெருந்துணையாகவும் சுயமரியாதைச் சிந்தனையாளர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் இருவரும் இருந்தார்கள்.

மேலை நாட்டு அறிஞர்கள் டாக்டர் எமினோ, அறிஞர் சீகன்பால்கு, ஜார்ஜ் ஹார்ட், கிளீயர்சன், கமில்சுவலபில், நோவாம் சாம்ஸ்கி, வின்சுலோ, கிராண்ட், ரெனால், மெட்டில், ரியாசு டேவிட், முதலியவர்கள் நடுநிலையாக நின்று வடவஞ்சித் தமிழ் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் அத்தனையும் உடையதாக இருக்கிறது என்று நிறுவியுள்ளாாகள்.

நன்றி : அருணனின் இளங்கதிர் - சூலை 2006
தத்தளிக்கும் தவளை

தி.க. சந்திரசேகரன்.

ஒரு தவளை தத்தித் தத்தி ஒரு குடிசைக்குள் நுழைந்தது. அங்கே பளபளப்பான அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது. தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் தவளை பாத்திரத்திற்குள் தாவிக் குதித்தது.

இதுவரை சேறும் சகதியுமாய் ஒரு குட்டையிலிருந்த அந்தத் தவளைக்கு இந்தத் தூய்மையான நீரம், பளபளப்பாக இருந்த பாத்திரமும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏதோ ஒரு நீச்சல் குளத்தில் நீந்தும் நீச்சல் வீரனைப்போல் நீந்தி மகிழ்ந்தது.

சற்று நேரத்தில் குடும்பத் தலைவி வீட்டுக்குள் நுழைந்தாள். அந்தப் பாத்திரத்தை எடுதது அடுப்பின் மீது வைத்து, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு மீண்டும் அரட்டையடிக்கப் பக்கத்தது வீட்டுக்குச் சென்று விட்டாள்.

தண்ணீரிலிருந்த தவளைக்குத் தண்ணீர் இலேசாகச் சூடேறுவது புரிந்தது. ஆனால் அது முதலில் அதற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. - ஆஹா என்ன சுகம் - அந்த மிதமான வெப்பம் வலியோடு இருந்த அதன் கால்களுக்கும் கைகளுக்கும் ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது.

தண்ணீரில் மேலும் கீழும் நீந்தி மகிழ்ந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே வந்தது. எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வெப்பம் கூடிக் கொண்டே இருந்தது. பாத்திரத்திலிருந்து வெளியே தாவிக் குதிக்கவும் முடியவில்லை. உடல் அவ்வளவு வலுவிழந்து போயிருந்தது.

சிறிது நேரம் கழித்து, வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த குடும்பத் தலைவி, பாத்திரத்திலிருந்து கொதிக்கும் நீரில், வெந்து மிதந்து கொண்டிருந்த தவளையைக் கண்டாள்.

தவளைகளுக்கு என்ற ஒரு குணம் உண்டு. சூடான நீரில் தவளையைப் போட்டால், உடனே தாவி வெளியே குதித்து விடும். ஆனால் நாம் முன்பு கண்டது போல தண்ணீரில் போட்டு, மெல்ல மெல்ல சூடேற்றிக் கொண்டே வந்தால் அதே சூட்டில் வெந்து மடிந்துவிடும். தப்பிக்க வேண்டும் என்றே தோன்றாது.

தண்ணீர் முதலில் இலேசாகச் சூடேறிய போது, தவளைக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, இன்னும் சற்றுச் சூடேறிய போது மேலும் கொஞ்சம் மகிழ்ச்சி.

நம்மில் பலருக்குக் கேட்ட கடன் கிடைத்தவுடன், பணம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. அந்தக் கடனை அடைக்க வேறு ஒருவரிடம் கடன் வாங்கினால் மிகவும் மகிழ்ச்சி. கடன் தொகை கைக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சி.

அதைப் போன்றே புகைபிடிக்கும்போது, நன்றாக இழுத்து மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் புகையை விடும்போது மகிழ்ச்சி, மதுபானத்தை உறிஞ்சிக் குடிக்கும்போது மகிழ்ச்சி, போதை உச்சிக்கேறி, உலகமே சுற்றுவது போலத் தோன்றும்போது பரவசம்.

வேலைக்குப் போகாமல் திண்ணையிலே கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கும் போது சுகம். வேலையை செய்யாமலிருந்தால் இன்னும் சுகம்.

தண்ணீர் லேசாகச் சூடேறும்போது தவளைபட்ட சுகத்தைப் போல...

கடன் வாங்கும்போது சுகம்
புகை பிடிக்கும்போது சுகம்
மது அருந்தும்போது சுகம்
வேலை செய்யாமலிருந்தால் பரவசம்.


ஆக எல்லாக் கெட்ட செயல்களும் ஆரம்பத்தில் மிகுந்து உற்சாகத்தைத் தரும். ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும், தண்ணீர் மேலும் மேலும் சூடேறியவுடன் தவளை வெந்து போனதைப் போல வட்டிக்கு மேல் வட்டி பெருகி, கடன் தொகையின் அளவு கூடினால் எவ்வளவு வேதனை?

தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டேயிருந்து, இறுதியில் புற்று நோய்க்கு இரையாகி, வாழ்க்கை முடியும்போது, அந்த மனிதனின் குடும்பநிலை என்ன ஆகும்.

கெட்ட வழக்கங்கள் ஆரம்பத்தில் இன்பத்தைத் தருவது போலத் தோன்றினாலும் முடிவில் நிச்சயம் துன்பத்தையே தரும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.


நன்றி : இலண்டன் சுடரொளி - சூலை 2006
கதிரவனை நிலவு பார்க்கவில்லை


தி.நா.அறிவுஒளி

இரவு கனிந்திருந்தது. குயில் ஒன்று குக்கூ வெனக் கூவியது. படுக்கையில் உறங்காதிருந்த தண்கதிர் எழுந்து பலகணி வழியே வெளியில் பார்த்தாள். பூனைபோல் அடிமேல் அடிவைத்துத் தோட்டத்துக் கதவை ஒலி எழாமல் திறந்தாள். கதவின் முன் நின்றிருந்தாள் தோழி அனிச்சம். தண்கதிரின் பூங்கையைப் பற்றி அழைத்துச் சென்று சோலை இருளில் மறைந்தாள்.

கையில் வேல் ஏந்தியவனாகக் கதிரவன் புன்கமர நிழலில் நின்றிருந்தான். அனிச்சத்தின் பின் அஞ்சியஞ்சி வந்த தண்கதிர் கதிரவனைக் கண்டதும் விரைந்து வந்து அவன் கையைப் பற்றினாள். அனிச்சம் புன்னகைத்தாள். விடைபெறுகிறோம் எனக் கூறி காதலர் இருவரும் தோப்பு நிழலில் வழி நடக்கலாயினர்.

தோழி ஆம்பல் ஓடிவந்து செவிலித்தாய் கொற்றவையை உலுக்கி எழுப்பினாள். செவிலி திடுக்கிட்டு எழுந்தாள். தண்கதிரைப் படுக்கையில் காணவில்லையே? என ஆம்பல் அழாக் குறையாகக் கூறினாள். அரண்மனைக்குள் ஓடிய செவிலி கொற்றவை, அரசன் துயரமே ஓர் உருவாய்ச் சோர்ந்து அமர்ந்திருந்ததையும், தரையில் வீழ்ந்து கிடக்கும் பூமயிலாய் நற்றாய் கோமகள் அழுது புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தாள். அரசன் செவிலியைப் பார்த்து என் மகள் எங்கே? எனக் கவலை மிக வினவினான்.

ஐயா கூடாரத்தில்தான் நான் படுத்திருந்தேன். எங்கே போயிருப்பாள்?

தோழி அனிச்சம் எங்கே?

அரண்மைனக் காவலன், நேற்று மாலையே ஊருக்குப் போவதாகக் கூறிச் சென்றாள் ஐயா.

அந்ததோ என்ன செய்வேன் - எனக் கதறி அழுதான்.

ஐயா, நான் போய்த் தேடிப் பார்க்கிறேன் என்று சொன்ன கொற்றவை உடனே தன் ஊன்றுகோலை எடுத்தவாறு பெருமனையை விட்டு வெளியேறினாள். எப்படியோ தேடிக் காணவேண்டும் என்னும் உறுதியோடு செவிலி விரைந்து நடந்தாள்.

நிலவழகியும், செங்கதிரும் பருவச்சிட்டுகள். அவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்க இசையார் என்று இருவரும் உடன்போக்குச் செல்ல முற்பட்டனர். கீழைச் சேரியிலிருந்து மேலைச்சேரி நோக்கி நடக்கலாயினர். நடுவழி பெரும் பாலைவனப் பகுதி. அந்த வழியில் தான் செவிலி கொற்றவை வெயிலையும் பொருட்படுத்தாமல் தள்ளாடியவாறு வந்தாள். எதிரே ஓர் இளைஞனும், இளங்குமரியும் வரக்கண்டு உற்று நோக்கினாள். தான் தேடிவந்தவர்கள்தாமா என எண்ணி, அதை அவளே மறுத்தாள். எதிரே வழிப்போக்கராக வரும் இவர்களிடம் தன் மகளையும் அவளோடு சென்ற இளங்குமரனையும் பற்றிக் கேட்டாள்.

தான் அவர்களைத் தேடி பாலைவழியில் நெடுந்தொலைவு வந்ததையும் சொன்னாள். அதற்கு அந்த இளைஞன் தன் காதலி நிலவழகியிடம் - நீ எதிரே ஒரு ஆடவன் செல்வதைப் பார்த்தாயா? என வினவினான். நிலவு - நான் எதிரே வந்த பெருநாண் அணிந்த சிறுமென் சாயல் வாய்ந்த ஓர் இளங்குமரியைப் பார்த்தேன். உடன்வந்த உருவைக் காணவில்லை என்றாள். இளைஞர் செவிலியிடம் - கடல் அலைநுரைபோல் நரைத்த கூந்தலையுடைய அம்மையே, என் கண்ணில் ஓர் ஆண்டகை பெருமிதத்துடன் செல்லக் கண்டேன். வெங்கதிர்போல் ஒளிபொருந்திய அவனைத்தான் பார்த்தேன். என் காதலி தண்கதிர் போன்ற ஓர் இளம் பெண்ணைத்தான் பார்த்தாளாம் - என்றாள்.

செவிலி வியப்பால் விம்மிதமுற்றாள். பிற ஆண்முகம் பாராத இளங்காதலியும், எதிர்வரும் இளம்பெண்ணழகியைப் பாராத ஆடவனையும் அன்னாரின் காதலிற் சிறந்த கற்பொழுக்கத்தையும் எண்ணி நெஞ்சம் உருகினாள். காதலர் இருவர் உருவமும் சிறிது சிறிதாகச் செவிலியின் பார்வையில் மறைந்தது.

(இக்கதைக்கு பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த திணைமாலை நூற்றைம்பது 89 ஆம் பாடலுக்குரியது)

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரோ - எண்ணிய
வெங்கதிர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்கதிர் அன்னாளைத் தான்.


நன்றி : தெளிதமிழ் இதழ் - சூலை 2006

கவிஞர் வாணிதாசனாரின் சிறப்புகள்

(o) பிரெஞ்சுக் குடியரசின் மிகப் பெரிய விருதான செவாலியேர் விருது பெற்றார்.

(o) தென்னாற்காடு மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றம் கவிஞரேறு பட்டம் அளித்தது.

(o) புதுவைத் தமிழ்ச் சங்கம் பாவலர் மணி விருது அளித்து, வெள்ளிக் கேடயமும் அளித்துப் போற்றியது.

(o) வாணிதாசரின் பாட்டரங்கப் பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது.

(o) வாணிதாசரின் மறைவுக்குப் பின் தமிழக அரசு பாவேந்தர் விருது அளித்தது.

(o) 1964 இல் இராவினோவிட் என்னும் உருசியர் இந்து ஆங்கில நாளேட்டில் இவரது படைப்புகள் பற்றி சிறப்பித்து எழுதியுள்ளார்.

(o) 1956 இல் நேசனல் எரால்டு ஆங்கில இதழில் எஸ்பி.தியாகராசன் வாணிதாசனாரின் இலக்கியச் சீர்மையையும், பாடல் எழுச்சியையும் விவரித்துள்ளார்.

(o) இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் அண்ணா, கவியரங்கத் தலைமை ஏற்கச் செய்து வாணிதாசனாரைச் சிறப்பித்தார்.

(o) வாணிதாசனாரின் தீர்த்த யாத்திரை கவிதைக் கதை நூலாகும். இது தமிழுக்கு ஒரு புது வரவு.

(o) வாணிதாசனாரின் எழில் விருத்தம், வீரபத்திர முதலியாரின் விருத்தப்பாவியல் இலக்கணத்திற்கு இலக்கியம் இல்லாத குறைைப் போக்கிய பெருமையுடையது.

(o) தமிழில் ஒரு யாப்பியல் இலக்கண நூலுக்கு ஓர் இலக்கியம் படைத்த முதல் பாவலராக வாணிதாசனார் விளங்குகிறார்.

(o) வாணிதாசனாரின் மொழி பெயர்ப்புத் துறையிலும் பெரும்பங்காற்றியுள்ளார். விக்தோர் உய்கோ, மாப்பசான், அலபிரேத் தெய்முய்சே ஆகியோரின் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்

(o) தமிழ்-பிரெஞ்சு கையகராதி முயற்சியும் வாணிதாசரால் தொடங்கப்பட்டது.

(o) வாணிதாசனாரின் பாடல்கள் காஞ்சி, திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், சிங்கப்பூர் தமிழ் முரசு, மன்றம், திராவிடன், குயில், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், பொன்னி, காதல், வாழ்க்கை, தேனருவி, நெய்தல் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. கவிஞரின் பாடல்கள் மிகுதியாக வெளிவந்த இதழ் பொன்னி ஆகும்.நன்றி : யாதும் ஊரே இதழ் - சூலை 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061