வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 08 - 2006தமிழ் மொழியைக்

கற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி?

சிவா பிள்ளை - லண்டன் தமிழ்க் கணனியின் முன்னோடி.

தமிழ்மொழி கற்பது கடினம் என்பது ஒரு பரவலான எண்ணம் பலரிடம் பரவி இருக்கிறது. தமிழ் கற்பதற்கு அந்த நாட்டிலே வசித்திருக்க வேண்டும் எனவும பலர் கருதுகிறார்கள். தமிழன் அல்லாதோர் தமிழ் கற்பது கடினம் என்பது பலரின் எண்ணம். இந்த எண்ணம் எதற்காக? இது ஒரு மொழியைக் கற்பிப்பது கற்பது பற்றிய முழுச் செயல்பாடுகளை அறியாததன் காரணமே இதற்குக் காரணம் ஆகும்.

வருங்கால நமது சமுதாயம் தொடர்ந்தும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழை இந்நாட்டில் கற்பிக்கும் வழிமுறைகளை நாம் பல வழிகளில் மாற்றி அமைக்க வேண்டும். ஏனைய ஐரோப்பிய மொழிகளை நம் குழந்தைகள் இங்கு கற்கும் போது நம் தமிழை அவர்கள் கற்கப் பின்வாங்குவதன் காரணம் என்ன? ஆங்கில மொழியை ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் கற்பிப்பதற்குப் பல புதிய அணுகுமுறைகளை இந்த நாட்டில் கையாளுகிறார்கள். ஆண்டாண்டு புதிய வழிமுறைகளையும் பழையனவற்றை நீக்கியும் நடைமுறைப்படுத்துகிறார்கள். மிக எளிமையாக ஆங்கில ஐரோப்பிய மொழிகளைக் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என நான்கு வகையாகப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். தமிழைக் கற்பிக்கும் வழிமுறைகளை எளிமையாக்கினால் தமிழ் கற்பது ஒரு எளிமையானது எனக் கருதப்படும்.

ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்க வேண்டும். ஆசிரியரும் மாணவரும் கலந்து பழகும் சூழல் இருக்க வேண்டும். தொடக்கத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் ஆர்வம் ஊற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் தமிழ்மொழி கற்பிப்பது இருந்திருக்க வில்லை. அப்போதைய பாடத்திட்டத்தில் இலக்கணத்திற்கும், செய்யுளுக்கும் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மொழியைக் கற்பிப்பதற்கான பயிற்சியைப் பலர் பெற்றிருக்கவில்லை. கற்பிக்கப் பயன்படுத்தப்படும் புத்தகங்களும் அதற்கு ஏற்ற வகையில் இருந்திருக்கவில்லை. இன்று பல வர்ணங்களில் பல தமிழ்ப் பாடப்புத்தகங்கள் தமிழ் கற்பிப்பதற்கு வந்திருக்கின்றன. பல குறுந்தட்டுகள் தமிழ் கற்பிப்பதற்கு இன்று கிடைக்கப்படுகிறது. பல் புதிய தொழில் நுட்ப வழிவகைகள் அவற்றில் கையாளப் பட்டிருக்கிறது. இங்குள்ள வார இறுதித் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்சிப் பட்டடையில் சேர்ந்து தற்கால இந்நாட்டு மொழி கற்பிக்கும் வழி முறைகளைப் பயில வேண்டும்.

இன்று இணையதளத்தில் தமிழ் பாடம் என்று தேடும் பொழுது வரும் இணைய தளங்கள் பலதைக் காணலாம். அன்று பாரதி கண்ட தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவு இன்று உலகின் பல பாகங்களில் வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் பல சர்வகலாசாலைகளில் தமிழ் மொழியை ஏனைய மொழிகள் போல் கற்றுத் தேற வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைக் கல்வி மூலம் கற்கும் வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவ்வாறு தற்போது இல்லை. ஆனால் இந்த ஆண்டு 2006 செப்டம்பரில் இருந்து தமிழ் மொழிக்கென ஒரு பாடத்திட்டம் ஏனைய ஆசிய ஐரோப்பிய மொழிகளில் இருப்பது போன்று தேசிய மொழிச் சபையால் (National Language Centre) வெளியிடப்பட இருக்கிறது. அத்தோடு - தேர்வுப் பகுதியினரால் முதன் முதலாக Break through level தேர்வும் தயார் செய்யப் பட்டுள்ளது. இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் ஆகிய நான்கு பகுதிகளிலும் ஒரு மாணவன் தேர்வு எழுதலாம். அத்தோடு இந்த நான்கு பகுதிகளில ஒரு மாணவன் ஒன்றில் ஆற்றல் உள்ளவராக இருந்தால் அதில் மேற்கொண்டு முன்னேற ஆக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இததமிழ் பாடத்திட்டம் ஏனைய மொழிகளுக்குச் சமமாக உள்ளது. 9 தரமாக இப்பாடத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது, வயதை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட வில்லை.

தரததை அடிப்படையாகக் கொண்டே இது பிரிக்கப்பட்டுள்ளது. எந்த வயதிலும் எந்தத் தரத்திலும் சேர்ந்து அதற்கான பாடத்திட்டத்தை எடுத்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தரமும் நிறைவு செய்ததும் அதற்கான தேர்வு உண்டு. அதற்கான தராதரப் பத்திரமும் தேர்வுத் துறையினரால் வழங்கப்படும்.

இந்த நாட்டில் வார இறுதித் தமிழ் பள்ளிகளில் பழைய வழிமுறையினை தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துவது கவலைக்குரியதாக உள்ளது. இவர்களுக்கு ஏற்ற மொழிகற்பிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பட்டடைகள் இல்லாதது ஒரு காரணம். இந்நாட்டில் மொழிகற்பிக்கும் வழிமுறைகளைத் தெரிந்திருக்காதது இன்னும் ஒரு காரணம். கற்றுக் கொள்வதில் பல முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தைகளும் தன் தாய்மொழியை எவ்வாறு கற்றுக் கொள்கிறது என்பதையும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மொழியைக் கற்றுக் கொடுப்பதில் பல நிலைகள் உண்டு.

மொழியில் இருக்கும் சொற்களைப் புரிந்து கொள்ளுதல்

இயல்பாகப் பேசுபவர் போல் அந்த மொழியைப் பேசப் பழக முயற்சிக்க வேண்டும்.

ஓர் எழுத்து, ஈரெழுத்துச் சொற்களை உருவாக்க அடிப்படை இலக்கண விதிமுறைகள் விதிகள் ஆகியவற்றிற்கு ஏற்பக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தையின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான அறிவினை குழந்தைகளுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எழுத்துக் கூட்டி அந்த எழுத்தின் ஓசையுடன உச்சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.(ஆய்வின்படி இது சிறந்த முறை எனக் காணப்பட்டு தற்பொழுது 2006 இந்நாட்டில் ஒலியுடன் சொற்களை உச்சரித்து எழுத்துக் கூட்டப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது)

எளிமையான சொற்களை எழுதப்பழக்குதல். இந்தச் சொற்களை அவர்கள் அன்றாடம் பேசப்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ற்தாக இருக்க வேண்டும்.

அதைக் கற்பிக்கும் போது அதற்கான படங்களை அல்லது வீடியோ காட்சி மூலம் காண்பித்துக் காட்டலாம். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். சொற்களைப் படங்களுடன் இணைத்துக் காண்பித்துக் கற்பிக்க வேண்டும். சிறு பத்தியினை வாசித்து அவர்களே கேள்விகளை உருவாக்கி அவர்களே பதில் சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

கற்பிப்பதில் பல அணுகுமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் அந்த அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப அமைக்க வேண்டியது அந்த ஆசிரியரின் பொறுப்பாகும்.

எமது வார இறுதிப் பள்ளிகளில் தொடர்ந்து ஒரு தமிழ் ஆசிரியர் இருப்பது குறைவு. ஆகையினால் பாடத்திட்டம், தினமும் கற்பிக்கும் நிலை என்பது எமது வார இறுதித் தமிழ்ப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் தொடர்ந்து கற்கும் மாணவர்கள் முன்னேற வசதி உண்டு.

ஒரு மொழியை ஒருவர் அறிந்திருந்தால் அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் ஆகையால் அதை அடிப்படையாக வைத்துத் தமிழைக் கற்றுக் கொடுக்கலாம்.

தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குக் கணினியை உபயோகப் படுத்துவது மிக உதவியாக இருக்கும். முக்கியமாக ஒரு சொல்லின் உச்சரிப்பை அந்த நாட்டில் பிறந்த ஒருவரின் உச்சரிப்புடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உச்சரிப்பை கணிணியில் பதிவு செய்து - சொற்களின் உச்சரிப்பை திரும்பத் திரும்ப குழந்தைகள் கேட்டுப் பழகுவதன் மூலம் சரியான உச்சரிப்பை அந்தக் குழந்தை பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வழிவகை தமிழ் பாடம் இணையதளத்தில் நிறையப் பெறலாம். இல்லையேல் பாட ஆசிரியர் தத்தமது வகுப்பு மாணவர்களுக்குத் தாேம் ஏற்படுத்தி அதை உருவாக்கலாம்.

தற்போது யுனிகோட் மூலம் தமிழ் எழுத்துகள் கணிணியில் பதிவு செய்யும் வசதி இருப்பதால் கணிணியில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பது சுலபமாகிவிட்டது. தமிழ் கற்பிக்கும் இணயை தளங்கள் தற்போது யுனிகோட் முறைக்கு மாறியிருப்பதால் எல்லோரும் பயனடையக் கூடியதாக இருக்கிறது. ஆங்கிலம், தமிழ் சிங்கள அகராதியும் இணையத்தில் இப்போது கிடைக்கப்படுகிறது (http://www.bbc.co.uk/tamil) தமிழ் எழுத்துகளை எழுதிப் பழகுவதைக் காண்பிக்கும் இணையதளங்கள் பல உண்டு (http://www/kalvi.com)

தமிழைப் பாதுகாத்து அதைச் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கற்பித்துக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் ஆன்மீக உரைகள் நிறைய தமிழ் மொழியில் உண்டு. உலகளாவிய சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நன்றி : புதினம் பத்தாவது ஆண்டு மலர்.
கொடை வள்ளல் கலைவாணர்

(o) கலைவாணர் வீட்டில் சின்னைய்யா என ஒரு சமையல்காரர் இருந்தார். அவருக்கு அப்பொழுதே மாதச் சம்பளம் ரூ1000 க்கு மேல். காலை 5 மணிக்குக் காப்பி, பிறகு 7 மணி முதல் 11 மணி வரை காலை உணவு நடைபெறும். இட்டலி, வெண்பொங்கல், சாம்பர், சட்னி, இட்லிப் பொடி. மதியம் சாப்பாடு 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். நிரம்பப் பதார்த்தத்துடன் சுடச் சுடச் சோறு. மாலை 5 மணிக்குக் காப்பி, படை அல்லது பஜ்ஜி, மைசூர்பாகு அல்லது ஜாங்கிரி எனவும், இரவு சாப்பாடு 7,30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். இரவில் சப்பாத்தி, வற்றல் குழம்பு, சுடச் சுட சோறு மற்றும் கூட்டு, ரசம், மோர் என நடைபெறும். கலைவாணர் நினைத்தால் உடனே பாயசத்துடன் சாப்பாடு.

கலைவாணர் வீட்டல் சாப்பாடு முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு இருக்கும். எல்லோரும் எடுத்துப் போடுவார்கள். வெற்றிலையைக் கழுவித் தட்டில அழகாக ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்கள். 10 வெற்றிலை குறைந்தால் உடனே 10 வெற்றிலையும் பாக்கும் வைத்து எப்போதும் நிறைந்து இருக்கும்படி பார்க்க வேண்டியது ஒருவர் பொறுப்பு.

இதன் அடிச்சுவட்டில்தான் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இராமாவரம் தோட்டத்தில் சாப்பாட்டிற்கு என்று ஒரு கொட்டகை போட்டு, சைவம், அசைவம் எனக் கலைவாணரைப் போன்று மிகவும் சிறப்பாக 200 அல்லது 300 பேர் தினமும் சாப்பிட ஏற்பாடு செய்திருந்தார்கள்.


(o) உடல் நலம் குன்றியிருந்த கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர் அவர்கள் இவரைப் பார்க்கச் சென்றார். கலைவாணர் திரும்பும்போது தலையணைக்கடியில் ஒரு தொகையை வைத்தாராம்.

இராமச்சந்திரா சில்லறையாக மாற்றி வைத்துவிட்டுப் போ. இங்கே எல்லோருக்கும் நான் கொடுக்க வேண்டும். என்றாராம் கலைவாணர்.

கையில் இருப்பதை மட்டுமல்ல. கடன் வாங்கியும் தருமம் செய்தார். கலைவாணர்.


(o) கலைவாணரை நேரில் சந்திக்கும் அவரது நண்பர்கள் யாராக இருந்தாலும் கேட்கும் முதல் கேள்வி - என்ன அண்ணே ரூபாய் நோட்டுகளைத் தனக்குன்னு கொஞ்சம்கூட வச்சிக்காமல் அப்படி அப்படியே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே? என்பது தான்.

அவரோ சிரித்துக் கொண்டே கரன்கி நோட்ல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றா கோட்டிருக்கிறார்கள். கவர்மென்ட் ஆப் இந்தியா என்று தானே போட்டிருக்கிறார்கள். அதனாலே இது இந்திய மக்களுக்குத்தான் சொந்தம் - என்று பதிலடி கொடுப்பார்.

நன்றி : யாதும் ஊரே ஆகஸ்ட் 2006 - கலைவாணர் சிறப்பிதழ்.
நல்லவர்களுககு வாய்ப்புக் கொடுங்கள்
உள்ளாட்சி அமைப்பில் அடங்கக்கூடிய ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்துமே சட்டங்களை இயற்றக்கூடிய அமைப்புகள் அல்ல. மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுகாதாரத்தைப் பாதுகாக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே இந்த நிர்வாகத்தினுடைய முக்கிய பணியாகும்.


ஆகவே மக்கள் சேவையே உயர்வெனக் கொண்ட, சுரண்டலற்ற பல நல்லோர்கள் நிர்வாகத்திற்கு வரவேண்டும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நல்லோர்கள் பலரும் அரசியலை விட்டு விலகியே நிற்கின்றார்கள், ஆகவே அவர்களை உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.


நல்லவர்களை ஊராட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ள அரசியல் கட்சி அமைப்பு உள்ள நல்லவர்களோ அல்லது அரசியல் வாதிகளோ சற்று விலகி நிற்பதே நல்லது. அரசியல்வாதியினுடைய செயல்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகளுடைய நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம்.

ஆகவே கிராம நிர்வாகத்தை அரசியல் சார்பற்ற பொதுநலத் தொண்டர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து நீங்கள் விலகி நின்று செயல்பாட்டை கவனிக்கலாம்

நன்றி: மூலிகை சஞ்சீவி ஆகஸ்ட் 2006 தலையங்க உரையில் ஆசிரியர்.
பெண்களும் சட்டமும்

பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய சட்டங்கள்

304பி(1) வரதட்சணை இறப்பு : குறைந்த பட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.

313, 314, 315(2) : கட்டாயக் கருச்சிதைவின் போது பெண்ணின் மரணம் நேர்ந்துவிட்டால் காரணமானவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.

354(3) மானபங்கம், வன்முறை : இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

366, 366ஏ (5) கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் குற்றத்திற்கு பத்தாண்டு சிறை மற்றும் அபராதம்.

376 (6) பாலியல் வல்லுறவு : ஏழு ஆண்டுக்கு குறையாத சிறை. அதிகபட்சம் பத்தாண்டு அல்லது ஆயுட்காலச் சிறை மற்றும் அபராதம்.

493(7) கணவன் என்று ஏமாற்றி பெண்ணுடன் உடலுறவு கொள்வது : பத்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

494(8) மனைவி உயிருடன் இருக்கும்போது மீண்டும் வேறு திருமணம் செய்தல் : ஏழாண்டு சிறை மற்றும் அபராதம்.

495(9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: பத்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

498(10) திருமணமான ஒரு பெண்ணை ஏமாற்றிக் கடத்திச் சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்துதல்: இரண்டாண்டு சிறை மற்றும் அபராதம்.

509(1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுவது, ஒலி எழுப்புவது, சைகை காட்டி பெண்ணின் அந்தரங்கத்துக்குள் அத்து மீறல் : ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம்.

நன்றி : மனித உரிமைக் கங்காணி - ஆகஸ்ட் 2006
இசுரேலின் வல்லாதிக்கத்துக்கு என்ன முடிவு?

இசுரேல் நாட்டில் இராணுவ வீரர்கள் இருவர் லெபனானின் இசுபுல்லா என்ற சியா இயக்கத்தால் பிணைக் கைதிகளாகக் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைக்கும் கிழக்கு நாடுகளின் பாரிசு என்று பெருமைப்பட அழைக்கப்படும் சிறிய நாடான லெபனான் மீது இசுரேல் தனது முழு இராணுவ ஆற்றலையும் பயன்படுத்தி யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்த யுத்தத்தில் 500 க்கும் மேற்பட்ட வெகுசன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுவாழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் வாழும் பெரிய மற்றும் சாதாரண குடியிருப்புகள், வணிகக் கூடங்கள், சர்வதேச விமான நிலையம், மின்னுற்பத்தி நிலையங்கள், எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், லெபனானையும் சிரியாவையும் இணைக்கும் முக்கிய சாலைகள் என்று லெபனான் நாட்டையே அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இசுரேல். தரைவழி, கடல்வழி, வான்வழி என்று பன்முகப்பட்ட தாக்குதல் தொடர்கிறது. அய்க்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தனது கண்டனக் குரலைப் பதிவு செய்ததுடன் அமெரிக்கா என்ற ஆக்டோபசின் அரட்டலுக்கு அடிபணிந்து வாய்பொத்தி நிற்கிறது. அய்க்கிய நாடுகளின் அமைதிப்படை அதிகாரிகள் 4 பேர் இசுரேலால் கொல்லப்பட்டாலும் வாய்பொத்தியே அய்நாஅவை உள்ளது.

கோபிஅன்னான் இசுரேல் நாட்டின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டு கோபப்பட்டாலும் வேறு எதுவும் செய்துவிட இயலவில்லை. இசுரேலின் பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் முயற்சியின் மேலும் ஒரு செயற்பாடாகவே லெபனான் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. சனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு அரசு அதிகாரத்திலே 13 (122 பேரில்) உறுப்பினர்களைக் கொண்டு லெபனான் அரசில் அங்கம் வகிக்கும் இசுபுல்லா அமைப்பை முடக்குவதற்கான முயற்சியாகவும், அவர்களது தலைவர்களைக் கொன்று குவிக்கவும்இ சிரியா மற்றும் லெபனானின் இசுரேல் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எச்சரிக்கை விடவும், பாலத்தீன கமாசு அமைப்பிற்கும் ஏன் உலகின் எத்திசையில் இருந்தாலும் இசுரேயலை எதிர்ப்பவர்களை, அழித்தொழிக்க இசுரேல் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்காது என்பதை எடுத்துரைக்கவும் இந்த யுத்தம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

லெபனானைவிட்டு அனைத்து நாடுகளின் படைகளும் வெளியேற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அய்நா தீர்மானம் நிறைவேற்றினாலும், ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்று மனித உரிமைப் பிரகடனங்கள் தெரிவித்தாலும், இசுரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற வல்லரசு நாடுகள் தங்களுக்கு என்று எழுதப்படாத சட்ட திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றன.

எந்தவொரு மனித உரிமைக்கும் எதிரான செயற்பாட்டையும் வன்முறைப் போக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளலாகாது என்றாலும், வன்முறை வன்முறையை உருவாக்கும் என்ற இயங்கியல் வாதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது......

நன்றி : இலட்சியப் போராளி ஆகஸ்ட் 2006
கார்பன் மோனாக்ஸைடின் நச்சுத் தன்மை.

முனைவர் தி. தேவசேனா

மோட்டார் வாகனங்களுக்குப் பயன்படும் எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாத நிலையில் கார்பன் மோனாக்ஸைடு என்ற நிறமற்ற மணமற்ற வாயு வெளியாகிறது. மோட்டார் வாகனங்கள், மரக்கரி, நிலக்கரிச் சுரங்கம் மண்ணென்ணெய் லாந்தர் ஆகியவை மூலம் அந்த வாயு சுற்றுச் சூழலுக்குப் பரவுகிறது.

வாழ்க்கை பரபரப்பு அடைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நாகரீகத்தின் சின்னமாகவும் அத்தியாவசியத் தேவையாகவும் ஆகிவிட்டது. இதனால் சுற்றுச்சூழலின் கார்பன் மோனாக்ஸைடின் அளவு கணிசமாக உயர நேரிடுகிறது. குறிப்பாக மாநகரங்களில் இது மிக அதிகம்.

கார்பன் மோனாக்ஸைடு தாக்குதலால் ஏற்படும் உடல் அறிகுறிகள் யாவை? உயிர் வேதியல் மாற்றங்கள் யாவை? கார்பன் மோனாக்ஸைடு நச்சுத் தன்மைக்கான சிகிட்சை என்ன? என்பன பற்றி சில குறிப்புகளை அறிந்து தெளிவோம்.

காற்றில் கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும் போது அது நம்மால் சுவாசிக்கப்பட்டு, நம் இரத்த ஓட்டத்தில் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது. வழக்கமாக நாம் உயிர்வாழத் தேவைப்படும் ஆக்ஸிஜனை நம் உடலிலுள்ள அனைத்துத் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக விளங்குவது ஹீமோகுளோபின் என்ற புதமாகும். ஹீமோகுளோபின் நம் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் உள்ளது. இந்த ஹீமோகுளோபினில் வழக்கத்திற்கு மாறாக கார்பன் மோனாக்ஸைடு சேர்ந்தால், கார்பாக்ஸி ஹீமோகுளோபின் என்கிற நச்சுப் பொருள் உருவாகிறது. இதனால் திசுக்களுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் தடைப்பட்டு பல அறிகுறிகள் ஏற்படும். அவையாவன - படபடப்புடன் கூடிய தலைவலி, பலவீனம், உடல்சோர்வு, பார்வைக் கோளாறு, வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவைகளாம். இவற்றை உணராமலோ, அலட்சியமாகவோ விட்டால் இரண்டாம் கட்டமாக சுவாசக் கோளாறும் வலிப்பும் வர நேரிடும். தொடர்ந்து இரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபினின் அளவு 60 விழுக்காடு எட்டும் பொழுது முக்கிய உடல் உறுப்புகளான சுவாசப்பை, இருதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்நிலையில் சிறுநீரில் புரதமும் இரத்தமும் வெளியேறும்.

நன்றி: சுற்றுச் சூழல் புதிய கல்வி - ஆகஸ்ட் 2006
தந்தையின் மரணத்தில்,,,,,
- லீனா மணிமேகலை -

என் தந்தையைப்
பிணம் என்று சொல்லாதீர்கள்
வெந்நீர் சூடும் தாங்காத
அவர் உடலில் தீ மூட்
என் தம்பியின் மென் விரல்களைப் பணிக்காதீர்கள்
புத்தகங்களை மறந்து சற்று
உறக்கத்தின் மடியில் ஆழ்ந்திருக்கிறார்
விட்டுவிடுங்கள்.
உங்கள் பாடைகளை உடைத்துப் போடுங்கள்
ஒரு நாளும் தங்கம் விரும்பியதில்லை
அவர் வாயில் காசுகளைத் திணிக்காதீர்கள்
தண்ணென்று இருப்பதைக் கண்டு
பீதியடையாதீர்கள்
அது அவர் சுபாவம்.
நிறுத்துங்கள் உங்கள் கூச்சலை..
என் தந்தையை என்னிடம் விட்டுவிடுங்கள்
நான் மரணத்திடம் பேசிக் கொள்கிறேன்.
நீங்கள் அதைவிடக் கொடியவர்கள்.

நன்றி : செம்பருத்தி - ஆகஸ்ட் 06
வானம் வசப்படும்
- சக்தி அருளானந்தம் -

ஆதி சமூகத்தில்
பெண் உயிர்ப்புடன் இருந்தாள்

வேட்டையாடுதல் வாழ்முறையான
பொதுவுடமைச் சமூகம்.,
தன்னிச்சையாக காற்றென உலவினாள்.

தன்னிலிருந்து இன்னொரு உயிரைத்
தந்த பெண்மையை
அச்சமும் அதிசயமுமாய்
ஆண் அறிந்தான்.

வேட்டைச் சமூகம் வேளாண்சமூகமாய்
பொதுவுடைமை தனியுடைமையாய்
உருக்கொண்டபோது
உருக் குலைந்தது பெண்ணுலகு.

ஆணின் அச்சம்
அடக்கு முறையை நிகழ்த்தியது அவள் மீது
சீனாவில் அவள் பாதங்கள்
மூன்றங்குல பொற்றாமரைகளாய் குறுக்கப்பட்டது.
ஆப்பிரிக்காவில் அவள் பெண்ணுறுப்பு
சிதைக்கப்பட்டது.

இங்கோ
அவள் அந்தப்புரங்களிலும்
அடுக்களைகயிலும் அவந்து போனாள்.
தண்ணீரைப் போல் அவளை
தனக்கேற்ற வடிவில்
வார்த்துக் கொண்டவன் அவன்.

புழுங்கு வெளி குறுக்கப்பட்டு
வானம் அவளுக்கு மறுக்கப்பட்டது
வானமற்ற அவளின் சிறகுகள்
சிறுகச் சிறுக உதிர்ந்தன.

பொந்திற்குள் புதைந்து கிடந்த பெண்மீது
புதுவெளிச்சம் பாய்ச்சியது கல்வி

சேர்ந்திருக்க வேண்டியவள்
சார்ந்திருப்பவளாய்ச் சரிந்தபோது

நிமிர நிற்க வைத்தது கல்வி
கல்லாய்ச் சமைந்தவள்
கல்வியால் உயிர்த்தெழுந்தாள்.

சிறகற்ற அவளுக்கு சிறகானது கல்வி
வானமற்றிருந்த அவளுக்கு
வானம் வசப்பட்டது.

நன்றி : பெண்ணியம் ஆகஸ்ட் 2006
சூளுரை

பெரியாரின் சூளுரை
நிறைவேறிய நாள்
1967 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் இரண்டாம் நாள்.

ஆம்
சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள்
1925 ஆம் ஆண்டு
காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில்
பெருவரியான மக்களுக்கான
இட ஒதுக்கீட்டை
ஏற்க மறுத்த அரங்கில்
இந்தக் காங்கிரசின்
மேல் ஜாதி ஆணவத்தை
அழித்தே தீருவேன் - என்று
தந்தை உரைத்த
சூளுரையைத்
தனையர்களான
அண்ணாவும்
தம்பியர்களும் நிறைவேற்றினர்.

அன்று தமிழகமே
திருவிழாக் கோலம்
பூண்டிருந்த நாளில்
திருச்சி நகரமோ
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில்
வெற்றி வாகை சூடியது தி.மு.க.
ஆளுநரைச் சந்தித்துவிட்டு
பதவி ஏற்கும் முன்
தங்களை ஆளாக்கிய
பகுத்தறிவுத் தந்தையின்
வாழ்த்துப் பெற
தம்பியர் படைசூழ சொல்லேருழவர்.
அண்ணா வருகிறார்
எனும் செய்தி
தென்றலில் மிதந்து வந்தது.
பெரியாரின் தென்னூர் மாளிகைக்கு.

அண்ணாவின் மகிழுந்து
மாளிகைமுன் வந்து நிற்க
கன்றினைக் காண ஓடோடி வந்த
தாய்ப் பசுவைப் போல்
அய்யா விரைந்து வர
மணியம்மையாரும் தோழர்களும்
நெஞ்ச மகிழ்வில் நெகிழ்ந்து வரவேற்றனர்.

அய்யா மார்போடு அணைத்துக் கொண்டார்.
தனயர்களை.
பதினெட்டாண்டு
இடைவெளிக்குப் பிறகு
இணைந்தால் - பேச
நாத் துடி துடித்தது.
சொற்கள் வரவில்லை.
ஆனந்தக் கண்ணீர்
கண்ணறைகளில் தேங்கி நின்று
உருண்டு வழிந்தோடின.
பெருமூச்சு - ஆம்
ஆனந்தப் பெருமூச்சுக்கிடையே
அமர்ந்தனர்.

என்னைக் கூச்சப்பட வைச்சுட்டீங்க
உங்களைக் கடுமையாகப்
பேசியிருக்கிறேன் - ஆனால்
நீங்கள் யாரும்
என்னைப் பேசியதில்லை- என்று
அய்யாவே வாய் திறந்து மொழிந்தாா.

நடந்தவை யெல்லாம்
நடந்தவையாக இருக்கட்டும். இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
அய்யா
இந்த அரசவையே
உங்களுக்குக் காணிக்கையாகக்
கொடுக்கிறோம் - என்று
அண்ணா மொழிய
தம்பியரும் தலையசைத்தனர்.

பாசப் பிணைப்பிலிருந்து
விடுபட்டதும்
புறப்படுங்கள்
என் தோள் சுமை
கொஞ்சம் குறைந்தது - நம்
இனம் தலை நிமிரச்
செய்ய வேண்டியவற்றைச்
செய்து முடியுங்கள் - நானும்
உங்களுக்குத் துணை நிற்பேன் - என்ற
தந்தையின் வாக்கைத்
தலைமேல் தாங்கிப்
புறப்பட்டவர்களை
வாயில் வரை வந்து
வழியனுப்பி வைத்தார்
வாழ்வியல் ஞானி, வரலாற்று நாயகர்
தந்தை பெரியார்.

நன்றி : முகம் ஆகஸ்ட் 2006

நம் இனம் தலைநிமிரச் செய்ய வேண்டியது என அய்யா குறிப்பிட்டது இந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறைவேறி உள்ளதா - சிந்திப்போம்.

பிரான்சிலிருந்து வண்ணை தெய்வாம்.

தொடர் எண் 8

(o)சில வருடங்களுக்கு முன்னர் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற புத்தக விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்விழாவிற்கு கனடாவில் இருந்து ஒரு இலக்கியவாதியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். நம்மவர்கள் நடத்தும் எந்த விழாக்களும் எப்பொழுதுமே குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குவதில்லை. இந்த விழாவும் அப்படித்தான் ஒரு மணி நேரம் தாமதமாகவே விழா தொடங்கியது.

மண்டம் நிறைந்த மக்கள் வந்திருந்ததால் முதலில் பேச வந்தவர்கள் தங்களது சொந்தக் கதைகளை எல்லாம் பேசி நேரத்தை ஒரு வழி செய்துவிட்டார்கள். இதனால் பின்னால் பேச வந்தவர்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. சிறப்பு விருந்தினர்களாக வருபவர்கள் கடைசியாகப் பேச அழைக்கப்படுவது தானே முறை. அந்த வகையில் கனடாவில் இருந்து வந்த சிறப்பு விருந்தினரை ஐந்து நிமிடங்களில் உரையை முடித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்கள்.

இந்த விழாவிற்கு வருவதற்காக அவர் ஒரு வாரமாவது லீவு எடுத்திருப்பார். விமானப்பயண நேரம் பத்து மணித்தியாலங்கள். இது தவிர பேசுவதற்காக எத்தனையோ மணித்தியாலங்கள் செலவு செய்து புத்தகத்தைப் படித்துக் குறிப்புகள் சேகரித்திருப்பார். அவரை ஐந்து நிமிடங்களில் உரையை முடிக்குமாறு வேண்டுவது எந்த வகையில் நியாயம்? இவர்கள் திட்டமிட்டபடி விழாவை நடத்தாமல் விட்டுவிட்டு, கனடாவில் இருந்து சிறப்பு விருந்தினராக அழைத்தவரை இப்படி அவமானப்படுத்தலாமா?


(o)அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். "செந்தமிழ் இலக்கண விளக்கம்" என்ற இந்த நூலை யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ்ப் பண்டிதர் ஒருவர் எழுதியிருந்தார். பண்டிதர் இல்லாமலேயே அவரின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா அது.

நூலாசிரியர் இல்லாததாலும் நூல் இலக்கணம் சம்மந்தமானது என்பதினாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்தவர்கள் மொத்தமே இருபது பேர்தான். விழாவிற்குத் தலைமை தாங்கியவர் தனது உரையில் கூறிவிட்டார். நான் இலக்கணத்தைப் பற்றிப் பேசுவதென்பது குருடன் யானையைப் பார்த்த கதையாகத் தான் இருக்குமென்று.

நூலைப்பற்றி பேசிய எழுபது வயது நிரம்பிய கல்விமான் ஒருவர் தனதுரையில் தான் படிக்கின்ற காலத்தில் இலக்கணப் பாடத்தை நிறுத்தி விட்டார்கள், இருந்தும் நான் கற்ற அரைகுறை இலக்கணத்தின் மூலம் இந்த நூலில் உள்ள சிறப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது - என்றார்.

இப்படியாக இலக்கணத்தின் இன்றைய நிலை பற்றி பலரும் கவலையுடன் உரையாற்றி முடிக்க, நூலை ஆய்வு செய்யவந்த கைலைநாதன் என்ற இலக்கியவாதி நூலில் உள்ள அகத்திறன், புறத்திறன் பற்றியே ஒரு மணித்தியாலமாகப் பேசினார். கூட்டத்தில் இருந்த இருபது பதினைந்தாகக் குறைந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த விழாத் தலைவர் உரையைச் சுருக்கமாக முடிக்குமாறு வேண்டினார். பேச்சாளரோ - அடுத்த பகுதியான வருணாச்சலம் பற்றிப் பேசிவிட்டு முடிக்கின்றேன் - என்றார். பொறுமை இழந்தவனாக நானும் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.


நன்றி: இனிய நந்தவனம் - ஆகஸ்ட் 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061