வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 20 - 09 - 2006அரிய சான்றுகளும் குறைப் பார்வைகளும்

தமிழினத் தொன்மையையும் தமிழின் தொன்மையையும் நிறுவக்கூடிய சரியான வலுவான தொல்லியல் சான்றுகள் அடுத்தடுத்து தமிழகத்தில் கிடைத்து வருகின்றன. ஆனால் இதை ஆய்வு செய்து உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டிய அறிஞர்களிடம் ஒரு சண்டித்தனமும் அக்கறை இன்மையும் தென்படுகின்றன. கிடைத்த தொல்லியல் சான்றுகளைப் பற்றிய சிறு குறிப்பும், அதன் காலம் பற்றிய கருத்தும் வெளியிடப்பட்டு விட்டாலே ஆய்வு முடிந்து விட்டதாகப் பொருள் கொள்ளக்கூடாது. கண்டு பிடிக்கப்பட்ட பொருள்களின் உள்ளே வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அண்மையில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளைத் தனித் தனியாகவும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியும் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழக ஆற்றங்கரைகளிலே சான்றுகள் கிடைத்துள்ளன.

1) காவிரிக் கரையிலே - மயிலாடுதுறை செம்பியன் கண்டியூரில் கிடைத்திருக்கும் சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளுடன் கைக்கோடரி (ஏப்ரல் 2006)
2) வைகை தென் கரையிலே - வத்தலக்குண்டிலிருந்து தெற்கே ஆண்டிப்பட்டி அருகே, தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை என்ற இடத்தில், ஈமச்சின்னத்தின் பகுதியாகக் கிடைத்துள்ள, சங்ககால பழந்தமிழ்ப் பொறிப்புகளுடன் மூன்று நடுகற்கள் (மார்ச் 2006)
3) தாமிரவருணிக் கரையிலே - திருநெல்வேலி ஆதிச்சநல்லூரில் 2004 இல் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தோண்டியெடுக்கப்பட்ட நெற்கதிர், நாரை, பெண், மான் பொறிப்பும் உட்புறம் எழுத்துப் பொறிப்பும் கொண்ட தாழிகள்.


கிடைத்துள்ள சான்றுகள் அரியன என்றாலும் அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வறிஞர்களின் விளக்கங்கள் முழுமையானவையாக இல்லை. சான்றுகளின் காலத்தை நிர்ணயிப்பதில்கூட, கவனமாக இருப்பதாகக் கருதிக் கொண்டு குறைத்துப் பிழைபட நிர்ணயிக்கிறார்கள்.

ஆய்வாளர்களின் ஆழ்மனதில் தமிழகம் என்பது இந்தியாவில் ஒரு பகுதி என்ற உளவியல் ஆழப் பதிந்து கிடப்பதால், கிடைக்கும் சான்றுககளைக்கூட இந்திய அளவுகோல் கொண்டே அளக்கிறார்கள்.

வரலாற்று ஆசிரியர்களும் இந்தியாவை மையமாக வைத்தே இதுவரை அவர்கள் சிந்தித்து வந்ததால், வடக்கேயிருந்து எதுவும் இங்கே வந்திருக்க முடியும் எனற உளவியலோடு அணுகுகிறார்கள். தவறான அணுகுமுறை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது.

தமிழக வரலாற்றை எழுதுவதில் ஐந்து தவறான போக்குகளை நாம் காண முடியும்.

1) தமிழகத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு கூறாகவே பார்ப்பது.
2) தமிழக வரலாற்றை எழுதும்போது ஐரோப்பிய வரலாற்றுக் கண்ணோட்டத்தில எழுதுவது.
3) ஓர் இந்தியப் பேரரசு ஆதரவுக் கண்ணோட்டத்தில் பார்ப்பது.
4) இந்தியாவில் பண்பாட்டு ஒற்றுமை இருப்பதாகக் கருதிக் கொண்டு எழுதுவது.
5) தமிழகம் என்பது ஓரினத்தின் தாயகமாகும் என்ற உண்மையைப் புறக்கணித்து அல்லது முனை மழுக்கி எழுதுவது.


தமிழகத்தின் வரலாறு எழுதப்படுவதில் இடறும் தடைக்கற்கள் இவை. இவற்றை மீறித் தமிழினத் தொன்மையையும், தமிழின் தொன்மையையும் நிறுவ உதவும் வலிமையான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று சான்றுகளும், தமிழின வரலாற்றின் வழியை மறிக்கும் தடைக்கற்களைத் தகர்க்கின்றன.

மூன்று தவறான கருத்தாக்கங்கள்

1) தமிழர்கள் வடக்கிலிருந்து அல்லது மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவர்கள்
2) தமிழர்களுக்குச் சொந்த எழுத்துமுறை கிடையாது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்த-சமணத் துறவிகளால் தமிழ் பிராமி எழுததுமுறை இங்கே அறிமுகம் செய்யப்பட்டது.
3) சிந்துவெளி அல்லது சரஸ்வதி ஆற்று நாகரிகமாகிய ஆரிய நாகரிகமே மூல நாகரிகம். வேத மொழியிலிருந்தே தமிழ் உருவானது.


கிடைத்திருக்கும் கல்வெட்டு மற்றும் தொல்லியல் சான்றுகள் இதுவரை நிலைநிறுத்தப்பட்டு வந்த பொய்மைகளை உடைத்தெறிய வல்லவை. தமிழகத்தின் ஆற்றுச் சமவெளியில் 3500 ஆண்டுகளுக்கும் முந்தைய ஒரு தொன்மையான பண்பாடு நிலவி வந்ததை மெய்ப்பிக்கின்றன. தமிழக ஆற்றுச் சமவெளிகள் தமிழ் நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கியிருக்கின்றன.

அண்மைக்கால கண்டுபிடிப்புகள் சில உண்மைகளை ஐயமற நிறுவியிருக்கின்றன. அவை

1) இந்தியாவின் பழைமையான நாகரிகமாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3250- 2700) தமிழர் நாகரிகமே.
2) சிந்துவெளி மக்கள் பேசிய மொழியும் தமிழர் பேசிய மொழியும் பயன்படுத்திய எழுத்து வகையும் ஒன்றே.
3) தமிழர்களிடம் எழுத்தறிவு கிமு.1500 க்கும் முன்னாலேயே எங்கும் பரவலாக இருந்தது.
4) வட இந்தியாவில் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முன்னரே, தமிழகத்தில் இரும்புக் காலம் உயர்நிலையில் விளங்கி வந்தது. அதனால் நாகரிகத்தின் பன்மை வளர்ச்சி நிலையில் இருந்தது. வட இந்தியாவில் இரும்பின் பயன்பாடு கி.மு.1200 அளவில் வந்தது. தமிழகத்தில் கிமு 1500 லேயே இரும்பு பயன்பட்டு வந்தது.


( முனைவர் த.செயராமன் அவர்களது கட்டுரையை முழுமையாகக் காண தமிழர் கண்ணோட்டம் செப் 2006 இதழ் பார்க்கவும் - வாங்கவும் தமிழர் கண்ணோட்டம் 2ஆம் தளம், 20/7 முத்துரங்கம் சாலை, தி.நகர், சென்னை 17. web: http://tamilarkannotam.4t.com - phone (044) 2433 7251 )
கல்வி உரிமை மசோதா 2005

பேரா.ச.விவேகானந்தன்

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அதற்கு அடிப்படையான முன் நிபந்தனை அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை அடைவதுதான். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறவேண்டுமானால் அது தன் மக்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியையும் ஆரோக்கியத்தையும் உத்திரவாதப்படுத்த வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பேரா. அமர்த்தியா சென் கூறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து அனைவருக்கும் கல்வி என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்துள்ளது.

சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே 1882 ஆம் ஆண்டு இந்தியக் கலவிக் கமிஷனுக்கு (ஹன்டர் கமிசன்) அளித்த கோரிக்கை மனுவில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, பிரிட்டிஷ் அரசு கல்விக்காகச் செலவழித்த நிதி பெரும்பகுதி மக்களை எவ்வாறு அறியாமையிலும் வறுமையிலும் உழலவிட்டு விட்டு பிராமணர்களுக்கும் இதர உயர் வகுப்பினர்களுக்கும் மட்டுமே பயன் பட்டது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

1911 ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ண கோகலே பிரிட்டிஷ் இந்தியா இம்பீரியல் சட்ட மன்றத்தில் ஆரம்பக்கல்வி மசோதாவைக் கொண்டு வந்தபோது அதனை ஆதரிப்பதற்குப் பதிலாக, சமஸ்தான மன்னர்களும், மகாராஜாக்களும், நிலப்பிரபுக்களும், மேட்டுக்குடியினரும் எதிர்த்தனர் என்பது வரலாறு.

மகாராஷ்டிராவிலுள்ள வார்தாவில் 1937 இல் மகாத்மா காந்தி தேசியக் கல்வி மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாட்டில் 9 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுகளின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். 7 ஆண்டுகளில் அடிப்படைக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் அதற்காக நிதியினை ஒதுக்கீடு செய்யவேண்டும மெனவும் மகாத்மா காந்தி மாநிலக் காங்கிரஸ் கல்வி அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார், ஆனால் அந்த அமைச்சர்கள் அனைவரும் நிதியில்லை என்ற காரணத்தைக் காட்டி, அடிப்படைக் கல்விக்கான நியாயத்தினை நிராகரித்தனர்.

சுதந்திர இந்தியாவில் கல்வி அடிப்படை உரிமை என்ற அந்தஸ்தைப் பெறுவது மறுக்கப்பட்டது. எனினும் அரசியல் நிர்ணயச் சட்டம் நான்காம் பகுதியான வழிகாட்டு நெறிமுறைகளில் ஷரத்து 45 சேர்க்கப்பட்டது. இதன்படி 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்குவது என்ற இலக்கு அரசியல் சட்டம் தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள பல ஷரத்துகளில் 45 க்கு மட்டும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

1968 ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் அறிக்கை அடிப்படையில் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கையிலும் அனைவருக்கும் கல்வி வலியுறுத்தப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை 1986, தேசியக் கல்விக் கொள்கை 1968 க்கு நேர் எதிராக வடிவமைக்கப்பட்டது. மேட்டுக் குடியினருக்கு ஆதரவாக நவோதயா வித்யாலயா பள்ளிகளை உருவாக்குவதற்கு அது இட்டுச் சென்றது. புதிய கல்விக் கொள்கை 1968 இல் பரிந்துரைக்கப்பட்ட பொதுப்பள்ளித் திட்டத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டது. உலகமயமாக்கலின் பின்னணியில் சுயநிதிப் பள்ளிகளைத் தொடங்குவதற்கும் இதன் மூலம் ஆரம்பக் கல்வியை வணிகமயமாக்குவதற்கும் இக்கொள்கை வித்திட்டது.

தற்போதைய கணிப்பின்படி 6-14 வயதுவரை உள்ள குழந்தைகளில் இன்னும் 10 கோடி பேர் பள்ளியில் சேர்க்கப்படாமலிருக்கின்றனர்.

ஜனவரி 1997 இல் ஆரம்பக் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு, அரசியல் சட்ட ஷரத்து 45 ஐ அதன் ஆரம்ப வடிவத்திலேயே அரசியல் சட்டத் திருத்தம் மூலம் அரசியல் சட்ட மூன்றாவது பகுதியான அடிப்படை உரிமைகள் பகுதிக்கு மாற்ற வேண்டும் என சைக்கியா குழு பரிந்துரை செய்தது.

ஜூலை 1997 இல் 83 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதாவை ஐக்கிய முன்னணி அரசு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியது. இம்மசோதாவில் கீழ்க்கண்ட குறைபாடுகள் இருந்தன.

1) அரசியல் சட்ட ஷரத்து 21 அ வின் படி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி அடிப்படை உரிமை என்று கூறப்பட்டதால் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. இது உன்னிக் கிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினையும், சைக்கியா குழுவின் பரிந்துரையையும் நீர்த்துப்போகச் செய்து விட்டது.

2) 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டிய கடமையிலிருந்து அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளை ஒதுக்கி வைத்தது.

3) இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அதனை அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியாதாரங்களை வழங்கத் தவறிவிட்டது...... (அடுத்த இதழில் தொடரும்)

நன்றி : புதிய ஆசிரியன் - செப் 2006
ஏழைகள் அனைவருக்கும் தொடக்கக்கல்வி தருக !

தொடக்கக் கல்வி ஏழைகளின் உரிமையாக இருக்க வேண்டுமேயன்றி வசதிபடைத்தோர் மட்டும் வாங்கும் வணிகப் பொருளாக இருத்தல் கூடாது. நம்நாட்டின் கல்வி அறிவு நிலை இரங்கத்தக்கதாக இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பது கட்டாயம் நடைமுறையாக இருக்க வேண்டும். ஒருவர்கூட தொடக்கக்கல்வி பெறாதவராக இருக்கக்கூடாது. இது ஒரு மிகவும் உறுதியான அடிப்படைக் கோட்பாடாகும். நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கென எந்தளவுக்குச் செலவு ஏற்படுவதாயினும் விலைமதிப்பற்ற கல்விதான் முதன்மையானதாக வரவேண்டும்.

தொழில் முக்கியமானது. தொழில் நுட்பவியல் மற்றும் ஆய்வு, அடிப்படையான பெரிய அளவிலான தேவைகள், விரைவான நீதி என்பவை உயர் முன்னுரிமையானவை. ஆனால் அடிப்படைக் கல்வி ஒருபோதும் இரண்டாம் நிலையில் இருக்கக்கூடாது. இது இந்தியக் குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டிய நாட்டின் கடமைப் பொறுப்பாகும்.

அடிமட்டத்தில் கடைநிலையில் உள்ளோருக்குப் பெருமளவில் தரமான கல்வி அளிப்பதற்கு எல்லாவகையான வருவாய் தரும் இயற்கை வளங்கள் யாவும் முதலில் இதற்கென ஒதுக்கப்படவேண்டும். அரசு நிருவாகம், சட்டமன்றம், பொதுநலம் சார்ந்த கடமைப் பொறுப்புடைய நீதித்துறை ஆகியவைகளைக் கொண்டுள்ள தேசத்தில் நாம் இதில் தோல்வியுற்றுள்ளோம். அறுபது ஆண்டைய சுதந்திர இந்தியாவில் இதுதான் நிலைமை என்றால் அம்பேத்கர் அவரது தந்தை இராணுவ சலுகை பெறத்தக்க உலகப் பேர்ப்படை வீரராக இல்லாதிருந்தாரென்றால், பள்ளிக் கல்வி படித்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்று கருத வேண்டியுள்ளது.

மேலும் கல்வி குறித்து அரசமைப்புச் சட்டத்தின் பாற்பட்ட சட்ட உரிமைகள் யாவும் பயனற்றதாகி விட்ட நிலைதான் இன்று உள்ளது ஏன் ?

சட்டப்படியல்லாத தனியார் நிறுவனங்களில் மழலையர் கீழவகுப்பு படிப்புக்குச் சேர ரூ20,000 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. அடாத மிகக் கொடூரமான செயலல்லவா? இந்த நிறுவனத்தைச் சுயநிதி நிறுவனம் எனச் சொல்லுவது பழிபாதகமான நெறி பிறழ்வானதாகாதா? இது எவ்வளவு அதிர்ச்சியானதும். வெட்கித் தலை குனிவுக்குரியதும் ஆகும்

மழலையர் கீழ்வகுப்பு மழலையர் மேல் வகுப்பு தொடக்கநிலைக் கல்வியை எவ்வித விதிவிலக்குமின்றி என்ன விலை கொடுத்தேனும் பணக்காரர் மட்டுமே வாங்கும் பொருளாக இல்லாதிருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி இல்லாதோரின் உரிமையானதாக இருக்க வேண்டும். இது மார்க்ஸிஸ்ட் நடத்தும் அரசுகளாலும் ஈர்ப்புடைய ஆட்சிகளாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று நான் ஆழ்ந்த கவலையுடன் வலுவாக விரும்புவது மட்டுமல்ல எதிர்பார்க்கிறேன்.

கட்டாயக் கட்டணம் வசூலிப்பதைத் துன்பத்திற்குரியதாகவும், தண்டனைக்குரியதாகவும் ஆக்க வேண்டும், முறையாகக் கல்வி நிறுவனங்களிலிருந்து உயர்கல்வி மூலம் மட்டும் பெறத்தக்க முழு மேம்பாடு இளைஞர்களின் உரிமை என்பதற்குத் தடை இருக்கக்கூடாது.

தன்நிதிக் கல்லூரிகள் தொடங்கப்படுவது சமத்துவக் குடியரசின் வேலைத் திட்டத்திற்கு முற்றிலும் முரணாக உயர்கல்வியை மறைமுகமாக வணிக மயப்படுத்துவது ஆகும். இந்த வகையில் அரசின் பெருமளவிலான விரயத்தையும், ஆடம்பரத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உயர் கல்விக்காக ஏங்குவோர் இருக்க அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்துவதற்கு வழி ஏதுமில்லாத அவலநிலை நமது நாட்டில் உள்ளது என்பதை உணருவது நமது கடமையாகும்.

நன்றி : வி.ஆர்.கிருஷ்ணய்யர் - இந்து நாளிதழ் 6-8-2006 தமிழில் பச்சைமலை

நன்றி : சிந்தனையாளன் - செப் 2006
யார் சிதம்பரனார் ?
திருநெல்வேலி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நீதி மன்றங்களின் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றியவர் உலகநாதர். அவரது துணைவியார் பரமாயி. இவர்களுக்கு மகனாக 5-9-1872 அன்று சிதம்பரம் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் தொடங்கியது கல்வி. திருச்சியில் சட்டம் பயின்று 1894 இல் வழக்கறிஞரானார். புகழ் பெற்ற வழக்கறிஞரானார்.

தொடக்கத்தில் அவர் மனம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது. அவர் நண்பர்களுடன் இணைந்து விவேகபாநு என்ற ஆன்மீக இதழை நடத்தினார். தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் பணிகளிலும் பங்கேற்றார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும் கவனம் செலுத்திய அவரைக் காலம் அரசியலை நோக்கித் திருப்பியது. அவருக்கத்தான் இந்தத் தண்டனை.

செக்கிழுத்த சிறை வாழ்க்கை - இந்தக் கொடுமையான தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அரசு நிந்தனைக்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் என்னும் ஓர் ஆயுள் தண்டனையை 6 ஆண்டுகள் நாடு கடத்தவும் சிவத்திற்கு உதவியதற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டுகளை நான்கு ஆண்டுகள் நாடு கடத்தலாகவும் குறைத்து இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும்படியும் உயர்நீதிமன்றாம் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது. இலண்டன் பிரிவீ கவுன்சில் முறையீட்டில் நாடு கடத்தல் என்பது கடுங்காவர் தண்டனையாக மாற்றம் பெற்றது.

இவருடைய சிறை வாழ்க்கை கோவை மற்றும் கண்ணனூர்ச் சிறையிலும் கழிந்தது. 1908 மார்ச் 12 சிறை சென்ற வ.உ.சி 1912 டிசம்பர் 24 இல் விடுதலை பெற்றார். சிறைச்சாலையில் இவரது அனுபவம் தனி வரலாறு.

அக்காலத்தில் சிறைகளில் அரசியல் கைதிகள் அதிகம் இல்லை. அதனால் அவர் தன்னந் தனியாக வாடினார். சிறை உணவு மிகவும் மோசம், அரிசிச் சோற்றைக் கண்ணால் காண்பது அரிது. கேழ்வரகுக் களியும், கூழும்தான் ஆறு மாதத்தில் அவர் உடல் எடை 27 பவுண்டு குறைந்து போனது.

அவருக்குக் கடுமையான வேலைகள் தரப்பட்டன. சுட்டெரிக்கும் வெயிலில் கல் உடைத்தார். செக்கிழுத்த்ார். சிறந்த வழக்கறிஞரும், தேசிய இயக்கத் தலைவருமான அவர் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டு ஒரு விலங்கினைப் போல் நடத்தப்பட்டார்.

விடுதலைக்குப்பின்... இவ்வாறு தேசத்திற்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து விடுதலையான அவரை வரவேற்க நாடே திரண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர் சுப்பிரமணிய சிவா மட்டுமே வந்திருந்தார். என்பது நன்றி மறந்த நாட்டுக்கு உதாரணம்.

இவ்வளவு தியாகங்களையும் செய்து வெளிவந்த அவரைச் சந்திக்கவும், பேசவும் கூட பயந்தனர். ஆங்கில ஆட்சியாளாரின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்ற அச்சம் விடுதலையாகி வெளியே வந்த இவருக்கு நாடே சிறை போலானது, தனிமையும் வறுமையுமே தேடி வந்தன.

அரசு நிந்தனைக் குற்றத்திற்காக அவர் தண்டனை பெற்றதால் அவரது வழக்கறிஞர் தொழிலுக்கான சன்னத்தை அரசு பறித்துக் கொண்டது. அதனால் அத்தொழிலையும் தொடர முடியவில்லை. அஞ்சா நெஞ்சத்துடன் ஓர் அரிமா போல தேசத்திற்காக சிறை சென்ற அவருக்குத் தாய் நாட்டார் யாரும் உதவ முன்வரவில்லை. ஓர் ஆங்கிலேயர் உதவ முன்வந்தார்.

இ.எச். வாலஸ் என்ற நீதிபதி அவரது நிலை கண்டு வருந்தினார். அவரது முயற்சியால் சிதம்பரனாரின் வக்கீல் சன்னத்து திரும்பவும் கிடைத்தது. காலத்தால் செய்த இந்நன்றியை மறக்காமல் தம் மகனுக்கு வாலீஸ்வரன் என்று பெயர் வைத்தார். அவ்வப்போது பொருளுதவி செய்து வந்த தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளையின் பெயரை மற்றொரு மகனுக்கும் இட்டு வழங்கினார்.

நன்றி : அறிவுக் கொடி - செப் 2006
மநுதர்மம்தான் இடஒதுக்கீடு கேட்கவைத்தது....
யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் பிறந்துவிட முடியாது. பிரம்மாவின் தலையிலிருந்து பிராமணன் பிறக்க, காலிலிருந்து மட்டுமே சூத்திரன் பிறக்க வேண்டும். தலையிலிருந்து பிறக்க முயன்றாலும் சூத்திரனால் முடியாது. - பிறப்பில் இடஒதுக்கீடு

பிராமணன் சர்மா என்றும் சத்திரியன் வர்மா என்றும் வைசியன் பூபதி என்றும் சூத்திரன் தாசன் (அடிமை) என்றும் பெயர் வைத்துக் கொள்ளவேண்டும். ஒருபோதும் சூத்திரன் சர்மா என்று பெயர் வைத்துக் கொள்ளக்கூடாது, முடியாது - பெயர் வைப்பதில் ஒதுக்கீடு

பூணூல் அணியும் உரிமை சூத்திரனுக்குக் கிடையாது (சமீப காலத்தில் பூணூல் என்ன மேலாடை உடுத்துவதே பெண்கள் மாராப்புச் சீலை அணிவதே கூடாது என்று பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொண்ட இடைநிலைச் சாதிகள் அதற்கடுத்த நிலைச் சாதிப் பெண்கள்மீது செலுத்திய ஆதிக்கத்தைப் பார்த்தோம். அதை எதிர்த்துத் தோள் சீலைப் போராட்டத்தையும் கண்டோம்) - அணிவதில் , உடுத்துவதில் ஒதுக்கீடு

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் சூத்திரன் வாழ்க, சுடுகாட்டுப் பக்கம் பஞ்சமன் வாழ்க. - வாழும் இடத்தில் ஒதுக்கீடு

அன்று வேதமே கல்வி. வேதம் ஓதும் உரிமையும் கேட்கும் உரிமையும் சூத்திரனுக்குக் கிடையாது. மீறி ஓதினால் நாக்கை அறு! கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று ! - கல்வியில் ஒதுக்கீடு

பிராமண, சத்திரிய, வைசிய வர்ணத்திற்கு உழைத்துக் கொட்டுவதே சூத்திரனின் வேலை. செத்தமாடு தூக்குதல், சுடுகாட்டுக் காவல் போன்றவை பஞ்சமனின் வேலை. அப்பன் வேலையை மகன் செய்க, வேதம் ஓதியவன் வேதம் ஓதுக, பறையடித்தவனின் மகன் பறையடிக்க. -வேலை வாய்பில் ஒதுக்கீடு

சூத்திரன் செல்வம் சேர்கக்கூடாது. சேர்த்தாலும் அது அவனுடையதாகாது. இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் பிராமணணுக்கே சொந்தம். அவனுக்காகவே படைக்கப்பட்டது. ஒருவேளை சூத்திரனிடம் சொத்து இருந்தால் அது உண்மையில் பிராமணனின் சொத்தே ஆகும் - செல்வச் சேமிப்பில் ஒதுக்கீடு

அவனவன் வர்ணத்தில் அவனவன் மணம் முடித்துக் கொள்ள வேண்டும். விரும்பினால் பிராமணன் தனக்குக் கீழுள்ள மூன்று பிரிவினரின் பெண்களையும், சத்திரியன் அவனுக்குக் கீழுள்ள இரண்டு பிரிவினரின் பெண்களையும், சத்திரியன் அவனுக்குக் கீழுள்ள சூத்திரப் பெண்களையும் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் ஒருபோதும் மேல்வர்ணப் பெண்களைத் தொட்டுவிடக் கூடாது. தொட்டுக் குழந்தை உண்டாகிவிட்டால் கலப்புச்சாதி, தீண்டத்தகாத சாதி என அக்குழந்தைக்கும் சேர்த்து முத்திரை குத்தப்பட்டு ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்டுவாள். - மணஉறவில் ஒதுக்கீடு

பிராமணன் சூத்திரனைக் கொலை செய்தால், பிராமணன் பாதிக்கப்பட்டவனின் உறவினர்க்கு இரண்டு மூன்று பசுமாடுகளைக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டு கங்கை, காவிரியில் மூழ்கி எழுந்தாலே போதும். அதுதான் தண்டனை. இது எதிர் மாறாக நடந்திருந்தால் சூத்திரனின் தலை துண்டிக்கப்படும். எந்த உறுப்புகளால் பிராமணனுக்குக் கேடு செய்தானோ அந்த உறுப்புகள் உடனடியாக வெட்டப்படும். - தண்டனையில் ஒதுக்கீடு

பிராமணர், சத்திரியர், வைசியர் மூவரும் தடி வைத்துக் கொள்ள உரிமை உண்டு. அதுவும் கால்முதல் தலைவரையிலான உயரமுள்ள தடி பிராமணனுக்கு. நெற்றி வரையுள்ளது சத்திரியனுக்கு, மூக்கு வரையுள்ளது வைசியனுக்கு. தடிவைத்துக் கொள்ள சூத்திரனுக்கு உரிமை கிடையாது. - ஆயுதம் வைத்திருப்பதில் ஒதுக்கீடு

இப்படிப் பக்கம் பக்கமாய்ச் சொல்லிக் கொண்டே போகலாம். எந்த ஒதுக்கீட்டால் கல்வி, வேலை, போன்றவற்றில் கீழ்நிலையிலேயே வைத்திருந்தார்களோ அதையே எதிர்மாறாக மாற்றி இடஒதுக்கீடு என்னும் சிறப்புரிமை மூலம் கொஞ்சமாவது கீழ்நிலை மக்கள் மேல்நோக்கி வரவேண்டுமெனப் போராடினர் நம் சமூகப் போராளிகள். மநு வீசிய ஆயுதத்தையே திருப்பிப்பிடித்து தமக்குப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள வழிகாட்டிய அம்பேத்கரின், பெரியாரின் பெயரன்கள் களத்துக்கு வந்து விட்டார்கள். மநுவின் வாரிசுகளோ பழைய மண்டைக் கனத்தோடு, தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூக்குரலிடுகிறார்கள்.

நன்றி : பயணம் புதிது - ஆகஸ்ட் 2006
சக்திவேல்,,,, உரைவீச்சு
அறிவோடுதான் இருந்தன
பள்ளிகள்
மனிதன் அதனைப்
பணம் பண்ணாத வரைக்கும்

அமைதியாய்த்தான்
இருந்தன கோயில்கள்
மனிதனுக்கு மதம்
பிடிக்காத வரைக்கும்,

இனிப்பாய்த்தான்
இருந்தது நதி
மனிதன் அதனை
விற்காத வரைக்கும்,

அழகாய்த்தான்
இருந்தது பூமி
மனிதன் இல்லாத
இடத்தில் மட்டும்,

கரன்சியில்
புதையுண்ட கல்வி
பகலில் வீதியில்
நடக்கும் பாலியல்
கண்ணீரோடு
தண்ணீருக்கு அலையும்
பெண்கள்,
பிளாட்பாரங்களை
நம்பிக் கிடக்கும்
ஏழைகள்
வேலையின்றி அலையும்
நாளைய இந்தியா.

எத்தனை கட்சி
எத்தனை ஆட்சி
எண்ணிலடங்கா
ஊழல்கள்..
முருகன் எங்கள் இனம்
அவனும் நாங்களும்
கோவணத்தோடு.

நன்றி : கல்ஓசை இதழ் செப் 2006
நீளும் கொடுமைகள்
- அருள் - கிள்ளான். -

காக்கையின் குஞ்சுகளை
கழுகுகள் கொத்திக் குதறுவது
விலங்கின் இயல்பு

மனிதனின் பிஞ்சுகளை
மாந்தனே கொல்வதை
என்னவென்று சொல்வது?

அடப்பாவிகளே !
கதறியழும் பத்தினித் தெய்வங்களின்
பேரோசை புத்தன்
காதுகளில் விழவில்லையா ?

எந்தக் குழந்தை
எப்படி இறந்ததென்பதை
யாரறிவார்...

சின்னதாய்ச் சிரித்து முடிப்பதற்குள்
சிதைந்த குழந்தைகள் எத்தனை யெத்தனையோ..

குண்டுகளின் வல்லோசையை
பால் வற்றிய வயிற்றின் இரைச்சலென்று
ஏமாறிய குழந்தைகள் எத்தனை யெத்தனையோ ?

பால் கொடுத்த
முலைக்காம்புகளைப் பற்றி இழுக்கும் தருவாயில்
இறுதி மூச்சு விட்ட குழந்தைகள்
எண்ணிக்கை யாரறிவார் ?

தெரு மண்ணில் ஆடிக் கொண்டிருக்கையில்
உடலில் குண்டு துளைத்து
வீழ்ந்த சிறுமணிகள் எத்தனை பேரோ ?

பள்ளிக்குச் சென்றால்
வாழ்வொன்று வந்துதிக்குமென
ஓடிச் சென்ற குழந்தைகள்
இனி என்று மீள்வரோ?

வாழ்வினைக் காணாமலேயே
வதைந்த இளசுகளை
இனி உங்கள் வரலாற்றினை
எப்படி எழுதுவோம்...
முதியவர்கள் வாழ்வதற்காக
வீழ்ந்த இளசுகள் என்றா
அல்லது...

வெறிபிடித்த நாய்களின்
கோப்பைகளில் குருதி நிரப்ப
பலியான பிள்ளைகள் என்றா?

எறும்பொன்று கடித்தால்
பிடிபோல் மதமேறி அடித்து வீசும்
உன் தாயிடம் என்ன சொல்வோம்.

குண்டு விழுந்து துளைத்து எரிந்த
உன் உடலத்தை என்ன செய்வோம்?

பீடு நடை போடுவாய் என
பொத்தி வளர்த்த செல்வமே
உன் உடலைப் பொத்தலிட்ட
பேய்களை யார் எரிப்பார் - அழிப்பார் ?

ஈழமென்றால் ஈரமில்லை
என்றெண்ணும் எரிதழல் அரசை
என்ன செய்வது?

ஐ.நா. மனிதர்கள் இனி
அமைதி உடன்படிக்கைகளை
யாரிடம் பேசுவர்...

ஏய் ! கொலைகாரக் கொடுமை அரசே
நீ சிதைக்காத பொருளொன்றை
பொய்க்காமல் சொல்லிவிடு பார்ப்போம்
.
நாடு சிதைத்தாய்
நாட்டிலுள்ள நல்ல மனிதர்களை சிதைத்தாய்

காடு அழித்தாய்
காட்டிலுள்ள புலிகள் அழித்தாய்..

பறக்கும் கப்பல் அழித்தாய்
மண்ணில் தவழும் மான் அழித்தாய்.

போதாதென்று
எங்கள் செஞ்சோலைக் கிளிகளை அழிக்க
உனக்கு இரக்கமற்ற இதயம்
எங்கிருந்து வந்தது.

ஏய் ! பேய் அரசே
எங்களது வரலாற்றுப் பெட்டகத்தைக்
குண்டுகளால் துளையிட
உனக்குச் சொல்லிக் கொடுத்த
புத்தன் யார் ?

நன்றி : செம்பருத்தி இதழ் செப் 2006

சிகிரெட் - புகை நமக்குப் பகை

நிக்கோட்டினின் தீய விளைவுகள்

1) நிக்கோட்டினால் மூளை, முகம், கால், கையின் இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சுருங்குகின்றன. இதனால் நாளடைவில் இரத்தம் குறைவு, கால்கடுப்பு, நடந்தால் கடுமையான தலைவலி, தோன்றுகிறது. நிக்கோட்டின் புகையிலுள்ள கார்பன் மோனாக்ஸைடு போன்ற பொருள்கள் சேர்ந்து டி.ஏ.ஓ. என்ற வியாதி தோன்ற வழிவகுக்கின்றன. இவ்வியாதியில் தலைகளில் இரத்தம் குறைந்து வலுவிழக்கின்றன. நோயாளி சிறிது தூரம் நடந்தால்கூட கடுமையான வலி வந்துவிடும்.

2) நிக்கோட்டினால் படிப்படியாக நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது. சிறிதளவு நிக்கோட்டினை எடுத்து ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதை பரிசோதனையின் மூலம் நிரூபிக்கலாம்.

3) சிகிரெட் புகைப்பவர்களுக்கு பசி இருக்காது. சிகிரெட் புகை ஜீரண நீர்ச் சுரப்பிகளைப் பாதிப்பதே காரணம்

4) சிகிரெட் புகைப்பவர்கள் பலபேர் மாரடைப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

5) சிகிரெட்டில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு வாயு இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களுடன் கலந்து அவ்வணுக்கள் பிராணவாயுவை ஏந்திச் செல்லும் சக்தியைக் குறைக்கிறது.

6) சிகிரெட் புகையிலுள்ள தாரையும், நிகோட்டினையும் எடுத்துவிட்டால் சிகிரெட்டில் சுவை இருக்காது. வெறும் காற்று மட்டுமே மிஞ்சும். சிகிரெட்டில் உள்ள தார் நுரையீரலுக்கும், இதயத்திற்கும் கேடு உண்டாக்கும், உடல் திடம் குறையும், மனோதிடம் குறையும்.

நன்றி : தன்னம்பிக்கை இதழ் - செப் 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061