வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 28 - 10 - 2006காளையின் கோபம்

காயடித்துத் தகுதியாக்கி
ஓயாமல் உழைப்பில் ஆழ்த்தும்
எஜமானனை எதிர்க்கத் துணிவில்லை
எருதுக்கு...
அவன் புல் போடுகிறான் தவிடு
புண்ணாக்கும் தருகிறான்
என்பதற்கு மட்டுமில்லை
ஆனால்
தினம் தினம்
அது தன் பாய்ச்சலைக் காட்டி
பயமூட்டுகிறது
அதிகாலை வாசல் தெளிக்க
சாணம் எடுக்க வரும்
பெண்களிடம் மட்டும்.

சீ.கோவிந்தராஜ் கவிதைகள்.
நன்றி : புது எழுத்து இதழ் எண் 13
புதிய மூலதனம்

மு.குருவம்மாள்

அழகல்ல மூலதனம் பெண்களுக்கு
அறிவாற்றல் என்றென்றும் அவரின் சொத்து
அசையாத மூலதனம் பெண்களுக்கு
அவரவர் மேல் நம்பிக்கை கொள்ளல்தானே.

சரியான மூலதன் பெண்களுக்கு
சலனத்தைப் புறந்தள்ளும் இரும்பு இதயம்
சரியான மூலதனம் பெண்களுக்கு
மரியாதை சுயமிரண்டும் அணியாய்ப் பேணல்

எழிலான மூலதனம் பெண்களுக்கு
எப்போதும் தளர்ந்திடாத உள்ளம் ஊக்கம்
மங்காத மூலதனம் பெண்களுக்கு
மயக்கமில்லா சிந்தனையை தனதாய்க் கொள்ளல்.

வளமான மூலதனம் பெண்களுக்கு
வாக்கு மனம் ஊனமின்றிக் காத்து நிற்றல்
நலமான மூலதனம் பெண்களுக்கு
நற்சொல்லை நாள்தோறும் நாக்கில் தேக்கல்.

உயர்வான மூலதனம் பெண்களுக்கு
ஒப்பில்லா நற்பண்பைக் கவசம் ஆக்கல்
நிகரில்லா மூலதனம் பெண்களுக்கு
நிலையாக மானுடத்தைப் பேணிக் காத்தல்.

நன்றி : பெண்ணியம் இதழ் - அக்டோ 2006
பூக்காரி

சி.பன்னீர்செல்வம்.

தெருநுழையும் போதெல்லாம்
திணறவைக்கும் பூவாசம்
பளபளக்கும் குழலிருந்தும்
பூச்சூடா முடிக்காரி
பூவிற்று முடிந்த பின்னும்
புலம் தொலைத்த விழிக்காரி.

பூவாங்கிச் சூடுகையில்
குறுகுறுக்கும் என் மனசு.
பூவிற்கும் உன் கூந்தல்
பூச்சூடா சோகமென்ன
என்றொருநாள் அவளிடத்தில்
என்னுணர்வை வெளிப்படுத்த...

வர்க்கங்கள், வர்ணங்கள்
வேறுபட்ட சமூகத்தில்
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுவதுண்டா ?
காதலென்று வந்தவனோ
சாதிக்குள் வீழ்ந்த பின்னர்
கைப்பிடித்து வந்தவனோ
காணாமல் போன பின்னர்

அவலமிகு வாழ்க்கையென்னை
அகதிபோல் ஆக்கியபின்
பிள்ளை வயிறு வளர்ப்பதற்கே
பூக்காரி ஆனவள்நான்.

பூச்சூடல் மட்டும் என்
பெண்மையதன் பொருளல்ல
குழந்தைகளின் உயிர்ச்சிரிப்பே
கோடிமலர் வாசம் என்றாள்.

நன்றி : மனித உரிமைக் கங்காணி பாாவை 43
புதிய சொற்பொருளகராதி

சிக்குன்குனியா, டெங்கு - தமிழ்நாட்டுத் தேர்தல் சித்தாந்தம்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி - திராவிடக் கூட்டணிகளின் தேர்தல்

நாட்டார்மங்கலம், கொட்டாச்சியேந்தல் - நாணம் - இந்திய ஜனநாயகத்தின் கேவலம்

(Scheduled Caste) செட்டியூல்டு காஸ்ட் - தமிழாக்கம் செய்யத் தெரியாத ஆங்கிலச் சொல்.

உள்ளாட்சித் தேர்தல் பதவி ஏலங்கள் - மக்களாட்சியை பண ஆட்சியாகச் செய்யும் காங்கிரஸ், திராவிடக் கட்சிகளின் தீவிரக் கொள்கைப் பற்று.

தமிழக அரசியல் தலைவர்களின் தோற்றம் - தமிழர்களில் தலைவராகும் யோக்கிதை யாருக்கும் இல்லை என்னும் ஈ.வெ.ரா. பெரியாரின் கூற்றை நடைமுறைப்படுத்தும் தமிழர்கள்.

நவீன நால்வருண முறை (மனுநீதியைப் பின்பற்றி) 1.தாழ்த்தப்பட்ட சாதிகள் 2.மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் 3.பிற்படுத்தப்பட்ட சாதிகள் 4. உயர் சாதிகள்

ஆயிரம் ஊர்களில் இரட்டைக் குவளை முறை - திராவிடக் கட்சிகளின் சட்டத்தை அமுல்படுத்தும் இலட்சணம்.

தலித், தாழ்த்தப்பட்டவர், அரிசன், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டவர் - தமிழ்க் குடிகளின் ஏதிலி நிலைமை கண்டவனெல்லாம் பெயர் வைக்கும் அடிமை நிலைமை.

திராவிடன் - தமிழகத்தில் மட்டும் பேசப்படும் சொல். எந்தச் சாதியும் ஏற்றுத் தன்னை அழைத்துக் கொள்ளாத சொல். தமிழர்களை ஏமாற்றப் பிற மொழிக்காரர்கள் பயன்படுத்தும் சொல். தமிழர் அடையாளங்களை அழிக்கும் சொல்.

சாதிகளுக்குப் பெயர் வைக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை - வீழ்த்தப்பட்ட தமிழ்க்குடிகளுக்குக் கீழ்மையைக் காட்டும் அன் விகுதியும், இழிந்த பெயர்களுமே இருக்க வேண்டும். அவர்களின் பெருமை மிக்க முந்தைய பெயர்கள் கூடாது.

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், திருப்பதி, கர்நாடகாவில் கொள்ளேகால், பெங்களூர், தங்கவயல், கேரளாவில் பெரியாறு, சிறுவாணி, தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, மூணாறு - தமிழர்களின் இழிச்சவாய்த் தனத்தால் திராவிடங்களின் திருட்டுத்தனத்தால் தமிழன் இழந்த பகுதிகள். இன்று தண்ணீருக்குத் தவிக்கும் நிலைக்கு காரணம்.

பர்ப்பனர் எதிர்ப்பு - பார்ப்பனர்களின் மேலாண்மை அதிகாரம், சங்கராச்சாரியார்களின் சக்திகள், தங்களுக்கு வரவேண்டும் எனச் செயல்படும் திராவிடக் கட்சிகளின் நடைமுறை.

தமிழினத் தலைவர்களுக்கான தகுதிகள் - மூத்த தமிழ்க் குடிகளை ஒதுக்குதல், ஈழத் தமிழர் தலைவர்களைச் சந்திக் மறுத்தல், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களைக் கைகழுவிவிடல், தமிழ் மூவேந்தர் குடியினர் பற்றிய ஆய்வுகளை ஒதுக்குதல், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசுதல், ஆந்திரா, கர்நாடகா, கேரள மக்கள் ஏற்றுக் கொள்ளாத திராவிடத்தைத் தமிழ்நாட்டில் மட்டும் பேசித் தமிழர்களை அடையாளமற்றவர்கள் ஆக்குதல்.

நன்றி : மள்ளர் மலர் இதழ் - அக்டோ 2006
செந்தமிழும் நாப்பழக்கம்

தொடர் எண் 7 (ஊர்திகள்)
புலவர் இலமா.தமிழ்நாவன்.


ஆட்டோ - தானி
ஷேர் ஆட்டோ - பங்குத் தானி
சைக்கிள் - மிதிவண்டி
சைக்கிள் ரிக்ஷா - மிதியிழுவை
ஸ்கூட்டர் - துள்ளுந்து
மொபெட் - குதியுந்து
மோட்டார் சைக்கிள் - விசையுந்து
மோட்டார் பைக் - விசையுந்து
பஸ் - பேருந்து
டெக் பஸ் - அடுக்குந்து
மினி பஸ் - சிற்றுந்து
ஏர் பஸ் - வான் பேருந்து
பிளசர் கார் - மகிழுந்து
டாக்ஸி - வாடகையுந்து
கால் டாக்ஸி - அழைப்புந்து
ஜீப் - மலையுந்து, கரட்டுந்து
லாரி - சரக்குந்து
மினி லாரி - சிறு சரக்குந்து
வேன் - மூடுந்து
மினி வேன் - சிறு மூடுந்து
ட்ரெயின் - தொடர்வண்டி
எலக்டிரிக் டிரெயின் - மின் தொடர்வண்டி
டிராக்டர் - உழுவுந்து
பிளைட் , ஏரோப்பிளைன் - வானவூர்தி
ஜெட்பிளேன் - பீறிட்டூர்தி
கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
பாராசூட் - வான்கவிகை
ராக்கெட் - ஏவுகனை
ஷிப் - கப்பல்
போட் - படகு

நன்றி : புதுகைத் தென்றல் - அக்டோ 2006
அந்நிய நாட்டில் அகதியாய்....

மடல்விடும் தூது (வேலனையூர் பொன்னண்ணா - டென்மார்க்)

டென்மார்க்கில் 1984 ஆம் ஆண்டுக்குப் பின்னால்தான் தமிழர்கள் வந்து குடியேறினார்கள். அதற்கு முன்னதாக டென்மார்க்கே உலகப் படத்தில் தேடினாலும் பிடிக்க முடியாத ஒரு நாடாகவே இருந்தது. பனிமழை கூடுதலாகப் பொழியும் நாடுகள் கன்டினேவியன் நாடுகள். அதில் ஒன்றே டென்மார்க்.

இங்கு தமிழர்கள் அகதியாக வந்ததின்பின்தான் டென்டமார்க் நாடு பலர் அறிந்த நாடாக உலகில் வலம் வரத் தொடங்கியது. இங்கு வாழும் தமிழர்கள் தம் தாய் மொழியாம் தமிழை வளர்ப்பதிலும், தம் சந்ததி தமிழராகவே தாய்நாடு திரும்பும்போது போக வேண்டும் என்ற உணர்வு நிலையிலும், தம் பிள்ளைகளில் கவனம் செலுத்துகின்றனர். அந்தச் சந்ததியும், நல்ல தமிழ் உணர்வோடு இனமேம்பாட்டுக்கு உறுதுணையாகத் தமிழை விரும்பிப் படிப்பதோடு, வாழும் நாட்டு மொழியையும் தரத்தோடு கற்று பல்கலைக்கழகம் வரை சென்று தரமான திறமையான பாடங்களில் படித்துப் பட்டம் பெற்று வெளியே வருகின்றார்கள்.

வந்தவர்கள் எப்போது எம்தாய்மண் போவோம், எமது தாயக உறவுகளுக்கு எம்மால் எந்த அளவில் உதவ முடியும் என்ற உணர்விலேயே வாழ்கின்றனர்.

டென்மார்க்கில் இலக்கியம் பெரிதாக வளர்ச்சி கண்டதாகக் கூறமுடியாவிட்டாலும், பல திறமைசாலிகள் இருக்கின்றார்கள். ஒரு தமிழ் எழுத்தாளர் பேரவை அமைப்பு ரீதியாக செயல்படுகின்றது. சிலர் தங்களின் சுய முயற்சியால் பல நூல்களை வெளியீடு செய்துள்ளார்கள். எழுத்துலகம் இன்னும் முன்னேற முயற்சித்த வண்ணம் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பல சஞ்சிகைகள் வெளிவந்தன. ஆனால் அவை இப்போது நின்று விட்டன. காரணம் மக்கள் ஆதரவில்லா செயலும், முயற்சித்தவர்கள் கையில் இருந்து பணத்தைக் கரையவிட்டதாகவும் முடிந்தது. இதனால் இலக்கியம் தனிமனித பயணமாகவே பயணிக்கிறது,

தற்போது சில இணையதளங்கள் செயல்பாடுகின்றன. பாராட்டும் விதத்தில் சினிமாப்படம் என்று எடுக்கப்பட்டு நூறுநாள் ஓடி உள்ளது.

நன்றி : இனிய நந்தவனம் - அக்டோபர் 2006
ஜீவாவை இருட்டடிப்புச் செய்த தீயவர்கள்.

கரூர் வழக்கறிஞர். பூ.அர.குப்புசாமி.

ஜீவா பற்றி, அவருக்கு நேர்ந்த இருட்டடிப்புப் பற்றி, அவருடைய வாழ்க்கையின் மூன்று கட்டங்கள் பற்றி இரத்தினச் சுருக்கமாக எழுகதிரில் ஒரு பக்கத்தில் எழுதியிருந்தது பாராட்டுக்குரியது.

1952 முதல் ஜீவா இறக்கும் வரை அவருடன் எனக்கிருந்த நெருக்கம், குறிப்பாக 1960,61,62,63 ல் ஏன் அவர் இறக்கும்வரை சென்னையில் சட்டம் படித்துக் கொண்டிருக்கும் போது அநேகமாக நாளும் அவரைச் சந்திப்பேன். சில நேரம் சென்னையில் சந்திக்க இயலாமல் போனால், தாம்பரம் சென்று பார்ப்பேன்.

அந்தக் காலக்கட்டத்தில் ஜீவாவை பார்ப்பனர்களும் மலையாளிகளும் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத் தலைமை என்னவெல்லாம் செய்தது என்பதை நேரில் அனுபவித்தவன் நான். ஓரங்கட்டினார்கள், ஒதுக்கினார்கள், சிறுமைப்படுத்தனார்கள், சீரழித்தார்கள் - இத்தனைக்கும் காரணம் அவர் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதி என்பதுதான்.

கட்சிக்குள் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், வெளியில் அவர் செல்வாக்குக் கொஞ்சமும் குறையவில்லை.

அந்த 11 ஆண்டுகள் ஜீவாவுக்கு நடந்ததை "தோழர் ஜீவா - மறைக்கப்பட்ட உண்மைகள்" என்ற நூலில் எழுதியுள்ளேன்.

அவர் இறந்த அன்று தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டம் வீதி கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர் ஜீவாவின் இறுதி ஊர்வலத்தல் நடந்தே வந்தார். இடுகாட்டில் டி.கே.சண்முகம் அவர்கள் ஜீவாவின் புகழ்பெற்ற பாடலான "காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை" என்ற பாடலைப் பாடியபோது கூட்டமே அழுதது.

அப்போது பி.இராமமூர்த்தியின் பக்தர் ஒருவர் "அடேயப்பா என்ன கூட்டம்" என்றார். எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. "இனி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக இறந்தால் கூட இவ்வளவு கூட்டம் கூடாது தெரிந்து கொள்ளுங்கள்" என்று கத்தினேன்.

இறந்த பின்னாலும் விட்டார்களா ? ஜீவாவுக்குச் சிலைவைக்கும் முயற்சியை யெல்லாம் திட்டமிட்டு முறியடித்தார்கள். கடைசியில் எம்.ஜி.ஆர் வலியவந்து தந்த ரூ10 ஆயிரத்தைக் கொண்டு, ஒரு மார்பளவுச் சிலை வடசென்னையில் திறக்கப்பட்டது. கலை இலக்கியப் பெருமன்றச் சென்னை மாவட்டக் கிளை அதைச் செய்தது.

காமராசர் அவர்கள் மாநிலக்குழுச் செயலாளரை அழைத்து "ஜீவாவுக்கு மணிமண்டபம் எழுப்பலாம் அதற்கு நான் உதவுகிறேன்" என்றார். அது செயல்படுத்தப்பட முடியாமல் பண்ணிவிட்டார்கள். இன்னும் இப்படி எத்தனையோ !

எல்லாவற்றுக்கும் அடிப்படை ஜீவா ஒரு உண்மையான தமிழ்த் தேசியவாதியாக இருந்தார் என்பதுதான்.

நன்றி : எழுகதிர் இதழ் - அக்டோ 2006
... தமிழியக்கம் தொடரில் எ.ந.செ...

1937 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை அன்றைய முதல்வர் இராசாசி அவர்கள் கொண்டு வந்தார்கள். இந்த அரசாணைக்கு வலுவான எதிர்ப்பு ஏற்பட்டது. அதனையொட்டி 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாடுதான் இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற முதல் மாநாடாகும். அந்த மாநாட்டிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் முதற்கொண்டு நீதிக் கட்சியின் தலைவர்கள் தமிழறிஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். 1938 ஆம் ஆண்டு தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்றது. தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்றனர். அரசு அடக்குமுறையை ஏவிவிட்டது. என்றாலும் போராட்டம் ஓயவில்லை. இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை. நீதிமன்றம் இரண்டாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. பெரியார் சிறை சென்றார். அண்ணா அவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளினர். பெரியார் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் 9-12-1938 நவசக்தியில் திரு.வி.க அவர்கள் எழுதிய உருக்கமான தலையங்கம், தமிழக அரசியல் வரலாற்றில் மிகச் சிறந்த ஒன்றாகும். பெரியாருக்கும், திரு.வி.க அவர்களுக்கும் இடையே இருந்த ஆழமான நட்புணர்வினை காட்டும் நிகழ்ச்சி இது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தாளமுத்து, நடராசன் என்ற இரண்டு வீர இளைஞர்களும் 1939 ஆம் ஆண்டு சனவரி மற்றும் மார்ச் திங்களில் சிறைச் சாலையிலேயே செத்து மடிந்தார்கள். மொழிப்போரில் இவ்விருவர்தான் முதல் களப்பலி. சிறை சென்ற மொழிப் போர் வீரர்க்ள பல இன்னல்களுக்கு ஆளாயினர். நாடெங்கும் கொந்தளிப்பான சூழல் பரவியது. நெருக்கடியை உணர்ந்த காங்கிரசு அரசு தந்தை பெரியார் அவர்களை 167 ஆவது நாட்களிலேயே விடுதலை செய்தது. அரசியலில் ஏற்பட்ட வேறு பல காரணங்களால் 1939 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் இராசாசி அமைச்சரவை பதவியை விட்டு இறங்கியது. அதன்பின் பொறுப்பேற்ற ஆங்கிலேய அரசு, தந்தை பெரியார் விடுத்த கடுமையான எச்சரிக்கையின் விளைவாக 21-2-1940 அன்று இராசாசி கொண்டுவந்த கட்டாய இந்தி மொழிப் பாட அரசாணையை ரத்து செய்தது. அன்றைய சூழலில் கட்டாய இந்தி ஒழிந்தது என்றே கூறலாம். அடுத்தடுத்த காலக் கட்டங்களில் பல்வேறு முனைப்புகளில் வடிவங்களில் இந்தி திணிக்கப்பட்டது என்பது வேறு செய்தி. இத்தகைய சூழலில்தான் 1945 ஆம் ஆண்டு பாவேந்தர் தமிழியக்கத்தை எழுதினார்.

நன்றி : அறிவுக்கொடி இதழ் - அக்டோ 2006

( இந்தி மொழியை வெறுக்கிறோம் என்பதை நிறுவுவதிலும் தடுப்பதிலுமே அனைத்து செயற்பாடுகளும் திசை திரும்பியதால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நினைவே அனைவரிடமும் நீர்த்துப் போனது. திராவிடம் என்று பேசி தமிழர்கள் ஏமாந்தார்கள். தமிழியக்கம் கண்டவர்களுக்கும் உரிய உயர்வு கிடைக்கவில்லை. ஆங்கிலம் முன்வாசல் வழி உள்ளே நுழைந்து தமிழர்களை ஆட்கொண்டது. இன்றைய சூழலில் தமிழர்களை மீட்டெடுக்கத் தமிழ் மொழிதான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். )

நன்றி : தமிழ்ப்பாவை இதழ் - அக்டோ 2006
மாணவர்களையும் ஆட்கொள்ளும் சாதி

தேனிமாவட்டம் எண்டப்புலி புதுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 17 அருந்ததியர் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருந்ததியர்கள் தங்கள் பகுதிக்குள் வந்தால் தாக்க வேண்டும் என்கிற வெறியோடு கள்ளர்கள் இருந்ததால், அருந்ததியர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். மாவட்டக் கல்வி அதிகாரி தலையிட்டு, பெரியகுளத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கண்ட 17 அருந்ததியர் மாணவர்களையும் சேர்த்தார். அந்த மாணவர்களைச் சந்தித்தபோது, அரசுக் கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் தாங்கள் சந்தித்து வந்த வன் கொடுமைகளைப் பட்டியலிட்டனர்.

சத்துணவில் சாப்பாடு வாங்கிக் கொண்டு வரும் போது சோற்றில், கள்ளர் மாணவர்கள் எச்சில் துப்புவார்கள். செருப்பணிந்து சென்றால் செருப்பைக் கரும்புத் தோட்டத்தில் வீசி விடுவார்கள். வெள்ளை சட்டை அணிந்து சென்றால் சட்டையில் பேனா மையை அடித்து விடுவார்கள். இரண்டாவது படிக்கும் கள்ளர் சமூகச் சிறுவர்களைக் கூட 8 ஆவது படிக்கும் அருந்ததியர் மாணவர்கள் அப்பா என்றுதான் அழைக்க வேண்டும். 8 ஆவது வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில் இருக்கின்ற அம்பேத்கர் அட்டைப் படத்தில் அம்பேத்கர் முகத்தை அடித்துவிட்டு, தேவர் வாழ்க என்று எழுதிவைப்பார்கள். சக்கிலியன்னா பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும் அடிப்போம் என்பார்கள். அடிப்பார்கள். இது குறித்து ஆசிரியர்களிடம் முறையிட்டால் - ஏண்டா வெளிக்காயம் படும்படி அடிக்கிறீங்க. உள்காயம் படும்படி அடிங்கடா என்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டும் போது ஏண்டா சக்கிலயப் பய மாதிரி இருக்கீங்க என்பார்கள்.

பள்ளிகளிலேயே இன்றும் தீண்டாமை தொடர்கிறது. என்பதற்கு எண்டப்புலி ஒரு சாட்சி. தீண்டாமை ஒழிப்புக்கான நடவடிக்கையில் இறங்க வேண்டிய மாவட்டக் கல்வி அலுவலர், அருந்ததியர் மாணவர்கள் படிக்கிற பள்ளியைத்தான் மாற்ற முடிந்தது. கள்ளர்களின் சாதிவெறியை எதுவும் செய்ய முடியவில்லை. இன்றைய சூழலில் அருந்ததியர்கள் வேலையை இழந்து அன்றாடம் பிழைப்பு நடத்தவே சிரமப்படுகிறார்கள். பள்ளி மாறிய மாணவர்களுக்கு சீருடை கூட எடுததுக்தர முடியாத நிலை. அருந்ததியர் ஒங்கிணைப்புக் குழு இம்மாணவர்களுக்குச் சீருடை கொடுத்து உதவியது.

நன்றி : தலித் முரசு இதழ் - அக்டோ 2006
1500 ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளை மூட

1500 ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளை மூட கருநாடக அரசு உத்தரவு.

கன்னட மொழி வழிக் கல்வியை நிறைவேற்றாத ஆங்கிலம் மட்டுமே கற்றுத் தந்து வரும் 1500 பள்ளிகளை மூட கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கன்னட மொழிக் கல்வியை அமல்படுத்த கால அவகாசம் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டதால், இந்தப் பள்ளிகள் கன்னட மொழிக் கல்வியை நிறைவேற்ற கருநாடக அரசு ஓராண்டு கெடு விதித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டில் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் கன்னட மொழி வழிக் கல்வியே பின்பற்றப்பட வேண்டும் என்று கருநாடக மாநிலத் தொடக்கக் கல்வி அமைச்சர் பசவராஜ் கூறியுள்ளார்.

நன்றி : யாதும் ஊரே இதழ் - அக்டோ 2006

(அது எப்படி கருநாடக அரசால் மட்டும் இப்படித் துணிச்சலாக ஆணையிட முடிகிறது. காவிரி ஆனாலும் சரி கல்வியானாலும் சரி - நாம் பேச மட்டுமே செய்கிறோம். அவர்கள் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். என்ன காரணம்? அங்கே அரசுக் கட்டிலில் ஏறுபவர்கள் சரியோ தவறோ விடாப்பிடியாகச் செய்து காட்டுகிறார்கள். இலவசங்களைக் காட்டி ஏமாற்றுவதில்லை. இங்கே அரசுக் கட்டிலில் ஏறாதவரை வாய்கிழியப் பேசுகிறார்கள். அரசுக் கட்டிலில் ஏறிய உடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளச் செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள். கலைத்துவிடுவார்களோ என்கிற பயம். கலைத்தாலும் கவலைப்படாமல் மீண்டும் ஓட்டுப் போடும் மக்கள். கலைத்தால் நாம் வரலாமே என்று காத்துக்கிடக்கும் எதிர்கட்சி. பல்வேறு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் மக்கள். சரியான தலைமை வராதவரை இந்த இழுபறிதான்)
புதிய ஆசிரியன் இதழ் வினா விடை பகுதியில்.....

சி.சரண்யா அருப்புக்கோட்டை - கோகோ கோலா - பெப்சி பானங்களில் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அந்தத நிறுவனங்கள் தவறு செய்ய மாட்டார்கள் - நமது நாட்டில் கிடைக்கும் தண்ணீரிலேயே பூச்சிக் கொல்லிகள் இருக்கின்றன என்று சிலர் கூறுகிறார்களே எது சரி ?

ஆசிரியர் விடை : அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயணன் இந்த வருடம் மட்டுமல்ல, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவும் கோக்-பெப்சி குளிர்பானங்களில் இருக்க வேண்டிய அளவினைப்போல் பல மடங்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக செய்தி வெளியிட்டார். அப்போது இருந்த பாஜக அரசு பூச்சிக் கொல்லிகளின் அளவு கட்டுக்குள்தான் இருப்பதாக நற்சான்றிதழ் வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டது. தற்போதைய காங்கிரஸ் அரசும் இந்த விடயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

நம்நாட்டில் கிடைக்கும் தண்ணீரில் பூச்சிக் கொல்லிகள் இருப்பது உண்மை. ஆனால் அதே தண்ணீரை வேறு சில நச்சுப் பொருள்களையும் சேர்த்துக் குளிர்பானம் தயாரித்துக் கொள்ளையடிக்கும் கம்பெனிகள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? பூச்சிக் கொல்லி கலந்த நிலத்தடி நீர் ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமைதானே?

கோக் - பெப்சி கம்பெனிகள் இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 7500 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றன. விளம்பர பலம் உள்ள அவைகளால் அவர்கள் தயாரிக்கும் பானங்களைக் குடித்தால் நம் வயிற்றிலுள்ள பூச்சிகள் எல்லாம் அழிந்துவிடும் என்று கூட நம்மை நம்பவைக்க முடியும். தங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை உள்ள யாரும் விலை கொடுத்து வம்பை வாங்க மாட்டார்கள். மேலும் விவரங்கள் அறிய, புதிய ஆசிரியன் சூன் இதழில் வெளிவந்த கோக் - பெப்சி தொடர்பான கட்டுரையைப் படியுங்கள் .
மகா சக்தியும் - மக்கள் சக்தியும்

செந்தில் ஆறுமுகம்

தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் இலவசங்கள் அடை மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறது.

இலவசங்களைப் பட்டியலிடவே ஒரு புத்தகம் போட வேண்டும் போல இருக்கிறது. அடுத்து வரும் அரசாங்கங்கள் இலவசமாய்க் கொடுப்பதற்கு எதுவுமில்லையே என்ற கவலையில் - இலவசமாய் எதைக் கொடுக்கலாம் - என்ற போட்டி நடத்திப் - புதிய இலவசத் திட்டங்களைக் கண்டுபிடிக்கக் கூடும். யார் கண்டது.?

அரசின் வரிப்பணம் இப்படி அனாவசியமாகச் செலவிடப்படுகிறதே என்று உங்களைப்போல் எனக்கும் ஆதங்கம், ஆத்திரம் வந்தது.

எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இலவசங்கள், சலுகைகள், மானியங்களை எப்படி ஒழிப்பது ?

இலவசங்களைக் கொடுக்காதே, மக்களை மயக்காதே, தமிழா உன் தன்மானத்திற்கு இது அவமானம். என்று குரல் எழுப்பிக் கொடி பிடிக்கலாமா - என்றால் - கேட்போர் யாருமில்லாமல் எத்தனை நாள் கத்துவது ?

இலவசங்களைக் கொடுக்காதே - என்று அரசிடம் மனு கொடுக்கலாமா - என்றால் தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்பமுடியுமா.

நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கலாமா என்றால் அரசின் கொள்கை (கொள்ளை என்று கூடப் படிக்கலாம்) முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.

தீவிரத் தன்மையுடையவர்கள் ஆக்ரோஷத்தோடு சொல்வார்கள். இலவசங்களைத் தருவோரைச் சுட்டு விடலாம் என்று. இலையைக் கிளையை ஒடிப்பதன் மூலம் மரத்தை வேரோடு சாய்த்து விடலாம் என்பது சாத்தியமா. ?

அப்படியானால் நம்மால் எதுவும் செய்ய முடியாதா? முடியும் நம்மால் முடியும் - எப்படி ?

.................

நன்றி : நம்பு தம்பி நம்மால் முடியும் இதழ் அக்டோ 2006

ஈழ மண்ணில்....

இலங்கை முழுக்கத் தமிழ் மக்கள் பூர்வ குடிகளாக வாழ்ந்தபோது, வங்காளி விஐயன் என்ற தன்னின அரசன் தலைமையில் இலங்கைக்குப் பிைழ்க்கச் சென்று அங்கே தமிழனின் முதுகில் குத்தி கொஞ்ச கொஞ்சமாக உருவானதுதான் சிங்களயினம். இது வங்காளிக்கும் தெரியும். எனவே வங்காளிகள் சிங்கள இனத்தாரைத் தம் இனத்தவராகவே பார்க்கின்றனர். வங்காள - சிங்கள மொழிக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

இலங்கையின் சிங்களவன் ஒன்றாக வாழவேண்டும், தமிழன் அழிய வேண்டும் என்று நிறைய வங்காளிகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். ஒருவிதத்தில் பார்த்தால் மலையாளி தமிழனுக்குத்தானே உதவவேண்டும். ஆனால் அது இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை மலையாளன், கன்னடன், தெலுங்கன் அனைவருமே தத்தம் மாநிலம் மட்டுமே செழிக்க வேண்டும், அதே நேரத்தில் சுரண்டப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து தமிழனை ஏய்த்து சுரண்டி தன் மாநிலத்தில் போய்க் கொட்ட வேண்டும் என்பது அவர்களின் ஆசை. தெலுங்கன், மலையாளி, கன்னடன் ஆகியோரிடம் மொழியின உணர்வு இருப்பதுபோல், தமிழனுக்குத் தமிழின உணர்வு வரக்கூடாது என்று இவர்களின் முக்கிய நோக்கம். அதற்காகவே தமிழர்களுகுகெதிராகக் களவுப் பணியில் கமுக்கமாகச் செய்து வருகின்றனர்.

தமிழனுக்குத் தமிழின உணர்வு வந்துவிட்டால் இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டைத் தாங்கள் புழங்கும் புழக்கடையாக, சுரண்டி அள்ளும் சுரங்கமாகப் பயன்படுத்த முடியாது அல்லவா?

இந்த நிலையில் இந்தியத் தமிழனுக்குத தமிழின உணர்வு வருவதற்கு உள்ள மிகப்பெரிய வாய்ப்பு ஈழம் அமைவதுதான். ஈழம் அமைந்தால், தமிழ்நாட்டில் தமிழனுக்குத் தமிழின உணர்வு வந்துவிடும்.

அப்புறம் உலகத் தமிழினம் ஒன்றுபடும், வலுப்பெறும்.

ஐய்யகோ ! அது நடந்துவிட்டால் அப்புறம் எப்படி தமிழ்நாட்டை - தமிழர்களை இவர்களால் ஏமாற்ற முடியும்? ஆக ஈழத்தில் தமிழினத்தை முற்றாக அழித்து விடுவதன் மூலம், தமிழனையே மிரட்ட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.

ஆக வடமாநில வங்காளிகளும் அவர்களுடன் உள்ள வேறு மாநிலத்தினரும் இலங்கையில் சிங்களவன் வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். தென்னிந்தியாவில் மலையாளிகள் மற்ற மொழியினத்தவரும் இலங்கையில் தமிழினம் அழிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இவர்களின் சொற்படி இந்திய அரசு ஆடுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் பல ஆண்டுகளாக உள்ளவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லை. தமிழ் இன உணர்வு மிக்க தலைவர்கள் இல்லை. தமிழைப் புகழ்ந்து தமிழை வைத்து பிழைப்பவர்கள்தாம் அதிகம். எனவே தமிழனுக்கு ஆரவாரம் இல்லாத நடிப்பு இல்லாத ஒரு நேர்மையான அக்கறையோடு குரல கொடுக்கத் தலைவர்கள் இல்லை. சுயநலப் பிரச்சனைக்கு மட்டுமே இந்திய நடுவண் அரசை மிரட்டுகிறார்கள்.

இந்தக் கொடுமையிலிருந்து, அவலத்திலிருந்து திரும்ப ஒரே வழிதான் உண்டு.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை மையக்களமாகக் கொண்டு வன்முறையற்ற வழியல் ஆக்கபூர்வமாக இயங்கி, ஈழம் மலர்வதற்குத் தேவையான அனைத்து ஏற்றாடுகளையும் செய்வதுதான் அந்த வழி - முயற்சி திருவினையாக்கும்.

-----

இன்று ஈழ மண்ணில்.... ரொம்ப தூரம் போகாதீர். புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் காத்திருக்கும் - அவர் கை நீட்டிய இடத்தில் பக்கத்திலேயே "மிதிவெடிகள் எச்சரிக்கை" என்ற அறிவிப்பு. எங்களுடைய காலடிகள் மட்டுமல்ல எவருடைய காலடிப் பட்டாலும் வெடிப்பதற்குக் காத்திருக்கின்றன.

இராமன் காலடி தீண்டி
உயரித் தெழுந்தாள்
கல்லான அகலிகை.
காலடிகள் பட்டதும்
கல்லுக்குள் உயிர் மலரும் எனில்,
அயோத்தி இராமரே, புனிதனே
மிதி வெடிகளின் தலையில் பாதம் வைத்தருளும்
பதினான்கு ஆண்டுகளாய்
பரதன் தலைசுமந்து காத்திருக்கும்
மிதியடிகளுக்காவது பாதம் மிஞ்சுமா ?

நன்றி : செம்பருத்தி இதழ் - அக்டோ 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061