வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 10 - 12 - 2006உரைவீச்சுகள்


பட்டம்

படிக்காமலும்
பட்டங்கள் பெறலாம்.

திருட்டுப்பய
பொறுக்கி
பொரம் போக்கு

இவை போலதான்
பெயருக்குப் பின்னால்
போட்டுக் கொள்ளும்
சாதிப் பெயர்களும்.

த.ரெ.தமிழ்மணி - திருவாரூர்.
நன்றி : நாளைவிடியும் இதழ் டிசம்பர் 2006வையவன் நறுக்குகள்

முப்பத்தாறு வயதில் நாற்பத்தெட்டு முறை
தட்சணைக் கொடுத்தாள் முதிர் கன்னி
ஜாதகம் பார்த்த சாஸ்திரிக்கு.

ஓடத் தெரியாது
என்றாலும் சிறை
கோலத்துள் புள்ளி.

திருப்பதி மலையில் மழிக்கப்படுகிறது
மூவேந்தர் முடியும்
முத்தமிழ்ப் பண்பாடும்.

ஏராளமான கடைகள்
தமிழ் விற்க
எவருமில்லை காப்பாற்ற.

கல்வித் துறையின்
முதல் எதிரி
திரைத் துறையும்,
தொலைக்காட்சியும்.

லாரிகளில் ஏறுகின்றன மாடுகள்
வயல்களில் இறங்குகின்றன
டிராக்டர்கள்.

உண்ண உறங்க, குளிக்க கழிக்க,
வணங்க வரவேற்க
விதவிதமாய் அறைகள் வைத்து
வீடு கட்டுகிறார்கள்...
வாசிப்பு அறை தவிர.

கட்டட வேலை
கல் சுமக்கிறார் சிறுவர்
இளமையில் "கல்".

போர்வாளாய் வடிக்க வேண்டிய
மாணவ இரும்புகளை
கோணி ஊசியாய்க்
குறிமாற்றி விடுகின்றன
கல்விப் பட்டறைகள்.

நன்றி : உழைப்பவர் ஆயுதம்
நன்றி : ஊற்று இதழ் - திசம்பர் 2006.எழு(த்)து

இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

நதியில் குளிக்கும் பெண்ணையல்ல
நதியை எழுது,
காலம் தண்ணீராய்
நில்லாது படுத்தியங்கும்
அற்புதம் பொதித்தெழுது.

மரத்தையெழுது..
மரமேறியையும்தான்..

சிகையையெழுதாதே
மழிப்பவரை யெழுது.

உடையை யெழுதுவதிலும்
பருத்தியை யெழுது
குலம் தழைக்க வித்தாகும்.

ஊர்திகளை எழுதாதொதுக்கு
ஓட்டுநர்களை விசாரித்தெழுது.

நெல்லழகைப் படம் பிடிக்காதே
உளுமூட்டிய சாணியள்ளும்
ஏர்க்காரனின் கைகளையெழுது.

வாழ்வளிக்கும் தரிசனங்களை
நுண்ணிப்பாக நுழைந்தெழுது.
நன்றாக மண்டியிட்டு
முட்டிதேய இந்த வாழ்வை
நெம்பிப் பெயர்த்துப் பார்த்தெழுது.

இதற்கு முன் எந்த
வாழ்விருந்த தென்றும்
இதற்குமேல் எந்த வாழ்வு
எழுப்பப்பட வேண்டுமென்றும்
எடுத்தெழுது..

வித்தையல்ல கவிதை
வாழ்ந்தெழுது.
சொற்குப்பிகளில் காலமடைக்கும்
கலையது.. கலந்தெழுது...

சாட்டைகளைக் கொண்டு
உடம்பிலடித்துக் கொண்டு
தட்டேந்தும் வாழ்வெழுது.. கூடவே
சாட்டைகள் உண்டாக்கப்பட்டதன்
வரலாறெழுது.

உடைத்து உள் சென்றெழுது.
விடைத்து நின்றெழுது..

மக்களாய் நின்றெழுது
நீ மட்டும்
நிற்கவென்றெழுதாதிரு
எழுது..
நிற்காதெழுது..

நன்றி : பயணம் - நவம்பர் 2006.என் பூக்கள்
மொத்தமும்
பரிசளிக்க காத்திருந்தேன்.
வேர்பிடுங்க வந்தவள் நீ
என்றறியாமல்..

ஆடைக்குள்
ஆயுதங்களை
மறைத்துக்கொண்டு
புறாக்களுக்கு
இரையிடுவதைப் போன்றிருக்கின்றன
உன் புன்னகைகள்.

காதல் சதுரங்கத்தில்
எதிரெதிராய்
நீயும் நானும்..

காய்களை நகர்த்தி
ஆடுகிறேன் நான்.
கருப்பு வெள்ளைக்
கட்டங்களையே நகர்த்தி
ஆடுகிறாய் நீ.

ஸ்ரீராம் பொன்ஸ்
நன்றி : வடக்குவாசல் இதழ் - நவ 2006 - நூல் மதிப்புரை
தோழர் அஞ்சலிக்கு ஓர் அஞ்சல்

அன்புள்ள தோழர் அஞ்சலி அவர்களுக்குத் தோழமை வணக்கம்.

உங்களின் மடல் கிடைத்தது.

அனுப்புநர் முகவரிப் பகுதியில் உங்களின் பெயரை திருமதி அஞ்சலி நாகராசன் என எழுதியிருந்ததைக் கண்டு சிறிது அதிர்ந்துதான் போனேன். நாகராசன் என்பது உங்கள் கணவர் பெயர்தான் என்பதை நான் நன்றாகவே அறிவேன். திருமணத்திற்கு முன் தாங்கள் எழுதிய மடல்களிலெல்லாம் தாங்கள் அஞ்சலி என்று மட்டும்தானே குறிப்பிட்டு வந்தீர்கள். திருமணத்திற்குப் பிறகு மட்டும் ஏன் இந்தத் தேவையில்லாத வால் முளைத்தது என்பது எனக்கு இன்னும் வளங்கவே இல்லை.

சமூக நடைமுறையில் உள்ள வழக்கம்தானே இது என்று நியாயப்படுத்தப் போகிறீர்களா அஞ்சலி? மேல்நாட்டுப் பெண்களிடம் ஊறிப்போன நடைமுறையாகிவிட்ட இச்செயல், நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடமும் விரைவாகத் தொற்றிவரும் இந்நோய், தங்களையும் தொற்றிக் கொண்டதில்தான் எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் மேலிடுகிறது. சராசரிப் பெண்கள் இதுபோல் எழுதுவதை வேண்டுமானால் - பிற பெண்கள் இப்படி எழுதுவதைப் பார்த்து நாகரிகம் என நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், தாங்கள் அப்படியான சராசரிப் பெண் அல்லவே அஞ்சலி.

பெண்கள் நிலைபற்றியும். பெண்கள் ஒடுக்கப்படுவது பற்றியும் ஆணாதிக்க சமூக நடைமுறை பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் மணிக்கணக்கில் பேசுவீர்களே, விவாதிப்பீர்களே....

இதுவும் ஒரு ஆணாதிக்க நடைமுறைதான், பெண்ணடிமைத் தனத்தின் கூறுகளில் ஒன்றுதான் என்பதை, ஏன் அறியாமல் போனீர்கள்? உங்கள் கணவர் இந்தச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப் படுகிறபோதோ, அறியப்படுகிற போதோ நாகராசனாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறார், அறியப்படுகிறார். ஆனால் நீங்கள் மட்டும் திருமதி அஞ்சலி நாகராசன் என்று அறிமுகப்படுத்தப் படுகிறீர்கள். திருமதி என்பதன் மூலம் நீங்கள் மணமானவர் என்பதும், உங்கள் பெயருக்குப் பின் உங்கள் கணவர் பெயரை இணைப்பதன் மூலம் நீங்கள் யாருக்கு மணமானவர் என்பதும் அறியப்பட்டு விடுகிறதே.

பெண் ஆணுக்கான போகப்பொருள் என்கிற மதவியல் கருத்துகளின் மறுவடிவம்தானே இது. ஆணாதிக்கக் கருத்தியல்களின் நவீன வெளிப்பாடுதானே இது. இன்னும் ஒருபடி போய் திருமதி நாகராசன் (Mrs.Nagarajan) என்று ஒரு பெண் தன் சுயத்தை சிந்தனையை மட்டுமல்ல தன் பெயரைக்கூடத் தொலைக்கும் அவலம் கூட நேர்ந்துவிடுகிறது. இவற்றையெல்லாம் தாங்கள் உணராமல் போனது ஆச்சர்யமே.

திருமணத்திற்கு முன்னும் பின்னும் நாகராசன் திரு.நாகராசன்தான். ஆனால், அஞ்சலி மட்டும் திருமணத்திற்கு முன்பு செல்வி அஞ்சலியாக இருந்தவர் திருமணத்திற்குப்பின் திருமதி அஞ்சலி, ஒரு பெண் தன் பெயரைச் சொல்வதிலிருந்தே, எழுதுவதிலிருந்தே அவள் திருமணமானவரா, ஆகாதவரா என அறியப்பட வேண்டும் என்கிற அவலச் சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டீர்களே.

திருமணமாகாத பெண்களை Miss. என்றும் திருமணமான பெண்களை Mrs என்றும் குறிப்பிடுவது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க நடைமுறை என உணர்ந்து கொண்ட பெண்ணியவாதிகள் மணமான, மணமாகாத பெண்கள் அனைவருக்கும் பொதுவாக Ms. என்ற பொதுவான அடைமொழியைப் பயன்படுத்துகின்றனர். Chairman என்ற சொல் ஒரு ஆணை மய்யப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட சொல் என்பதால் Chairperson என்ற சொலைலைப் பெண்ணியவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்த அளவுக்கு பெண்ணியச் சிந்தனைகள் கூர்மைப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இன்னும் சில பெண்கள் இப்படிக் கூறுவார்கள் "நானாக விரும்பித்தான் என் பெயருக்குப் பின் என் கணவர் பெயரைச் சேர்ந்து எழுதுகிறேன், என்னுடைய வெற்றிக்குப் பல வழிகளிலும் என் கணவர் ஒத்துழைக்கிறார், அன்பின் வெளிப்பாடாகத்தான் இப்படி எழுதுகிறோம் - என்று பத்தாம் பசலித் தானமாக உளறுவார்கள்.

இப்படிக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக நமது கதைகளும், காவியங்களும், இலக்கியங்களும், திரைப்படங்களும் கூறுகின்றனவே. பெண் எப்போதுமே ஆணுக்குப் பின்னால் ஏன் இருக்கிறாள் என்பதை பெண்கள் எப்போதாவது எண்ணிப் பார்க்கிறார்களா?

தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருப்பதற்காக மனைவி பெயரைத் தன் பெயரோடு இணைத்தெழுதும் ஆண்கள் உண்டா? கூறுங்கள். எங்கோ ஓரிருவர் உண்டு என்பதை நானும் அறிவேன். விதிவிலக்குகள் விதியாகமாட்டா. என்பதை உணருங்கள். யாருக்காவும் யாரும் தங்கள் தனித் தன்மையை இழக்க வேண்டியதில்லை. கணவன் அவர் பெயரால் மட்டுமே, மனைவி அவர் பெயரால் மட்டுமே அறியப்படட்டும்.

தங்கள் பெயருக்குப் பின் தங்கள் கணவர் பெயரைச் சேர்த்து எழுதியது சரியானதுதான் என்றால் அதற்கான நியாயமான காரணங்களோடும், தவறென்றுபட்டால் உங்கள் பெயரை அஞ்சலி என்று மட்டும் குறிப்பிட்டு எழுதப்படும் தங்களின் அடுத்த மடலை எதிர்பார்க்கும்....
பி.இர.அரசெழிலன்.

நன்றி : புதிய பெண்ணியம் - நவம்பர் 2006
வேதங்களுக்கு முந்தைய தமிழர் நான்மறை

முனைவர் மதிவாணன்.

.....சூரியன் க.பாண்டியன் அவர்கள் எழுதிய மறைக்கப்பட்ட மரபுச் செல்வம் (1988) (பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில் பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சணகர், சனந்தர், சனாதர், சனாதகுமரர் என்பவர்களே அந்த நால்வர்.

சன் என்றும் வடசொல் நல்ல என்று பொருள் படும். ஆதலால், நன்நாகர், நல்னந்தர், நல்லாதர், நல்லாதன்குமரர் என்னும் தூய தமிழ்ப் பெயர்களே வடமொழி அடைமொழி பெற்றுள்ளன என்று சூரியன் கா. பாண்டியன் கூறுகிறார்.

வள்ளலாரும் நன்னெறியைச் சன்மார்க்கம் என்று குறிப்பிட்டார். தென்முகக் கடவுள் மாவிந்த மலையில் (மகேந்திரகிரி) கல்லால நீழலின் கீழ் நால்வர்க்கு மந்திர நெறிகளைக் கற்பித்ததாகக் கூறுவது சிவனி மரபு. சிற்ப நூல் கடவுள் வாழ்த்திலும்,

நல்லார்கள் நால்வருக்கும் நாவில் பூரணம் காட்டி
கல்லாலின் கீழிருந்த கண்ணாற்றலான பரம்
எல்லார்க்கும் தெய்வமே.

எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நால்வரும் முறையே...


1) நல்லாதன் (சனாதன்) - மெய்யியல் (தத்துவம்) - பெளடிகம். - நிறைமொழி மாந்தர் மறைமொழி (ஆகமம்)
2) நல்நந்தி (சனந்தி) - ஓகம் (யோகம்) - தரவாகரம் சித்தர் நெறி (வர்மக்கலை)
3) நல்லாதன் குமரன் - ஊழ்கம் (தியானம்) - தைத்திரியம் (சனாதகுமரர்)
4) நன்னாகன் (சனாகன்) - மந்திரம் (யாமம்) - சாமம், மந்திர உருவேற்றம்.


மேற்கண்ட நாற்பிரிவு மந்திரங்களும் சித்தர் நெறிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்துத் தம் அணுக்க மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி தந்த சிறப்பு நெறிகளாகும் எனத் தெரிகிறது.

சுமாாட்டு என்பவர் ஆரியரல்லாதோரின் சமயம் மற்றும் தத்துவக் கருத்துகள் உபநிடதங்கள் எழுதப்படுவதற்குக் காரணமாக அமைந்தன எனக் கூறியிருப்பதும் இங்குக் கருதத்தக்கது.

பழந்தமிழர்களின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால், தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் மெய்யியல், ஓகம், ஊழகம்(தியானம்), மந்திரம் என்னும் நான்கு மறைகளையும் முழுமையாகக் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் எனத் தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மறை என்னும் சொல் - மறு - (மறி) மறை எனத் திரிந்து பல காலும் மீண்டும், மீண்டும் மனப்பாடம் செய்யும் நூலைக் குறித்தது. எனவே, பழந்தமிழர்களின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட மந்திரங்கள் என்பதால், எழுந்து புறத்திசைக்கும் எழுத்தொலிப்புச் சொற்களாகக் கூறுகிறோம் என்கிறார் தொல்காப்பியர். எழுந்து புறத்தே ஒலிக்காமல் கேளா ஒளிபோல அகத்தெழு வளி ஓசையாகக் கூறப்படுவதே மந்திரம் என்றும் அந்தக் கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பதும், பண்டையோர் நம்பிக்கை, ஆதலால் தான்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப - தொல்காப்பியம்,

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் - குறள்.

என்று பண்டைத் தமிழ் நான்மறைகள் குறிப்பிடப் பட்டுள்ளன எனத் தெரிகிறது. தொல்காப்பியர் இவற்றை வாய்மொழி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்தவர் நால்வர். பிறகு அவற்றை பேணிக் காத்து வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே வடதமிழாகிய பாலி பிராகிருத மெழியாக்கம் பெற்ற நான்குமே நச்சினார்க்கினியர் குறித்த தைத்திரியம், பெளடிகம், தலவாகரம், சாமம் என்பன. திதியன், புகழன், தாலவகன், யாமன் எனும் நால்வர் வாயிலாக வட தமிழாகிய பிராகிருதத்தார், தமதாக்கிக் கொண்ட நான்மறைகள் முறையே...

1) திதியன் - தைத்திரியம் (வடமொழியாளர் திதி என்பவளின் மகனிடம் கற்ற நூல் என்பர்)
2) புகழன் - போழியம் (பெளடிகம்) ( புகழன் வாயிலாகக் கற்ற நூல்)
3) தாலவகன் - தலவாகரம் (தாலவகன் வாயிலாகக் கற்ற நூல்)
4) யாமன் - சாமம் (யாமன் வாயிலாகக் கற்ற நூல் யாமம் - சாமம்) யாமன், யாமனூர், ஏமனூர் என்பன தூய தமிழ்ச் சொற்கள்.

இவ்வாறு பெயர் பெற்றிருந்ததை ஆய்ந்துணரலாம். இவையணைத்தும் உபநிடத நூல்களாக உருவெடுத்த பின்னும் பெரும்பகுதி அச்சிட்டு வெளியிடப்படாமல் உள்ளது என மக்டொனால்டு குறிப்பிடுகிறார்.

அதங்கோட்டாசான் மெய்யியல் (தத்துவம்), ஊழ்கம் (தியானம்), ஓகம் (யோகம்), மந்திரம் ஆகிய தமிழ் நான்மறை ஓதியுணர்ந்தவர். கி.மு.1000 காலவரம்புக்குப் பிறகே பிராகிருத பாலி மொழிகள் வளர்ந்திருப்பதால் தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு கி.மு. 800 அளவில் இவை, பிராகிருத மொழியில் திதியம், போழியம், தாலவகம், யாமம் என்னும் பெயர்களில் அறிமுகமாகியிருத்தல் வேண்டும். இவை படிப்படியாக உடமொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. களப்பிரர், பல்லவர், சோழர் காலங்களில் வடமொழிக்கே முதன்மை தரப்பட்டதால் தமிழிலிருந்த மூல நூல்கள் மறைந்தன. எனினும் வடமொழியிலுள்ள பிராமணம், ஆரண்யகம், உபநிடதம் என்னும் வடிவங்களில் தமிழர் நான்மறைகள் மறைந்து வாழ்கின்றன. இருக்கு வேதப் பாடல்களில் இவற்றுக்குரிய மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.

நன்றி : மக்கள் செங்கோல் - நவம்பர் 2006
இளையராசா இசையமைக்காததால் யாருக்கு நட்டம்?

பெரியார் என்று சொன்னாலே அதிர்வு. சலசலப்பு, சர்ச்சைதான். சனாதன நடைமுறையில் இறுகிக் கரடுதட்டிப் போன ஒரு சமூகத்தில் அதன் மீது சந்தேகக் கணையை வலிவுடன் வீசியவர் அந்த ஈரோட்டு மாமனிதர். அவர் எழுப்பிய வினாக்கள் பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தவர்களையெல்லாம் விழிப்புற்று பதவி கொள்ளச் செய்தன. பகுத்தறிவு என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் மூடப்பழக்கங்களுடன் வீரச்சமர் புரிந்தது. பெரியார் என்றாலே இன்று வரையில் சாதீயவாதிகளுக்கு முரணாகவும், சாமானியர்களுக்கு அரணாகவும் நிலைபெற்றிட்ட ஒரு பெயர்.

அந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம். அதுவும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சர்ச்சைக்குள்ளாகிற நிலையில்தான் வளர்ந்து வருகிறது. இயக்குநர் ஞான.ராஜசேகரனின் சீரிய முயற்சி தொடர்கிறது. என்றாலும் அன்று குஷ்பு நடிக்கக் கூடாது என்று ஒரு சர்ச்சை கிளம்பி அது சற்று ஓய்ந்திருக்கிற வேளையில் இன்று இந்தப் படத்துக்கு இளையராசா இசை அமைக்க மறுத்துவிட்டதாகப் புது சர்ச்சை கிளம்பியுள்ளது.

பெரியார் கடவுள் இல்லை என்னும் நாத்திகக் கொள்கையுடையவராதலால் கடவுள் நம்பிக்கை மிகுந்த இளையராசா இந்தப் படத்திற்கு இசையமைக்க மறுத்ததாகச் செய்திகள் கூறுகின்றன....

கிராமத்துப் புழுதி மண்ணிலிருந்து சமுதாய அடுக்கின் அழுத்தப்பட்டுக் கிடந்த அடிக்கோடியிலிருந்து கிளம்பிய புயலென வந்தவரல்லவா இளையராசா? உழைக்கும் வர்க்கத்துச் செங்கொடி இயக்கப் பட்டறையில் உருவான இளையராசா பெரியாரை ஒரு நாததிகர் என்றும் அதனால் அவர் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தால் அது நியாயமா?

இளையராசாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராசன் பாடல்கள் எல்லாம் சமூகக் கருத்துகள் கொண்டவைதானே? அப்போதெல்லாம் இளையராசாவும் அவர்களுடன் இணைந்து, மக்களுக்கு நெருக்கமாக இருந்தார். மக்களின் வாழ்க்கையை இசைத்தார். ஆனால் இன்று?

எத்தனையோ அபத்தங்களுக்குக்கூட அவர் இசை அமைத்திருக்கிறார். அப்போதும் அவரது இசை மேதமையை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட வில்லை. ஆனால் பாவலர் பாடல்களைப் பாடித் திரிந்த அந்தக் காலம் குறித்து ஒரு பத்திரிகையில் இதே இளையராசா என்ன சொல்லியிருந்தார்?

"அந்தக் குப்பைகளையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்து விட்டேன்" - பொதுவுடமையையும் பகுத்தறிவையும் பரப்பிய பாவலர் பாடல்களே இன்று இவருக்குக் குப்பைகள்.

முக்கல் முனகல்களையெல்லாம் கூட தனது இசையின் மூலம் அவர் பரவச் செய்திருக்கிறார். அதே நேரத்தில் உலகமே வியக்கும் வகையில் மேஸ்ட்ரோ வாகவும் உயர்ந்திருக்கிறார்.

கல்வியும் இசை போன்ற கலைகளும் பிறவியிலேயேதான் வருவது என்ற மேட்டுக்குடி மனப்பான்மைக்கு வேட்டுவைத்தவர் இந்த, கடைக்கோடி கிராமத்தில் தலித் சமூகத்தில் பிறந்த இளையராசா. இந்தப் பின்னணியில்தான் அவரது இந்த நிலைப்பாடு நமக்குக் கவலை தருகிறது.

இருந்தும் என்ன? இது என் உரிமை என்று அவர் சொல்லக்கூடும். ஆனால், பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுப்பதால் நட்டம் ஒன்றும் பெரியாருக்கு இல்லை... நட்டம் இளையராசாவுக்குத்தான்.

- சோழ. நாகராசன் -
நன்றி : புதிய ஆசிரியன் - டிசம்பர் 2006.
தமிழ்ப் பத்திரிகைகள்

தமிழகத்தில் தோன்றிய மனித இனமே உலகம் முழுவதும் பரவிற்று என்றது சூரியோதயம் (1869) இதழ்.

மலைவாழ் மக்கள் நிலையிலிருந்து நாகரிக வளர்ச்சி பெற்றவரே இன்றைய ஐந்தாம் வருணத்தவர் என்றது பஞ்சமன் (1871) இதழ்.

இன்றைய தாழ்த்தப்பட்ட மக்கள் இன வழியினரே இன்றைய பாண்டிய குலத்தினர் என்றான் திராவிட மித்திரன் (1885) இதழ்.

இலக்கிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியவர் எனக் கூறுவான் மகாவிகடத் தூதன் (1888)

திருப்பறையர் பெருஞ் சமாதியின் கலைக் கோயில்தான் தஞ்சை, திருவாரூர், சிதம்பரம் போன்ற கலைக்கூடங்கள் என்றான் பறையன் இதழ் (1893).

நல்லறமும் அருள் நெறியும் தந்தவன் என்று முரசொலித்தது இல்லற ஒழுக்கம் இதழ் (1898).

நீதி நூல்களையும் நிலையான வாழ்க்கையையும் ஈந்தோன் என்றியம்பியது பூலோக வியாசன் (1900)

தமிழுக்கு முதலோன், தண்டமிழ் மூலத்துக்கு உரியோன், தூய தமிழ் பேசி மறையோதிய பூர்வக் குடிமகன் இன்றைய ஆதிதிராவிடன் எனச் சாற்றினான் தமிழன் (சென்னை 1907).

சான்றோர் பிறந்த பெருமைசார் இனம் என்றான் ஆன்றோர் மித்திரன் (1910),

தமிழைக் கண்டவுடனே தருமத்தைப் படைத்தவன் என்று பறை சாற்றினான் தமிழன் இதழ் (கோலார் 1926).

பாராண்டோன் என்றான் ஆதிதிராவிட மித்திரன் (1939). மெத்தென வாழ்ந்ததைக் கூறிற்று புத்துயிர் (1940).

ஆதியிலிருந்தே சமய, சமுதாய, அரசியல் அத்தனையிலும் ஏற்றங்கண்டோர் யாம் என்றது ஜெய்பீம் (ஆங்கிலம் 1940)

நன்றி : கவிதா சரண் - சூலை - டிசம்பர் 2006
சாதி ஏன் ? சண்டை ஏன் ?
நா. நந்திவர்மன் - புதுவை 1

பழந்தமிழராட்சி பற்றிப் பாவாணர் எழுதிய நூல் சாதிகளற்ற சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மக்கள் எல்லோரும் முன்னோர் தொழிலையே செய்து வந்தாலும் அவருக்கு விரும்பிய தொழிலை மேற்கொள்ள உரிமை இருந்தது. பிறப்புப் பற்றிய குலப்பிரிவும், அப்பிரிவு பற்றிய ஏற்றத் தாழ்வும் தீண்டாமையும் முற்காலத்தில் இல்லை.

தொழில் பற்றிய குலப்பிரிவும், அறிவும், துப்புரவும் ஒழுக்கமும் பற்றிய ஏற்றத் தாழ்வுமே இருந்து வந்தன. கல்வி எல்லோருக்கும் பொருவாயிருந்தது. பாணர் இசை நாடகத் தொழிலையும், வள்ளுவர் கணியத் தொழிலையும், மயிர் வினைஞர் செவ்வியத் தொழிலையும்(surgery) எங்கும் நடத்தி வந்தனர் என்பார் மொழிஞாயிறு.

மயிர் வினைஞர்கள் மருத்துவர்கள் என்று அழைக்கப்படுவர். மீன்கொத்திப் பறவை தண்ணீரில் மூழ்கி மீனைப் படித்துக் கொண்டு வரும்போது தண்ணீரில் எந்த வடுவும் தோன்றாது. அப்படி வடுத்தெரியாமல் காயங்களை ஊசியால் தைத்து ஆறச் செய்த மருத்துவர்களாக மயிர் வினைஞர் அன்று இருந்தார்கள்.

பதிற்றுப் பத்தில்...

மீன்தேர் கொட்பிற் பனிக்கய மூழ்கி
சிரப் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி
நெடுவசி பரந்த வடு.

என்று வரும் பாடல் சித்த மருத்துவத்தில் அறுவைப் பண்டுவர் அக்காலத்திலும் சிறந்தோங்கி இருந்ததைச் சாற்றுகிறது. இந்நாள் பண்டுவர்க்கு இணையாகப் போற்ற வேண்டிய மயிர்வினைஞர் இன்று மன்பதையால் எங்ஙனம் மதிக்கப் பெறுகிறார்.?

சாதியம் விளைத்த சறுக்கல் அல்லவா காரணம்? சாதிக் கொரு நீதியும் சாதிச் சண்டைகளும், மதவெறியும், எவ்வாறு மாந்தர் வாழ்வில் இடம் பிடித்தன?

புத்தமதமும் புத்தரின் அறிவுரைகளும் எவ்வாறு திசை திருப்பப் பட்டன? என்று பார்த்தால், அதே வழியில் அனைத்து மதங்களும் நம் நாட்டில் சிலரின் தன்னல் நோக்குக்காகத் திசை திருப்பப்பட்டிருப்பதை அறியலாம்.

புத்தமதத்தில் கடவுளார் இல்லை. புத்தமதத்தைத் தோற்றுவித்த கெளதமர் ஒரு நல்லாசிரியர். மெய்யியல் அறிவர். அவரைப் பின்பற்றியவர்கள் பிளவுபட்டார்கள். புத்தரின் மதம் ஈனயானம், மகாயானம் என இரண்டாகப் பிளவுபட்டது. தொடக்ககாலம் முதல் கடவுட் பதுமைகள் இல்லாமல் வழிபட்டு வந்தவர்கள் ஈனயானம் என்ற பிரிவினராகச் சொல்லப்பட்டார்கள்.

தென்னகத்தில் பிறந்த நாகார்ச்சுனா என்ற பார்ப்பனர் அகண்ட பாதையைக் காண்பிப்பதாகச் சொல்லப்பட்ட மகா யானம் என்ற பிரிவைத் தோற்றுவித்தார். இந்தப் பார்ப்பனர் உருவாக்கிய மகா யானம் தான் ஆயிரக்கணக்கான புத்தர்களை உருவாக்கியது. 995 புத்தர்கள் உருவாக்கப்பட்டனர். பெயர்களும் சூட்டப்பட்டன. கெளதம புத்தர் சாக்கியமுனி என அழைக்கப்பட்டார். நாளை நாம் செல்ல வேண்டிய உலகின் கடவுளாக மைத்ரேயா உருவாக்கப்பட்டார்.

நன்றி : தெளிதமிழ் இதழ் - நளி 2037
மொழி பெயர்ப்பு இலக்கியம் குறித்துச் சில சிந்தனைகள்

- மா.மு.பூங்குன்றன் -

தமிழ் செம்மொழி என்று அழைக்கப்படுகின்றது. அதற்குரிய சிறப்புத் தகுதிகள் நம் மொழிக்கு உள்ளன என்பது குறித்து நாம் இறும்பூது எய்துகின்றோம். உலகச் செம்மொழிகள் (தொன்மை நோக்கில்) என்று அழைக்கப்படுகின்ற கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், சீனம், எபிரேயம் போன்ற அனைத்து மொழிகளிலிருந்தும் தரமான, செம்மையான, அனைத்து வகைப்பட்ட நூல்களும் நம் தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

இந்திய மொழிகள் என்ற நோக்கில் வங்க மொழியும், மலையாள மொழியும் மட்டுமே உயர்வாகப் பேசப்படுகின்றன. அதற்கு அடிப்படையான காரணம் அவ்விரு மொழிகளும் உலக இலக்கியத்தில் சிறந்தவற்றை உடனுக்குடன் தம்மொழியில் மொழி பெயர்த்து விடுகின்றன. கன்னட மொழியினரின் மொழிப்பற்றையும் நாம் புறந்தள்ள இயலாது. ஆனால் நம்மொழிப் பற்றாளர்களிடம் அத்தகைய வேகமும், விரைவும் இல்லை. மெத்தனப் போக்கே காணப்படுகின்றது. இக்குறையைப் போக்க, மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழில் அதிக அளவில் வெளிவருதல் வேண்டும்.

மண்ணின் மாண்புக்கும், மரபுக்கும் ஏற்றவாறு மூலத்தை உள்வாங்கி, அனைவருக்கும் ஏற்ற எளிய நடையில் மொழிபெயர்ப்பது மொழி நடையில் சிக்கலோ, குழப்பமோ இருத்தல் கூடாது. தமிழின் உயிர் ஓட்டம் உள்நாதமாக விளங்க வேண்டும். (மூலத்தை அப்படியே வரிக்குவரி மொழி பெயர்த்தல் கூடாது) மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்களுக்குள் சிறந்த எழுத்தாளராக இருத்தல் வேண்டும். படைப்புத்திறன், கற்பனைத் திறன், பொருளை நயம்பட உரைக்கும் திறன் அவருக்குக் கைவந்த கலையாக இருந்தல் வேண்டும்.

மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு முன்னோடியானவர் வ.வே.சு ஐயர் திறனாய்வுக் கலையைத் தமிழில் தோற்றுவித்தவர். அவரின் தாகூர் கதைகளின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. க.நா.சு., புதுமைப்பித்தன்., போன்றவர்கள் எல்லாம் வ.வே.சு ஐயரைப் பின்பற்றியே தம் இலக்கியப் பணியினைத் தொடர்ந்தார்கள். மறுமலர்ச்சி என்ற நல்ல இலக்கியச் சொல்லைத் தமிழுக்குத் தந்தவர் வ.வே.சு.ஐயர் ஆவார்.

வி.ச.காண்டேகர் - தமிழ் நாட்டின் இலக்கிய உலகில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற மராட்டிய எழுத்தாளர். 1940 - 80 களில் சுமார் 15 வருடகாலம் தமிழ்மொழி இலக்கியத்தில் காண்டேகரின் மொழிபெயர்ப்பு நூல்கள் கொடிகட்டிப் பறந்தன.
அடுத்து ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர் மு.கு.ஜகந்நாதராஜா. மொழி பெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறந்த எழுதாளர். இவரின் தாய்மெர்ழி தெலுங்கு என்றாலும் இவரின் மொழிபெயர்ப்பு தனிச்சுவை உடையது.
அடுத்து ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் வெ.சாமிநாதசர்மா. தமிழில் அரசியல் தத்துவங்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற பயனுள்ள நூல்களைத் தொடர்ந்து எழுதி 50 ஆண்டுகாலம் இலக்கியச் சேவை செய்தார்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எட்வின் ஆர்னால்டின் ஆசிய சோதியை எளிய இனிய தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்துள்ளார். உமர்கயாம் பாடல்களையும் கவிமணி மொழி பெயர்த்துள்ளார்.

பாராட்டுக்குரிய ஒரு மொழிபெயர்ப்புப் பரம்பரையைத் தமிழ் உலகம் இன்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறது. ஆம்.. த.நா.குமாரஸ்வாமி, சேனாதி, காஸ்ரீஸ்ரீ, விழிநாதன், செளரி, சித்தலிங்கையா, தொ.மு.சி.ரகுநாதன்., பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்., குமுதன், தி.ஜ.ரங்கநாதன், எஸ்.டி.எஸ்.யோகியார், பெ.நா.அப்புசாமி, இன்றைய பாவண்ணன் வரை இப்பட்டியல் நீள்கிறது....

நன்றி : மண்மொழி அக்-நவம் 2006
..திரைப்படங்கள் (முள்ளை முள்ளால் எடு)..

1) ஒழுக்கத்தை விரும்புகிறவர்கள் திரைப்படத்தில் நடிக்கத் தயங்குகிறார்கள்.

2) நல்ல நோக்கத்தை விரும்புவோர்கள் திரைப்படம் எடுக்கத் தயங்குகிறார்கள்.

3) ஏனெனில் இன்றைய திரைப்படங்களில் நடப்பு நிலை இல்லை. மாறாக ஆடம்பரக் கூத்துகளும், அர்த்தமற்ற கேளிக்கைகளும்தான் மிகுதியாக உள்ளன.

4) சிற்றறிவுக்குத் தீனி போட்டு சிந்தனைக்கு மூடிபோடும் பன்னாடைகளாகிப் போன படச்சுருள்கள்தான் அதிகம்.

5) முன்பு பகுத்தறிவுக்குத் தீனி போட்ட திரைப்படங்கள் இன்று பாலுணர்வுக்குத் தீனி போடுகிறது.

6) பண்பாட்டை நேசிக்கக் கற்றுக் கொடுக்காமல் பாய்ஸ்களையும், சூப்பர் ஸ்டார்களையும் , நீயூக்களையும் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

7) இளைஞனிடம் தேசபக்தியை ஊட்ட வேண்டிய திரைப்படங்கள், நடிகைகளின் தேகபத்தியை ஊட்டிக் காசு பறிக்கிறது.

8) நாட்டு நலனில் அங்கம் வகிக்கச் சொன்னால் நடிகைகளின் அங்கங்களைக் காட்டியே இளைஞர்களின் மனத்தைப் பங்கப்படுத்துகிறார்கள்.

9) 100 க்குப் 40 பேரின் வயிறுகள் உண்டியின்றி வற்றிக் கிடக்கையில் நடிகைகளின் வயிற்றைக் காட்டி தங்கள் தொப்பையை நிறைக்கிறார்கள்.

10) இவர்கள் எயிட்ஸ் நோய்க் கிருமிகள். சமுதாயத்தின் உள்ளே இருந்து கொண்டே உயிரைக் குடிப்பவர்கள்.

11) இந்த சினிமா வைரஸ்களால் இளைஞர்கள் தன்னம்பிக்கையோய் இளம்பிள்ளைவாதி களாகிறார்கள்.

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தேவை சுத்திகரிப்புத் தொழிற்சாலை. ஏனெனில் இவர்கள் வீட்டு சாக்கடை நீரை நம் வீட்டுத் தொட்டியில் நிரப்புகிறார்கள்.

- கருவை அனலன் -
நன்றி : கரூர் மக்கள் களம் - நவம் 2006
மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்

தமிழக வேளாண்மையை அழிக்க வரும் பி.ட்டி நெல்

ஒரு உயிரிலிருந்து மரபீனிகளைப் பரித்து எடுத்து, வேறொரு உயிரிக்குள் செலுத்தி அந்த உயிரிக்குச் சில புதிய குணங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம்.

நெல்லுக்குப் பகையான சில பூச்சிகளைக் கொல்லும் திறன் சில பாக்டீரியாக்களுக்கு இருக்கின்றன. இந்தத் தன்மைக்கு அந்த பாக்டீரியாவில் இருக்கும் சில மரபீனிகளே காரணம். இந்த மரபீனிகளை நெல்லுக்குள் செலுத்தினால் நெற்பயிர்கள் தங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் அளவுக்கு தற்காப்புத் திறன் பெற்றவையாக மாறிவிடும் என்று எதிர்பார்த்தனர். அவ்வாறு உருவான ஒன்றுதான் பி.ட்டி நெல் ஆகும்.

இதற்கு அடிப்படையாக இருப்பது பேசில்லஸ் துரிஞ்செனிசிஸ் என்ற பாக்டீரியா ஆகும். இதனைத்தான் சுருக்கமாக பி.ட்டி என்கின்றனர். பேசில்லஸ் துரிஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி என்ற பாக்டீரியா உருவாக்கும் Cry 1Ab, Cry 1Ac என்ற நஞ்சுகள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான், இலை சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கவல்லவை.

பேசில்லஸ் துரிஞ்செனிசிஸ் குர்ஸ்டாகி பாக்டீரியாவிலிருந்து மரபீனியைப் பிரித்து, நெல் விதைக்குள் செலுத்தினால் உருவாகும் புதிய நெல் விதையிலிருந்து முளைக்கும் நெற்பயிர் மேற்சொன்ன நஞ்சுகளைச் சுரந்து, இலைச் சுருட்டுப் புழுக்களையும், தண்டு துளைப்பான்களையும் கொன்று விடும் என்று கண்டறிந்தனர்.

இந்த வகை மரபீனி மாற்று நெல்தான் பி.ட்டி நெல் (bt rice) ஆகும். இதற்க அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது.

பொதுவாக மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் இன்னும் குழந்தை நிலையில்தான் உள்ளது. மரபீனிகளின் செயல்தளம் இன்னும் விரிவாகக் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் மரபீனி மாற்றுப் பயிர்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவசரப்பட்டுக் கொண்டு வந்து விடக்கூடாது.

சாதாரணமாக மரபீனிகள் ஓய்வு நிலையில் இருக்கும். வெளியிலிருந்து இன்னொரு மரபீனி செலுத்தப்படும் பொழுது அக்கம் பக்கத்திலுள்ள மரபீனிகள் எல்லாம் தீவிரமாகச் செயல் வேகம் பெற்றுவிடும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நிலையில் மரபீனியை இன்னொரு மாற்றுத் தளத்தில் செலுத்துவது என்பது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒட்டும் இடத்தைப் பொருத்து எண்ணிக்கைப் பெருக்கம் அடைய வாய்ப்புண்டு. அதன்பிறகு அதன் கட்டுப்பாடு நம் கையில் இல்லை. நெல்லில் ஒரு மரபீனியை மாற்றீடு செய்ய நாம் முயலும் போது அது செலுத்தப்படும் நெல்லின் ஒட்டு மொத்த மரபீனித் தொகுப்பையே சிதைத்தவிடும் ஆபத்தும் உண்டு. அவ்வாறாயின் அக்குறிப்பிட்ட நெல் வகையில் ஏற்கெனவே இருந்த நல்ல தன்மைகளும் சேர்ந்து குலைந்து விடும். அல்லது அவற்றில் வேறுவகையான நச்சுப் பொருள்கள் உருவாகி விடலாம். இது விளைச்சலைப் பாதிப்பதோடு, உண்பவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

பி.ட்டி அரிசியை எலிக்குக் கொடுத்து உண்ணச் செய்தபோது அதற்கு உடலில் முடி உதிர்தல, குடல் தொடர்பான நோய்கள் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. Cry 1Ac என்ற நச்சு இவ்வாறான விளைவை ஏற்படுத்தியது. இதே போன்ற ஒவ்வாமைகள் பாலூட்டியான மனிதர்களுக்கும் வரும் ஆபத்து உண்டு - என்று முனைவர் ஜேனட்டு காட்டர் என்ற அறிவியலாளர் எச்சரிக்கிறார்.

எனவே பி.ட்டி நெல் தமிழ் நாட்டில் தடைசெய்யப் படவேண்டும். அந்நெல்லுக்கு ஆய்வுப் பண்ணைகள் அமைக்கவும் அனுமதிக்கக் கூடாது.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் - டிசம்பர் 2006.

இந்த வகையான நெல் தமிழ்நாட்டில் - கோவை மாவட்டத்தில் - ஆலங்குடி என்ற சிற்றூரில் ரங்கராஜன் என்பவரது பண்ணையில் விளைவிக்கப்பட்டு முதிர்ந்து நின்றது. இந்த நெல் எப்படிப்பட்டது என்பதே அவருக்குத் தெரியாது. பசுமை அமைதியின் செயல்வீரர்களும், விவசாயத் தலைவர்களும், பசுமை இயக்கத்தினரும் - முனைப்போடு சென்று தேடி, கண்டுபிடித்து - இதனை அழித்துள்ளனர். இவர்கள் இது பற்றி மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு இச் செயலை வாழ்த்தியுள்ளார் - இந்த மண்ணைக் காக்க வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துரைத்துள்ளார். ( இன்னம் எங்கெல்லாம் இந்த நெல் விளைவிக்கப் பட்டுள்ளதோ யார் அறிவார்? இவர்கள் நுழைய அனுமதி தந்தது யார்? )

பிறந்த நாள் கொண்டாட்டம்.

- கா. கலைமணி - (kalai_k79@hotmail.com)

மலேசிய இந்தியர்களிடம் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது, ஒரு முக்கிய விழாவாக வேறூன்றி விட்டது. எரிந்து கொண்டிருந்த தீபத்தை அணைத்து, அவியப்பத்தை வெட்டி வாயில் திணிப்பது, சில சமயங்களில் முகததை அலங்கோலப் படுத்துவது போன்ற மேலை நாட்டு நாகரிகமாக மாறி வருகிறது.

ஒவ்வொரு விழா நாளிலும் அந்த விழாவிற்குரியவரை பெருமைப்படுத்துவது தான் வழக்கம். பிறந்த நாளுக்கு மட்டும், ஒரு குழந்தை பெறுவதற்காகப் பல தியாகங்களும், துன்பங்களுக்கும் ஆளான தாயாருக்கு விழா எடுப்பதை விட்டு விட்டு - குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

முதலாம் வயதிலேயே பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யும் நாம், முதன் முதலாக அப்பொழுதுதான் தாய்மொழி அழிப்பைத் தொடங்குகின்றோம். தொடர் பிறந்த நாள் என்றால் பரிசுப் பொருள்கள் முக்கியமாக விளையாட்டுப் பொருள்கள் நிறைய வரும் என்று பிஞ்சு மனத்தில் விதைக்கின்றோம்.

பின்னாளில் விளையாட்டுப் பொருள்கள் நிறைய பெறவேண்டியே குழந்தைகள் தங்களின் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்துள்ளனர். அடுத்த முறை விழாவை நடத்த மறுத்தால் தேவையற்ற ஆர்ப்பாட்டம் செய்வார்கள், பெற்றோர் கூட எதிரியாகத் தெரிவர். பிடிவாத குணம் இங்கிருந்துதான் விதைக்கப்டுகிறது.

இளவயதில் நல்ல பழக்க வழக்கங்கள் பண்புகள் கற்றுக் கொள்ள வேண்டிய இவர்கள், விழாக்கள் என்பது பரிசு பெறும் நிகழ்வுகளாக நினைத்துக் கொண்டு - பரிசு கொடுப்பவர்கள் நல்லவர்களாகவும்,. மற்றவர்கள் வேண்டாதவர்களாகவும் அக்குழந்தைக்குத் தெரிவிக்கின்றனர்.

அம்மா என்பர் மம்மியாகவும், அப்பா என்பவர் டாடியாகவும், அண்டி, அங்கிள், பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் எல்லாம் இந்த பிறந்த நாள் விழாவில் இருந்துதான் தொடங்குகின்றன. இங்கே பெற்றவள் ஒரு காட்சிப் பொருளாக இருக்கிறாளே ஒழிய கண்கண்ட தெய்வமாகப் பெருமைப் படுத்துவதே இல்லை. அழைப்பிதழில் கூட சங்கராச்சாரியார் கூறியது போல தமிழ் ஒரு நீச மொழியாகவே இவர்களுக்குத் தெரிகிறது.

முதலாம் வயது பிறந்தநாள் விழா இப்படி யென்றால் 21 ஆம் வயது விழா மரபை மீறி பல இடங்களில் கொண்டாடப் படுகிறது. வசதி உள்ளவர்கள் நட்சத்திர ஓட்டல்களிலும், நடுத்தரக் குடும்பங்கள் மண்டபங்களிலும், ஒரு சிலர் வீடுகளிலும் கொண்டாடிக் கொள்கின்றனர்.

இந்த மூன்று விதமான இடங்களிலும் கலந்து கொண்டுள்ள நான் அங்கு நடைபெற்ற கூத்துகளைக் கண்டு அதிர்ந்து போய் இருக்கிறேன்.

21 ஆவது வயதை எட்டிப் பிடித்து விட்டது என்பதை ஏதோ மிகப் பெரிய சாதனை செய்வது போல் கருதி சம்பந்தப்பட்ட விழா நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ தனித்துவம் கொடுத்து, எதிர்கால வாழ்க்கையையே ஒரு கேள்விக் குறியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு வரும் பெண் விளக்கை ஏற்றுவதற்குத்தான் என்ற தமிழ் மரபு கற்றுக் கொடுத்த பரம்பரை அதே பெண்ணை சுடர்விட்டு எரியும் விளக்கை அணைக்க வேண்டும் என்ற கட்டாய மரபுக்கு மாற்றிவிடுகிறோம்.

தங்கத்தால் செய்யப்பட்ட திறவு கோல் ஒன்றைக் கழுத்தில் மாட்டி விடுகின்றனர். எதிர்காலத்தில் ஒளிமயமான வாசல் கதவைத் திறக்கப் பயன்படும் திறவு கோல் என்ற பொருளில் போடப்படும் இந்தத் திறவுகோல். வேறு ஒரு பூட்டைத் திறப்பதற்கு உள்ள வயது என்ற அர்ததமே கற்பிக்கப்படுகிறது அல்லது தெரிந்து கொள்ளப்படுகிறது.

வழமையான பரிசுப் பொருள்கள் போக ஆணுறை,கர்பத்தடை மாத்திரைப் போன்றவற்றையும் பெற்றுக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர். அதை உபயோகிக்கும் முறையும் மறைவில் கற்றுத் தரப்படுகிறது.

இது மட்டுமா தந்தையே மகனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து Chears என்று எல்லோரையும் முழங்க வைக்கிறார். அதை அந்தத் தாயும் ரசிக்கின்றார். கேட்டால் நல்லது கெட்டது அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தவறு இழைப்பதிலிருந்து தப்பிக்க முடியும் என்று விளக்கம் கூறுகின்றனர்.....

...இப்பொழுது கொண்டாடப் படுவது Happy Birthday to you அல்ல Damaging future day for you.

நன்றி : செம்பருத்தி இதழ் - டிசம்பர் 2006


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061