வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 12 - 2006வளையல் கதை

அணிகிறபொழுதே மூன்று
உடைந்தன.

துணி துவைக்கையில் ஒன்று
உடைந்தது.

கணவனின் மிருக
உந்துதலால்
இரண்டு உடைந்தன.

பேருந்து நெரிசலில்
இரண்டு உடைந்தன.

மாமியாரின்
மர விரல்கள் பட்டு
மூன்று உடைந்தன.

மீதி வலையல்களை
மரபு உடைத்துவிட்டது.
மரபை உடைக்கப் பழகு.

- கபிலன் -
நன்றி : புதுக்கவிதைப் பூங்கா - அக் 2006
மக்களை நோக்கி மக்கள் தொலைக்காட்சி

இரண்டு மூன்று திரைப்படங்கள், இளம்பெண்கள் வயிற்றைக் காட்டி ஆடும் பாடல் காட்சிகள், நடிகர் நடிகையர், இயக்குநர் என எவரிடமாவது நேர்முகம், சோதிடர், சமையல்காரர், மருத்துவர் எனச் சிலரின் ஆலோசனைகள், இரண்டு மூன்று முடியாத தொடர் கதைகள், என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகளில் 75 விழுக்காடு திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே. தலைவலியோ - தலைவிதியோ எனச் சோர்ந்து போன தமிழ் மக்களுக்கு மன ஆறுதலைத் தருகிறது மக்கள் தொலைக்காட்சி.

1. தமிழிசை : தேவாரம், திருவாசகம், எனப் பண்ணோடு கலந்த பாடல்களின் அணிவகுப்பு அதிகாலையிலேயே.

2. சான்றோர் வீதி : மக்களுக்காகச் சிந்தித்துச் செயற்படும் அறிஞர்களுடன் நேரடி உரையாடல். அவர்களது சிந்தனை, செயல்பாடு, என அனைத்தும் அலசப்படுகின்றன. பெயருக்கேற்ப, சான்றோருடன் அவர் வாழும் வீதியில் உலவிக் கொண்டே உரையாடும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளமை தனிச் சிறப்பு.

3.நீதியின் குரல் : வாழ்க்கைச் சிக்கலை முன்வைத்து தொலைபேசியில் குறைகளைச் சொல்லும் மக்கள், அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்னும் கருத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள்- அதிகாரிகளின் பதிலைப் பெறும் முயற்சியில் சி.ஆா.பாசுகரன், மக்கள் பயனடைவர்.

4. தேவைகள் - சேவைகள் : சுற்றுச் சூழல் கேடுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழவிடம் சென்று குறை கேட்பதும், காட்சிகள் விவரிக்கப்படுவதும் அருமை.

5.கல்லூரிக் கதவுகள் : ஒவ்வொரு கல்லூரியாய்ச் சென்று இளம் சிந்தனையாளர்களை அடையாளம் காட்டுகிறார் சுப.வீ.

6. நூல்வெளி : தரமான நூல்களைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

7. சங்கப்பலகை : வரலாற்று நிகழ்வுகள், சிறுகதைகள்,புதினங்கள் பற்றிய தொகுப்பு.

8. தமிழ் பேசு.. தங்கக்காசு...: தமிழ்நாட்டினர் பிற மொழி கலக்காமல் தமிழில் பேசுவது இயலாத காரியம் போல் ஊடகங்கள் உருவாக்கிய போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி.

9.தமிழ்க் கூடம் : பல்துறை அறிஞர்களின் உரையாடல்.

10. தமிழ்த் தேனருவி : தமிழ் இசைப் பாடல்கள் உலா வரும் நிகழ்ச்சி.

11. பல்சுவை : பழமொழிகள், கதைநேரம், உடல்நலம், அறிவுக்கு விருந்து, மகளிர் உலகம்,செய்திகள் எனப் பயன் தரும் நிகழ்ச்சிகள்.

12. மக்கள் செய்திகள் : நன்கு தயாரிக்கப்படுகின்றன. எனினும் விளையாட்டுப் பகுதியினை கிரிக்கெட் ஆக்கிரமித்துக் கொள்வது நியாயமா? இதற்குப் பல தொலைக்காட்சிகள் உள்ளனவே ! மக்கள் விளையாட்டுகளான கபடி, கைப்பந்து, கால்பந்து, ஓட்டம், சாட்டம், போன்றவற்றுக்கு உயிர் கொடுக்கலாமே?

13. வில்லும் - சொல்லும் : வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் நல்ல நிகழ்ச்சி

14. சொல்லோவியம் : செய்தி அலசல் : போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் நேர்த்தி செய்யப்பட வேண்டும். அரைமணி நேரம் எந்தக் காட்சியும் இல்லாமல் ஒருவர் பேசிக் கொண்டிருப்பது சலிப்பைத் தரும்.

15. ஆட்டோ சங்கர் போன்ற எதிர்மறை மனிதர்களின் கதை மக்களுக்குச் சொல்லப்போகும் செய்திகள் என்ன? காவல் துறையில் உள்ள குறைகளைக் காட்ட வேறு சான்றுகளே இல்லையா? மருதுபாண்டியரின் புரட்சித் தொடரைப் பார்க்கும் மாந்தரிடையே இத்தகைய நோய்மாந்தர் பற்றிய தொடர் எதிர் விளைவுகளையே உண்டாக்கும்.

16. மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது சினிமாக்கள் இடம் பெறாது எனும் நம்பிக்கை உருவாக்கப்பட்டது. இதனை உறுதியாகக் கடைபிடிப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கலை ஆர்வத்தினை ஈடு செய்ய பரதநாட்டியம், சிலம்பம், கும்மி, தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், போன்ற கலைநிகழ்ச்சிகளை அவ்வப்போது இடம் பெறச் செய்யலாம். நல்ல நிகழ்ச்சிகள் மட்டும் இடம் பெறும் எனும் நம்பிக்கை தொடருமானால் மக்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர் வட்டம் விரிந்து பரவும்.

- நாஞ்சில். செ. நடராசன் -
நன்றி : மக்கள் நெஞ்சம் இதழ் - டிசம்பர் 2006
சிலையான பின்பும் பெரியார் போராடுகிறார்.

.... பெரியார் சிலை மீது பக்தர்களுக்குக் கோபம் கிடையாதாம். சிலைக்குக் கீழே தந்தை பெரியார் சொன்ன வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதே அதுதான் பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதாம். உண்மையிலேயே பக்தர்கள் மனத்தைப் புண்படுத்துகிறதா? எனச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

தந்தை பெரியார் சிலைகள் கீழ், கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்படுகிறது. அவை. கடவுள் இல்லை - கடவுள் இல்ைலை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி - தந்தை பெரியார்.

இதில் எந்த இடத்தில் தந்தை பெரியார் கடவுளை இழிவுபடுத்தினார். அவமானப்படுத்தினார் என்பதைச் சீர்தூக்கிப் பாருங்கள். எந்த இடத்திலும் கடவுளைப் பெரியார் இழிவுபடுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இல்லை எனச் சாதாரணமாகச் சொன்னால் கூட ஏதாவது மாற்றங்களைச் செய்து விடப் போகிறார்கள் எனக் கருதிய பெரியார், இரண்டு முறை இல்லை என்று சொல்லி விட்டு மூன்றாம் முறை இல்லவே இல்லை என அழுத்தம் கொடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் கடவுளைத் திட்டவே இல்லை. ஏன் என்றால் இல்லாத கடவுளை ஏன் திட்ட வேண்டும். கடவுள் உண்டு என்பதோ, இல்லை என்பதோ கடவுளைத் திட்டுவது ஆகாது. அடுத்து கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்னார். கடவுளை முட்டாள் என்று பெரியார் சொல்லவில்லை. ஏனெனில் இல்லாத கடவுளை அறிவாளி என்றோ முட்டாள் என்றோ சொல்ல வேண்டியதில்லை. மிகமிகத் தெளிவாகக் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார். இதற்காக யார் கோபப்பட்டாலும், அவர்களும் கடவுள் கற்பிக்கப்பட்ட ஒன்று என்பதையும், அப்படிக் கற்பித்தவன் செயல் முட்டாள தனமானது என்றும் ஒத்துக்கொள்வதாகவே பொருள்படும். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்றார். இங்கேயும் கடவுளை அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொல்ல வில்லை. ஏனெனில் இல்லாத கடவுளை ஏன் அயோக்கியன் என்று சொல்லவேண்டும் என்பதுதான் அவர் கருத்து. ஆனால் கடவுள் என்ற தன்மையைப் பரப்புகின்ற செயலைச் செய்பவன், செய்கிற மனிதன்தான் அயோக்கியன் ஆவான். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் கடவுள் காட்டுமிராண்டி என்பது கிடையாது. கடவுளை வணங்குபவன்தான் காட்டுமிராண்டி என்பதாகும். ஆகவே தந்தை பெரியாரின் வாசகத்தை ஆழ்ந்து பார்த்தால் உண்மை தெளிவாகப் புரியும்.

தந்தை பெரியார் சிலை அமைக்க 1972 ஆம் ஆண்டிலேயே உரிய பணம் கட்டணமாகச் செலுத்தி, தமிழக அரசிடம் அனுமதி பெற்ற இடத்தில்தான சிலை வைக்கப்பட்டுள்ளது. 200 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை 20 அடி உயரமுள்ள பெரியார் சிலை மறைக்கிறது என்பது மமதை வாதம். மதவாதம் எனலாம். அப்படி என்றாலும் ராஜகோபுரம் கட்டியது தநதை பெரியார் சிலைக்கு அனுமதி பெற்ற பின்தான் என்பதால் அவர்களின் உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டது.

அனுமதியின்றி - வரைபடம் இன்றி கட்டப்பட்டுள்ள கோயில்களும், நடைபாதை கோயில்களும் அனுமதியோடு வைக்கப்படுகிற சிலைகளைப் பாாத்துச் சிரிக்கும் என்றால், அந்த ஆணவச் சிரிப்பை அடக்கத்தான் வேண்டும்.

நன்றி : அறிவுக்கொடி இதழின் ஆசிரியர் உரை. - சனவரி 2007
தமிழ் மரங்களை ஆராயும் ஜப்பான் நாட்டு - ஸஸாகி

தமிழ்நாட்டுக்கு 2004 இல் வந்தபோது தமிழ் மொழியின் ஒலியமைப்பு ஜப்பானிய மொழியின் ஒலியமைப்போடு தொடர்புடையதாகத் தோன்றியது. உதாரணமாக இப்போது என்ற சொல்லை பேச்சு வழக்கில் இப்பம் என்பீர்கள். ஜப்பானிய மொழியில் நாங்கள் நிப்பம் என்போம். அதுபோல தமிழ் உயிரெழுத்துகளில் அ,இ,உ,எ,ஒ ஆகியவற்றை குறில் என்றும் ஆ, ஈ, ஊ,ஏ ஓ, ஒள ஆகியவற்றை நெடில் என்றும் சொல்வீர்கள். இதே குறில் நெடில்கள் தான் ஜப்பானிய மொழியில் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

சீன ஜப்பானிய மொழிகளில் எழுதப்பட்ட பவுத்த நூல்களில் தமிழ் மொழியில் உள்ளதுபோல பாயிரம் இருக்கிறது. அதில் சோழ தேசத்திலிருந்து வந்தவனாகிய நான், தாமிரவருணி நதிக்கரையிலிருந்து வந்தவனாகிய நான் இந்த நூலை எழுதுகிறேன். என்று துறவிகள் எங்கிருந்து வந்தோமென்று எழுதி வைத்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் பல பாகங்களில் புத்தர் சிலைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டையும், ஜப்பானையும் இணைத்தது பவுத்த மதமாகத்தான் இருக்க முடியும் என்று தகவல்களால் மிரட்டுகிறார் ஸஸாகி

தமிழ்நாட்டுப் புனித மரங்கள் என்னும் தலைப்பைத் தன் பி.எச்டி ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கிறார் அவர். புத்தர் போதி மரத்தோடு தொடர்புடையவர். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் போதிமரம் புனிதமாகக் கருதப்பட்டது. பவுத்தம் அழிந்தபோது அந்த போதி மரத்தடியில் இருந்த புத்தரை எடுத்துவிட்டுப் பிள்ளையாரை வைத்து விட்டார்கள். இன்றுள்ள பெரும்பாலான பிள்ளையார் கோயில்கள் புத்தர் கோயில்களே என்கிறார் யாசுகோ ஸஸாகி.

ஒவ்வொரு கோயிலிலும் உள்ள தாவரங்கள் என்று கூறப்படும் புனித மரங்கள் பற்றி ஆய்வு செய்கிறார் ஸஸாகி. வன்னி, புன்னை, கருங்காலி, பாதிரி, சந்தனம். கொன்றை. மருதம், மகிழம். வில்வம், கல்வாழை, கருத்து, காட்டத்தி, நாவல், சண்பகம், புரசை மரம், பாரிஜாதம்.. இப்படி மர இனங்களையும், தாவர இனங்களையும் கோயிலில் தமிழ் மக்கள் தலவிருட்சங்களாக வளர்த்தார்கள். பவுத்த விகாரைகளில் போதிமரம் வளர்த்த தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சியே இது. இதன் பின்புலத்தைத்தான் ஆய்வு செய்கிறேன் - என்கிறார் ஸஸாகி.

நன்றி : நமது தமிழாசிரியர் - டிசம் 2006
தமிழ் ஓசை - தமிழ்ப் பத்திரிகை

நல்ல தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் விடும் தமிழ் ஓசையைப் பாராட்டுகிறோம்.

மற்ற ஏடுகள் பயன்படுத்திவரும் அயற்சொற்களுக்குப் பகரமாக நல்ல தமிழ்ச் சொற்களை நாளும் பரப்பித் தமிழ் வளர்க்கும் தமிழ் ஓசை நாளேட்டை அறிஞர் உலகம் அகமகிழ்ந்து பாராட்டுகிறது.

ஜரமீன் பிணை மத்திய அரசு நடுவணரசு ரெயில் தொடர்வண்டி வீடியோ காண்பொளி பிரதிநிதி பேராளர் அலட்ராசவுண்டு புற ஒலி பாபோர்ட் கடவுச்சீட்டு ஸ்ரீரங்கம் திருவரங்கம் டிரான்பர்மர் மின்மாற்றி விவசாயிகள் உழவர் வியாபாரம் வணிகம் விமானம் வானூர்தி லாரி சரக்குந்து கார் சிற்றுந்து ஆட்டோ தானி ஹெலிபாப்டர் உலங்கூர்தி கிராமம் சிற்றூர்.

இன்று தவராக வழங்கும் ஐயன் திருவள்ளுவர் என்பதற்கு ஐயன் திருவள்ளுவன் என்றும், தீயணைபபு என்பதற்கு தீயவிப்பு என்றும் போக்கிரி என்பதற்கு போக்கிலி என்றும் உள்ள சரியான வடிவஙகளைப் பயன்படுத்துவதையும் பாராட்டுகிறோம்.

நன்றி - தெளிதமிழ் திங்களிதழ்
சிறகடித்துப் பறக்கும் நுண்வானூர்திகள்
நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு புதிய அடிப்படையில் உருவாக்கப்பட்டவை இந்த நுண்வானூர்திகள். பல வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து அவை எப்படி சிறகடித்துப் பறக்கின்றன என்று நிபுணர்கள் நீண்ட ஆராய்ச்சி நடத்தினர். வானூர்தி மாதிரிகளை சோதிப்பதற்குப் பயன்படுத்துகிற காற்றுச் சுரங்கம் போலவே வண்ணத்துப் பூச்சிகளுக்கென தனி காற்றுச் சுரங்கம் உருவாக்கப்பட்டது. இப்படியானஆராய்ச்சிக்குப் பிறகே நுண்வானூர்திகள் உருவாக்கப்பட்டன.

அண்மைக்காலமாக நுண்ணிய கருவிகளைத தயாரிப்பதற்கான சிறப்புப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளதன் பயனாகவே நுண்ணிய வானூர்தி உறுப்புகளையும் நுண்ணிய வீடியோ காமிராக்களையும் தயாரிக்க முடிந்துள்ளது. இப்படியான முன்னேற்றத்தின் பயனாக உருவாக்கியதே நுண் வானூர்திகளாகும். இவற்றில் சிறகடித்துப் பறக்கும் நுண்விமானம் நிலையான இறக்கை கொண்ட நுண்வானூர்தி. நுண் திறகிறகி வானூர்தி. எனப் பல வகைகள் உள்ளன. நுண் வானூர்தி எந்த அளவுக்குச் சிறியதோ அந்த அளவுக்கு அதைத் தயாரிக்க அதிக செலவாகிறது.

இவற்றுக்கு ஓர்னிடோப்டர், எண்டோமாப்டர், மெசிகாப்டர் எனப் பல வகைப் பெயர்கள் உண்டு. இவற்றில் எண்டோமாப்டர் என்பது 50 கிராம் எடை கொண்டது. நீளம் 15 செ.மீ. எரிபொருளின் எடை 25 கிராம். இது 10 கிராம் பொருளைச் சுமந்து செல்லக்கூடியது. மெசிகாப்டர் என்பது திருகிறகி மாதிரியானது. இதன் சுழலிகள் 10 மைக்ரோகிராம் அளவுக்கு மெல்லியவை. நிறைய எண்ணிக்கையிலான மெசிகாப்டர்களை தேனீக்கூட்டம் போல பறக்கவிட்டால் அவை குறிப்பிட்ட பணிகளை முடித்துவிட்டு மறுபடி மறு இணைப்பு(ரீசார்ஜ்) செய்து கொள்ள புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும். எதிர்காலத்தில் போர்கள் இந்த நுண்வானூர்திகள் இடையில் நடைபெறுவதாக இருந்தாலும் வியப்பில்லை.

எனினும் இவற்றின் பொதுப் பெயர் நுண் வானூர்திகள் என்பதே. ஆராய்ச்சியாளர்களின் இறுதி நோக்கம் சுமார் 30 கிராம் எடையும் 7 சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வானில் சுமார் 50 நிமய நேரம் பறக்கக் கூடிய நுண் வானூர்தியை உருவாக்குவதே ஆகும்.

நன்றி : தமிழ்ப்பாவை 1-1-2007
சாதிக்கப் போகிறவர்களை வரவேற்கிறது நாற்று இதழ்.

1330 திருக்குறளையும் தவறின்றி 46 நிமிடங்களில் ஒப்புவித்த புதுச்சேரி காலாப்பட்டைச் சேர்ந்தவர் சாதனைச் சிறுமி சி.ரா. கனிமொழி.

அதிகார வரிசையைச் சொல்லிக் கேட்டாலும், குறட்பா எண்ணைச் சொல்லிக் கேட்டாலும், மிகச் சரியாக விரைவாகத் திருக்குறளை தங்குதடையின்றிச் சொல்லும் நினைவாற்றல் கொண்ட குயிலாப்பாளையும் மாணவன் கோபால கிருட்டிணன்.

மத்திய அரசின் 2005 ஆம் ஆண்டுக்கான பால்ஸ்ரீ விருது பெற்ற மாணவி தீபிகா.

கிராமப்புறப் பள்ளியில் இருந்து தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் பஙகேற்று இரண்டாம இடம்பெற்ற சாதனை மாணவன் திருவாண்டார் கோயில் சத்தியராசு.

புதுடெல்லியில் உள்ள தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2005 - 06 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான திறனறிவு எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவி தரணி பிரியா.

அகில இந்திய அளவில் சிறந்த மாணவர் விமானிக்கான தங்கப் பதக்கம் வென்ற புதுசசேரி பிளைட் கேடட் பிரபாகரன்.

புதுச்சேரியின் சார்பில் இமயமலையில் 17500 அடி உயரமுள்ள திரோபதி - கா- தந்தாவில் வெற்றிகரமாக ஏறி சாகசம் புரிந்த மாணவன் அருண்குமார்.

12 அகவையில் சிறகின் கீழ் வானம் துளிப்பா நூல் வெளியிட்டு முதல்வரின் பாராட்டைப் பெற்ற மாணவி கவிதாயினி கு.அ.தமிழ்மொழி.

(புதுச்சேரியிலிருந்து வெளிவரும் இதழ், அந்தப் பகுதி இளம் நாற்றுகளைப் பட்டியலிட்டு விட்டது. இதுபோல ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தமிழ்ச் சிறுவர்களின் வெற்றிகளை அந்தப் பகுதிச் சிற்றிதழ்கள் பட்டியலிட்டுப் பெருமைப் படுத்தலாமே! )

நன்றி : நாற்று இதழ் - டிசம் 2006
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் அருந்தமிழ்ப் பயிற்சி

அறிஞர் அண்ணாவை அழைத்துப் பெருமைப்படுத்திய ஏல் பல்கலைக்கழகம்- தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுத்தர உள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்க நாட்டு ஏல் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியரும், தென் ஆசியக் கல்விக்குழுவின் தலைமைப் பொருளியல் பேராசிரியரும், தென் ஆசியக் கல்விக் குழுவின் தலைவருமான சீனிவாசன் அறிவித்துள்ளார். உலகில் 8 கோடி மக்கள் பேசும் மொழியும், 5 நாடுகளின் நாட்டு மொழியும், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஈராயிரம் ஆண்டுக்கு மேல் இடையறா இலக்கிய மரபுடைய மொழியுமான தமிழைத் தென் ஆசியக் கல்விக்குழு, பாடத்திட்டத்தில் இணைத்துத் தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு பற்றிச் சொல்லித் தரவேண்டுமென 900 மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது ஏற்கப்பட்டு ஏல் பல்கலைக் கழகம் முழுநேரத் தமிழ்ப் பேராசிரியர்களைப் பணியில் அமர்த்தித் தமிழ் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளது.

நன்றி : ஊற்று பெங்களூரிதழ் - டிசம்பர் 2006 (நன்றி : தெளிதமிழ் இதழ்)

உலகை காப்பாற்றுங்கள்

புவி வெப்பமடைதல் பற்றி மீண்டும் ஓர் எச்சரிக்கை
- சுரேசு -

மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தாகிவிட்டது. வளர்ந்த நாடுகளின் தலைமைகள் இதைக் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறது ஒரு வலுவான எச்சரிக்கை. உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் விரைவில் உலகின் இயக்கம் முற்றிலும் சீர் கெட்டு விடும். என்பதே அந்த எச்சரிக்கை.

புதிய எச்சரிக்கையை விடுத்திருப்பது நாசாவின் கோடார்ட் வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர் குழு.

அந்தக் குழு எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு முக்கிய காரணம். உலக வரலாற்றில் பனிக்காலம் முடிந்த பிறகு, அதாவது கடந்த 12,000 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டு 2005 என்பதுதான். உலக மக்களும், கொள்கை வகுக்கும் அரசுகளும் மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை இது.

உலகம் வெப்பமடைந்து வருவதால் தட்ப வெப்பநிலை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்று சுற்றுச் சூழலியலாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். தொழிற்சாலைகள் வளிமண்டலத்தில் பசுமை இல்லா வாயுக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதே, உலகம் வெப்பமடைவதற்கு மிக முக்கிய காரணம்.

தொழிற்புரட்சி தொடங்கிய போது வெப்பத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட கார்பன்-டை-ஆக்ஸைடு வளிமண்டலத்தில் 280 பிபிஎம்(10 லட்சத்தில் ஒரு பங்கு) தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 100 பிபிஎம் அதிகரித்து (35 விழுக்காடு) 380 பிபிஎம் ஆக அதிகரித்து விட்டது.

மனிதர்கள் உருவாக்கிய பசுமை இல்லா வாயுக்கள் அளவு அதிகரித்து வருவதன் காரணமாகக் கடந்த 30 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என நாசா அறிவியலாளர் ஜேம்ஸ் ஹான்சென் குழு கணித்துள்ளது. எரிசக்தி தொடர்ந்து தேவைப்படுவதால், தொடர்ந்து பசுமை இல்லா வாயுக்கள் வெளியிடப்படும். எனவே, வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. உலகின் வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததால் கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையாக அது இருக்கும்.

மிகவும் வெப்பமான ஒரு உலகம், உலகின் பல்லுயிரியத்தையும், விவசாயத்தையும் கடுமையான ஆபத்துக்குள் தள்ளும். ஏனென்றால் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகிலள்ள 1,700 தாவர விலங்கு பூச்சியினங்கள் ஒவ்வொரு ஆண்டும் துருவப் பனிப் பிரதேசங்களை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகின்றன.

வீடுகள், அலுவலகங்கள், கார்கள், போர்விமானங்கள், தொழிற்சாலைகள் - கார்பன் அடிப்படையாகக் கொண்ட புதைபடிம எரிபொருள்களை எரிசக்திக்காக அதிகம் பயன்படுத்துவதால் தான் உலகம் வெப்பமடைவது வேகமடைகிறது என்று அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மனித குலத்தை கேள்விக் குறியாக்கும் வகையில் இந்த அதிகரிப்பு நிகழந்து வருகிறது.

இந்த வெப்ப அதிகரிப்பு தொடர்வதால் உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து, அன்டார்டிகாவில் உள்ள பனிப் பாளங்கள் தொடர்ந்து சிதைந்து வருகின்றன. இவை வெறும் பனிப் பாளங்கள், பனிப் பாலைவனங்கள் என்றே கருதப்பட்டன. ஆனால் உண்மையில் இவைதான் உலகில் வெப்ப சமநிலையை பாதுகாக்கின்றன - என்பதை உணர வேண்டும்.......

நன்றி : சுற்றுச் சூழல் மாத இதழ் - டிசம் 2006.www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061