வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 21 - 01 - 2007மழலையை அழவிடுக

காரணமின்றி ஒரு மழலை
கண்ணீர் சிந்தி அழுகிறதா?
சென்று தூக்கி அணைக்காதீர்
செல்லக் குடத்தை அழவிடுக.

அதுவாய் அழுகை நிறுத்தும் வரை
அருகில்கூட அண்டாதீர்
தன்கால் நிற்கப் பழகிடுமே
தங்கக் குடத்தை அழவிடுக.

கண்டதுக் கெல்லாம் அழும்போது
கையின் அனப்பை ஊட்டாதீர்
கள்ளம் படித்துக் கொள்ளாமல்
கரும்புக் குடத்தை அழவிடுக.

அகத்தின் மாசு அழுநீராய்
ஆறாய் பெருகி ஓடிவர
இஞ்சிச் செடியும் தழைக்காதோ
இன்பக் குடத்தை அழவிடுக,

அல்லல் தாங்கும் பக்குவமும்
அறிவூற்றெல்லாம் தத்துவமும்
அழுகையினாலே வருமம்மா
ஆசைக் குடத்தை அழவிடுக.

அழகுத் தமிழின் தொண்டைவளம்
அழுகையினாலே உண்டாகும்
அழுது அழுது அடங்கட்டும்
அன்புக் குடத்தை அழவிடுக

கண்மணி அழுகை கேட்கிறதா
பெண்மணி பதறி ஓடற்க
மண்மணியாகத் திகழணுமா
மழலைக் குடத்தை அழவிடுக.

பொ. செல்வராசு


குப்பை
ஒவ்வொரு வீட்டின்
சுய குப்பையெல்லாம்
பொதுவாகிவிட்டது.
தொட்டியில் விழுந்து..
ஒன்றாய் குவிந்து
ஒரு சேர ஆனதில்
குப்பைகளொரு
குடும்பமாகிவிட்டது.
எவருடைய குப்பை
எதுவென்று திரும்ப
எடுக்க முடியாது
புலம் பெயர்ந்த அது
புதுப்
பொருளாகியிருக்கும்
அழகையிழந்ததால்
அது..அப்படியொரு
அவப்பெயரானது.
பயன்பட்ட பின்பே
அதற்கிந்த
அனுபவப் பெயரானது
அதன்..
புறத்தோற்றத்திற்கு முன்பு
பொலிவிருந்தது
புது நிறமிருந்தது
நறு மணமிருந்தது.
அது..
அப்படியானதற்கு
படைப்பைவிட
பயன்பாடே
காரணமானது.
பயன்படாத எதுவும்
படைப்பாகாது,
தோற்றமான எதுவும்
மாற்றமாகியே தீரும்.
குறிப்பிட்ட பொருள்களின்
குணம் மாறுவதால்
குப்பையெனும் பெயரே
குறியீடாகிறது.
குப்பைகளுக்கு
வேஸ்ட் என்றொரு
குணப்பெயரிடுகிறார்கள். அது
குறைவான மதிப்பீடாகும்.

உணவிலிருந்து
உலோகம் வரை
காகிதத்திலிருந்து
ஆயுதம் வரை
உருவான போதிருந்த
உயர்வான மதிப்பு
நுகர்வுக்குப் பின்
நூதனமில்லை என்று
குறைவாய்க் கருதினாலும்
குப்பையில் எறிந்த
பலவற்றைப் பொறுக்கி
வயிற்றைக் கழுவும்
வறியவர்களுக்கு இதுவே
வருவாய் ஆகிறது.

உண்டது போக எஞ்சியதை
எடுத்தெறிந்தாலும்
நாதியற்ற உயிரின மெல்லாம்
நம்பி வருகிறது
குப்பைகளே சோறு போடும்
எசமான் என்று.
மீ.க.சுந்தர்

நன்றி : பயணம் சனவரி 2007 - இதழ் 27
படைப்பு - வெ. இறையன்பு

அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.

அந்த வழியே சென்ற மற்றொருவர் "இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்" என்று குயவரிடம் கேட்டார்.
"நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்" என்றார்.

"அப்படியா" எனக் கேட்டுவிட்டு, அங்கிருந்த அழகிய பானைகளையெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.

பதறிப்போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்

அதற்கு "உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்" என்றார் வந்தவர்.

நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்கு சந்தோஷம் வருமா என்றார் கோபமாக.

"நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே !" என்றார் குயவருக்குப் புரிந்தது.

நன்றி : விகடகவி சனவரி இதழ்
பொதுப் பள்ளி முறை

தமிழக அரசின் முன் மாதிரி

செ. அனந்தராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளில் பெரும் பாலானோர் கல்வி நிலையில் பின் தங்கியவர்களாக இருக்கின்றனர்.

கல்வி என்பது தனிமனிதனுடைய அறிவுத்திறனை வளர்த்தெடுத்து, முழு ஆளுமையை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் சமூகத்தின் தரத்தினையும் நலனையும் வலுப்பெற வைப்பது ஆகும். 86 ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின்படி 13-12-2002 முதல் அரசியல் சாசன சட்டம் 21 அ பிரிவின் கீழ் 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி உரிமை அடிப்படை மற்றும் கட்டாயக் கல்வி உரிமையாக்கப் பட்டுள்ளது. இதனால் இங்கே பொதுப்பள்ளி முறை அவசியம் பெறுகின்றது.

வசதி படைத்த மேல்தட்டு சாதியைச் சேர்ந்த நகர்ப்புறத்தில் வாழும் படித்த பெற்றோர்களின் குழந்தையும் ஏழ்மையான கிராமத்தில் தினக்கூலி வாங்கும் பெற்றோரின் குழந்தையும் இரு வேறு விதமான கல்வியைப் பெறுகின்றனர். பள்ளிகளுக்கு இடையே ஏற்றத் தாழ்வு என்பது சமூக அநீதி மட்டுமின்றி நாகரிக சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இங்கே பொதுப்பள்ளி முறையில் பல்வேறு வகையான கல்வி முறை என்பது பின்தள்ளப்பட்டு, அனைவருக்கும் சமமான கல்வி என்றொரு நிலை முன்வைக்கப் படுகிறது. மேலும் பாலினம், மதம் , இனம், சாதி, வாழிடம், பொருளாதாரம் இவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமானதொரு தரமுடைய கல்வி வழங்கப்படுதலையே பொதுப் பள்ளி முறை என்கிறோம்.

குறிப்பாக இங்கே பொதுப்பள்ளி முறையில் குழந்தைகள் தங்கள் வாழிடத்தில் மிக அருகாமையில் உள்ள பள்ளிகளிலேயே சேர்க்கப்படுவர். இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வெளியிடத்திலோ, வேறு தனியார் மற்றும் பிறவழிக் கல்வி முறை பள்ளிகளிலோ பயிலவைப்பது என்பது தடுத்து நிறுத்தப்படுகிறது. வசதி படைத்தோரின் பிள்ளையும், கூலித் தொழிலாளியின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கும் நலை உருவாக்கப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக் கல்வி கொள்கையில் பொதுப்பள்ளி முறையை அடைவதற்கு அண்மைப் பள்ளி முறையை நடைமுறைப் படுத்துதல், அவசியமாகின்றது, இது குறித்துக் கல்விக் கொள்கையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். 1988 ஆம் ஆண்டு நடுவன் கல்விக் குழு பொதுப்பள்ளி மீதான வழிகாட்டுக்கு நாடு முழுவதும் பொதுப்பள்ளி முறையை அமல்படுத்தத் தேசியசெயல் திடடத்தை வடிவமைத்துக் கொடுத்தது. 1990 இல் ஆச்சாரிய ராமூர்த்தி குழுவும் இதனையே முன் வைத்தது.

மேலும் பாடச் சுமையினைக் குறைப்பது பற்றி ஆராய நியமிக்கப்பட்ட யஷ்பால் குழு அறிக்கை 1993 ஆம் ஆண்டில், நாட்டின் கலவி நலன் கருதி நடுவனரசு ஏற்று நடத்திவரும் சி.பி.எஸ்.சி பள்ளிகள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் தவிர அனைத்துப் பள்ளிகளிலும் பொதுப்பள்ளி முறை புகுத்தப்பட வேண்டும் என உறுதி தரப்பட வேண்டும். என அரசுக்கு அறிக்கை தந்தது.

2005 ஆம் ஆண்டின் தேசிய பாடத்திட்ட வரையறையில் பொதுப்பள்ளி முறையே வருமாண்டுகளில் நமது கல்விக் கொள்கையின் இலக்காக அமையும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக தமிழகத்தில் 8-9-2006 இல் அரசாணை நிலை எண் 159 மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி வழங்கவும் தரமான கல்வி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறியவும் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. தமிழகம் முன் மாதிரியாகப் பொதுப்பள்ளி முறையை செயல்படுத்தி வெற்றி கொள்ளுமானால் கல்வியில் புதியதொரு பரிணாமத்தினை விரைவில் அடைவோம்.

நன்றி : மனித உரிமைக் கங்காணி - சனவரி இதழ்
பெற்றோர் + ஆசிரியர் + மாணவர் = சமுதாயம்.

... இன்றைய உலக மாற்றமும், வேகமும் செய்தி ஊடகங்களும் சில வேளைகளில் நம் பிள்ளைகளைத் தவறான பாதையில் செல்ல வைத்துவிடுகிறது. இவற்றிற்கு குடும்பப் பண்ணனியும் சில வேளைகளில் துணையாய்ப் போய் விடுகிறது. குடும்ப வறுமையும், குடும்பச் சிக்கலும் பெற்றோர்களின் கவனமின்மையும், கண்காணிப்பு இன்மையும் - அதிக பாசம் அல்லது, அதிக கண்டிப்பும் கூட - பிள்ளைகளைக் கெடுத்து விடுகிறது.

இன்றைய நம்மின மாணவர்களின் மிகப் பெரிய சிக்கல் காதல். பள்ளிப் பருவத்தில் பாலுணர்வாலும், புற அழுத்தங்களாலும் வீட்டில் அன்பு குறைவதாலும் இவை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன இதற்குத் தமிழ்த் திரைப்படங்களும் தமிழ்த் திரையிசைப்பாடல்களும் வழியமைத்துக் கொடுக்கின்றன. காதல் சிக்கலால், பாடத்தில் பின் தங்குதல், பள்ளியிலிருந்து நீக்கப்படுதல், மற்றும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில மாணவிகள் கர்ப்பமாவதும் உண்டு. பாலுணர்வு மாற்றங்களை உணர்ந்து செயல்பட முடியாத நிலையில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடும் நம்மின மாணவர்களை காப்பாற்ற வழிகாண வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு அன்பாகவும், எடுத்துக் காட்டாகவும் பழக வேண்டும். ஒரு குழந்தை தனது சிறிய வயதில் பெற முடியாததை வயது எய்தும் பொழுது (பாலுணர்வு மாற்றம் அடையும் பொழுது) பெற முயல்வர் - என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தை நிறைவாகத் தாய்ப்பால் அருந்தாவிட்டால் அக்குழந்தை மனநிறைவு அடையாது. வயது எய்தும் பொழுது உணர்ச்சிகளுக்கு அதிகமாக அடிமையாகும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாகும் எனப் பல உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இது போன்ற புற சிக்கலாகிய தீய நண்பர்கள், திரைப்படம் மற்றும் திரையிசைப்பாடல்கள் தாக்கத்தையும் கவனிக்க வேண்டும். நாம் அவற்றை வெறுத்து ஒதுக்கப்படுவைதைக் காட்டிலும் அதனை எதிர்கொள்ளும் ஆற்றலைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

நாம், நம் பிள்ளைகளை உலகத்தின் செயற்பாட்டிலிருந்து பிரித்து எடுக்க முடியாது. நாம் என்னதான் மறைத்தாலும் அவை நம் பிள்ளைகளை எப்படியாவது வந்து அடைந்துவிடும். எனவே, எந்த வேளையிலும் எந்தச் சூழலிலும் அவற்றை எதிர்கொள்ளும் திறனைத்தான் நாம் நமது பிள்ளைகளிடம் ஊட்ட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் அனுபவத்தையும், துன்பத்தையும் பிள்ளைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்., அதே வேளையில் சொன்தையே சொல்லி பிள்ளைகளை வெறுப்பேற்றக் கூடாது. சுற்றத்தில் நடக்கும் சமூக சிக்கல்களைச் சுட்டிக் காட்டி, அதன் விளைவையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் மிக நயமாகவும் எடுத்துரைக்க வேண்டும்.

தோளுக்கு மேல் நம் மாணவர்களுக்கு சோறு ஊட்டுவதும் சில வேளைகளில் மடியில் உறங்கவைப்பதும், அணைத்து தன்னம்பிக்கையை ஊட்டுவதும், ஆசி வழங்குவதும் பிள்ளைகளுக்குப் பிடித்த உணவைச் சமைத்து ஊட்டுவதும் பிள்ளைகளோடு நாள்தோறும் பேசி அவர்களின் மனநிலை மாற்றங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன்வழி பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்லுறவும் உருவாகும். என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம் மாணவர்களின் எல்லாச் சிக்கல்களுக்குமே மூல கரணியம் அவர்களின் எல்லையற்ற உணர்ச்சிகளும், ஆசைகளுமே. பதின்ம வயது தங்கள் கண்டதை கேட்டதை, அனுபவித்துப் பார்க்கும் ஏக்கத்தை உருவாக்கும். உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமையாகிய மனம் அதை அடைய போராடத் துடிக்கும். அதனைக் கையாளும் திறன் நம் இளையவர்களுக்குக் குறைவே. எனவே நம் குழந்தைகளுக்கு அரணும் காப்பும் பெற்றோர்களே.

நல் நூல்களை வாசிக்கும் பழக்கமும் இசை, ஓவியம், யோகம், தியானம் போன்ற கலைகளில் பிள்ளைகளுக்கு நாட்டத்தை ஏற்படுத்துவதும் பெற்றோர்களின் கடனாகும்.

ஆக்கத்தை உருவாக்கும் சிந்தனைகளை நம் இளையோர் மனங்களில் சிறு வயதில் கற்பித்தால் அவர்களின் மன நிலை பக்குவப்பட்டிருக்கும். ஒரு வேளை சூழல் மனநிலையை மாற்றினாலும் அவற்றிலிருந்து விரைந்து விடுபட்டுவிடுவர். எப்போதும் தம் பிள்ளைகள் அறியாதவாறு பெற்றோர்கள் அதிகக் கண்காணிப்பைத் தங்கள் பிள்ளைகள் மேல் செலுத்த வேண்டும்.

ஒரு மாணவ இளைஞனின் மனநிலை மாற்றத்தை, அவர்தம் சொல்லிலும், செயலிலும், தலைமுடி சீவல், அணியும் உடை, நடை போன்றவற்றில் எளிதாகக் கண்டு கொள்ள முடியும். தம் பிள்ளைகளின் மனநிலை மாற்றத்தைச் சரி செய்ய சரியான அணுகுமுறையைக் கையாண்டு, பெற்றோர்களால் அதனை எதிர்கொண்டு மாற்றியமைக்க முடியும்.

நன்றி : செம்பருத்தி இதழ் - சனவரி 2007
கலைவாணரின் கண்ணீர்

நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் காட்சியளித்த கலைவாணர் - உண்மை வாழ்க்கையில் ஒரு மாபெரும் கொடையாளியாக வாழ்ந்திருக்கிறார். எடுத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்றுகூடப் பார்க்காமல் கொடுக்கும் வள்ளலாக வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவுமே கொடையாளியாகக் காட்டுகிறது.

வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டவர் கலைவாணர். வரையராது வழங்கிய கலைவாணர் தம் வாழ்நாளில் மற்றவர்களுக்கு வழங்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி வேதனைப்படத் தொடங்கினார்.

ஆண்டுதோறும் குற்றாலத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த கலைவாணர் அங்கு ஒரு மூதாட்டிக்குச் செல்லும் பொழுதெல்லாம் பணம் வழங்குவார். பலமுறை 100 ரூபாய் வழங்கிய கலைவாணர், சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அந்த இறுதிக் கட்டத்தில் ஒரு முறை 50 ரூபாய் வழங்கினார். அடுத்த முறை இருபது ரூபாய் வழங்கினார்.

வழங்கும் போதே கலைவாணர் கண்களில் கண்ணீர் தளும்பியது. இதனைக் கண்ட மூதாட்டி ஏன் அய்யா கலங்குகிறீர்கள் என்று கேட்டாள். அதற்குக் கலைவாணர் பலமுறை உனக்கு 100 ரூபாய் வழங்கும் வாய்ப்புப் பெற்ற நான் இன்று இருபது ரூபாய் வழங்க வேண்டிய நிலை வந்து விட்டதே. அடுத்த முறை உன்னைச் சந்திக்கும் பொழுது இல்லை என்று சொல்கின்ற நிலை வந்து விடுமோ என்று எண்ணிணேன். கண்களில் கண்ணீர் கோலமிட்டுவிட்டது என்று கூறினார்.

அய்யா உங்களுக்கு அந்த நிலை வராது என்று அந்த மூதாட்டி கூறினார். ஆம். அத்தகைய நிலை கலைவாணருக்கு ஏற்படவில்லை. காரணம் கலைவாணர் இந்த நில உலகில் பயணத்தை முடித்துக் கொண்டு, எல்லோரது நெஞ்சிலும் இடம் பிடித்து விட்டார்.

நன்றி : முகம் இதழ் - சனவரி 2007
கிளையிலமர்ந்து அடிமரம் வெட்டுகிறோம்.

இயற்கையை அழிக்கம் உலகமக்களின் இன்றைய ஊதாரி வாழ்க்கையை ஈடு செய்ய இன்னும் மூன்று உலகம் வேண்டும்.

இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு ரேஷன் விதித்துள்ளது. இத்தனை உணவு, இத்தனை ஆக்ஸிஜன், இத்தனை எரிபொருள் என்று வங்கிக் கணக்கில் ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பா குறிப்பிட்ட அளவு பணம் போட்டு, இதை எடுத்து நீ செலவு செய்து கொள்ளலாம் என கிரிடிட் கார்டு கொடுப்பதைப் போல. ஊதாரிப் பிள்ளைகள் கார்டை உரசி உரசி பணம் எடுத்து வருகின்றனர். மீதமுள்ள இருப்பு இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்கும். தீர்ந்து போனால் மீதமுள்ள நாட்களை எப்படி வாழ்வது என்ற கவலையின்றி சூதாடிக் கொண்டுள்ளது மனித குலம்.

சுரக்கும் அளவுக்கு மேலாக சுரண்டிக் கொண்டுள்ளோம். இன்றைய மனிதன் தன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக 25 விழுக்காடு இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளான். இந்த ஊதாரித் தனத்தை ஈடு செய்ய முடியாமல் இயற்கை தடுமாறிக் கொண்டுள்ளது. இந்த ஊதாரித்தனம் கடந்த 40 ஆண்டுகளாக வளர்ந்து 2050 இல் இது 100 விழுக்காடு அதிகமாகிவிடும். என் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

உணவு உடை எரிபொருள் - மனிதன் வெளிப்படுத்தும் கரிவளியை இயற்கை சலவை செய்து உயர்வளியாக்கும் திறன் என்பன, இயற்கை மறுவுறுவாக்கம் செய்து தரும் திறனுக்கு விஞ்சியதாகிக் கொண்டுள்ளது. விதை நெல்லைத் தின்று கொண்டுள்ளோம். இந்தப் போக்கு தொடருமானால் இயற்கை வளங்கள் அழியும். உயிரினங்கள் குறிப்பாக மனிதகுலத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும். கரிவளி வெளிப்படலாம் அதிய விவசாயம். அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல், காடுகள் அழிப்பு, கடலோர அலையாத்திக் காடுகள் அழிப்பு ஆகியன பெரும் பின் விளைவுகளை உண்டாக்கும். உலகின் பல்லுயிரிச் சமன்நிலை, முன் எப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்படும்.

ஐக்கிய அரபுக் குடியரசு தமது வளங்களை அழிப்பதில் முதலிடத்தையும், அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், பெற்றுள்ளன. இந்த அழிவு இப்படியே தொடருமானால், பூமியில் வளங்கள் விரைவில் கரைந்து மறைந்து விடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த பூமியின் இருப்புக்கு காற்று மண்டலத்தில் உள்ள உயிர்வளியின் அளவே காரணம். உலகின் உயிர்வளி குறைந்த போதெல்லாம் பேரழிவு நிகழ்ந்துள்ளது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய உயிரினங்களான டைனாசார்கள் உலாவின. உலகின் உயிர்வளி அளவு 10-13 விழுக்காடு குறைந்தது. அதன் விளைவாக 6 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசார்கள் முற்றாகப் பூண்டற்றுப் போயின. அதேபோல் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆக்ஸிஜன் குறைவால் முற்றாக அழிந்தன. அவை மீண்டும் உருவான ஒன்றரை கோடி ஆண்டுகளாயின. உயிர்வளியின் இருப்பும் குறைவும் உயிரினங்களின் இருப்பையும் முடிவையும் நிர்ணயிக்கிறது. உயிர்வளியின் இருப்புக்கு ஏற்ப உலகம் தனது சுமைகளைத் தூக்கி எறிந்து நடந்து செல்கிறது.

நமது பூமியைக் காக்க அல்ல. மனித இனம் பூண்டற்றுப் போகாமல் காக்க நமது பூமிக்கு நாம் கொடுக்கும் கரிவளியும், இயற்கை அதைச் செறித்துச் சமன்நிலையில் வைக்க உயிர்வளி உருவாக்கும் திறனும் சரியாக இருக்க வேண்டும். கயிற்றின் மீது நடந்துகொண்டிருக்கிறது பூமி. அனுபவிப்பது என்ற பெயரில் நாம் அழிவை வரவேற்கக்கூடாது.

நன்றி : சுற்றுச் சூழல் புதிய கல்வி - சனவரி 2007
நீதிமன்றத்தில் தமிழ் - வேதனையான சாதனை

மொழிவாரி மாநிலமாக 1956 நவம்பர் 1 இல் தாய்த்தமிழகம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இங்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளுக்கும், கலாச்சாரங்களுக்கும் அடிபணிந்துதான் கிடக்கிறது தமிழகம். தாய்த்தமிழ் வழிக் கல்வி தொடக்கப்பள்ளிகளில் கூட கட்டாயத் தேவையாக்கப் படவில்லை. தமிழ் தெரியாமலே முனைவர் பட்டங்கள் பெறலாம் என்ற நிலை. இருவேறு மொழிகளில் அனைத்துத் துறைகளிலும், தளங்களிலும் கையொப்பமிடலாம். வாதிடலாம். கற்றுத்தரலாம். புரியாத சமற்கிறுதத்தில் மட்டுமே மந்திரம் ஓதலாம். தமிழும் ஆங்கிலமும் கலந்து கலந்து நுனிநாக்கில் பேசி மகிழலாம். மழலையர்களுக்குக் கற்றுத் தரலாம், தாய்மொழியைத் தவிர்த்து நூற்றுக்கணக்கான மொழிகளில் ஆடிப்பாடி மகிழ்ந்து இன்புற்றிருக்கலாம் என்ற நிலை தமிழகத்தின் இருண்ட சூழலைப் பிரதிபலிக்கிறது.

இத்தகைய சூழலில்தான் உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் வழக்கு மொழியாக வேண்டும் என்ற ஆதங்கம் 2006 ஆம் ஆண்டின் கருணாநிதி அவர்களால் முன்வைக்கப்பட்டு சட்டத்தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைச் சாதனை என்பதா - வேதனை என்பதா - நம் சொந்த நாட்டில், நம் மண்ணில் நமது தாய்மொழியை வழக்கு மொழியாக்க வேண்டும் என்ற உணர்வு பதிவு செய்யப்பட, சட்டமாக்கப்பட எத்தனை ஆண்டுகளை நாம் கடந்துவர வேண்டியிருந்துள்ளது. அன்னைத் தமிழ் புரியாதவர்கள், தெரியாதவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக்கூடாது. வழக்குரைஞராகப் பணி செய்ய வாய்ப்பு நல்கக்கூடாது. என்பதில் நயன்மை உண்டு. நீதிமன்றத்தில் மட்டுமல்ல. அனைத்துத் துறைகளிலும் தளங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தைத்தான் தன்மானத் தமிழர்கள் அனைவரும் எப்போதும் கொண்டிருக்க இயலும்.

தேனமுதத் தமிழோசை திசையெட்டும் பரவுவதற்கு முன்பு, நமது தமிழ் தேசத்திலே, தமிழ் நாட்டிலே, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சூழல் உருவாக, கலைஞர் அரசு இனப்பற்றோடு துணிவோடு வரலாற்று ரீதியான தமிழ் தேசக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தமிழுணர்வாளர்களுக்குத் தற்பொழுது வளர்ந்து வருகிறது. தமிழுக்கு அமுது என்று பெயர், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - என்ற புரட்சிக் கவிஞனின் கனவு நனவாக தொடரட்டும். தமிழ்த் தேசமெங்கும் தமிழின உணவர்வு பொங்கட்டும்.

நன்றி : இலட்சியப் போராளி - சனவரி 2007
வள்ளலார் சபையை மீட்க வேண்டும்.

டாக்டர். ஜெய. இராஜமூர்த்தி

.... வள்ளற் பெருமான் தமிழ்நாட்டில் தோன்றி அகில் உலக சகோதரத்துவத்தையும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும் அவனிக்கு அறைந்து சென்ற அருளாளர்.அந்த முக்கிய லட்சியத்தை அடையத் தடைகளாக இருப்பவை சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள், வருணம், ஆச்சிரமம் முதலிய உலகாச்சார சங்கற்ப விகற்பங்கள் எனத் தமது கைப்பட எழுதி கையொப்பமும் நாட்டியுள்ளார்.

ஒரு கடவுளே வலியுறுத்திய வள்ளலார், அந்த ஒருகடவுளையும் ஒளியுறுவில் அருட்பெருஞ்சோதியாகக் கண்டவர். அந்த அருட்பெருஞ்சோதி என்னும் ஒளிவடிவ இறைமையை தரிசிக்க, வடலூரில் ஏற்படுத்தப்பட்டதே சத்தய ஞான சபை. எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே ஒளி வழிபாடு. ஒளியை எந்த மதத்தினரும் வணங்கலாம். அதற்கு யாதொரு தடையும் இல்லை.

மேலும் சத்திய ஞானசபை என்பது உண்மை அறிவை வெளிப்படுத்தும் அவை. அது கோயில் அல்ல. உத்தர ஞான சிதம்பரம் என்று அழைக்கப்படும் வடலூருக்கு அருகாமையில் சிதம்பரம், திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம், திருப்பாதிரிப்புலியூர் முதலிய சைவத் தலங்கள் கோபுரங்களோடு காட்சியளிக்கும் வேளையில் வள்ளலார் இந்த சபையை வித்தியாசமாக வடலூரில் ஏன் நிறுவினார் என்பதை யோசிக்க வேண்டும்.

எந்த சைவக் கோயிலின் வாசலிலும் கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே வரவும் என அறிவிப்புக் கிடையாது. அந்த அறிவிப்பு ஞானசபையில் உண்டு.

இந்த சபையின் வழிபாட்டு முறையும் வித்தியாசமானது என்று அன்றைய கலெக்டர் ஜே.எச். கர்ஸ்டின் தன்னுடைய கெஜட்டில் பதிவு செய்துள்ளார்.(தென்னார்காடு மாவட்ட கலெக்டர்)

அத்தகைய ஞானசபையில் சைவசமயத்தின் சின்னமான சிவலிங்க வழிபாட்டை நடத்தித் திருநீறு முதலியவற்றைத் தந்து அதனை ஒரு சமயக் கோயிலாக ஆக்குவது வள்ளலாருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா?

சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்னும் பார்ப்பனர் வடலூர் சத்திய ஞான சபையில் ஒருபக்கம் சிவலிங்கத்தை வைத்துப் பூசை செய்து வருகிறார். வள்ளலார் நெறி நிற்கும் பெருமக்கள் சிவலிங்கத்தை எடுத்து விடுமாறு கூறியும் அவர் அதை எடுக்க மறுத்துப் பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறார். அத்துடன் சிவன் கோயில்களில் நடப்பது போல் மாதா மாதம் பிரதோஷம் கொண்டாடுகிறார்.

வள்ளலார் இந்த சிவலிங்கத்தை வைக்கவா ஞானசபையைக் கட்டினார்? ஞானசபையின் ஒவ்வொரு படிக்கும், வாசலுக்கும், சன்னலுக்கும், தூண்களுக்கும் அதன் பிரகாரங்களுக்கும் மேற்கூரைக்கும் தத்துவரீதியான பொருள் உண்டு. அதில் சிவலிங்கத்திற்கு என்ன வேலை?

இந்து மதத்திற்குள்ளேயே வைணவர்கள் சிவலிங்கத்தை ஏற்றுக் கொள்வார்களா? ஒரு லிங்கத்தைக் கொண்டு போய் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கருவறைக்குள் வைத்து பிரதோஷம் தோறும் வழிபாடு செய்ய முடியுமா? வைணவர்கள் திருநீறு பூசுவார்களா?

இது இப்படியிருக்க எம்மதத்தினரும், யாவரும் வந்து வணங்கக் கூடிய சத்திய ஞானசபையை மற்ற இந்துக் கோயிலைப்போல ஆக்கி அங்கே உண்டியல் முதலியன வைத்து அதன் நோக்கத்தைச் சிறுமைப் படுத்துகிறார் அவர்.

இன்னும் சொல்லப்போனால் வடலூர் தெய்வ நிலையங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை அத் துறையிடமிருந்து பிரித்து தனி நிறுவனமாக ஆக்கினால்தான் வள்ளலாரின் புகழ் அகில உலகம் முழுவதும் வேகமாகப் பரவும். அதற்கும் யாராவது முயற்சி செய்தால் நல்லது.

ஞான சபை விளக்க விபவ பத்திரிகை ஒன்றை 18-7-1872 இல் வள்ளலார் எழுதி அதில் சபையின் வழிபாட்டு விதிமுறைகளைத் தெளிவாக எழுதியுள்ளார்கள். அந்தப் பத்திரிகையில் யார் உள்ளே சென்று விளக்கேற்ற வேண்டும், அவர்களது தகுதிகள் என்னென்ன என்பதையும் விளக்கமாகத் தந்துள்ளார்.

அந்தத் தகுதியின் அடிப்படையில் வைத்துப் பார்ப்பினும் இன்றைக்கு ஞானசபையில் பூசை முதலியன செய்து கொண்டிருக்கும் சபாநாத ஒளி சிவாச்சாரியாருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

வடலூர் பெருமக்கள் வள்ளலாருக்குத் தானமாகத் தந்த 82 ஏக்கர் நிலத்தையும் சர்க்கரையா பண்டாரியா (வேட்டவலம் ஜமீன்தார்) ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் என்னும் பார்ப்பனருக்கு டிரான்பர் ஆப் டிரஸ்ட் பத்திரம் மூலமாக மாற்றினார். அப்பொழுது சாலையை நிர்வகித்த மு.அப்பாசாமி செட்டியார் சர்க்கரையா பண்டாரியாருக்கு எழுதிய கடிதத்தில்...

"கிளியை வளர்த்துப் பூனைக்கு கொடுத்தாற்போல் ஒப்புவித்து விட்டீர்கள். நமக்கு சாபம் நேரிடும்" என எழுதினார்.

இதில் முக்கியமான இன்னொரு செய்தி. வள்ளலார், சபைக்கு "சமரச சுத்த சத்திய ஞானசபை" என்றும் சாலைக்கு "சமரச சுத்த சத்திய தருமச் சாலை" என்றும் பெயரிட்டு விளக்கமளித்து கையொப்பமிட்டிருக்கிறார். சபாபதி சிவாச்சாரியாரோ வள்ளலார் மறைவுக்குப் பின்பு தன்னுடைய டிரஸ்டி விளம்பரத்தில்,...

"ஞானானந்த வல்லி சமேத ஆனந்த நடராசப் பெருமாளும் தனிப்பெருங் கருணாநாயகி சமேத அருட்பெருஞ்சோதீஸ்வரரும் வெள்ளியம்பலநாதர் பொன்னம்பல நாதரும் எழுந்தருளியிருக்கும் தேவஸ்தானம்" என்று ஞான சபையையும் தரும ஸ்தாபனம் என்று சத்திய தருமச்சாலையையும் அழைத்து அச்சிட்டு உள்ளது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

கடவுள் ஒருவரே என்பதும் அவரே அருட்பெருஞ்சோதி என்பதும் வள்ளலார் கூற்றாக இருக்க இவர் அருட்பெருஞ்சோதீஸ்வரர் என்பதால் சோதி வடிவத்துக்கு மேல் ஈஸ்வரர் சொரூபம் ஒன்று உள்ளதென்று இவர் கருத்தைத் திணிக்கிறார்.

இந்த ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் ஆதியில் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் ஒர் குக்கிராமத்தில் ஐயனார் கோயிலில் பூசை செய்து கொண்டு இருந்தார். அதில் இவருக்கு தக்க வருமானம் இல்லையென்றதும் வடலூர் வந்து வள்ளலாரைச் சந்தித்து தன்னை அவரிடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார்.

வள்ளலாரோ அவரிடத்தில் எங்கள் கூட்டத்தில் சேர்வது எனில் சாதி, சமய,மத பேதங்கள் இருக்கக்கூடாது. உம்முடைய பிராமணிய கோலத்தை விடவேண்டும் எனச் சொல்ல அவரும் தன்னுடைய குடுமியை எடுத்துவிட்டு, பூணூல் முதலியவற்றை அறுத்தெறிந்துவிட்டே வள்ளலாரிடம் ஐக்கியமாகியுள்ளார்.

ஆனால் வள்ளலாரின் மறைவுக்குப் பின் இவர் பழையபடி வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக பழைய கோலம் மேற்கொண்டு தன்னுடைய பார்ப்பனக் கூட்டத்திடம் "நான் இதுநாள் வரை சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து பாவியாகி விட்டேன்" என்றும், "அந்த தோஷத்தைப் போக்க இராமேஸ்வரம் முதலான இடங்களுக்குச் சென்று பிராயசித்தஞ் செய்து கொண்டேன்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் வள்ளலார் மறைவுக்குப் பிறகு இவரது கனவில் ஆண்டவர் தோன்றி வடலூர் பெருவெளியில் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோயில் முதலியன கட்டச் சொன்னதாக வடலூர் மக்களிடம் சொல்லி நாடகமாடியுள்ளார். அன்றைய சன்மார்க்க அன்பர்கள் எதிர்த்ததால் இவர் அதைக் கட்ட முடியவில்லை. அந்த பரம்பரையில் வந்த சபாநாத ஒளி சிவாச்சாரியார் இன்று ஸ்படிக லிங்கத்தை வைத்துக் கொண்டு ஞானசபையின் உள்ளே பிரதோஷம் தோறும் வழிபாடு செய்கிறார். அதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் சிலர் ஒத்தாசை செய்கின்றனர்.

விவரம் தெரிந்த சன்மார்க்க அன்பர்கள் இது தவறு என்று தெரிந்திருந்தும் நமக்கேன் வம்பு என சென்று விடுகின்றனர். மற்ற கோவில்கள் போல் எண்ணி வடலூர் வரும் மற்ற பாமரர் கூட்டத்திற்கு இந்த விவரம் புரியாது. இப்பொழுது தொண்டல்குல. வெ.பெருமாள் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபின் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மூலம் நல்ல தீர்ப்புக் கிடைத்துள்ளது.

இதனை எதிர்த்து சபாநாத ஒளி அறநிலையத்துறை ஆணையரிடம் மறு விசாரணை கோரினார். அதற்கான விசாரணை நாள் 27-12-06 எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொது நெறி, சன்மார்க்க நெறி, உலகளாவிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுநெறி வழிபாடான ஒளி வழிபாடு நடக்கும் இடத்தில் சைவ சமய வழிபாட்டு முறைகளைப் புகுத்தி அதையும் மற்ற கோயில்களைப் போல் ஆக்கச் சதித்திட்டம் தீட்டும் வைதிகப் பார்ப்பனக்கூட்டத்திடம் இருந்து வடலூர் சபையை மீட்டெடுக்க வேண்டும்.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் - சனவரி 2007.

தமிழ் வருடங்கள்

.... நாரதர் பிரம்ம ரிஷி. அவருக்கு ஒருநாள் காம இச்சை ஏற்பட்டதாம். எங்குப் போனால் இது தீரும் என்று ஞான திருஷ்டியினால் பார்த்து, சாட்சாத் கிருஷ்ணபவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி, கிருஷ்ணனிடம் ஓடினாராம்.

கிருஷ்ணபகவான் நாரத முனிசிரேஷ்டரே எங்கு வந்தீர் என்றாராம்- அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம்.

கிருஷ்ணபகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர் எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே - அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ணபகவான் - இதுதானா பிரமாதம், இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத ஒரு கோபியின் வீட்டிற்குப் போய் அங்குள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம்.

உடனே நாரதர் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக தனக்கு 59 999 கோபிகள் கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீடு நோக்கிச் சென்றாராம். அங்குச் சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் கிருஷ்ணபகவான் கோபியுடன் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு, வெகு கோபத்துடன் கிருஷ்ணபகவானின் வீட்டிற்கு வந்தார்.

வழியில் என்ன நினைத்துக் கொண்டு வந்தார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்றுதான் கருதிக் கொண்டு வந்தார் - என்று தெரியவருகிறது.

அதாவது - பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர் ஆதலால் சும்மா வந்துவிட்டேன் - அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் - என்று நாரதர் சொன்னதோடு,

பகவானே என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க எண்ணிக் கொண்டேன் என்று கெஞ்சினார்,

பகவான் உடனே கருணை கொண்டு - ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். இந்த நாரத அம்மையுடன் 60 ஆண்டுகள் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்றென்றால், ஆனாய் இருந்தாலென்ன - பெண்ணாய் இருந்தாலென்ன - பகவான் கிரீடை செய்தால் வீணாய்ப் போகுமா? போகவே போகாது.

எனவே 60 வருஷ லீலைக்கும் - நாரத அம்மாளுக்கு - 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த அறுபது பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு, எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன.

பகவான் அருள் சுரந்து "நீங்கள் 60 பேரும் 60 வருஷங்களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கும் உலகை ஆளுங்கள்" என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்ட அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு, வருஷந்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

இதற்காகத்தான் நாம் வருஷப்பிறப்பு கொண்டாடுகிறோம்.

நன்றி : குடி அரசு - சித்திரபுத்திரன் கட்டுரை - 8-4-1944
நன்றி : யாதும் ஊரே - மார்கழி 2037 - சனவரி 2007


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061