வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 03 - 03 - 2007



குறும்பாக்கள்

(o) தேர்வு பயம்
இரவு முழுக்கப் படித்தான்
கந்தர்சஷ்டி கவசம்.

(o) எப்பொழுது நல்லகாலம் பிறக்கும்
ஏக்கத்துடன்
குடுகுடுப்பைக்காரன்.

(o) கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கை உடைந்த நேரத்தில்.

(o) அம்மாவைப் போலவா
அப்பாவைப் போலவா
இறந்து பிறந்த குழந்தை.

(o) அடம் பிடித்தது குழந்தை
விதவைத் தாயிடம்
தம்பி பாப்பாவிற்காக.

(o) ஓட்டப் பந்தய வீரன்
அதிவேகமாய் ஓடிப்போனான்
அடுத்த வீட்டுப் பெண்ணுடன்.

(o) வாயுள்ள பிள்ளை
பிழைத்துக் கொள்ளும்
அம்மா தாயே.

(o) பள்ளிக் கொட்டகை விழுந்தது.
மகிழ்ச்சியில் குழந்தைகள்
நாளை விடுமுறை.

- மாமதயானை - புதுச்சேரி
நன்றி : வைரம் இருமாத இதழ் - பிப் 2007.




உரைவீச்சுகள்

(o) நீதிபதிகளைப்
பாராட்டத்தான் வேண்டும்
உண்மையை, நேர்மையை
நீதியை, நியாயத்தை
தைரியமாகச் சொல்கிறார்கள்.
ஓய்வு பெற்ற பிறகு.

- பிரியா -

(o) கற்பது கம்ப்யூட்டர் என்றாலும்
களை எடுக்கும் பெண்ணின்
கைகளையே மதிக்கிறேன்.
ஏனெனில்
களை எது ? பயிர் எது
எனக்
கம்ப்யூட்டருக்குத் தெரியாது.

- மாணிக்கம் -
நன்றி : பயணம் இதழ்.




எது அழகு ?

சின்ன முகத்தில் கனக்கும்
பவுடர் பூச்சுகள் அழகா ?
சின்ன மனதில் தோன்றும்
பரந்த எண்ணங்கள் அழகா ?

காலைச் சுற்றும் பாம்பாய்
மிளிரும் கொலுசு அழகா ?
காலை வேளையில் படிக்கும்
நல்ல புத்தகம் அழகா ?

கையைச் சுற்றி வளைக்கும்
வண்ண வளையல் அழகா ?
கைவிரல் உழைப்பில் விளையும்
கைத்தொழில்கள் அழகா ?

கழுத்தின் மூச்சைப் பிடிக்கும்
கல்வைத்த நெக்லஸ் அழகா ?
நிமிர்ந்த மார்பில் உருவாகும்
தன்னம்பிக்கை அழகா ?

இடுப்பில் ஒட்டிக் கொண்டு
இறுக்கும் ஒட்டியாணம் அழகா ?
இடுப்பு ஒடிந்து விழாமல்
எடுக்கும் யோகாசனம் அழகா ?

ஒப்பனை முகங்களாய்
உவமை முகங்களாய்
உருவக முகங்கயாய்
மாறிப் பழகிய பெண்களே !

எது அழகு ?
களைந்து பாருங்கள்....
ஒவ்வொன்றையும்
உண்மை அழகு எதுவெனப் புரியும்.

ஜெ.செல்வகுமாரி
நன்றி : புதிய பெண்ணியம் இதழ்.




இவர்கள் பேசுகிறார்கள்

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயா? - பாரதி -

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம் ஈன்றதமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும் - பாவேந்தர் -

இருட்டறையில் இருப்போர்க்கும்
எரிவிளக்கில் படிப்போர்க்கும்
எங்குள் ளோர்க்கும்
தெருட்டுகின்ற நல்லறிவைச்
செந்நெறியைச் செந்தமிழால்
செவியுள் ஊட்டிக்
குருட்டுணர்வைப் போக்கிடுவோர்
கொடுமையினைச் சாடிடுவோர்
கொள்கை வீரர்
மருட்டலுக்கே அஞ்சாதவர்
மாக்கவிஞர் ! அவர் வாழ
வாழும் நாடே. - வாணிதாசன் -

சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டை கட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத்
தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம்
சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின்
அதிகார உலகமடா...

புதிரான உலகமடா - உண்மைக்கு
எதிரான உலகமடா - இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - பட்டுக்கோட்டை -

நன்றி : வைரம் இருமாத இதழ். பிப்ரவரி 2007




இரவு என் நிறம்

ஜெயராணி

காலத்தை அகழ்ந்து
கண்டெடுக்கப்பட்டது
என் உடல்.

ஏன் புதைக்கப்பட்டேன் நான் ?

வரப்புகள் மீறி
வெடித்த பாதங்களும்
முள்குத்தி வறண்ட கைகளும்
சொல்லும் சொல்லும்
பல்லாயிரம் சரித்திரக் கதைகளை.

பூமியின் ஆதி உருவத்தில்
தேடலாமா
வாசனைத் திரவியத்தையும்
உதட்டுச் சாயத்தையும்?

திசைகளின் வடிவங்களில்
வெவ்வேறு முகங்கள் உண்டெனக்கு
எதிலும் இல்லை ஒப்பனை..

வெளிறிய செம்மண் நிறத்திலான
இந்தக் கண்களில் காதலை
சுமந்து திரிவதில்லை நான்
பேசும் வார்த்தைகளில் போதையை
செயல்களில் வெற்று கிளுகிளுப்பை
காட்ட முடியாது என்னால்

நீளும் அதிகாரக் கரங்கள்
பெருந்தடி யெடுத்துத் துரத்துகையில்
அடுக்கடுக்காய்த் தோல் நீக்கி
நெளிந்து அகல்வேன் பாம்பென.

கூடவே
பிடுங்கியெறிவதற்குக் கண்களையும்
தகர்த்தாடுவதற்குக் குடிலையும்
இடக்கையில் தந்துவிட்டு
அவிழ்த்துப்போக ஆடையற்ற
வெற்று உடலோடு - என்
நிலம் திரும்புவேன்.
வன்மம் தீரா நெஞ்சோடு.....

பார்த்துக் கொள்ளுங்கள்
இரவு என் நிறம்
பகல் எனது புன்னகை.

வானத்தில்
மேகமாய் சூரியனாய்
மிதப்பதெல்லாம் என் சுயம்

பூமியில் இங்கே
நிதியாய் கடலாய்
ஓடுவதெல்லாம்
என் வியர்வை.

சொல்கிறேன்.
வியர்வைதான் எனக்குச் சொந்தம்
கண்ணீரல்ல.

நன்றி : தலித் முரசு - பிப்ரவரி 2007




தமிழ் மன்றங்களைத் தொடங்குக

மருத்துவர் இராமதாசு

சென்னையை அடுத்த மறைமலை நகரில் வள்ளுவர் மன்றமும், பெரியார் அண்ணா இலக்கியப் பேரவையும் இணைந்து தமிழர் திருநாள் 21-1-07 அன்று எழுச்சியுடன் கொண்டாடியது.

திருக்குறள் முழக்கத்துடன் விழா தொடங்கியது. அவ்விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகப்போட்டி போன்றவை நடத்தப்பட்டன. பேரா. பெரியார்தாசன் தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் பேசுகையில்...

- தமிழப் பண்பாடும் கலாச்சாரமும் சீரழிந்து வருகிறது. மொழி இனம் நாடு ஆகியவை எந்த நிலையில் உள்ளன? என்பதை அறிந்து அதைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு. இதற்காகத் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும், சிற்றூர்களிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க வேண்டும்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றிருந்த நிலை மாறி - எங்கே தமிழ் ? என்ற நிலை தற்பொழுது உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழை வளர்க்கத் தமிழ் ஆன்றோர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தமிழ் மன்றங்கள் பெருக வேண்டும். அந்த மன்றங்களில் இளைஞர்களையும் பெண்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும். தமிழ் மன்றங்களில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஓர் அன்னிய மொழியைப் போலக் கற்றுத் தரப்படுகிறது. இந்த நிலைமாற மன்றங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையில் தமிழ் இருக்காது. கொச்சைத் தமிழ், ஆங்கிலம் கலந்த தமிழ் (தமிங்கிலம்), சமற்கிருதம் கலந்த தமிழ் போன்றவைதான் அடுத்த தலைமுறையில் பேசப்படும். இதற்காக அரசாங்கம் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று உரையாற்றினார்.

தை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்ற வேண்டும். தமிழ் செம்மொழி என்பதனைத் தமிழ் தொன்மை மொழி என மாற்ற வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பகுத்தறிவாளர் வ.வேம்பையன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நன்றி : யாதும் ஊரே - பிப்பரவரி 2007




செயங்கொண்டம் நிலக்கரி

செயங்கொண்டம் பகுதியில் அமையப் போகும் நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை மின் உற்பத்தித் தொழிற்சாலை காரணமாக வேளாண்மை நிலங்களையும், வேளாண்மைத் தொழிலையும், நெசவுத் தொழிலையும் வீடுகளையும், மனைகளையும் இழப்பவர்கள் 2100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களுக்கு நேரப்போகும் சிக்கல்களைப் பற்றி 1992 முதலே பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கவலை கொண்டு, அக்கறையுடன் பல கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு அரசுக்கு விடுத்துள்ளனர். நிலங்களையும் வீடுகளையும், தொழிலையும் இழப்பவர்கள் தாங்கள் இழக்கும் நிலங்களுக்கும், வீடுகளுக்கும் நல்ல விலையை எதிர்பார்க்கிறார்கள். நல்ல வேலைவாய்ப்பையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவற்றை அடைவதற்கு ஏற்ற விழிப்புணர்ச்சியையும், புரிதலையும், போதிய அளவில் இவர்கள் பெறவில்லை என்பதை உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் முதல் முதலாக 45 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது நெய்வேலி நிலக்கரிக் குழுமம். அங்கு 1954, 84 ஆகிய கட்டங்களில் நிலத்தையும் வீடுகளையும் இழந்தவர்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக நெய்வேலியில் 1986 இல் ஒருவர் 1,96 ஏக்கர் நிலத்தை இழந்தார். இதற்கு அவருக்கு உரிய நிலத்தின் விலையையும், நிலம் கையகப்படுத்தப்படும் சட்டம் பிரிவு 23(2) இன்படி கட்டாயம் தரப்படவேண்டிய 30 விழுக்காடு ஆறுதல் தொகையும் சேர்த்து ரூ4607 மட்டுமே தரப்பட்டது. ஆனால் 1987 இல் அவர் வழக்குப் போட்டு 1996 இல் தீர்ப்புப் பெற்ற போது அவருக்கு வட்டி உட்படி மொத்தம் ரூ64, 350 - தரப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது நியாயமாக 1987 இலேயே ரூ.63,350 அவருக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக உரிய தொகையில் 14 இல் ஒரு பங்கு தரப்பட்டது. இது அநியாயம். அக்கிரமம்.

செயங்கொண்டம் சிக்கல் நெய்வேலியில் உள்ள சிக்கலைவிட மிகவும் ஆபத்தானது. செயங்கொண்டம் தொழிற்சாலையை ரிலையன்ஸ் என்கிற தனியார் இந்திய நிறுவனம் அமைக்கப் போகிறது. ரிலையன்ஸ் கம்பெனி சுரங்கத் தொழிலைச் செய்வதற்கு வடஅமெரிக்காவைச் சேர்ந்த கோல் கார்ப்பரேசன் நிறுவனத்தைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டது. அத்துடன் செயங்கொண்டம் மின் உற்பத்திக்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோஸர் வீலர் கம்பெனியைக் கூட்டாளியாக்கிக் கொண்டது. மேலும் மின்சக்தி நிர்வாகம் மற்றும் செயற்பாட்டுக்கு ஆங்காங் நாட்டிலுள்ள ஆசியா கன்சாலிடேட் எலக்ட்ரிக்கல்ஸ் பவர் என்கிற கம்பெனியைக் கூட்டாளியாக்கிக் கொண்டது. இந்த நான்கு தனியார் கம்பெனிகளும் ஒரு 70, 80 ஆண்டுக் காலத்திற்குச் செயங்கொண்டம் பகுதியில் கிடைக்கப்போகிற 63 கோடிடன் நிலக்கரியைப் பயன்படுத்தி இவர்கள்தான் இலாபம் அடையப் போகிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளவும் தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாடு மின்வாரியமும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. ( தொடரும்)

நன்றி : கண்ணியம் - பிப்ரவரி 2007




முப்பாலைப் பாதுகாப்போம்

க.சி.அகமுடை நம்பி - மதுரை

தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதை இந்தாண்டு பெற்றுள்ள போரா.முனைவர். க.ப.அறவாணன் அவர்கள் திருவள்ளுவம் என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். திருக்குறள் ஆய்வுக்கு இஃதொரு புதுவரவு என்பதால் ஆர்வப் பெருக்குடன் நூலினுள் புகுந்தேன். பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமா? தாங்கொணா வருத்தமும் சூழ்ந்தது. தீயூழ் வந்துற்றதோ திருக்குறளுக்கு என்றெண்ணி மனம் நெந்தது.

போரா.சாலமன் பாப்பையா திருக்குறளின் முப்பால் கட்டமைப்பை உடைத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து வள்ளவத்தைச் சீரழிக்கும் திருப்பணியைத் திறம்படச் செய்து முடித்தார். அதே பணியை இப்பொழுது க.ப.அறவாணன் செய்துள்ளார். முப்பாலையும் என்றில்லாமல் காமத்துப்பாலை மட்டும் அப்படியே விட்டுவிட்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாகக் கலந்து, இவ்விரண்டிலும் உள்ள 1080 குறள்களையும் தம் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி புதிதாக வரிசைப்படுத்தியிருக்கிறார்.

குறள்களின் வரிசை எண்களைப் பொருத்தமட்டில், பரிமேலழகர் எண் இது, அறவாணன் எண் இது - என்று பட்டியலிட்டுக் காண்பிக்கிறார்.

திருக்குறளைப் பயில முற்படுவோர் பரிமேலழகர் அமைத்துள்ள வரிசையை மட்டுமன்றி அறவாணன் செய்துள்ள வரிசையையும் இனித் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

க.ப.அறவாணனுக்கு நிகரான தமிழறிஞர்கள் என்று கருதிப் பார்த்தால் தற்போது நூறு பேர்க்குக் குறையாமல் இருப்பர் என்று கொள்ளலாம். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப முப்பாலின் குறள்களை வரிசைப்படுத்தி வெளியிடுவார்களானால், திருக்குறளைப் பயில முன்வருவோர் எவருடைய வரிசை எண்ணைத் தேர்ந்து கொள்வது?

அகர முதல - என்பதைத் தற்பொழுது திருக்குறளின் முதல் குறளாகக் கொண்டுள்ளோம். இதையே 1041 ஆவது குறளாகக் காண்பிக்கிறார் அறவாணன். முதல் அதிகாரமாக உள்ள கடவுள் வாழ்த்து - 105 ஆவது அதிகாரமாக ஆக்கப்பட்டுள்ளது.

மீநம்பிக்கை இயல் என்ற ஒரு புதுப்பிரிவில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, ஊழ், நிலையாமை ஆகிய நான்கு அதிகாரங்களையும் இணைத்து இவற்றைக் கடைசி அதிகாரங்களாக இடமாற்றம் செய்துள்ளார். ஏன் இவற்றிற்குக் கடைசி வரிசை? மழை சார்ந்த நம்பிக்கையும் வழிபாடும் மூடநம்பிக்கையாம். அதனால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாதாம். ஆகவே இவற்றைக் கடைசிக்குத் தள்ளிவிட்டாராம். அறவாணன் கூறும் விளக்கம் இது.

திருக்குறள் கற்க வருவோரை அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதல் குறளும் கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரமும் முகப்போவியமாக வரவேற்று நிற்கின்றன. இதனை அறவாணன் பின் தள்ளிவிடுகிறார்.

மழைநீர்ச் சேகரிப்புக்கும், மழை நீரைப் பாதுகாப்பதற்கும், மழை நீரைச் சீராகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதற்கும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இற்றைச் சூழலில், மழையைச் சார்ந்த நம்பிக்கையும் வழிபாடும் அறவாணனுக்கு முட நம்பிக்கையாம். இரண்டாம் அதிகாரமாக நாம் கொண்டுள்ள வான்சிறப்பு - 106 ஆவது அதிகாரமாகப் பின்தள்ளப் பட்டுள்ளது.

கயமை என்பது பொருட்பாலில் உள்ள கடைசி அதிகாரம். கயமைக் குணம் மிகவும் கீழானது. அதனினும் கீழ்மையான இன்னொரு குணத்தைச் சுட்டுதல் இயலாது என்பது வள்ளுவர் வரையறை. ஆனால் அறவாணன் கயவர் இயல் என்றொரு தனி இயலை உருவாக்கி - அதில் கயமை அதிகாரம் தவிரக் கூடாஒழுக்கம், கள்ளுண்ணாமை, சூது, கல்லாமை, புறங்கூறாமை, அழுக்காறாமை, பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை, வெஃகாமை, பேதைமை, புல்லறிவாண்மை ஆகிய 12 அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்கிறார்.

மக்களே போல்வர் கயவர் என்றும், எற்றிற்கு உரியவர் கயவர் என்றும் வள்ளுவரால் பழிக்கப்படுகின்ற, சிறிதும் பண்பாடற்ற, கீழான மனிதர்களைச் சுட்டுகின்ற கயமை அதிகாரத்துடன், புறங்கூறாமை, பேதைமை போன்ற சின்னச் சின்ன குறைபாடுகளைச் சுட்டுகின்ற அதிகாரங்களை எல்லாம் இணைத்துப் பார்ப்பது பொருந்துமா. வள்ளுவத்தையே சிதைப்பதாக இஃது ஆகிவிடாதா? இதற்கு அறவாணன் கூறும் காரணம் மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

பொருட்பாலின் கடைசி அதிகாரத்தையும் முதல் அதிகாரத்தையும் சேர்த்தால் பக்கத்தில் பக்கத்தில் வருகின்றன. இரண்டும் ஒன்றாகின்றன. அதனால் கயமை தான் இறைமை. இறைமை தான் கயமை - என்கிறார்.

நன்றி : தேமதுரத் தமிழோசை - பிப்ரவரி 2007




நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட நற்றமிழ்ப் பாண்டித்துரையார்

சிங்களர் கொட்டத்தை அடக்கவே சோழப்போரரசன் முதலாம் இராசராசனால் நிறுவப்பெற்றது இலங்கைக்கு எதிர்புறத்தில் - இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் பரம்பரை. அதனால்தான் காவிரியில் சோழர் கல்லணையைக் கட்டியதைப்போல பேரியாற்றை வைகையோடிணைக்கும் முல்லைப் பெரியாறு அணைத்திட்டத்தை சென்னை மாகாண வெள்ளையராட்சியை நிறைவேற்றி வைத்தது சேதுபதியாட்சி.

அச்சேதுமன்னர் பரம்பரையில் பொன்னுச்சாமித் தேவருக்கும், முத்துவீராயி நாச்சியாருக்கும் 21-3-1867 ஆம் ஆண்டு பிறந்தார் பாண்டித்துரையார்.(இப்போது 140 ஆண்டுகளாகிவிட்டன)

தமிழின் முதற் கலைக் களஞ்சியம் என்று சொல்லத்தக்க 1639 பக்கங்களைக் கொண்ட அபிதான சிந்தாமணி எனும் நூலை ஆ.சிங்காரவேலு (முதலியார்) அவர்கள் வெளியிடப் பொருளுதவி செய்தவர் பாண்டித்துரையே.

மதுரையில் வழக்குரைஞராக இருந்த ஸ்காட்துரை என்னும் ஆங்கிலோ இந்தியர் திருக்குறளில் எதுகை மோனை சரியாக வரவில்லை என்று அதனைத் தன் விருப்பப்படித் திருத்தி வெளியிட்டபோது, மொத்தப் பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி நெருப்பிலிட்டுப் பொசுக்கியவர் பாண்டித்துரையார் ஆவார்.

இனியும் அப்படி - தடியெடுத்தவனெல்லாம் தமிழுக்குத் தண்டல்காரனாகிவிடக் கூடாது - என்ற தடுப்பதற்காகவே 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார் பாண்டித்துரையார். அதில் பார்ப்பனர்கள் புகுந்து ஆட்டிவைக்க முயன்றபோது தனித்தமிழ்த் தலைவர் மறைமலையடிகளாரை வரைவழைத்து, சமயம், மொழி, இனம், நாடு பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்ற வைத்து, தமிழ்ச் சங்கம் அவர் சுட்டிக்காட்டிய வழிகளிலேயே நடைபோட வேண்டும் என ஆணையிட்டவர் பாண்டித்துரையார் ஆவார்.

தமிழ்ஞான சம்பந்தரைப்போல, பரிதிமாற்கலைஞரைப்போல, பாரதியார் போல - குறைந்த காலமே 44 ஆண்டுகளே வாழ்ந்த போதும் நிறைந்த பணிகளைச் செய்து, தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்பவர் பாண்டித்துரையார் ஆவார். நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட அந்த நன்மாறர் புகழ் நீடுவாழ்க

நன்றி : எழுகதிர் - பிப்ரவரி 2007




கறிக்கடைக்காரருக்கு இராமலிங்க அடிகள் விருது.

செயற்கரிய செய்த பெருமக்களுக்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்கிச் சிறப்புச் செய்தல் பண்டைக்காலம் முதலே தமிழக அரசுகளின் வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது. ஏனாதி, காவிதி, எட்டி, (தொல்.சொல் 166) முதலிய சிறப்புப் பட்டங்கள் தருதல், பொற்றாமரைப் பூச்சூட்டுதல் (புறம் 361) முதலியவற்றைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. எட்டி குமரன் இருந்தோன் தன்னை (மணிமே.4-58) பொலந்தாமரைப் பூச்சூட்டியும், பாணன் பூப்பெற்றான், பாடினி இழை பெற்றாள் - என்பன போன்ற தொடர்களும் இதற்குச் சான்று. இன்றும் அவ்வழக்கம் நம் நடுவண், மாநில அரசுகளால் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது என்பது மகிழ்ச்சிக்குரியதே.

முடியாட்சிக் காலத்தில் அரசன் விரும்பியபடி இச்சிறப்புக்குரியோர் தெரிவு செய்யப்பட்டதுபோல், குடியாட்சி நடைபெறும் இன்றும் அமைச்சர் விரும்பியபடியே அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதனால் சில நேரங்களில் ஆளும் கட்சிக்கு வேண்டியவருக்கோ, அமைச்சருக்கு வேண்டியவர்க்கோ - தகுதி நோக்காமல் இப்பட்டங்கள் தரப்படுகின்றன. இதனால் நாடறிந்த பெருமக்கள் புறக்கணிக்கப்படுவதும், தகுதியற்றோர் சிறப்புச் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன. அதனால் அச்சிறப்புப் பட்டங்கள் தம் மதிப்பை இழக்கின்றன.

1) புதுச்சேரி அரசைப் பொறுத்தவரையில் அரசு பட்டங்களை விரும்புவோர் உரிய படிவத்தை நிரப்பித் தம்மிடம் உள்ள தகுதிச் சான்றுகளுடன் வேண்டுகோள் விடுக்க வேண்டும். வேலை பெறுவதற்கோ, உதவி பெறுவதற்கோ வேண்டுகோள் விடுப்பதைப்போல மதிப்புக்குரிய பெருமக்களையும் வேண்டுகோள் விடச் செய்வது அவர்களை இழவுபடுத்துவதாகும். அதற்கும் இசைந்து நான் இப்படிப்பட்டவன், எனக்குப் பட்டம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுவோர், அதனாலேயே தாம் சிறப்புப் பட்டம் பெறத் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களே மெய்ப்பித்து விடுகிறார்கள்.

2) புதுவை அரசு இந்தப் பட்டங்களுக்குரியோரைத் தெரிவு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழுவின் கூட்டம் அமைச்சரின் அறையிலேயே அவர் தலைமையில் நடக்கிறது. இது முடிவு குழுவின் விருப்பப்படி அன்றி அமைச்சரின் விருப்பப்படி அமைய வாய்ப்பளிக்கிறது.

3) இராவணனது அவையில் இருக்கும் தேவர்கள், இராவணன் தம் பக்கம் திரும்பும் போதெல்லாம் இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்துக் கும்பிடுவார்களாம். அவன் எப்போது தம் பக்கம் திரும்புவான் என்று தெரியாததனால் அவர்கள் எப்போதும் தம் இரு கைகளையும் குவித்துத் தலையின்மேல் சுமந்தவண்ணம் காணப்படுவார்களாம். அதுபோல் இந்தப் பட்டங்களை மனத்தில் வைத்தே சிலர், அடிக்கடி அமைச்சர் பார்வையில் படும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அமைச்சர் பெருமக்களைக் கைதொழுத வண்ணம் காலங்கழிக்கிறார்கள். தாமும் பட்டத்திற்குத் தகுதிபெற்றவரே என்று காட்டிக்கொள்ள, அதற்காகவே விரைந்து விரைந்து நூல்களை எழுதி அமைச்சரைக் கொண்டு வெளியிடுகிறார்கள். அமைச்சர்களை வானளாவப் புகழ்கிறார்கள். இப்படியெல்லாம் முயற்சி செய்து வாங்கப்படும் பட்டங்களால் ஒருவருக்கு எந்தப் பெருமையும் கூடிவிடுவதில்லை.

4) இந்தப் பட்டங்கள் சில மாபெருந் தீமைகளுக்கும் இடந்தந்துவிடுகின்றன. அரசு தவறுசெய்தால் இடித்துரைக்கும் தகுதி பெற்ற அறிஞர் சிலர், இந்தப் பட்டங்களைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருப்பதால், அரசு என்ன தவறு செய்தாலும் சுட்டிக்காட்டத் தயங்கி வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

5) ஏற்கெனவே அரசு பட்டம் பெற்ற அத்தகைய அறிஞர்கள் தமக்குப் பட்டம் தந்தவர்கள் மனம் வருந்துமே என்றஞ்சித் தட்டிக் கேட்க முன்வராமல் வாய் வாளாமை மேற்கொள்கிறார்கள், இங்கனம் இடிக்குந் துணையாருக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டு, மக்கள் நலத்துக்கு மாறானதாக இருந்தாலும், தாம் விரும்பிய எதையும் துணிந்து செய்வதற்கு ஆட்சியாளருக்கு இது ஏந்தாக உள்ளது.

6) பட்டம் பெறும் அறிஞரை அரசு முழுமையாக அறிந்து கொள்ளாமையாலோ, அமைச்சர்களை அவர் வழிபட்டு வருவதாலோ, வேண்டியவர்கள் நெருக்கடி தருவதாலோ, அவருக்குப் பட்டம் வழங்குவதும் உண்டு. அது சில நேரங்களில் அவர் மக்களுக்கோ, மொழி பண்பாடுகளுக்கோ செய்த அழிம்புகளை மெச்சி அரசு அவருக்குச் செய்த சிறப்பாகவே அமைந்து விடுகிறது.

ஒரு தமிழ் எழுத்தாளர் - நாஷ்டா பண்றதும் இஸ்துகினு போறதும்தான் நம்ம தமிழ். நோ பிராப்ளேம் நைனா - என்றவர். தனித்தமிழை இகழ்ந்து மறைமலையடிகளைப் பழித்தவர். தமிழறிஞர்களைத் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாயைப் போன்றவர்கள் என்று இகழ்ந்தவர். அத்தகையவருக்கு நடுவணரசு நாட்டிலேயே அவ்வாண்டின் தலைசிறந்த எழுத்தாளர் என்று ஞானபீட விருது வழங்கிப் பாராட்டியது. அண்மையில் முத்தமிழறிஞர் எனப்படும் கலைஞரும் அவரைப் பாராட்டிப் பரிசளித்திருக்கிறார். இது நல்ல தமிழ் எழுதும் எழுத்தாளர்களை, இப்படி எழுதினால்தான் விருது கிடைக்கும் என்று ஊக்குவித்து மொழியை அழிக்கவே துணை செய்யும்.

ஒரு தமிழறிஞர் திருக்குறளைக் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாகச் சிதைத்து உருக்குலைத்துத் தமிழறிஞர்களின் ஒறுப்புக்காளாகி இருக்கிறார். தமிழ்நாட்டரசு அவருக்குத் திருவள்ளுவர் பெயராலேயே விருது கொடுத்திருக்கிறது. ஓரிலக்கம் உரூபா, ஒருபவுன் தங்கப் பதக்கம் முதலியன கொண்ட இச்சிறப்புப் பட்டம் அவருக்குத் திருக்குறளை இப்படிக் கண்டபடி சிதைத்ததை மெச்சிக் கொடுத்ததாக அமைந்து விட்டது. இது கறிக்கடைக் காரருக்கு இராமலிங்க அடிகள் பெயரால் விருது கொடுத்தது போல் உள்ளது.

எனவே ஒவ்வொரு துறையிலும் அரசு தரும் சிறப்புப் பட்டங்களை, அத்துறையில் அறிவு சான்ற நடுநிலைச் சான்றோர்களின் குழுவை ஆண்டுதோறும் அமைத்து, அக்குழு, அமைச்சர் முன்னிலையிலன்றித் தனியே கமுக்கமாகக்கூடி, அது செய்த பரிந்துரையின்படி வழங்க வேண்டும். குறிப்பிட்ட பட்டத்திற்குத் தகுதியானவராக ஓராண்டில் யாரும் இல்லை என்று குழு முடிவு செய்தால் அவ்வாண்டு யாருக்கும் அப்பட்டம் வழங்கப்படக் கூடாது.

அரசின் பட்டத்தைப் பெற்றவர்களோ, பெறாதவர்களோ அரசுக்கு வேண்டிய கருத்துரைகளை வழங்கத் தயங்கக்கூடாது. இல்லாவிட்டால் அவர்கள் மொழி பண்பாடுகளுக்குத் தீமை செய்தவர்களாவார்கள்.

இவ்வாறெல்லாம் ஒழுங்குமுறை வகுத்துப் பட்டங்கள் வழங்காத வரையில், அரசு பட்டங்களைத் தகுதியுடையோர் பெற்றாலும் அதனால் அவருக்கோ, அரசுக்கோ எந்தப் புகழும் இல்லை. மாறாக இப்பட்டங்கள் பலவகைத் தீமைகளின் பிறப்பிடங்களாய் மாறிவிடுகின்றன.

- தெளிதமிழ் சுறவம் இதழ் ஆசிரியர் உரையில் - இரா. திருமுருகனார் -





தொப்பை குறைய

தொப்பை விழ முக்கியமான காரணம் நம்முடைய தவறான செயற்பாடுகளே. நிற்பது, உட்காருவது ஆகியவை ஒரே சீராக இருப்பதில்லை. நிற்கும்பொழுதும், உட்காரும்பொழுதும் முதுகு கூன் விழுவதும், தொப்பை வெளியே தள்ளுவதும் - உடம்பின் மற்றைய தசைகள் வலுவிழந்து விடுவதும் - முதன்மைக் காரணங்களாகின்றன. எனவே நாம் உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் உடம்பை, முக்கியமாக முதுகுத் தண்டை நேர்க் கோட்டில் வைத்து, வயிற்றைச் சற்று உள்ளுக்கு இழுத்தபடி (எக்கியபடி) இருக்கப் பழக வேண்டும். வயிற்றைச் சுற்றி இருக்கும் மற்ற தசைகள் வலுப்பெற சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும். (வயிற்றை இழுத்துப் பிடித்து (5முதல்10வினாடி) பிறகு மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஐசோமெட்ரிக் பயிற்சி வயிற்றுத் தசைகளை வலுப்படுத்துவதில் சிறந்தது.

தொப்பை பெருப்பதற்கு மிக முக்கிய காரணம் நம் உடம்பில் ஆண், பெண் அடங்கலாகக் கீழ்ப்பகுதி தசைகளின் சுவர்கள் மேல்பகுதியின் சுவர்களைவிட மெலிதாக இருப்பதுதான். இதனால் உட்புறமுள்ள தோய்ந்த குடல்கள் சுலமாக இந்தச் சுவரை முன்னுக்குத் தள்ளிவிடத் தொப்பை விழுகிறது. அதோடு நமக்குச் சரியாக மூச்சுவிடத் தெரியாததாலும் தொப்பை வளர்கிறது. சிறு குழந்தைகள் மூச்சுவிடும்போது கவனித்தால் அவர்களது வயிற்றுப் பகுதிதான் விரிந்து சுருங்கும். மார்புப் பகுதி இல்லை. இதுதான் மூச்சு விடுவதற்குச் சிறந்த முறை என்கிறார்கள். இதோடு மேலே சொன்ன ஐசோமெட்ரிக் பயிற்சியையும் சேர்த்துச் செய்தால் தசைச் சுவர்கள் வலுப்படும். மேலும் உடம்பிலுள்ள அதிகப்படியான எடையைக் குறைக்க (கொழுப்பை) பயிற்சி செய்ய வேண்டும்.

நன்றி : புதுகைத் தென்றல் - பிப் 2007


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061