வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 03 - 2007மெல்லத் தமிழினி வாழும்

கணிப்பொறி யில்எளி தாய்ப்பயன் படுத்தக்
கன்னித் தமிழ்குறியீடே, சிறந் ததுவே
நுனிவிரல் கொண்டு மென்பொருள் கட்டளை
நொடிப்பொழு திலேற் றேசெயல் படுமே.

இணைத் தளத்திலே எளிதாய் தேடிட,
ஏதுவாய் உள்ளது நம்மின் மொழியே
மனையி லிருந்தே வையகவ லைவிரிவை
மகிழ்வோடு திறந்தே தேவையைப் பெறலாமே.

மென்பொருள் கற்ற தமிழர் உலகெலாம்
மூலைமுடுக் கெல்லாம் பரவியுள் ளனரே
எண்ணிலா மொழியில் தமிழ்மென் பொருள்
இரண்டாம் இடத்தை வகிக்கின் றதுவே.

தொன்மை இலக்கிய வளம்கலை நடுநிலை
பண்பாடு பொதுமைப் பண்புதனித் தியங்குதல்
பன்மொழிக் குத்தாய்பிற மொழித்தாக்க மில்லாமை
என்றுபதி னைந்து சிறப்புள் ளதிதுவே.

செம்மொழி யானதாலே பல்கலைக் கழகங்களில்
சீரார்ந்த இருக்கை யும்கிடைத் திடுமே
நம்மொழி இலக்கியம் படைப்புகள் யாவும்
எம்மொழி யினுக்கும் செல்லவாய்ப் பானதே.

இத்தகு பெருமை மிகுஉயர் செம்மொழி
ஏற்றம் மிகவும் பெற்றே, உலகின்
எத்திக் கும்புகழ் பெற்றுப் பரவியும்
எழும்பியும் மெல்லத் தமிழினி வாழும்.

மதலை மணி
நன்றி : ஊற்று - பிப்ரவரி 2007
உரைவீச்சு

வீடுகளின்
எண்ணிக்கையை விட
அதிகமானது
சுயநிதிக் கல்லூரிகள்

இரா. எட்வின்முதுமை

காலங்கள்
கடந்து விட்டன
உடலும்
தளர்ந்து விட்டது.
மேவி இருந்த முடியும்
இடது ஓர வகிடும் போய்
வழுக்கை
மட்டுமே மீதம்.
இளமையில்
சிலிர்த்து நின்ற முடிகள்
உதிர்ந்தும்
உதிராமல் பாதி
சமாதான நிறம் பற்றி
பேசுகின்றன,
இப்போதெல்லாம்.
எனது நரம்புகளை
எளிதில் எண்ணிவிட முடிகிறது.
ஒற்ைக் காலில்
நெண்டி விளையாடிய
என் கால்களுக்கு
மூன்றாவது காலும்
போதவில்லை.
அன்று
என் கன்னங்களை
பருக்கள் அழகு படுத்தின.
இன்று அழுகு படுத்துகிறது
கன்னக் குழிகள்.

- ஈழ பாரதி -
நன்றி : தச்சன் இதழ் மார்ச்- ஏப் 2007
கோபம்

தங்கம் விலை ஏறும் போது
பெட்ரோல் விலை ஏறும் போது
எண்ணெய் விலை ஏறும் போது
பருப்பு விலை ஏறும் போது
மின் கட்டணம் ஏறும் போது
இரயில் கட்டணம் ஏறும் போது
அதிகாரி லஞ்சம் கேட்கும் போது
அடங்கி..... ஒடுங்கி
அமைதியாய் இருக்கும் இவர்களுக்கு
வேகமாய் வருகிறது கோபம்
கூலித் தொழிலாளி
தன உடல உழைப்பிற்கு
ரெண்டு ரூபாய் கூட்டிக் கேட்டவுடன்

நன்றி : பயணம் இதழ்
காவேரி

கதிர் விடுவதற்குள்
கருகி நிக்கிது நெல்லுப்பயிர்
படர்ந்த வரைக்கும்
பட்டு விழுந்திடுச்சி
பயத்தங்கொடியும்....

முப்போகம், இருபோகம், ஒரு போகம்

நாமே குழந்தை நமக்கேன் குழந்தைங்கிற
குடும்பக் கட்டுப்பாடு திட்டம்போல
குறுகிகிட்டே வருதாம்ல
காவேரி

குதியம் போடுற கோடியக்காட்டு மாட்ட
பின்னங்கால கட்டிப்புட்டு
பால் கறப்போம்.

ராவுல நெல்லு உருவ பன்னி வந்தா
கம்பியில வைச்ச சுருக்குலேர்ந்து
தப்ப முடியாது.

அது அதுக்கு அதுஅதுதான் சரிப்படும்
மயிலே மயிலேன்னா
இறகு போடாது.

அநீதித் தீர்ப்புக்கும்
அவன் அடாவடிக்கும்
பொருளாதாரத்தடை ஒன்ன
போட்டிருக்கலாம்.
நெய்வேலி மின்சாரத்த
நிறுத்திபுட்டு
நடக்கிறத பார்த்திருக்கலாம்.

கூடுதலா வாங்குனவன்
அங்க பந்த் நடத்துறான்.
ஏமாந்தவன் இங்க
தெருவுக்குத் தெரு கூத்து நடத்துறான்.
ஒரு இழவும் புரியலயேன்னு
பெருமூச்சொன்னு வெளிய வந்து அலறுது.

முழுநிலவன்.
நன்றி : தமிழர் கண்ணோட்டம் - மார்ச்ச 2007
? ! ?

அறிவுத் தீயின் ஆற்றலில்
முறியும்
மூடத்தைத் தாங்கும்
இருட்டுக் கழிகள்

அறிவியல் ஒளியில் பிறக்கிறது
மானுடத்தின்
அடுத்த பரிணாமம்.

மூலக்கூறுகளின் அமைப்பினை
மாற்றி
வாழ்வினைப் புரட்டுகிறது
உயிரித் தொழில் நுட்பம்

ஆகாயத்தின் காற்றுப்படிகளில்
ஏறிநடக்கின்றன
மனிதனின் கால்கள்.

செவ்வாய்க் கோளின்
நீரினைக் குடிக்க தாகமாயிருக்கின்றன
பூமியில் பிறந்த ஆட்டுக்குட்டிகள்

செவ்வாய் தோஷத்தால்
வாழைமரத்தைக் கட்டிக் கொள்கிறாள்
இந்திய உலக அழகி.

கையளவு கணிப்பொறியில்
உலகம் தெரிகையில்
கையைக் காட்டி வாழ்வைத்
தொலைக்கிறான் சோதிட இந்(து)தியன்.

யாழன் ஆதி
நன்றி : தலித் முரசு மார்ச் 2007
தமிழுக்கு எதிரான தடைகளை உடைப்போம்.

உலக மொழிகளுக்கெல்லாம் மூத்தவள்
என் தமிழன்னை - அவளுக்கோ
இன்று ஆயிரம் ஆயிரம்
பிரச்சனைகள் - தடைகள்....

தடைகளைப் பட்டியலிட்டால்
முதலில் நிற்பது - ஆங்கிலப் பள்ளிகள்.
ஆங்கிலப்பள்ளிகளின் ஆதிக்கத்தால்
நாடு கடத்தப்பட்டாள் - என் தமிழன்னை.
அழைப்பார் யாருமில்லாமல்
அழுகின்றாள் - தவிக்கின்றாள்.

ஆங்கிலப் பள்ளிகளில்
தாய்மொழியில் பேசினால் தண்டனையாம்.
என்ன கொடுமை இது ?
தாய் நாட்டில் - தாய்மொழியில்
பேசாமல் வேறெந்த மொழியில் பேசுவது ?
ஆங்கிலப் பள்ளிகளை அடியோடு ஒழித்தாலே
ஆரோக்கியமாக வளர்வாள் என் அன்னை.

அடுத்தாக தொல்லை தரும் தொலைக்காட்சி
இன்று சின்னத்திரை அறிப்பாளினிகளின்
நாவினில் என் தமிழன்னை கொலை
செய்யப்படுகிறாள்.
தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம்
தமிழைக் கொலை செய்யப் பிறந்த கோடாலிகள்
தேசிய விழாக்களில் கூட சிறப்பு நிகழ்ச்சியாக
சண்டைக்கோழி படத்தைத்தான்
போடுகிறார்களே தவிர -
சரித்திரப் படகங்களைப் போடுவதில்லை.
வரவேற்பறையை அலங்கரிக்கும்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை
வாசலுக்கு வெளியே அனுப்பி விட்டு
நம் வாரிசுகளுடன் உரையாடுவோம்,
அழகுத் தமிழில்.

அடுத்ததாக - பெரியத்திரை
பெரியதிரை பெயர்களில் கூட - இன்று
அடையாளம் காண முடியா அளவிற்கு
உருக்குலைந்து காணப்படுகிறாள் என் அன்னை
தமிழில் பெயர் வைத்தால்
வரி விலக்கு அதிகமாகும் - என்றொரு
கட்டம் வந்தவுடன் சட்டென்று மாறினான்
எம்டன் மகன் - எம் மகன் ஆக...
காட்பாதரோ - வரலாறு ஆனது.
சட்டங்களால் மட்டுமே இன்று
நம் தமிழை சரிகட்ட முடியும்
என்ற நிலை.

நினைக்கவே வேதனையாக உள்ளது
தமிழுக்குத் தடையாக உள்ள அனைத்தையும்
தகர்த்து எறிவோம்.
தவிக்கின்ற நம் தமிழ் அன்னையை
அரவணைப்போம் - நம் நாவினிலே.

- சீ. நீலாவதி - மன்னார்குடி -
நன்றி : ஆசிரியர் துணைவன் 15-3-2007

ஆசிரியர் துணைவன் இதழாசிரியர் க. மீனாட்சி சுந்தரம் கலைஞருக்கு வேண்டியவர்தான். தொடக்கப்பள்ளி நலன்கருதி ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளைத் தடைசெய்ய வேண்டலாமே? தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தொடக்கப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர முயலலாமே? ஆசிரியர்களின் மனம் மாற கருத்துரைக்கலாமே ? சின்னத்திரை சன் எப்படி இருக்கிறது? கொஞ்சம் யோசிக்க வேண்டும். பேசுவதையும் எழுதுவதையும் விட்டு விட்டு, இனிமேலாவது எதையாவது உருப்படியாக தமிழுக்குச் செய்தால் தமிழ் கட்டாயம் வளரும்.
தமிழறிஞர்களைப் பின்பற்றும் வங்க அறிஞர்கள்

2003 ஆம் ஆண்டில் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்களான முனைவர் திருமுருகனார், முனைவர் மா.இல.தங்கப்பா ஆகியோர் தமிழின் தன்மானம் காக்க தங்கள் விருதுகளைத் துறந்தார்கள்.

புதுவை அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணை மதிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில் அவர்களுக்கு புதுவை அரசு வழங்கியிருந்த விருதுகளையும் நிதியையும் புதுவை அரசிடமே திருப்பி அளித்தனர்.

மொழி காக்க தமிழறிஞர்கள் செய்த ஈகச்செயல் மலையாள அறிஞர்களை ஈர்த்தது. கோழிக்கோடு நகரில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி உணவு விடுதியைத் திறந்து வைக்க அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி முற்பட்டபோது ஊழல் பேர்வழிகளுக்குத் துணைபோன முதலமைச்சரின் செயலைக் கண்டிக்கும் வகையில் கேரள அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான எழுத்தச்சன் விருதைப் பெற்றுக்கொள்ள மலையாள எழுத்தாளரான சுகுமார் அழிக்கோடு மறுத்துவிட்டார்.

2007 ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகத் தங்களின் விளை நிலங்களைக் கையகப்படுத்த முனைந்த மேற்கு வங்க அரசை எதிர்த்துப் போராடிய நந்தி கிராம உழவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர்களுக்கு மேல் உயிர் துறந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க அரசு வழங்க விருந்த மிக உயர்ந்த இரவீந்திரநாத் விருதினைப் பெற்றுக் கொள்ள இரு வங்க எழுத்தாளர்கள் மறுத்துள்ளனர்.

புதுவைத் தமிழறிஞர்கள் காட்டிய வழியை இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழி அறிஞர்களும் பின்பற்றத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும். மொழி அறிஞர்கள் மக்கள் பிரச்சனைகளிலிருந்து விலகி நிற்க முடியாது என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

நன்றி : தென்ஆசியச் செய்தி 1-4-2007
தொடக்கப்பள்ளித் தமிழ்ப் பாடத்திட்டம்

இனி முத்தமிழ்களையும் தொடக்கப்பள்ளிப் பாடத்தில் சேர்க்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கலாம். இசைத்தமிழ் நாடகத்தமிழ்கள் பற்றிய செய்திகளில் எவற்றை எந்த அளவுக்குத் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்க முடியும்? என்று பார்க்கலாம்

1. மழலையர் வகுப்புகளில் கற்பிக்கப்படும் இசைப்பாடல்களை உரிய அபிநயத்துடன் பாடுமாறு கற்பிக்கலாம். இது இசைத் தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் அடிப்படை இட்டதாக அமையும்.

2. முதல் ஐந்து வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களில், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, திருக்குறள் முதலிய அறநூல்களைத் தவிர்த்து வரும் செய்யுள்களை இசைத்தமிழ் என்ற தலைப்பில் அமைத்து அவற்றை இயன்ற அளவு இசையோடு பாடுமாறு செய்யலாம்.

3. பள்ளி விழாக்களில் மாணவர்கள் உரையாடல் பேசி நடிக்கும் நாடகங்களுடன் கதைப் பகுதிகளை இசையோடு பாடி ஆடும் இசை நாடகங்களை நடத்தக் கற்பிக்கலாம்.

4. தேவாரம், திருப்பாவை, திருப்புகழ், திருவருட்பா, காவடிச்சிந்து, கவிமணி, பாரதியார், பாரதிதாசன் முதலியோரின் பாடல்கள் ஆகிய இசைத்தமிழ்ப் பாடல்களை உரிய இசையோடு பாடும் பயிற்சி தந்து போட்டிகள் வைத்துப் பரிசு தரலாம்.

5. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் குறித்த சொற்களையும் தொடர்களையும் தொடக்க வகுப்புகளில் படிக்கவும் எழுதவும் பயிற்றலாம். அடுத்த வகுப்புகளில் தமிழ்மொழி மூன்று வகைப்படும் என்பதை மட்டும் சுருக்கமாகக் கற்பிக்கலாம். பின்னர் அம்மூன்று வகைகள் யாவை என்பதை விளக்கிக் கற்பிக்கலாம்.

6. முன் தொடக்க வகுப்புகளில் இசையோடு பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களின் பெயர்களை மட்டும் (பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா, குறவஞ்சி, பள்ளு முதலியன) கற்பித்து, அடுத்த வகுப்புகளில் அவற்றில் சில பாடல்களைக் கற்பிக்கலாம்.

இரா. திருமுருகனார் அவர்கள் தெளிதமிழ் மீனம் 2038 இதழில் குறிப்பிட்டுள்ள இக்கருத்தினைத் தொடக்கப்பள்ளிக்குப் பாடம் எழுதும் வல்லுநர்களும், தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்துகிற பொறுப்பாளர்களும் சிந்தித்து இது தொடர்பாக முறைப்படுத்தி நம் தமிழ் மழலையர்களை தமிழிய மக்களாக மாற்றத் திட்டமிடுவார்களாக - தமிழ்க்கனல் - பொள்ளாச்சி
வணிக நோக்கமா? வர்க்க பாசமா?

...... பொதுப்பள்ளி, சமகல்வி என்று கோரிக்கை வைக்கப்படும் முன்பே அதற்கு முட்டுக்கட்டை போடத் துடிக்கின்றனர். கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்த்துவிட்டன. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கின்றன என்ற நிலையை இன்னும் எட்டவில்லை. அதற்கு முன்னரே அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்குச் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி ஒத்த கருத்தை உருவாக்கப் போகிறோம், அனைத்துத் தரப்புக் கருத்துகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லி, அரசு பிரச்சனையை கிடப்பில் போடலாம்.

இதில் வேதனை என்னவென்றால், மக்கள் சேவையில் கல்விப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாகவும், அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியில் அரசின் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதாகவும், கூறிக் கொண்டு பெரிய மனிதர்களாக வலம் வருபவர்கள் தான் முதல் கல்லை எறிந்திருக்கின்றனர். மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகங்கள் கூடித் தங்கள் கூட்டமைப்பின் சார்பில் பொதுப் பள்ளிக்கும், ஒரே பாடத்திட்டம் என்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் கெட்டுப்போகும் எனவே இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப் படவே கூடாது.

அவர்களைப் பற்றி நாம் இங்கு விமர்சிக்க வில்லை. அவர்கள் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கூறும் காரணத்தை சற்றே உரசிப் பார்ப்போம். முன்பு தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவர்கள் தனியான பாடத்திட்டத்தைப் பின்பற்றினார்கள். பின்பு பள்ளி இறுதித் தேர்வு வரையிலும் அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. தனியார் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி இரண்டிலும் ஒரே பாடத்திட்டம். இந்தத் திட்டத்தில் கல்வியின் தரம் தாழ்ந்து போயிற்று என்று யாராலும் சொல்ல முடியாது.

அடுத்த கேள்வி. இவர்கள் குறிப்பிடும் தரம் எது? மனிதத்தை, மனித நேயத்தைக் கொன்று புதைத்துவிட்டு எந்திரத்தனமாக (பணம் பண்ணும் எந்திரமாக) வாழ்வதா?

அத்தனைக்கும் மேலாக இவர்களது உண்மையான நோக்கம்தான் என்ன? கல்வி நிறுவனங்களை வணிக நிறுவணங்களாக மாற்றி விட்ட இவர்கள் தங்களது லாப வேட்டைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படக் கூடாது என்று எண்ணுகிறார்களா? அல்லது பொதுப்பள்ளி, சமகல்வி என்று சொல்லி அடித்தட்டு மக்களின் குழந்தைகள் கல்வியிலும் வாழ்விலும் முன்னேற வாய்ப்பளித்தால் தங்கள் வர்க்கம் மட்டுமே இதுவரை அனுபவித்து வரும் சலுகைள் பறிபோய்விடும் என்ற பயமா? லாப நோக்கமா? வர்க்க பாசமா?

- பாலன் -
நன்றி : கல்ஓசை இதழ் மார்ச் 2007
மொழியின் முகங்கள் - தொடர் 20 அருண் - கிள்ளான்.

தமிழ் உப்பைத் தின்ற சரோஜாதேவி தனது அடையாளத்தைக் காட்டிவிட்டார்.

இருநூறு ஆண்டுகளாகக் காவிரி நீர் தொடர்பாகத் தமிழகத்திற்கும் கன்னடத்திற்கும் இடையே சிக்கல் இருந்து வருகின்றது. சட்டத்தின் துணையுடன் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமென்ற முனைப்பு 1990 முதற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சூன் 2, 1990 இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 5 இல் காவிரி நீர் தொடர்பாகக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி நீர் கொடுக்க வேண்டு மென்று முடிவு கூறப்பட்டது.

இதனை எதிர்த்துக் கன்னட மக்களும், கன்னட அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீதியைக் காக்கவேண்டிய கன்னட வழக்கறிஞர் மன்றம் உட்பட பல்வேறு இயக்கத்தினர் இத்தீர்ப்பை எதிர்த்துக் கண்டனங்களும், போராட்டங்களும், பேரணிகளும் நடத்தினர். அவ்வாறு எதிர்த்துப் பேரணி நடத்திய இயக்கங்களில் கன்னட சினிமா சங்கமும் ஒன்றாகும். இப்பேரணிக்குத் தமிழ்த் திரைப்பட நடிகை சரோஜாதேவி தலைமையேற்பார் என அறிக்கைகள் வெளியிடப் பட்டிருந்தன. இவரின் இச்செயலைப் பற்றி தமிழக ஏடுகள் வெளியிட்ட செய்தியை மலேசியத் தமிழ் நாளேடுகள் இங்கு வெளியிட்டன. உலகத் தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும், பிறரை அடையாளங் கண்டிடவும் - கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி, ரஜினிகாந்த் தொடர்பான செய்திகள் வாய்ப்பாக அமைந்தன.

தமிழ்ச் சினிமாவில் நடித்துப் பொருளீட்டிய நடிகர்களான சரோஜாதேவி, ரஜினிகாந்த், பிரபுதேவா போன்றவர்கள் தம்மளவில் மிகச் சரியாகவே இருக்கின்றார்கள்.

நான் நடித்தேன். அஃது என் உழைப்பு. அதற்கு நீ பணம் கொடுத்தாய். என் நடிப்பின் மூலம் உன்னை மகிழ்வித்தேன். நீ பாராட்டினாய். நான் நன்றாக நடித்தேன். நீ வாயாரப் பாராட்டினாய். உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். "அடிப்படையில் நீ தமிழன், நான் வேறு" - நடிகர்கள் உணர்த்திய பாடம் இது.

இனியாவது தமிழர்களின் மயக்கம் தீருமா?

நன்றி : செம்பருத்தி - மார்ச் 2007
பிள்ளையார் சுழி, o

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், பிள்ளையார் வழிபாடு இவ்வுலகில் எங்கும் இல்லை. நம் தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய இலக்கியங்களிலும் பிள்ளையாரைப் பற்றிய எவ்விதச் சிறுகுறிப்பும் இல்லை. ஆனால் "உ" குறியீடு பண்டைய ஓலைச் சுவடிகளிலும் உள்ளதே? பின்னே வந்த பிள்ளையாரின் பெயர் தொன்மத் தமிழ்ச் சான்றோர் கைக் கொண்ட ஒரு குறியீட்டுக்கு எவ்வாறு பெயராக வாய்த்தது?

எழுத்து ஒலிகளுக்கு வரிவடிங்கள் தோன்றிய காலத்தில், ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழியைக் கற்களிலும், மரப்பட்டைகளிலும், விலங்குத் தோல்களிலும், துணிகளிலும், தாமரை இலைகளிலும், தாழை மடல்களிலும் - என எழுதத் தலைப்பட்டனர். காலப்போக்கில் அவை தேய்ந்தும், இற்றும், உளுத்தும் அழிந்து போயின,

தமிழராம் நம் முன்னோரே, தாளிப்பனை என்னும் சீதளப் பனையின் ஓலைகளில், கொல்லுப்பட்டடை உலைக்கூடத்தில் வடிக்கப்பட்ட ஆணிகளைக் கொண்டு எழுதினர். ஓலையில் எழுதுவதே ஓர் அரிய கலையாம். எல்லோராலும் எழுதிவிட முடியாது. அதற்கென உரிய பயிற்சி பெற்றாக வேண்டும். ஓலை பச்சையாக இருந்தாலோ, காய்ந்து இருந்தாலோ எழுத வராது. எழுத்தாணி கூராக இருந்தாலோ, மொக்கையாக இருந்தாலோ எழுத இயலாது.

முதிர்ந்த ஓலையை, முற்றல் - காய்ந்தது - வற்றல் என மூவகைப் படுத்தினர். இளவோலையை, குருத்தோலை - பச்சோலை - சாரோலை என்றும் மூவகைப் படுத்தினர். முதிர்ந்த ஓலையையும், இளவோலையையும், அவை நெடுங்காலம் உழைக்கா எனக் கருதி விலக்கிவிட்டு, இடைப்பட்ட ஓலையைப் பதம் பார்த்துத் தேர்ந்தெடுப்பர். என்னே ஓர் ஆய்வு.

தெரிந்தெடுத்த ஓலைகளை அளவாக நறுக்குவர். இதை ஓலை வாருதல் என்றனர். பின் அவ்வோலைகளை ஒத்த அளவுள்ள இணை ஓலைகளாக நறுக்குவர். இதைச் சுவடி சேர்த்தல் என்றனர். இணையான காளைகளைச் சோடிக்காளை, புறாக்களைச் சோடிப்புறா, கால் தடங்களை சுவடு, என்பது நாம் அறிந்தனவே,

சுவடி என்னும் சொல் தொன்தமிழ்த் தேன் சொல்லே சோடி - என்றானது. இதன் முதல் எழுத்தை ஜோ என்று மாற்றி - ஜோடி, ஜோடிப்பு, ஜோடனை - என்பதெல்லாம் - எழுத்து மாற்று - ஏமாற்று வேலையாம். நம் குழந்தையைச் சோடித்துத் தன்குழந்தை எனப் பொய்க்கும் கயமை போன்றதே. சோடி - சுவடி - சோடனை - ஜோடனை - என்பனவற்றை எழுத்து மாற்றி ஏமாற்றும் தமிழ்ப் பகையின் கயமைச் சூதும்.

சுவடி சேர்ந்த ஓலைகள் வலுவாகவும், பூச்சி அரிக்காதவாறும் இருப்பதற்கு வெந்நீரில் போட்டு ஒரே சீராக வெதுப்பி எடுத்து - கதிரொளியில் காயவைப்பர். பனியில் பதப்படுத்துவதும் உண்டு. இவ்வாறு பதனிடப்பட்ட ஓலை நறுக்குகளை ஏடுபோல் அமைத்து, கம்பை என்னுஞ் சட்டமிட்டு, ஒரு துளையோ, இரு துளைகளோ இட்டுக் கயிற்றால் கட்டி வைப்பர். எழுதுவதற்கு ஏடுகளை ஆயத்தப் படுத்துவதையே ஓர் அரிய கலையாகப் போற்றி வந்துள்ளனரே நம் முன்னோர். என்னே அறிவுத் திரு.

சுன்னம், சுழியம், பாழ் என்றெல்லாம் சுழி, நம் இலக்கியங்களில் சுட்டப் பெறுகின்றதே. ஏட்டில் எழுதத் தொடங்குவோர், இடக்கையால் ஏட்டைப் பிடித்துக் கொண்டு வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துக் கொள்வர். ஓலை நறுக்கு காய்ந்திருந்தால் முறியும், பச்சையாக இருந்தால் சிக்கும், எழுத்தாணி கூர்மையாக இருந்தால் ஏட்டைப் பொத்துவிடும். மொக்கையாக இருந்தால் வள வள என ஓடுமேயன்றி எழுதவராது. இதனால் எழுதத் தொடங்கும் முன் ஏட்டின் ஓலையின் நடு உச்சியில், எழுத்தாணியால் ஒரு சுழியையும் ஒரு கோட்டையும் இட்டு சுவடியின்பதம், எழுத்தாணியின் பக்குவம் ஆகியவற்றை உற்றறிவர்.

நம் தாய்த்தமிழின் உயிர் எழுத்துகளும், ஆய்த எழுத்தும், மெய் உயிர்மெய் எழுத்துகளில் டபர மூன்றைத்தவிர பிறவும், சுழி-கோடு இணைந்த வடிவுகள் கொண்டவையன்றோ? எனவே, சுழிக்கவும், கோடிடவும், சுவடியும் எழுத்தாணியும் ஏற்றவாறு உள்ளனவா என்பதை உற்றறியும் நோக்கில், எழுதத் தொடங்கும்முன் ஒரு சுழி - ஒரு கோடு என முதலில் எழுதிப்பார்த்துப் பின்னரே எழுதத் தொடங்கினர் நம் முன்னோர்.

இந்தச் சுழியும் கோடும் ஒட்டிக்கொண்டே o வடிவை, பின்னர் தனித்தனியே சுழி-கோடு என்று எழுதிப்பார்க்காமல், தமிழின் உயிர்க்குறியாம் "உ" என்ற சுழியும் கோடும் இணைந்த வடிவில் உள்ள எழுத்தை எழுதிப்பார்க்கும் உயர்ச்சியுற்றனர். இன்றும் தாளும் தூவலும் கொண்டு எழுதும் முன், தாளின் தன்மை - தூவலின் இயல்பு ஆகியனவற்றை உற்றறியும் நோக்கில் "உ" என்று எழுதும் வழக்கம் தொடர்கின்றது.

இது தமிழை எழுதுதற்கான ஆய்வுக் குறியே ஆகும். ஆனால் தமிழ் - தமிழினப்பகை, தமிழ்- தமிழரைக் கெடுப்பதற்கு இக்குறியையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டு, அதனைப் பிள்ளையார் சுழி என்று கூசாது கூறி வருகின்றதே. என்னே கரவு.

பொறிஞர் அகன் - தமது தொடரில்..
நன்றி : தமிழர் முழக்கம் - கும்பம் இதழ்
தொடர்வண்டித் துறை வரவு செலவுத் திட்டம்

கடந்த 26-2-07 அன்று இந்தியத் துணைக் கண்டத்தின் பாராளுமன்றத்தில் தொடர்வண்டித் துறை அமைச்சர் லாலு பிரசாத் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தொடர்வண்டித் துறையின் 2007-2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பொதுவாகப் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள சில முதன்மையான கூறுகள்.

1) பொதுவாக அனைத்து வகையான பயணக் கட்டணங்களும் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளன.

2) முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை ஒரு வண்டிக்கு 4 லிருந்து 6 ஆக உயர்த்தியதோடு, அப்பெட்டிகளில் தற்பொழுது உள்ள மரப்பலகையிலான இருக்கைகளுக்கு மாறாக மெத்தை இருக்கைகள் அமைக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

3) சிறப்புத் திறனுடையோருக்கான சிறப்பு வசதிகள் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது.

4) பால் மற்றும் காய்கறி வணிகத்தில் ஈடுபடுவோர், பொருள்களுடன் பயணம் செய்ய சிறப்புப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

5) அகவை முதிர்ந்தோருக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் கீழ்ப்படுக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அறிவிக்கப்பட்டுள்ளது.

6) மைய அரசு நடத்தும் தேர்வுகளுக்குச் சென்றுவர 50 விழுக்காடு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

7) சில எரிபொருள்கள், இரும்புத் தாதுகள் ஆகியவற்றுக்கான சரக்குக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

8) 32 புதிய வண்டிகள் மற்றும் 8 ஏழைகளுக்கான குளிர்சாதன வண்டிகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும் கடந்த நிதியாண்டில் தொடர்வண்டித்துறை ஈட்டியுள்ள மொத்த வருமானம் 20,000 கோடி என்று கணக்கிட்டுள்ளமை வரவேற்கத் தக்கது மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகவும்,வருமானம் உள்ளதாகவும் இயங்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

இப்படிப் பல சிறப்பம்சங்களுடன் தொடர்வண்டித் துறை செயல்படுவதற்கு, அத்துறைக்கான அமைச்சர்கள் முதன்மையான காரணம் என்பது கவனிக்கத் தக்கது. மண்குடுவை, கட்டணக்குறைப்பு, முதியோர் மற்றும் சிறப்புத் திறனுடையோருக்கு வசதிகள் மற்றும் சலுகைகள், உழைக்கும் உழவர்கள் மற்றும் சிறுவணிகர்களுக்குச் சிறப்பு வசதிகள் போன்ற மக்கள் மயமான திட்டங்கள் மூலம் இத்துறையின் பயன்பாடு உயர்த்தப் பட்டுள்ளது. மக்கள் மயமாக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் சரக்குப் பெட்டிகள் கையாளுதல், உணவகம் நடத்துதல் போன்ற சில பணிகளில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது, பொதுவாக வருமானம் நிறைந்த இந்தத் துறையைத் தனியார் விழுங்கத் துடித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. இப்பணிகளை இத்துறையே ஏற்று நடத்தலாம். அல்லது நாடெங்கும் மக்கள் அமைத்துள்ள சுயஉதவிக் குழுக்களை உணவகம், சிறுகடைகள் போன்றவற்றை நடத்த அனுமதிக்கலாம். ஏற்றத் தாழ்வான சமூகத்தில் கொடுக்கும் வாய்ப்புகளைப் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு எப்படி வழங்குவது என்பதே நமது நோக்கமாயிருக்க வேண்டும்.

நன்றி : இலட்சியப் போராளி மாதஇதழ் - மார்ச் 2007
நேர்காணலில் பழ.நெடுமாறன் அவர்களின் பதில்

தற்போதைய சூழ்நிலையில் தமிழர் ஒற்றுமை குறித்த உங்கள் கருத்து என்ன? அதைச் சாதிப்பதற்கான திட்டம் ஏதேனும் உண்டா?

ஒன்றுபட்டாலொழிய வேறு வழியில்லை. சாத்தியமாவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் உரோமர்களால் விரட்டி அடிக்கப்பட்டுத் தன் இனத்தை மறந்தார்கள். 1930 இல் செர்மனியில் இட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது உலகம் அறியாத வண்ணம் யூதர்களைப் பல கொடுமைகள் செய்தார். திட்டமிட்ட படுகொலைகள் செய்தார். எந்தெந்த நாடுகளை அவர்கள் பிடித்தார்களோ, அங்கே உள்ள யூதர்களுக்கு அதே கொடுமையைச் செய்தார். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் அழிக்கப்பட்டனர் என வரலாறு கூறுகிறது. 2 ஆம் உலகப்போருக்குப் பின் யூதர்கள் இந்த நிலமை நீடித்தால் நம் இனம் அடையாளம் தெரியாமல் அழிந்துவிடும் என்று கருதிப் பாலத்தீனத்தின் ஒரு பகுதி நிலத்தை அதிக விலைக்கு வாங்கினார்கள். பின்னர் ஆயுதப்பயிற்சி பெற்றார்கள். அதன் பிறகு பாலத்தீனத்தைப் பிடித்தார்கள். அதுமட்டுமல்ல அவர்களுடைய மொழியான ஈப்ரு மொழி செத்த மொழிகளில் ஒன்று. சமற்கிருதம் போல் பேச்சு வழக்கிலேயே கிடையாது. பின்னர் அம்மொழிக்கு உயிரூட்டினார்கள். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஈப்ரூ மொழியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஈப்ரூ மொழியைத் தூக்கி நிறுத்தினார்கள். ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட ஒரு உயிரற்ற உடலை மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்தது போல, அவர்கள் மொழிக்கும் இனத்துக்கும் பண்பாட்டிற்கும் உயிரூட்டி விட்டனர்.

2000 ஆண்டுக் காலமாக நம் தமிழ்மொழி வடமொழி ஆதிக்கம் மற்றும் பிறமொழி படையெடுப்புகளைத் தாங்கிக் கொண்டும் இன்றும் இளமை குன்றாது உள்ளது.

நாம் ஏன் ஒன்றுபட்டு இழந்த பெருமையை மீண்டும் நிலை நாட்ட முயடியாது? இதில் நமக்கு சந்தேகமே வரக்கூடாது.

நான் எடுத்துக் கொண்டு இருக்கிற இந்த பிரச்சனை என்பது ஏதோ ஒருநாள் அல்ல சில ஆண்டுகளில் தீர்த்து வைக்கப்படுகின்ற பிரச்சனை அல்ல. நாம் நம் மக்களுக்கு முதலில் தமிழ் தேசிய உணர்வை ஊட்ட வேண்டும். இந்திய தேசிய மயக்கத்திலும், திராவிட தேசிய மயக்கத்திலும் ஆழ்ந்து போயிருக்கிற மக்களை அந்த மயக்கத்திலிருந்து விடுவித்து, அவர்களைத் தாம் யார் என்பதை அறியப்படுத்தும் பெரும்பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணி என்பது உடனடியாக முடிந்து விடக்கூடிய பணி இல்லை. இதற்கு தொடர் ஓட்டம் மனோபாவம் வேண்டும். இதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடியபின்னர் கொடியை வேறு ஒருவரிடம் தந்து விடுவார். அப்படியே ஒவ்வொருவரும் செய்வர். நான்காவதாக உள்ளவர் வெற்றி இலக்கை அடைவார். ஆக முதலில் உள்ளவர்கள் அமைத்துக் கொடுக்கும் அடித்தளத்தில்தான் நான்காமவர் வெற்றி இலக்கை அடைவார். ஆகவே என்னுடைய காலத்திலேயே தமிழ்த் தேசியம் மீட்சி பெறுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன். இல்லை என்றாலும் எனக்குப் பின்னால் உங்களைப் போன்றவர்கள் உங்களுக்குப் பின்னால் உங்களைப் போன்றவர்கள் முன்நடத்திச் செல்வார்கள். செல்ல வேண்டும். அப்படி செய்தாலொழிய நாம் இதில் வெற்றி பெற முடியாது.

பழ. நெடுமாறன் நேர்காணலில்...
நன்றி : தமிழர் தொலை நோக்கு முதல் இதழ் பிப் 2007

இந்தியா ஒரு நாடல்ல

கேரளாவும், கன்னடமும் ஆந்திரமும், மராட்டியமும் ஏற்படுத்தி வரும் நிலைமைகளைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. மாநிலங்களை மொழி வழி வாரியாகப் பிரிக்கப்பட்ட போது இன்று நடைபெற்று வரும் எலலைச் சண்டையும், தண்ணீர்ச் சண்டையும் கடல் வழிச் சண்டையும் ஏற்பட்டுவிடும் என்று நாட்டை ஆண்ட தலைவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா?

அய்ம்பது ஆண்டுகளில் காளான் போன்று தோன்றிய கட்சிகளையாவது தலைவர்கள் கட்டுப்படுத்தி இருந்தார்களா? அதனால் தானே அடாவடித்தனம் தலைவிரித்து ஆடுகிறது? ஏழுபேர் இருந்தால் ஓர் அரசியல் கட்சி தொடங்கலாம் என்று விதி இருக்கும் வரை நாடு நாடாக இருக்காது. நாடு விடுதலையடைந்ததும் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் விண்வெளி, நீர்வழி, படை, பாதுகாப்பு, இந்த நான்கை மட்டும் வைத்துக் கொண்டு மொழி வழி மாநிலங்களுக்கு முழு உரிமையையும் வழங்கியிருக்க வேண்டுமல்லவா? நீர் நாட்டுடமையாகியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்குமா? அவ்வாறு ஏற்பட்டிருந்தால் மராட்டியம் கன்னடர்களுக்கு எதிரியாகி இருக்காது. பல கொலைகள் நிகழ்ந்திருக்காதே.

கேரளாக்காரன் எஞ்சிய நீரை கடலுக்குள் செலுத்துவோமே தவிர, தமிழகத்திற்குத் தரமாட்டேன் என்று கூற முடிந்திருக்குமா? காவேரி நீரை தமிழக மக்கள் செத்தாலும் தரமாட்டேன் என்று கன்னடியன் கூற முடியுமா? ஆந்திராவில் தெலுங்குப் பாடம் படிக்காவிட்டால் நாட்டை விட்டுப் போய் விடு என்று தம் மண் வாசனையைப் பெரிதும் காப்பாற்றும் எண்ணம் வந்திருக்குமா? ஆனால் பொறுமையின் சின்னமாக ஆக்கப்பட்ட தமிழர் மட்டும் கட்சிப் போர்வைக்குள் நுழைந்து கொண்டு தமிழின உணர்வு இல்லாமல் லாவணி பாடிக் கொண்டிருக்கிறார்களே ஏன்?

ஆங்காங்குள்ளவர்கள் கட்சியை மறந்து நீரையும் மண்ணையும் விட்டுத்தர மறுக்கிறார்கள். ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இவற்றை நினைக்கும் பொழுதுதான் தந்தை பெரியாரும் ஜின்னாவும் நெருங்கிய நண்பர்களாயிருந்த காலத்தில் ஜின்னா வழியைத் தந்தை பெரியார் பின்பற்றியிருந்தால் இந்த அடாவடித் தனங்களில் தமிழினம் மாட்டிக் கொள்ளாமல் தப்பியிருக்குமே என்ற எண்ணம் மக்களிடம் தோன்றுவது தவறாகாதே. தமிழினம் சிந்திப்பது நல்லது.

அருளாளன் - ஆசிரியர் உரையில்.
நன்றி : தமிழ்ப்பாவை மேழம் இதழ்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061