வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 - 02 - 2008கல்வியில் சமச்சீர் கொண்டுவர

1) மதிப்பெண் பட்டியலில் இசை, நடனம், பாடல், ஓவியம், விளையாட்டு - போன்ற துறைகளுக்கென்று - ஒரு பாடமாகக் கருதி - இடம் ஒதுக்கி மதிப்பெண் தரவேண்டும்.

2) தரம்மிக்க ஆய்வகம். நவீன கற்பித்தல் உபகரணங்கள், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டாயமாக்குவது.

3) உடல் குறைவுடையோருக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கு. புலனியக்கக் குறையாடு உடையோருக்கு, சமூக வளர்ச்சி குறையுடையோருக்கு, சிறப்புப் பள்ளிகள் வேண்டும். இவை மாவட்டத்திற்கு 5 வேண்டும்.

4) முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை வேண்டும்

5) காலியாகும் பணியிடங்களை ஒரு மாதத்திற்குள் நிரப்ப வேண்டும்.

6) நடுநிலைப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஒவ்ெ வாரு பள்ளிக்கும் ஒரு ஓவிய ஆசிரியர், ஒரு கைத்தொழில் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் அவசியம்

7) நடுநிலைப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஒவ்வொரு பள்ளியிலும் நூலகர் நூலகம் அவசியம்

8) உயர்நிலைப் பள்ளிவரை உள்ளூரிலேயே படிக்க பள்ளிகளைத் தொடங்குதல்

9) தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டாயம் தனித்தனி அறைகள்

10) குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல்

11) ஓராசிரியர், ஈராசிரியர் என்ற நிலையை மாற்றுதல் கூடுதல் ஆசிரியர் நியமனம்

12) ஒவ்வொரு நாளும் ஒரு பாடவேளை நூலகப் படிப்புக்கு ஒதுக்குதல் வேண்டும்

13) அரசு தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் ஒரே கால அட்டவணை பள்ளி நேரம்

14) ஆசிரியரின் கற்பித்தல் திறன் வளர சிறப்புப் பயிற்சிகள்

15) பிழைப்புக்காக குடும்பத்தோடு இடம் பெயரும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு மாவட்டம் தோறும் உண்டு உறைவிடப் பள்ளிகள்

16) ஊட்டச்சத்து -ஹீமோகுளோபின் குறைவான குழந்தைகளின் கற்றல் திறன் வளர சிறப்புத் திட்டங்கள்

17) ஆசிரியர்களின் பணியிட மாறுதலை மே மாதத்திலேயே முடித்தல்

18) அனைவருக்கும் கல்வித் திட்ட பயிற்றநர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்லூரி முதல்வர்களைக் கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். டி.ஆர்.பி. யில் நேரடி நியமனம் பெற்றவரை பயிற்றுநராக நியமிக்கக் கூடாது.

19) பேறுகால விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்குப் பதிலாக மாற்று ஆசிரியர் நியமனம்

20) ஒவ்வொரு பாடத்திற்கும் பணியிடைப் பயிற்சி வேண்டும்

21) தொடக்கப்ப்ள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிவரை ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் கட்டாயமாக்கல் - இதில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்துதல்.

22) அரசு செயலர், இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர்கள் மாதத்திற்கு இத்தனை பள்ளி என்று ஆய்வு செய்ய வேண்டும்.

23) கல்வி அமைச்சர் மாதத்திற்கு இத்தனை பள்ளி என்று ஆய்வு செய்ய வேண்டும்

24) மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மாதத்திற்கு ஒருமுறையாவது ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்தல்

25) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஒவ்வொரு ஆண்டும் எல்லாப் பள்ளியையும் ஆய்வு செய்ய வேண்டும்

26) அரசுச் செயலர் இயக்குநர் கல்வி அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல்

27) பத்து முதல் 20 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை கட்டாயமாக மாற்றுவது

28) மாற்று ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் ஆசிரியர்களை நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்குவது

29) தொடக்கப் பள்ளிகளில் முறைவைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களை நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்குவது

30) தனிப்பயிற்சி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களைப் பணியிலிருந்து நீக்குவது

31) 10,12 வகுப்புகளில் குறைந்த சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுக்கும் ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை ஊதிய உயர்வு நிறுத்தம்

32) ஊக்க ஊதியத்தை நிறுத்துதல்

33) சிறுபான்மையினர் நலச் சட்டத்தை கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி மறுத்தல் - புதுச்சட்டம்

34) அடிப்படை வசதிகளற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமத்தை இரத்து செய்தல்

35) கிராமப்புற குறிப்பாக ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 20 மாணவருக்க ஒரு ஆசிரியர் என்ற நிலை ஆக்குதல்

36) வருவாய்த்துறையிலிருந்து ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளைப் பிரித்தல்

37) ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் பாடவாரியாக பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளித்தல்

38) ஆதிதிராவிடர் நல விடுதிகளில் காப்பாளராகப் பணியாற்றவோரை தொடர்ந்து அப்பணியிலேயே நீடிக்க விடுதல். விடுதியிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து விடுதிக்கும் மாறுதல் அளிக்கக்கூடாது.

39) தற்போதைக்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்ட முதன்மைக் கலவி அலுவலர் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும்.

40) தொடக்கப்பள்ளிகளில் சாதி சான்று கோரவோ, பதிவேட்டில் பதியவோ கூடாது

41) அரசு ஊழியரின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் கட்டாயம் படிக்கச் சட்டம்

42) அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணி சட்டம்.

43) அடிப்படை வசதிகள் இல்லாத அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும்

44) முறையான பயிற்சி பட்டம் இல்லாமல் பாடம் நடத்தும் ஆசிரியரகளின் மீது ஒழுங்ககு நடவடிக்கை எடுக்க வேண்டும்

45) 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடங்களை 9 மற்றும் 11 ஆம் வகுப்பிலேயே நடத்தும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்தல்

46) கல்வி தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்காமல் ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர். முதன்மைக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் போன்றவர்களை நியமிக்க வேண்டும்.

47) மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் இல்லாத பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களை மாறுதல் அளித்தல்

48) தமிழைக் கலவி மொழியாகக் கொண்டுவர வேண்டும்

49) உயர் கல்வியில் மாவட்ட அளவிலான முன்னுரிமை வழங்க வேண்டும்.

50) Pre K.G., L.K.G., U.K.G., போன்ற வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விளையாட்டு., இசை, நடனம், பாட்டு மட்டுமே கொண்ட வகுப்பறைகளை உருவாக்குதல்.

நன்றி : (தலித் காலாண்டிதழ் ஆசா நிவாசு சென்னையில் 16-12-2007 இல் சமச்சீர் கல்வி ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நடத்திய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி : வெளியீடு அம்ருதா - பிப்ரவரி 2008


அம்ருதா இதழில் வெளியாகும் கட்டுரைகள் மக்கள் நலம் சார்ந்தவைகளாக இருக்கின்றன. தேடிப்பிடித்து எங்கெல்லாம் கருத்துச் செறிவுகள் இருக்கின்றனவோ அவற்றைத் திரட்டி இதழில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது அம்ருதா இதழ். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் பணி தொடரந்து கொண்டிருக்கிறது. இதழுக்கு எமது வாழ்த்துகள்.....


சமச்சீர்கல்வி என்ற கருத்தாடலை அரசு முன்னெடுத்து - அதற்கான குழு அமைத்து - பல்வேறு இடங்களில் இது பற்றிய அறிமுகவுரை, பகிர்ந்து கொள்ளுதல் எனக் கூட்டங்கள் நடத்தி - திரு.முத்துக்குமரன் தலைமையில் தொகுத்த கருத்துகளை செயல்படுத்தத் தற்பொழுது அனைவருக்கும் கல்வி இயக்க உயர் அதிகாரியான திரு.விஜயகுமார் அவர்களது தலைமையின் வழி செயற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது இதுவரை நடந்தது.


உண்மைநிலை என்ன?

மக்கள் தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்குக் கல்வி பற்றித் தெரியவில்லை.

மக்கள் - மயக்கத்தில் இருக்கிறார்கள் - பள்ளித் தாளாளர்கள் (பெரும்பாலும் கல்வி பற்றிய விரிவான ஆழமான பார்வை அற்றவர்கள்) பிடியில் மக்கள் சிக்கி, அவர்களது போதனையின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலம் பாழாகப் போகிறது என்று நினைக்கிறார்கள்...

கட்டுரையை முதலில் பார்ப்போம்.........

மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரை கூட்ட அரங்கில் படிக்கப்பட்டு அம்ருதா இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையில் சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பாக அந்த 50 கட்டளைகளும் அமைந்துள்ளன. இந்த 50 கட்டளைகளும் நிறைவேற்றப் பட்டால் நம் மாணவர்களின் அறிவு, ஆற்றல், செய்திறன், நுட்பம், வீரம், விவேகம், பண்பாடு, மக்கட்தன்மை ஆகியவற்றை நம் மாணவர்கள் பெற்று விடுவார்களா? மேலுள்ளவை புண்ணுக்குப் புனுகிடும் வேலையாகத்தான் இருக்கும். புண்ணை வெட்டி எறிந்து மருந்து போட வேண்டிய தருணம் இது.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட தொடக்கக் கல்வியை அனைவருக்கும் தரமுடியாத நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தொடக்கக் கல்வியை அனைவருக்கும் இலவசமாகத் தரமுடியாத நிலையில் இருக்கிறோம். அனைவருக்கும் தரமான தொடக்கக் கல்வியை இலவசமாகத் தரமுடியாத நிலையில் இருக்கிறோம்.

அனைவருக்கும் - தரம் - இலவசம் - தொடக்கக் கல்வியில் இது இருக்கிறதா ?

தொடக்கக் கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசு நெருக்குதல் தராததால் தொடக்கக் கல்வி அனைவருக்கும் கிட்டவில்லை. அனைவருக்கும் என்றால் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிப்பவருக்கும் சேர்த்து தான். பணம் இருந்தால் ஆங்கிலம் படிக்கலாம், இல்லையென்றால் அரசுத் தமிழ் பள்ளியில் படி என்று தள்ளப்படுகிற நிலையை யாரும் உணரவில்லை.

எங்கு படித்தாலும் தொடக்கப்பள்ளி இலவசக் கல்வியாக இருக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். பள்ளித் தாளாளர்கள், கல்வித் தந்தைகள், கல்விக் காப்பாளர்கள் இதனைச் செய்ய வேண்டும், செய்ய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை சார்ந்தது. இது பற்றி யாருமே பேசுவதில்லை.

எப்படியோ மேலே சொன்ன 50 கட்டளைகளையும் நிறைவேற்றி விடுகிறோம் என்று வைத்துக் கொண்டால், கல்வி தரமானதாக மாறிவிடுமா? - தரமான கல்வி - என்பதற்கான பொருள் என்ன?

மனிதனை மனிதனாக - மொழிப்புலமை உடையவனாக, துணிவும் ஆற்றல் உள்ளவனாக, நுட்பமான அணுகுமுறை உடையவனாக, பல்வேறு துறைகளின் நுட்பச் செயற்பாடுகளை அறிந்தவனாக, பண்பாளனாக, மனிதனாக மாற்றுகிற கல்வி முறை எது ?

இந்த மண்ணுக்கு ஏற்ற கல்விமுறை எது ? (நம்மாழ்வார் இந்த மண்ணுக்கு ஏற்ற வேளாண்மையை ஓடி ஓடி சொல்கிறார். யாருமே கேட்பதில்லை. மண்ணை பொன்கொழிக்கும் பூமியாக மாற்றுகிற உயரிய மண்ணுக்கு ஏற்ற முறை அது - ஆனால் அதை யாருமே கேட்பதில்லை. விளம்பரமும், ஏமாற்று வித்தையும் இங்கே விலை போகின்றன)

தரமான கல்வி வழியாகக், கூர்த்த மதியுடையவரை நாம் உருவாக்கத் தவறிவிட்டோம்.

ஆங்கிலேயன் விட்டுப்போன மெக்காலே கல்வி முறையில் அங்கும் இங்கும் சில் ஓட்டைகளை அடைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர இந்த மண்ணுக்கு ஏற்ற கல்வி முறையை நாம் உருவாக்க வில்லை. ஏனெனில் இங்கு கற்றவர்கள் இருக்கிறார்கள் ஆனால் கல்வியாளர்கள் இல்லை.

பேராசிரியர் தவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த பட்ச கற்றல் இலக்கு என்று அறிமுகப்படுத்தினார் - அது கூட தொடக்கக் கல்விக்கு மட்டும்தான். அதை உள்வாங்கி அதன் அனைத்துப் பரிமாணங்கையும் நடைமுறைப்படுத்துவதற்குள் 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதை அப்படியே வைத்து அதன் மேல்தான் காகிதக் கட்டடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய கல்வியாளர்கள்.

சமச்சீர் கல்வியும் இப்படி ஒரு காகிதக் கட்டடமாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்தக் குறிப்பினை எழுதுகிறேன்.

சமச்சீர் கல்வி என்று அறிவித்த அக் கல்விமுறை பள்ளிகளுக்குள் செலுத்தும் முன்.... அது......

(o)1) இந்த மண்ணுக்கு ஏற்ற தரமான கல்விமுறைதானா என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

(o)2) இந்தக் கல்விமுறை மாணவர்களது உள்ளார்ந்த ஆற்றலை வளப்படுத்துமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

(o)3) இந்தக் கல்விமுறை படிக்கிற அனைத்து மாணவர்களுக்கும் பயனாகி - அனைவரையும் உயர்த்துமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

(o)4) இந்தக் கல்விமுறை தொடக்க நிலை முதல் கல்லூரிக்கல்வி வரை தொடருமா என்பதையும் முறைபடுத்த வேண்டும்.

(o)5) இந்தக் கல்விமுறையில் படித்து முடித்த மாணவர்கள் தன் சொந்தக் காலில் நிற்பதற்கான அடித்தளத்தைப் பெறுவார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அடிப்படையான இந்த ஐந்து நிலைகளிலும் ஆய்வு செய்யாது - அவசரம் அவசரமாக - வெறும் சொல்லாடல்களின் வழி ஏதோ ஒன்று உள்நுழையுமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கல்வித் தேடலை நாம் நிகழ்த்தியே ஆகவேண்டும்.

- தமிழ்க்கனல் -
60 விழுக்காடு எடு இல்லை கல்வியை விடு

இந்திய அரசின் சமூக நீதித் துறை செப்டம்பர் 24, 2007 அன்று இந்தியா முழுவதும் உள்ள பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழில் நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்பின் இறுதித் தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண் எடுத்திருந்தால்தான் மத்திய அரசின் உயர் கல்விக்கான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித் தொகையை ப் பெறமுடியும் என்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணை முற்றிலும் தலித் விரோதமானது. மேலோட்டடமாகப் பார்த்தால் - தலித் மாணவர்கள் நன்கு படிக்கவும், 60 விழுக்காட்டிற்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற ஊக்குவிக்கிற, கட்டாயப் படுத்துகிற முயற்சி போல இது தோற்றமளிக்கும். ஆனால் உண்மை அதுவல்ல.நூறுகோடி மக்களைக் கொண்ட நாட்டில் பல்வேறு சாதி மத பொருளாதார, புவியியல் தலைமுறை ஏற்றத் தாழ்வுகள் நிலவுகிற இந்தியாவில், தமிழகத்தில் படிக்கும் அனைதது மாணவர்களும் - 60 விழுக்காடு மதிப்பெண் பெறுவது என்பது எங்கும். எப்போதும் நடைமுறை சாத்தியமற்ற எதிர்பார்ப்பாகும்.

ஒரு வேளை மிகப் பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள், குறைந்த அளவு 60 விழுக்காட்டிலிருந்து அதிகபட்ச அளவான 100 விழுக்காடு வரை மதிப்பெண் எடுப்பார்களானால். அப்போதும் இந்த அரசு கல்வி உதவித் தொகையை எல்லோருக்கும் வழங்கிவிடக் கூடாது. இன்று 60 விழுக்காடு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒருவேளை 70 விழுக்காடு அல்லது 80 விழுக்காடு மதிப்பெண்ணைக் கோரி நிபந்தணையை மாற்றி அமைக்கவே செய்யும்.

நன்றி : தலித் முரசு சனவரி 2008
17 ஆண்டுகளாகப் பலகோடி ரூபாய் கொள்ளை

சிமிட்டி ஆலைக் கூட்டணி அமைத்து விலையை உயர்த்தியது வெட்ட வெளிச்சம்

இந்தியாவில் உள்ள 41 சிமிட்டி ஆலைகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு சிமிட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை வணிக நடைமுறைகளுக்கான ஆணையம் கண்டுபிடித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாகவே இவ்வாறு நடைபெற்று வந்திருப்பதாகக் கூறியுள்ள ஆணையம், இதற்காகச் சிமிட்டி ஆலைகளுக்கு எந்த விதமான தண்டனையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிமிட்டி விலை இரண்டு மடங்காக உயரந்து விட்டது. அது மட்டுமின்றி அடுத்த மாதம் சிமிட்டி விலை மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிமிட்டி வணிகர்கள் கூட்டணி அமைத்தக் கொண்டு விலையை உயர்த்துவதே காரணம் எனக் குற்றச் சாட்டுகள் எழுந்தன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதையடுத்து அதுபற்றி விசாரிக்க கடந்த 1990 ஆம் ஆண்டு வணிக நடைமுறை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் விசாரணை அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள 41 சிமிட்டி ஆலைகள் கடந்த 17 ஆண்டுகளாகக் கூட்டணி அமைத்துக் கொண்டு சிமிட்டி விலைகளை அதிகரித்து வந்துள்ளன.

அம்புஜா சிமிட்டி, ஏ.சி.சி சிமிட்டி, இந்தியா சிமிட்டி, சென்னை சிமிட்டி, டால்மியா சிமிட்டி, லார்சன் அண்ட் ட்யூப்ரோ சிமிட்டி, சிறீ சிமிட்டி நிறுவனம் ஆகியவையும் இதில் அடக்கம்.

சிமிட்டி விலை உயர்வுக்கு நியாயமான காரணங்களைக் கூற சிமிட்டி ஆலைகளால் முடியவில்லை. அவை தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு தாங்கள் நிருணயித்ததுதான் விலை என்று விற்பனை செய்து வந்துள்ளன - என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல சனவரி 2008
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழர்கள்

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) ரா.பி.சேதுப்பிள்ளை
1956 - அலை ஒசை (புதினம்) கல்கி. ரா. கிருஷ்மூர்த்தி
1957 - விருது வழங்கப்படவில்லை
1958 - சக்ரவர்த்தித் திருமகன் (இராமாயண உரைநடை) இராசாசி
1959 - விருது வழங்கப்படவில்லை
1960 - விருது வழங்கப்படவில்லை
1961 - அகல் விளக்கு (புதினம்) மு.வரதராசனார்
1962 - அக்கரைச் சீமை (பயணநூல்) மீ.ப.சோமு
1963 - வேங்கையின் மைந்தன் (புதினம்) அகிலன்
1964 - விருது வழங்கப்படவில்லை
1965 - ஸ்ரீ ராமானசர் வரலாறு (வாழ்க்கை வரலாறு) பி.ஸ்ரீ.ஆச்சார்யா
1966- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) ம.பொ.சி
1967 - வீரர் உலகம் (திறனாய்வு) கி.வ.ஜகந்நாதன்
1968 - வெள்ளைப் பறவை (கவிதை) அ.சீனிவாச ராகவன்
1969 - பிசிராந்தையார் (நாடகம்) பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) கு.அழகிரிசாமி
1971 - சமுதாய வீதி (புதினம்) நா.பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்) ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் (புதினம்) - ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (திறனாய்வு) க.த.திருநாவுக்கரசு
1975 - தற்காலத் தமிழ் இலக்கியம் (திறனாய்வு) இரா. தண்டாயுதம்
1976 - விருது வழங்கப்படவில்லை
1977 - குருதிப்புனல் (புதினம்) இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (திறனாய்வு) வல்லிக்கண்ணன்
1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) தி. ஜானகிராமன்
1980 - சேரன் காதலி (புதினம்) கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை (விமர்சனம்) மா. இராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) பி.எஸ்.இராமையா
1983 - பாரதி காலமும் கருத்தும் (திறனாய்வு) தொ.மு.சி, ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - திரிபுர சுந்தரி
1985 - கம்பன் புதிய பார்வை (திறனாய்வு) அ.ச. ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் (திறனாய்வு) க.நா.சுப்பிரமணியன்
1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) ஆதவன்
1988 - வாழும் வள்ளுவம் (திறனாய்வு) வா.செ.குழந்தைசாமி
1989 - சிந்தாநதி (தன்வரலாறு) லா.ச.ராமாம்ருதம்
1990 - வேரில் பழுத்த பலா (புதினம்) சு.சமுத்திரம்
1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (புதினம்) கி.ராஜநாராயணன்
1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்றுப் புதினம்) கோ.வி.மணிசேகரன்
1993 - காதுகள் (புதினம்) எம்.வி.வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் (புதினம்) பொன்னீலன்
1995 - வானம் வசப்படும் (புதினம்) பிரபஞ்சன்
1996 - அப்பாவின் சினேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) அசோகமித்திரன்
1997 - சாய்வு நாற்காலி (புதினம்) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிசன் (புதினம்) சா. கந்தசாமி
1999 - ஆலாபனை (கவிதைகள்) அப்துல் ரகுமான்
2000 - விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்(திறனாய்வு) தி.க.சிவசங்கரன்
2001 - சுதந்திர தாகம் (புதினம்) சி.சு.செல்லப்பா
2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) சிற்பி
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (புதினம்) வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் (புதினம்) திலகவதி
2006 - ஆகாயத்துக்க அடுத்த வீடு (கவிதைகள்) மு.மேத்தா

நன்றி : முகம் பிப்ரவரி 2008
அருது தமிழ்ப் பள்ளி

அந்தமான் தீவின் அருது தமிழ்ப் பள்ளி வரலாற்றைத் திரித்து எழுத முயலும் சமூக விரோதிகள்....

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மிகப் பழமையான தமிழ்ப் பள்ளி அருது பள்ளி. இது 1956 இல் அன்றைய வனத்துறை அதிகாரி சீனிவாசன் அவர்களால் இடஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் தொடங்கப்பட்டதாகும்

ஆனால் அதன் வரலாற்றை முற்றிலுமாகத் திரித்து எழுத முனைந்துவரும் சில சமூக விரோதிகளுக்கு நிர்வாகம் முக்கியத்துவம் அளித்தது எப்படி ?

அருது இந்தி பள்ளி 1952 இல் ஜே.பேனர்ஜி என்பவரால் தொடங்கி வைக்கப் பட்டது. 1956 இல் தமிழ்ப் பள்ளி சீனிவாசன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. எனில் பொன்விழா 2006 இல் அல்லவா கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். ஆனால் 23.1.2008 அன்று அருது தமிழ்ப் பள்ளியில் 50 விழுக்காடு இந்தி பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது. இதில் துணை நிலை ளுனர் புப்பிந்தர சிங் அவர்களும் கல்வித்துறை செயலரும் கலந்து கொண்டனர்.

சீனிவாசன் அய்யா அவர்களின் துணைவியார் ரெங்கநாயகி அவர்களின் பெயரால் டிரஸ்ட் ஒன்றைத் தொடங்கி அதில் ஆண்டிற்கு ரூ 10000 க்கும் அதிகமான நிதியை சேமித்து ஏழை எளிய குழந்தைகளுக்கு பல கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தொடங்கப்பட்ட பள்ளியின் கல்வெட்டு எங்கே ? என அவரே ஒரு முறை பள்ளிக்கு தமது பணி ஓய்வு காலத்தில் வருகை புரிந்தபோது கேட்டார்.

அப்போது பள்ளியின் கல்வெட்டு மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப் பட்டது. இதுதான் தமிழ்ப் பள்ளி தொடங்கிய தமிழ் பெரியவருக்கு வழங்கப்படும் மரியாதையா ?

டிரஸ்ட் பொருப்பை சுப,மூர்த்தி அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். அவரது மறைவிற்குப் பிறகு டிரஸ்ட் பணிகள் முடங்கி போனது. ஆனால் அப்பள்ளியை தொடங்கியது பேனர்ஜி எனப் பேசப்பட்டது, பள்ளியின் பெயரால் தனியார் பலரும் கணக்கு வழக்கு இல்லாமல் வசூலித்தனர். அரசுப் பள்ளியின் நிலை இதுதானா ? நன்றி : அந்தமான் முரசு 2008
கல்விக் கடவுள் சரசுவதி - ஏலம் அமெரிக்காவில்

அரெிக்காவில் எப்பிங் நகரில் கல்விக் கடவுளான சரசுவதிக்கு இந்து மதவாதிகள் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டியுள்ளனர். மேலும் இக் கோயிலை விரிவுபடுத்தப் போகிறோம் என்று ஜி.ஜி.எல்.எல்.சி என்கிற நிதி நிறுவனத்திடம் ஒரு பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருக்கின்றனர்

ஆனால் இம்மதவாதிகள் கோயிலையும் விரிவுபடுத்தவில்லை, கடனையும் திருப்பித் தரவில்லை. 2006 இல் வழக்கு நடைபெற்றது, கடன் வாங்குவதற்காக ஈடுகட்டிய கோயிலையும், கடவுளையும் ஜப்தி செய்து கடன் தொகையை வசூலித்துக் கொள்ளும்படி தீர்பு அளிக்கப்பட்டது. இந்நிதி நிறுவனமே இக்கோயிலை ஏலத்தில் விலைக்கு வாங்கிக் கொண்டது.

கோயில் பெருச்சாலிகளாக இருந்த 12 பேர்கள் கோயிலைவிட்டு வெளியேற்றப் பட்டனர், இப்பொழுது சரசுவதிக்கு அர்ச்சனையும் இல்லை, இக் கல்விக் கடவுளுக்கு சோற்றுக்கு வழியும் இல்லை,

நன்றி : யாதும் ஊரே பிப் 2008
புத்தாண்டுக் கொண்டாட்டம்

மும்பை நகரத்தில்
எண்பதுபேர் சேர்ந்து
இரண்டு பெண்களை
நட்டநடு ரோட்டில்
பலாத்காரம் செய்து
நாங்கள் நாகரீக
நாட்டு மிராண்டிகள் என
நிரூபித்திருக்கிறார்கள்.

சென்னை நட்சத்திர ஓட்டலில்
நீச்சல் குளத்தின் மீது
மேடை போட்டு டியதில்
மேடை சரிந்து குளத்தில் விழுந்து
உயிரை விட்டார் ஒரு இளைஞர்

மும்பை சென்னை போல்
பெருநகர் மட்டுமின்றி
மண்வாசனை மிக்க மதுரையிலும்
கணவன் மனைவியர்கள்
கட்டிப்பிடித்து டிக்களித்தனர்

கன்னியா குமரியிலோ
சேயருகே பார்த்திருக்க
வாயோடு வாய் கவ்வி
வாழ்த்துத் தெரிவித்தார்

கேரள மாநிலம் கொச்சியிலே
வெளிநாட்டுப் பெண்களை
உள்ளூர் வாலிபர்கள்
கட்டியணைத்து முத்தமிட்டு
கலவரம் புரிந்தாராம்

இதுபோல் நாடெங்கிலும்
நடந்திட்ட கூத்துகள்
ஏராளம் ஏராளம்

ஓசிச் சாராயம்
ஓவரானதுல
வாந்தி எடுத்தவனும் மப்புல பைக்கோட்டி
மண்டை ஒடஞ்சவனும்
எல்லாங் கெடக்கான்ங்க
பெரியாஸ்பத்ரீல
வருசம் புதுவருசம்
நல்லாப் பொறந்திருச்சி
வாழ்க இந்தியா

நன்றி - விகடகவி பிப் 2008
எழுவோம் வெல்வோம்

தமிழன்தான் இல்லாத நாடு மில்லை
தமிழனுக்கோ தனியாக நாடு மில்லை
தமிழன்தான் அடிபடாத நாடு மில்லை
தமிழனுக்காய் பேசவொரு நாடு மில்லை
உமிழ்கின்ற ஏளனத்தில் நாளும் நாளும்
உதைபட்டே அழக்கண்டும் கேட்போ ரில்லை
குமிழ் தன்னை ஊசியிலே குத்துதல் போல்
குற்றுயிராய்த் துடிப்பதினைக் காண்போ ரில்லை.


தம்நாடு செழிப்பதற்கே அழைத்துச் சென்றார்
தரையெல்லாம் பொன்கொழிக்கச் செய்த பின்பு
தம்நாட்டின் அடிமையென்றே நாயின் கீழாய்த்
தரைநிற்கும் உரிமைகூட இல்லை யென்றார்
தும்மினாலும் குற்றமென்றார் துயரைச் சொல்லித்
துணையோட அழுவதற்கும் தடைக ளென்றார்.
விம்மி விம்மி அண்டைமாநி லத்தில் நாட்டில்
விலைமாடாய்ச் சாகின்றார் நித்தம் நித்தம்


வெற்றுச் சொல் அறிக்கைகளால் பயன்தா னுண்டோ
வெறும் வார்த்தை றுதலால் துயர்கள் போமோ
உற்றதொரு துணையாக உள்ளோ மென்றே
உணர்வுடனே தமிழகத்துத் தமிழ ரெல்லாம்
ஒற்றுமையாய்க் குரல் கொடுத்தே சேர்ந்தோ மென்றால்
ஒரு நொடிக்குள் மாற்றங்கள் நிகழ்ந்தி டாதோ
பெற்றதொரு மானத்தைக் காக்கா விட்டால்
பெருவாழ்வு நமக்கெதற்கு எழுவோம் வெல்வோம்,

பாவலர் கருமலைத் தமிழாழன்

நன்றி - தமிழர் முழக்கம் இதழ்
பயன்தரும் பனைமரம்

பனங்கொட்டை என எள்ளி நகைப்பர் சிலர். அதை முளைக்க வைத்தால் பனங்கிழங்கு, கிழங்கைக் காயவைத்தால் ஒடியல், அவித்துக் காயவிட்டால் புளுக்கொடியல், வளரவிட்டால் வடலி, உலரவிட்டால் நெடும்பனை, அதன் குருத்தைக் காயவிட்டால் அதில் கவியும் எழுதலாம். குறிப்பும் எழுதலாம்.

படுத்துறங்கப் பாயும், அரிசி, மா போட்டு வைக்கப் பெட்டியும் பின்னலாம், ஒலை விரிந்துவிட்டால் பசுவுக்குத் தீனியாய் மறைப்புக் கட்ட வேலியாய், முகட்டில் கூரையாய்ப் பயன்தரும். மட்டையும் மிச்சமில்லை. நார்கீறி கடகம் பின்னிடலாம். பாளையைச் சீவி கட்டி தட்டி முட்டி கட்டிவிட்டால் போதை தரும் கள். முட்டியிலே சுண்ணாம்பு தடவி விட்டால் சுவையான கருப்பணி. கருப்பணியை காய்ச்சிவிட்டால் இனிப்பான பனங்கட்டி, கறுப்பான மரம் கருங்காலி போல் வைரம் தறித்து சீவிவிட்டால் கிணற்றடியில் துலாவாய்ப் பயன்படுத்தலாம். கீறுபோட்டுச் சீவி விட்டால் சிலாகை. பெரியதாகக் கூறுபோட்டால் கூரை போடும் மரமாகும்.

உண்ண ஒடியல் பிட்டு, கடித்துத் தின்ன பனாட்டு, குடித்து மகிழ ஒடியல் கூழ் அத்தனையும் தந்தாய், வீடு கட்டிக் கூரை போடவும் படுத்துறங்கப் பாயும் தந்தாய், மறக்கலாமோ உன் தொண்டை,

தமிழர் வாழ்வினில் துணையாய் நின்றிருப்பாய், நன்றி மறவாமல் நாட்டிடுவோம் நான்கு திக்கும் பணம் விதையை. முளைவிட்டு வளரட்டும் வானுயர,

க,பொ.தம்பிராசா, இலண்டன், (சுடரொளி செப்/அக் 07)

நன்றி - சிகரம் இதழ் சன பிப் 2008.

முத்தமி!ழ்ப் புலமையே முழுப்புலமை

சந்த யாப்பினைச் சற்றும் அறிகிலார்
தண்ட பாணியார் வண்ணம் தெரிகிலார்
சிந்து யாப்பினில் சீர்நிலை தேர்கிலார்
செவ்வி சைக்காம் உருப்படி ஓர்கிலார்
நந்த மிழ்க்குள் இசைத்தமி ழோடொரு
நாட கத்தமிழ் உண்மையும் காண்கிலார்
இந்த வாறுகற் றோரெலாம் முத்தமிழ்
இயல்ப றிந்த புலமையர் வரோ

இன்று செந்தமிழ்க் கல்வியில் பல்கலை
ஈந்த னுப்பும் முனைவர்பட் டந்தனை
வென்று பெற்றமா ணாக்கரகள் நாளையே
மேவு பேரா சிரியராய் வார்காண்
அன்ற வர்பயிற் றுந்தமிழ் முத்தமிழ்
ஆகு மோ ?வீறு முற்றிடாக் காளையும்
நன்று பேறு முதிர்ந்திடாக் கன்னியும்
நல்ல சேய்களை நல்கிடல் ஒல்வதோ ?

இரா, திருமுருகனார்


முட்டாள் பெட்டி

ஆற்றலுள்ள ஊடகங்கள் அனைத்தி னுள்ளும்
அனைவரையும் கவர்ந்திந்தக் குறுந்தி ரைதான்
சாற்றுகின்ற கருத்தனைத்தும் அவ்வப் போது
தவறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கும்
நாற்றமடிக் கின்றதிரைப் படங்க ளுக்கும்
நல்லதொரு விளம்பரமே குறுந்தி ரைதான்
வேற்றினத்தில் பண்பாட்டை விதைப்ப தற்கு
விடப்பட்ட இறையிலியே தமிழ்நிலந்தான்

விளைவிதனால் என்னவெனில் வயற்காட் டிற்கு
வேலைக்கே போகாமல் தொடல்பார்க் கின்றார்
தொலைக்காட்சி முன்னமர்ந்து தொடரைப் பார்க்கத்
தொடங்கிவிட்டால் பணிகளெல்லாம் முடங்கிப் போகும்
எலேகிளம்பு பள்ளிக்கு நேர மாச்சே
என்றெழும்பும் வரையிளையோர் எழவே மாட்டார்
இளந்தளிர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கெட்டோர்
எத்தனைபேர் கணக்கெடுத்தால் தலையே சுற்றும்

வழிவழியே இழிவதனைச் செலுத்தி உள்ளே
வீற்றிருக்கும் நற்பண்பை விரட்டு கின்றார்
மொழிநடையில் இழிநடையைப் புகுத்தும் மூடர்
மூக்கறுக்கப் படவேண்டும் கண்டிப்பாக
கழிசடைகள் கதையெழுதிப் படம்பி டித்துக்
கழுத்தறுக்கும் கருவியிந்தக் குறுந்திரையால்
அழிந்துவரும் குமுகாய நிலைகண் டேங்கும் அறி ரது நிலையினைத்தான் மேலே கண்டோம் அறிவியலில் மிகச்சிறந்த படைப்பாம் இந்த அரியவண்ணத் தொலைக்காட்சித் தொழில்நுட் பத்தை
முறைதவறிப் பயன்படுத்தும் மூட ராலே
முட்டாளபெட் டியென்றிதற்குப் பெயரா யிற்று
நிறைகோடி என்றாலும் குறைஒன் றாலே
நீர்த்துப்போய் விடும்என்பார் குறட்பே ராசான்
புறம்போக்காய் மாறிவிட்ட கலைபண் பாட்டைப்
புதுப்பிக்க வரவேண்டும் அறிங ரெல்லாம்

இரா. செம்பியன்

நன்றி - தெளிதமிழ் இதழ்


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061