வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 - 03 - 2008சமச்சீர் கல்விக்குழு அறிக்கையின் சுருக்கம்.

(o) குழுஅமைப்பு :

செப்டம்பர் 2006 இல் முனைவர் ச.முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட டாக்டர் எசு.எசு.இராசகோபாலன் உறுப்பினராக இடம் பெற்ற சமச்சீர்க் கல்விக் குழு 21-4-2007 இல் அறிக்கை அளித்தது.

(o) பள்ளிக் கல்வித் துறை :

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஏறக்குறைய 56,000 பள்ளிகள் - 130 இலட்சம் மாணவர்கள் - 4 இலட்சம் ஆசிரியர்கள் - கொண்ட மாபெரும் அமைப்பு ஆகும்.

(o) வகைகள் :

இங்கு மாநிலக் கல்வி வாரியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், என நான்கு வகையும் - மைய அரசின் கீழ் இயங்கும் மூன்று வகைப் பள்ளிகளும் உள்ளன.

(o) சமச்சீர்க் கல்வி :

மாநில அரசின் கீழ் இயங்கும் நான்கு வகைக் குழுமங்கள் நீக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வி வாரியம் எனப் பல்கலைக் கழகத் தகுதியில் ஒரே அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.

(o) பள்ளி நிலைகள் :

(-o-) மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

(-o-) தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, என்ற அமைப்புகள் இருக்கும்.

(-o-) பத்தாண்டுக் கெடுவுக்குள் பொதுப்பள்ளி முறையைச் செயல்படுத்துதல் வேண்டும்.

(-o-) தனிச் சலுகைகள் அளித்தல் அல்லது மறுத்தல் - சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் வாயிலாகக் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளைப் பொதுப்பள்ளி முறையில் இணைக்க வேண்டும்.

(-o-) எல்லா நிலைகளிலும் சத்துணவுத் திட்டம் தொடரும்.

(o) பாடத்திட்டம்:

(-o-) சூழலுக்கும், இடத்திற்கும் ஏற்பத் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நிற்கும் வகையில் மாணவர்களின் திறன்களை வளர்க்கப் பயிற்சி அளிக்கும் கூர்மையான, சுருக்கமான, பாடத்திட்டம் உருவாக்கப் படவேண்டும்.

(-o-) தேவையில்லாத பாடப் பகுதிகளைச் சேர்ப்பதைத் தவிர்கக வேண்டும்.

(-o-) பயிற்று மொழி படிப்படியாகத் தமிழாக்கப்படும்.

(-o-) 8 ஆம் வகுப்பு நிலையில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளும் - தக்க அறிவு பெறும் வகையில் பாடத்திட்டம் அமையும்.

(-o-) 1) தமிழ் 2) ஆங்கிலம் 3) கீழை மொழி அல்லது தாய்மொழி 4) கணிதம் கணிப்பொறி பயிற்சி 5)அறிவியல் (இயற்கை அறிவியல், சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம்) 6)சமூகவியல் (வரலாறு, புவியியல், அரசியல், அறிவியல், பொருளாதாரம்) 7) விளையாட்டும் உடற்பயிற்சியும் 8) கலைகள் 9) கைத்தொழில் அல்லது தொழில் நுட்பம் சார்ந்த உடல் உழைப்புப் பயிற்சி 10) நாட்டு நலப் பணித்திட்டம், தேசிய மாணவர் கடை, சாரணர் இயக்கம், ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்

(-o-) சுற்றுலாக் கல்வி கட்டாயம் - ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30

(-o-) பள்ளி வேலை நாள்கள் : ஆண்டுக்கு 100 மணி நேரம் ( ஐந்தரை மணி நாள்கள் 200 அல்லது 5 மணி நேரநாள்கள் 220)

(-o-) மூன்றாம் வகுப்பிற்கு வாரத்திற்கு 2 மணி நேரமும், படிப்படியாக அதிகரித்துப் பத்தாம் வகுப்பிற்கு 12 மணி நேரத்திற்கு மிகாமல் வீட்டு வேலை இருந்தல் வேண்டும்

(o) பாடநூல் :

ஒரு வகுப்பின் ஒரு பாடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடநூல்கள் வெளியிட வேண்டும். பள்ளிகள் தமது சூழலுக்கு ஏற்பத் தேவையான தரத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்பு அளிக் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுப் பாடநூல்கள் ஒரே மாதிரி இருத்தல் வேண்டும்.

(o) கற்பித்தல் தொழில் நுட்பம்:

ஒலி, ஒளிக் குறுந்தகடுகள் - கல்வித் தெழில் நுட்பத் துணைக்கருவிகள் - விரிவாகப் பயன்படுத்தப் பட்டு, கற்றல் சூழல் இனிமையாக்கப்பட வேண்டும்.

(o) நூலகம் :

முழுமையான திட்டமிடப்பட்ட நூலக வசதி ஒவ்வொரு மாணவனுக்கும் போதுமான அளவு கிடைக்கச் செய்ய கட்டாய ஏற்பாடு வேண்டும்.

(o) ஆய்வகம்:

விரிவான அறிவியல ஆய்வகம், மொழியியல் ஆய்வகம் ஆகியனவும் கட்டாயம் அமைத்த்ல வேண்டும்.

(o) வகுப்பறைச் சூழல்:

ஒரு வகுப்பின் அறையில் ஒவ்வொரு மாணவனுக்கும் 1 ச.மீ அளவு இடவசதி இருக்க வேண்டும். வகுப்பறையின் உயரம் 3.7 மீட்டருக்குக் குறையக்கூடாது

(o) பள்ளி வளாகம்:

பள்ளிச்சூழல் அழகும், தூய்மையும் நிரம்பியதாக இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் முழுமையாக (குடிநீர், கழிப்பறை போன்றவை) பொருளாதாரத்தில் எல்லாத் தரப்பினர் குழந்தைகளும் விரும்பி வரும் வகையில் அமைய வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு நிறைவாகச் செய்ய வேண்டும்,

(o) தேர்வு:

மழலையர் வகுப்பிற்கு எழுத்துத் தேர்வு கூடாது, தொடக்கக் கல்வியில் முதலில் வாய்மொழித் தேர்வும், பின் படிப்படியாக எழுத்துத் தேர்வும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வாசித்தல் திறன் தினமும் சோதிக்கப்பட வேண்டும், நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் செயல் திட்டம் (project) தொகுப்புகள் (albums) போன்றவை தேர்வுப் பகுதியாக்கப்பட வேண்டும். மனனம் செய்வதை ஊக்குவிக்காத, அடிப்படைத் திறன்களையும், படைப்பாற்றல்களையும் வெளிப்படுத்தும் வகையில் தேர்வுகள் அமைய வேண்டும். அதிர்ச்சி தரும், தற்கொலைக்குத் தூண்டும் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மொழிகள் - 3-300 கணிதம் 100 அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 600 மதிப்பெண்கள் கொண்டதாக அமையும். தேர்வுகள், மனவளர்ச்சி குறித்த முறையான தரமான பதிவேடு பேணப்பட வேண்டும்

(o) ஆசிரியர் கல்வியும் பணியிடைப் பயிற்சியும்:

ஆசிரியர்களுக்குக் கடமைப் பொறுப்பு வரையறுக்கப்பட வேண்டும். ஆசிரியர் கல்வியின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும், ஆண்டுதோறும் எல்லா ஆசிரியர்களுக்கும் தவறாமல் பணியிடைப் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர் பாதிக்கப் படாமல் இருக்கப் பள்ளிக்கு 10 விழுக்காடு மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்,

(o) பள்ளி ஆய்வு:

ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற வேண்டும்,. 30 பள்ளிகளுக்கு ஒரு ஆய்வாளரும். நிர்வாக அலுவலர் ஒருவரும் நியமிக்க வேண்டும். ஆய்வு செய்யும் நாள்கள் ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப நீட்டிக்க வேண்டும்,

(o) கல்விச் சட்டம்:

தமிழ்நாடு கல்விச் சட்டம் என்ற ஒரே தலைப்பில் ஒரே சட்டமாகச் சட்டமன்றம் வாயிலாக இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

(o) கல்வித் துறை நிருவாகச் சீரமைப்பு:

கிராமக் கல்விக்குழு அமைக்கப்பட வேண்டும், மாவட்டக் கல்விக் குழுமம் ஏற்படுத்தப்பட்டு, மானியம் வழங்கல் உட்பட அனைத்துப் பொறுப்புகளும் அதனிடம் ஒப்படைக்க வேண்டும்.

நன்றி : பென்சனர் கணினி திபி 2039 மாசி

நன்றி : ஆசிரியர் துணைவன் மார்ச் 2008


சமச்சீர் கல்வி பள்ளிகளுக்குள் செலுத்தும் முன்.... அது......

1) இந்த மண்ணுக்கு ஏற்ற தரமான கல்விமுறைதானா என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2) இந்தக் கல்விமுறை மாணவர்களது உள்ளார்ந்த ஆற்றலை வளப்படுத்துமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

3) இந்தக் கல்விமுறை படிக்கிற அனைத்து மாணவர்களுக்கும் பயனாகி - அனைவரையும் உயர்த்துமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

4) இந்தக் கல்விமுறை தொடக்க நிலை முதல் கல்லூரிக்கல்வி வரை தொடருமா என்பதையும் முறைபடுத்த வேண்டும்.

5) இந்தக் கல்விமுறையில் படித்து முடித்த மாணவர்கள் தன் சொந்தக் காலில் நிற்பதற்கான அடித்தளத்தைப் பெறுவார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அடிப்படையான இந்த ஐந்து நிலைகளிலும் ஆய்வு செய்யாது - அவசரம் அவசரமாக - வெறும் சொல்லாடல்களின் வழி ஏதோ ஒன்று உள்நுழையுமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கல்வித் தேடலை நாம் நிகழ்த்தியே ஆகவேண்டும்.

- தமிழ்க்கனல் -
- காசு - கவிஞர் உமா சக்தி.

அம்மா...
நலம், மாப்பிள்ளையும்
நானும்.

நீ செய்து விட்டுப் போன
ஆடி மாச
அசத்தல் சீரால்.
வாம்மா... போம்மா..
வாய்நிறைய அன்பு
அத்தைக்கு என் மீது.

எதிர் வீட்டு
மாமியார் மருமகளுக்கிடையே
மல்யுத்தம்.
பிறந்தநாள் பரிசாய்
நீயளித்த
கடிகாரம் பார்ப்பதற்காகவே
அடிக்கடி மணி பார்க்கிறார்
மாமா.

மாதா மாதம்
நீ கொடுத்தனுப்பும்
அரிசி, பருப்பு,
அஞ்சல் வழிப் பணம்...
தலைகால் புரியவில்லை
மாம்பிள்ளைக்கு..

மலைக்குப் போன
மச்சினருக்கு
நீ செய்த மரியாதை
உறவுக் காரங்க மத்தியில்
ஒசந்த இடம்
நமக்கு.

சமைஞ்சு நின்ன
நாத்தனாருக்கு
நீ தந்த வளையல்தான்
ராசி நகையாம்.

அதற்குப் பின்னால்
அணி வகுத்ததாம்.
ஐந்தாறு வலையல்கள்
ஆமாம்...
நீ சிறுநீரகம்
விற்ற காசில்
மிச்சம் மீதி இருக்கிறதா?

அடுத்த வாரம்
வருகின்றோம்
மாப்பிள்ளையும்
நானும்

நன்றி: மானுட நம்பிக்கை - பிப்ரவரி 2008
-- அழகு நிலா கவிதைகள் --

***
நீ என்னைச் சபிக்கத்
தொடங்கியபோது
உன்னை மட்டுமல்ல
என்னையும் கடந்து
சென்றிருந்தேன் நான்.

திட்டமிட்ட நமது சந்திப்பில்
வாதப் பிரதிவாதங்களுக்குப்
பிறகு மீண்டும்
நண்பர்களாகவோ
அல்லது எதிரிகளாகவோ
பிரிந்து செல்கிறோம்.


இவற்றிற்கிடையே
கதை சொல்லிகளிடம்
போய்ச் சேர்ந்திருக்கும்
நம்மைப்பற்றி அவர்கள்
சொல்ல விரும்பிய கதை.

***
ஒனிந்து கொண்டு தேடவைத்தார்கள்
விளையாடக் கொடுத்ததை
காலால் நசுக்கினார்கள்
உணவூட்டும்போது கடித்தார்கள்

பூக்களைப் பிய்த்துப் போட்டு
அவர்களே அழுதார்கள்
பூச்சாண்டிக்குப் பயந்து
வளர்த்தார்கள்.

அதற்குப் பிறகான
நாட்களில்
பிறகு அவர்கள்
பெரிய பெரிய பதவிகளில்
பொறுப்பேற்றுக் கொண்டார்கள்

நன்றி : தென்றல் இதழ் மார்ச் 2008
தமிழனே இது கேளாய் - அரிமா குறள்மொழி.

பிழைக்கத் தெரிந்து கொண்டால் பிறவிப் பயனும் உண்டு
அழைத்தால் என்ன நம்மை அடிமைக் கும்பல் என்றே
குழைந்து கும்பிடு போட்டால் கொடுப்பார் பதவி எல்லாம்
தழைப்பாய் வாழ்வில் என்றும் தமிழகத் தமிழர் பார்த்தே.

உரிமைக் குரலை மாற்று உலுத்தர் செயலைப் போற்று
பிரியும் கருத்தை மூடு பிள்ளைகள் நலத்தைத் தேடு
மானம் பார்த்தால் விட்டு மற்றவர் காலைத் தொட்டு
ஏனம் ஏந்தி நக்கும் எங்களைப் போன்றே வாழ்வாய்.

வள்ளுவம் போற்றும் ஆட்சி வழங்கிடும் மதுவால் நஞ்சைத்
தள்ளவோம் குடலுக் குள்ளே தமிழ்க் குடி மகனாய்ச் சாவோம்.
திரைப்பட நடிகர் எல்லாம் தேசியத் தலைவ ராகிக்
குரைப்பதே கொள்கை என்போம் கொலுவிலும் குந்த வைப்போம்

மற்றவர் எல்லாம் ஆங்கே மண்ணின் மைந்தர் ஆதல்
கற்றம் ஆகும் மற்றும் குறுகிய மனமும் ஆகும்
இந்தியராக நம்மை ஏற்பதில் பெருமை காண்போம்
இந்தியை ஆங்கி லத்தை ஏற்பதே உயர்வோம் என்போம்

சிங்கமாய் வாழ்த லுக்குச் சிந்தையில் இடங்கொ டாதே
பொங்குக அடிமைச் சோறே போற்றுக அயலார் ஆட்சி
எங்களைப் பார்த்து நீயும் எளிதாகப் பிழைப்ப தற்குத்
தங்கமாம் கருத்தைச் சொன்னேன் தழைக்குமே உந்தன் வாழ்வும்.

நன்றி : தமிழ்க்காவிரி இதழ் - பிப் 2008
- இனியும் வேண்டாம் போர் - இரா, செம்பியன் -

கொல்லங்கே தமிழினத்தை என்று சொல்லிக்
கொடுக்காதே சிங்களர்க்குப் படைக்க லங்கள்
நல்லாண்மை என்பதுதான் நடுநி லைமை
நாடாள்வார் பண்பிலது தான்த லைமை
வல்லாண்மை என்பதெலாம் செருமேற் சென்று
வளையாமல் வெல்வதனை வீர மென்பார்
இல்லாதார் எளியோர்பால் பரிவு கொண்டே
இயன்றவரை உதவுவதை ஈர மென்பார்,

தள்ளாடும் மந்திகட்குக் கள்ளை வார்த்துத்
தருவதுபோல் உதவுகின்றீர் சிங்க ளர்க்குத்
துள்ளாட்டம் போடுகின்றார் அதனா லங்கே
துணையாக இருப்பதனால் நீயும் இங்கே
பொல்லாத சிங்களர்க்குப் பரிந்து சென்று
போகாதே தமிழகத்தில் வலிமை குன்றி
உள்ளுக்குள் குமுறுகின்ற எரிம லைமேல்
உட்கார்ந்தே இருப்பதைநீ உணர வேண்டும்

இந்தியப்பேர் அரசேஉன் இருப்பு நெஞ்சம்
இரங்காதா எள்ளளவும் ஈழத் தின்பால்
நிந்தனைக்கே ஆளாவாய் அரிய ணைமேல்
நீஇருக்க முடியுங்கொல் நீண்ட நாள்கள்?
இங்கிருக்கும் தமிழர்களும் இந்தி யர்தான்
ஏன்ஏற்க மறுக்கின்றாய் இதனை நீயும்
சிந்தித்துப் பார்எங்கள் ஈழ மக்கள்
சிந்துகின்ற கண்ணீரில் மூழ்கிப் போவாய்.

இனவாத சிங்களர்க்கே எடுத்துச் சொல்லி
இனிவேண்டாம் போர்அதனை நிறுத்தச் சொல்வாய்
தனித்தீழ மக்களங்கே வாழவ தற்குத்
தடையற்ற நிலையங்கே உருவாக் கித்தா
இனியேனும் தலையிட்டு நடுநின் றாய்ந்தே
ஏற்புடைய தீர்ப்பொன்றை வழங்கு வாய்நீ
மனிதநேயம் என்றெதையோ சொல்லு வாயே
மறந்துவிட்டாய் போலுமதை இன்று நீயே

நன்றி : தெளிதமிழ் - கும்பம் இதழ்.
கச்சத்தீவில் இழந்த உரிமையைக் கோருமா இந்திய அரசு?

தமிழர்கள் தினம் தினம் கொன்று குவிக்கும் இலங்கைக்கு எனது பாராட்டுகள் என்று அமெரிக்க அண்ண்ன் ஜார்ஜ்புஷ் வாழ்த்து மடல் அனுப்பியிருப்பாரோ என்னவோ - தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தி துவம்சம் செய்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே.

இது ஒருபுறம் கவலையளிக்க - ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற யேசுநாதரின் வழியல் மறு கன்னத்தைக் காட்டினால் - மறு கன்னத்திலும் சப்பென்று அறையும் மூர்க்க குணம் படைத்தவர்களாகி விட்டார்கள் இலங்கை ராணுவத்தினர்.

தனது சொந்த வீட்டின் கதவுகளைப் பிய்த்து அடுத்தவனுக்குத் தந்துவிட்டு, தனது வீட்டில் நாய் நுழையாமல் காவல் காத்துக் கொண்டிருந்தானாம் ஒருவன் - என்கிற கதையாகத் தமிழகக் கடற்கரையுடன் ஒட்டி உறவாடிக் கிடந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்துவிட்டு, இப்பொழுது வயிறு பிழைக்க வேண்டி கச்சத்தீவை நெருங்கி மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவது போல சுட்டுத் தள்ளினாலோ, அல்லது சிறை பிடிக்கப்பட்டாலோ - இலங்கை இராணுவத்தைக் கண்டித்து கண்டனக் குரலெழுப்பினால் கண்டித்து வருகிறது மத்திய அரசும் அதன் நிழலான மாநில அரசும்.

இலங்கையிலிருந்து பத்தரை கிலோ மீட்டர் தூரத்திலும், ராமேசுவரத்திலிருந்து பன்னிரெண்டரை கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கும் கச்சத்தீவை தங்களுக்கு விட்டுத்தர வேண்டுமென்று, இலங்கை இந்தியாவிடம் முறையிட்டபோது, ஒரு அக்ரிமென்ட் போட்டுத் தந்துவிட்டால் போச்சு என்று அப்பொழுதிருந்த காங்கிரஸ் ஆட்சியும் வரிந்து கட்டிக் கொண்டு கச்சத்தீவை விட்டுத்தர முன் வந்தது.

1974 ஜூலை 23 ஆம் நாள் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது - திமுக, எம்பிக்களான கே,மனோகரன், இரா,செழியன் - மற்றும் பார்வேர்டு பிளாக் கட்சியின் எம்பியுமான - பிகே. தேவரும் - கட்சத்தீவு விவகாரத்தில் மறுப்புத் தெரிவித்துப் பின் குரலடங்கிப் பாராளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்ததோடு சரி. தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுக ஆட்சியும், தங்களின் ஆட்சி குலைந்துவிடுமோ என்ற அச்சுறுத்தலின் காரணமோ என்னவோ - மத்திய அரசு சொன்னால் கேட்டுக்கணும் என்று தலையாட்டி பொம்மையாகவே இருக்க - கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இருநாட்டு - பிரதம மந்திரிகளும் கையெழுத்திட்டு கச்சத்தீவு இலங்கைக்குத் தாலை வார்க்கப்பட்டது.

நாங்கள் ஒன்றும் சும்மா கச்சத்தீவை விட்டுத் தரவில்லை - முறைப்படி பல உரிமைகளைப் பெற்றுவிட்ட பிறகே இலங்கைக்குத் தாரை வார்த்தோமென்று ஒன்றிரண்டு காரணங்களைச் சொல்லி - மீனவர்கள் தலையில் மிளகாய் அரைத்தது - மத்திய அரசு. இருநாடுகளுமே பரஸ்பர நட்புடன் கச்சத்தீவுக்கு வந்து செல்லலாம் என்றும், தமிழக மீனவர்கள் தங்குதடையின்றி கச்சத்தீவில் மீன் பிடிக்கலாமென்றும் - தங்கள் வலையை உலர்த்தவும். ஓய்வெடுக்கவும் உரிமை உண்டென்றும் ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது ஆனால் இன்று கச்சத்தீவில் நடப்பது என்ன ?

கடலில் மீன்பிடிக்கச் சொன்றால்தான் வாழ்வு என்ற விளிம்பு நிலையிலிருக்கும் ஏழை மீனவர்களுக்கு கச்சத்தீவை விட்டால் வேறு வழி யில்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டு இங்கு மீன்பிடிக்கச் சென்றால் - பாழாய்பபோன இலங்கை இராணுவம், இந்திய மீனவர்களை இனம் கண்டு - குறிபார்த்துச் சுட்டு வீழ்த்துகிறார்கள். சிறைபிடித்துச் சித்தரவதை செய்கிறார்கள். தற்பொழுது கச்சத்திவு எல்லையில் கண்ணிவெடி வைத்துள்ளது இலங்கை அரசு. இது இந்தியாவின் ஆளுமையைக் கேலி செய்வது போல இல்லையா? .......

நன்றி : குமரிக்கடல் - பிப் 2008
- - - கொசோவா - - -

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946 ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்தாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன.

1991 ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரோசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டு யூகோசுலேவியா குடியரசிலிருந்து பிரிந்து சென்றன.

1992 ஆம் ஆண்டு போசுனியா விடுதலை முழக்கம் செய்தது. எஞ்சிய செர்பியா, மான்டோனக்ரா ஆகியவை மட்டுமே யூகோசுலேவியாவில் நீடித்தன. ஆனால் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டது.

இதற்கு முன்னோடியான வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1913 ஆம் ஆண்டில் அல்பேனிய மக்களைப் பெரும்பாலும் கொண்ட கொசோவா செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் செர்பியன் மொழியைப் பேசும் தனி தேசிய இனத்தவர். மதத்தால் கிறித்துவர்கள். கொசோவாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்பேனியன் மொழி பேசுபவர்கள். மதத்தால் முசுலிம்கள். எனவே, செர்பிய தேசிய இன மக்களுக்கும் அல்பேனிய தேசிய இன மக்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன. செர்பிய நாட்டிற்குள் தன்னாட்சி அதிகாரம் படைந்த ஒரு மாநிலமாக கொசோவா விளங்கியது. ஆனால் செர்பிய அரசு அந்தத் தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்தது. தங்கள் உரிமை மறுக்கப் பட்டதைக் கண்டித்து கொசோவோ மக்கள் போராடினார்கள். செர்பிய இராணுவம் கொசோவா மக்களைத் திட்டமிடட இனப்'படுகொலக்கு ஆளாக்கியது. சுமார் 10 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

1999 ஆம் ஆண்டில் இந்த படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் தலையிட்டன. செர்பிய அரசு நிர்வாகத்திலிருந்து கொசோவா விடுவிக்கப்பட்டு ஐ.நா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா. போர்க் குற்றவாளிகள் நீதிமன்றம் செர்பிய குடியரசுத் தலைவர் சுலோபோடான் மடிலேசெவிக் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது.

1999 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1244 இன் கீழ் கொசோவா ஐ.நா.வின் கீழ் பாதுகாப்புக்கு உட்பட்ட ஒரு பகுதி என அறிவிக்கப் பட்டது. எனவே, கொசோவாவின் விடுதலைப் பிரகடனம் என்பது ஏற்கப்பட முடியாதது என செர்பியாவும் மற்றும் சில நாடுகளும் கூறுகின்ற வாதத்தில் எத்தகைய சத்தும் இல்லை. கொசோவா பிரச்சனை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக்குழு அங்கு நேடோ படைகள் தலையிட்டது. சட்ட விரோதமானது என்று கூறியது, ஆனால் மிலோசேவிக் ஆட்சியின் போது பெருமளவில் கொசோவா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளையும் அட்டூழியங்களையும் தடுத்து நிறுத்தி ஐ.நா, பாதுகாப்புக் குழு தலையிட்டது சர்வதேச சட்டப்படி சரியானதே என்றும் அரசியல் சட்ட அறிஞர்கள் கருதுகிறார்கள்

கொசோவாவின் விடுதலை அறிவிப்புக்கு அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அதே வேளையில் ஸ்பெயின், கிரீசு, பல்கேரியா, உருசியா, சீனா, பிலிப்பைன்சு போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஸ்பெயின் நாட்டிலுள்ள லொகடேனியா பகுதி மக்கள் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். அதைப்போல தெற்கு பிலிப்பைன்சில் வாழும் முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட இசுலாமியர்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். கிரீசு, சைப்பரசு, கோன்ற நாடுகளிலும் தேசிய இனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உருசியாவிலுள்ள சிறுபான்னை தேசிய இனங்களும் போராடி வருகின்றன. சீனாவிலுள்ள மங்கோலியர்கள். திபெத்தியர்கள் ஆகியோரும் தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்தப் போராடி வருகிறார்கள். ஆகவே, தங்கள் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப் போராட்டங்களை கொசோவா விடுதலை முழக்கம் விரைவு படுத்திவிடும். எனவே, தை அங்கீகரிக்க இந்த நாடுகள் மறுத்து வருகின்றன.

இதற்கிடையில் ஐ,நா, பேரவையின் பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் பின்வருமாறு அறிவித்துள்ளார். கொசோவா தனிநாடு அறிவிப்பு சட்ட வகையில் சரியானதா அல்லது தவறானதா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் கொசோவா நாட்டின் அறிவிப்பை உலக நாடுகள் பல வரவேற்று உள்ளன. செர்பிய அதிபரிடம் அமைதி காக்கும் படியும், எந்தவிதமான வேண்டாத நிகழ்வுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும் படியும் வேண்டிக் கொண்டுள்ளேன். கொசோவா நாட்டுக்கு முழு ஆதரவினை ஐ,நா. வழங்கும்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி மற்றும் பிரேசில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செல்சோ அமோலைன் ஆகியோர் பிப்ரவரி இருபதாம் தேதியன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் - செரபியாவிலிருந்து பிரிந்து கொசோவா தனி நாடாக அறிவித்துக் கொண்டதை ஏற்றுக் கொள்கிறோம். அதே வேளையில் அதிலுள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் - என்று அறிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த அறிவிப்பு பிற ஆசிய நாடுகளையும் கொசோவாவை ஏற்குமபடி தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது....

ஆசிரியர் பழ.நெடுமாறன் தென்செய்தி இதழின் தலைப்புக் கட்டுரையில்...

(கொசோவா போலவே தமிழர்கள் தங்களைத் தேசிய இனம் என்று அறிவித்து - சிங்கள இனத்தின் இனப்படுகொலைக்கு எதிராக - விடுதலைக்கான பேராட்டத்தைக் கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். உலகே உனக்குக் கண் இல்லையா - எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா - எனப்போராடும் இவர்களது போராட்டம் வெற்றிபெறும் என்று எண்ணுவோமாக)
சட்டமும் நீதிமன்றமும் தமிழைக் காக்காது

தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று 18-2-08 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது அனைத்துத் தமிழ் மக்களாலும் மகிழ்ச்சியோடு வரவேற்கத் தக்கது ஆகும்.

2006 ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழை அய்ந்தாம் வகுப்புவரை கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழுக்குரிய மரியாதை நிலை நிறுத்தப்பட வேண்டும். மேலும் அடிப்படைத் தமிழ்ப் பயிற்சியால் தமிழில் அனைத்தையும் கற்கவும். சிந்திக்கவும் முடியும் என்பதால்தான் இத்தகைய ஆணையை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவித்தது. அதனை ஏற்றுக் கொள்ள இயலாமல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மலையாள சமாஜம் அமைப்பும் நரசிம்மன் என்ற தனிநபரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தங்களது மொழிச் சிறுபான்மை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், தங்களது தனித் தன்மைகள் முடக்கப்படுவதாகவும் கதறினர். சென்னை உயர்நீதி மன்றமோ தமிழக அரசின் ஆணைக்குத் தடைவிதிக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து மறுபடியும் அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தமிழ் மெர்ழிக்கு எதிரான தங்களது வெறித்தனத்தை அரங்கேற்றம் செய்தனர். ஆனால் அவர்களது இத்தகைய தமிழினக் குரோதச் செயல்பாடுகள் உச்சநீதி மன்றத்தாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தமிழர் என்ற நிலையில் நமக்குச் சற்று ஆறுதல் தருகிறது. ஆறரைக் கோடித் தன்மானத் தமிழர்களும் ஏன் உலகத் தமிழர்களுக்குமே (9 கோடி) இது புது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

சொந்த நாட்டில் தாய்மொழியில் தொடக்கக் கல்வி இந்நாள்வரை கற்பிக்காதது அநீதி, அவமானம், என்ற உணர்வு ஆள்பவர்களுக்கு வர வில்லை. நீதி மன்றம் தலையிட்டுததான் கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களைக் கோடிட்டுக் காட்டித்தான் தமிழ் மொழியைக் கட்டாயப் பயிற்று மொழி ஆக்க வேண்டும் என்ற சூழல் எழுந்துள்ளது.

தமிழர்கள் சாதிகளாலும், மதங்களாலும் அரசியல் கட்சிகளாலும் கழிசடை கதாநாயகர்களாலும் பிரித்தாளப்பட்டு வருகின்றனர் என்பதும் அந்நிய மொழிகளுக்கு அடிமை வேலை செய்யும் மந்தமான மனநிலையில் புதையுண்டு கிடக்கின்றனர் என்பதும் வேற்றுமொழி இனவெறியர்கள் நம் தமிழகத்தைக் கூறுபோட்டுப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என்பதும் தெரிகிறது. தமிழ் மொழி உணர்வைக் குற்றமாகக் கருதும் பயங்கரவாதச் செயல்பாடாகக் கருதும் அரசு இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், இந்திய தேசிய அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் பித்தர்கள் பெருகி வருகின்றனர் என்பதும் கண்கூடு. இதனால்தானோ என்னவோ நம் அன்மைத் தமிழ் தொடக்கப் பள்ளியில் கூட அரியணை ஏற டெல்லிக்கு நாம் காவடி எடுக்க வேண்டிய அவலம் இன்றும் உள்ளது.

நம் தமிழ்மொழி ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக, நீதிமொழியாக, வழிபாட்டு மொழியாக, மருத்துவ, அறிவியல், தொழில் நுட்பக் கல்வி மொழியாக என்றைக்கு மாறும் என்ற கேள்வி அத்தைன்கோடித் தமிழர்கள் உள்ளத்திலும் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

நன்றி : இலட்சியப்போராளி இதழின் தலையங்கம் - மாச் 2008
கண்ணைக் கட்டி நீதி

நீதிமன்றத்தில் நீதிதேவதை கண்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு, தராசு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். அதன் உண்மை. பலருக்குத் தெரியாது. வாதி பிரதிவாதி இவ்விருவரையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் மனம் தடுமாறி நீதி தவறிவிடலாம் - என்பதற்குத்தான்.

நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக ஒரு நீதிபதி, நீதிதேவதை போல் தன் கண்ணில் துணியைக் கட்டிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தார். என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா ? அவர்தான் ஜேம்ஸ் ஹாக்கின்னஸ்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர், செயிண்ட லூயி மாவட்ட நீதிபதியாக 1882 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். நீதிமன்றத்திற்குப் புறப்படும் முன். தன் கண்களை ஒரு துணியால் கட்டிக் கொள்வார். வேலைக்காரரின் துணை கொண்டு, கண்தெரியாதவர் போல கோர்ட்டுக்கு வருவார், புதிதாக இவரைப் பார்ப்பவர்கள் கண் தெரியாதவர் என்றே நினைப்பார்கள்.

ஜேம்ஸ் ஹாக்கின்னஸ் வழக்கு விசாரணை வாக்குவாதம் சாட்சிகள் விசாரிப்பு இவை அனைத்தையும் தன் காதுகளில் கேட்டுக் கொண்டே விசாரணையை மேற்கொள்வார், விசாரணையின் போது ஆதாரங்களாகக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் இருந்தாலும் கூட, கண்ணைத் திறந்து அவைகளைப் பார்க்கவோ, படிக்கவோ மாட்டார். பதிலாக வக்கீல்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொள்வார்.

பின்பு இருதரப்பு வாத பிரதிவாதங்களைக் கேட்டு நீதிபதி ஜேம்ஸ் ஹாக்கின்னஸ் சரியான தீர்ப்பை எந்த வித பாரபட்சமுமின்றி வழங்கிடுவார்

இவர் அளித்த தீர்ப்புகளில் எவருக்கும் எந்தவித அதிருப்தியும் ஏற்படாது. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தீர்ப்பு இருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

இவ்விதமாகக் கண்களைக் கட்டிக் கொண்டே 14 ஆண்டுகள் நீதிபதியாக இருந்து பேரும் புகழும் பெற்று விளங்கினார் என்றால் வியப்புதானே.

நன்றி : கிழக்கு வாசல் - சன பிப் 2008
அலைபேசி - சில குறிப்புகள்

அலைபேசியில் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஜிஎஸ்எம் (Global System for Mobile Communications) ஒன்று. மற்றொன்று சிடிஎம்ஏ (Code Division Multiple Access) - முதல் வகையைச் சேர்ந்த அலை பேசிகளில் சிம் கார்டு மூலம் நெட்வொர்க்குடன் இணைக்கப்படுகின்றன. இரண்டாம் வகை அலைபேசிகளில் சிம் கார்டு இல்லாமல் நேரிடையாகவே நெட்வொர்க்குடன் இணைக்கப்டுகின்றன.

முதல் வகை அலைபேசி வாங்கும்போது அதற்கென பிரத்யேகமான உள்ள 15 இலக்க எண்ணை (IMEI - International Mobile Equipment Identification) குறித்துக் கொள்வும். *#06# என்ற ஐந்து பட்டன்களை அழுத்தியவுடன் இந்த 15 இலக்க எண் கிடைக்கும். அத்துடன் சிம் கார்டின் எண்ணையும் குறித்துக் கொள்ளவும்.

இரண்டாம் வகை அலைபேசியை வாங்கும் போது அதற்கென பிரத்தேயகமாக உள்ள 8 இலக்க எண்ணை (ESN - Electronic Serial Number) குறித்துக் கொள்ளவும். இந்த வகை அலைபேசிகளுக்கு சிம் கார்டு கிடையாது.

ஜிஎஸ்ம் அலை பேசியில் குறிப்பிட்ட சிம் கார்டை மட்டுமே பயன்படுத்திப் பேசும்படியாக செய்ய முடியும். இப்படிச் செய்வதால் இந்த அலை பேசியில் வேறு சிம் கார்டைப் பயன்படுத்திப் பேச முடியாது.

குறியீட்டு எண் (PIN) வசதியை இயக்கச் செய்வதன் மூலம் இது இல்லாமல் யாரும் அலை பேசியைப் பயன்படுத்த முடியாது.

அலைபேசி தொலைந்து போனால் உடனடியாகத் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்குத் தகவல் தரவும். அவர்கள் சிம் கார்டின் இயக்கத்தை நிறுத்துவார்கள். இதனால் நமது கணக்கில் வேறு ஒருவர் பேச முடியாது.

நாம் ஏற்கெனவே குறித்து வைத்துள்ள அலை பேசிக்குரிய 18 அல்லது 8 இலக்க எண்ணைத் தொலைத் தொடரப்பு நிறுவனத்திற்குத் தகவல் தந்தால் நமது அலைபேசியை யாரும் பயன்படுத்த முடியாமல் தடுத்து விடுவார்கள்.

தொலைந்து போன அலைபேசி பற்றி காவல் துறையிடம் புகார் தரும்போது நமது அலை பேசி மற்றும் சிம் கார்டு எண்களைத் தந்தால் விரைவில் கண்டுபிடிக்க உதவும்.

அலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவோருக்கு தோள்பட்டை, முழங்கை, கழுத்து ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அலைபேசியுடன் கிடைக்கும் காலர் மைக், இயர்போன் போன்ற உதிரிப் பாகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பாதிப்புகளைச் சிறிதளவு குறைக்கலாம்.

நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் - பிப் 2008
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

அறிஞன் என்பவன் சுயநலமில்லாமல் வாழ வேண்டும். அறிவான செயல் இல்லையென்றால் அதனைக் கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்க்க வேண்டும். மூடத்தனத்துடன் ஒருநாளும் சமாதானம் செய்து கொள்ளக் கூடாது. அப்படி வாழ்ந்தவர்தான் சிங்கார வேலர்.

1900 இலேயே சிங்காரவேலர் ஒரு வழக்கறிஞர். அவர் விரும்பி இருந்தால் எந்த உன்னதமான பணியையும் அவர் பெற்றிருக்கலாம். அவர் அப்படிப்பட்ட வாழ்வை விரும்பவே இல்லை. சட்டம் படித்தார். வக்கீலானார். அன்னிய ஆட்சிக்காரன் சட்டம் தொகுப்பது, அதை நாம் படித்து வாதாடுவது அடிமைத்தனம் என்று தன் வக்கீல் அங்கியை நெருப்பிட்டுக் கொளுத்தினார்

வெண்மேகங்கள் பொழிவதில்லை. நீருண்ட கருத்த மேகம்தான் பொழிகிறது. நிறைய கற்றவர் மட்டுமே மேடைகளில் நிறைவாகப் பேச முடியும். இந்த வகையில் சிங்காரவேலர் தமிழகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். படிப்பு. படிப்பு. ஓயாத படிப்பு, இதுதான் சிங்கார வேலரின் தொழிலாக இருந்ததென்பார் அறிஞர் அண்ணா. வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் சிங்கார வேலரின் கண்கள் பாதிக்கப் பட்டன. கண் இமைகள் செயலிழந்து விட்டன. கண்களை மூடினால் திறக்க முடியாது. திறந்தால் மூட முடியாது. ஒரு கொடுமையான நோய் அது.அந்த நிலையிலும் சிங்கார வேலர் படிப்பாராம். கண்ணாடிகளுக்கிடையில் விரல்களை நுழைத்து இமைகளை விரல்களால் பிடித்துக் கொண்டு படிப்பாராம்.

நன்றி : தமிழ்த் தேசம் - பிப் 2008

பாரதியாரின் தந்தையர் நாடு ஏன் ?

மொழி நிலையில் அவர்கள் சமசுக்கிருதத்தையே தாய்மொழியாகக் கருதுகின்றனர். தமிழர்களாகிய நாம் தாய்மொழிக் கொள்கை கொண்டவர்கள், அதாவது தாய்வழி மரபினர். நாம் பேசும் மொழி, வாழும் நிலம், நம் குடும்ப அமைப்பு, சொத்துரிமை அனைத்திற்கும் தாயையே முதன்மையாக வைத்துப் போற்றும் கொள்கை உடையவர்கள்.

தமிழ் நமக்குத் தாய்மொழி. நாம் வாழும் தமிழகம் நமக்குத் தாய்நாடு. நம் குடும்பத்திற்குத் தலைமை தாங்குவதும் தாயே. அவளுக்குத்தான் அனைத்துப் பெருமைகளையும், உரிமைகளையும் கொடுத்தனர். தமிழர்கள். சொத்துக்கும் அவர்தான் உரியவள். சொத்துரிமைக்குத் தாயம் என்று பெயர்.ஆனால் ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்த பின்னர் தாய்வழிக் குமுகாயமாக இருந்த தமிழர்கள் தந்தைவழி மரபினராக மாற்றப் பட்டனர்.

மக்களினத்தின் தொன் மூதாதையர் தாய்வழி மரபினரே. தமிழர் உலக இனங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தினர். அவர்கள் தாய்வழிக் குமுகாயத்தினர் என்பதே அவர்களின் தொல் பழமையைக் காட்டும். ஆனால், ஆரியர் தமிழரினும் மிகப் பிந்திய குமுகாயத்தினராதலின், அவர்களின் இன நாகரிக மேம்பாட்டுக் காலத்தின் குடும்ப அமைப்பின்படி அவர்கள் தந்தை மரபினராக ஆயினர். அவர்களது இன மேம்பாட்டுக் காலத்தில் அவர்களின் குடும்ப அமைப்புக்குத் தலைவன் ஆணாகவே - தந்தையாகவே - இருந்தான். எனவே, அவர்களின் மொழி தந்தை மொழி, (father Language)ஆகவும், (நன்றாக நினைவில் கொள்ளவும் அவர்கள் தங்கள் மொழியைத் தாய்மொழி என்று கூறுவதில்லை) நாடு, தந்தை நாடு (Father Land) ஆகவும் ஆயின. அவர்களுக்குச் சொத்துரிமையையும், தந்தை வழிப்பட்டதாகவே இருந்தது.

பாரதியார் ஆரிய வழிபாட்டினர் - ஆரியப் பார்ப்பனர் - ஆகையால், அவரின் செந்தமிழ்நாடு என்னும் பாட்டில் கூட -

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடு என்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.

என்ற தம் இனத்தின் மரபை மறக்காமல் பாடுகிறார். தமிழை அவர் மிகுதியாக மதித்தாலும், இன மேம்பாடு பற்றிச் சிந்திக்கையில், அவரின் பாடல்கள் நெடுகிலும், அவர் ஆரிய இனம் என்பதை மறவாமல் மிக்க கவனத்துடன் குறித்ததுமன்றி, அதற்காகப் பெருமைப் பட்டும் கொள்கிறார்,

நன்றி : வரலாறு மறைக்கப்படுகிறது - நூல். நன்றி: யாதும் ஊரே இதழ் மார்ச்ச 2008


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061