வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 - 04 - 2008பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் - அதில்
ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
எதிர்நின் றிருகை வீசுவேன்.

காசுள்ள வரைக்கும் கையுள்ள வரைக்கும்
கவின்தமிழ் ஒன்றே பரப்புவேன் - இதை
மாசுள்ளம் கொண்டே மதித்திட்டார் செயல்களை
மண்மே டிட்டே நிரப்புவேன்.

காலுள்ள வரைக்கும் கருத்துள்ள வரைக்கும்
காடுமே டெல்லாம் முழக்குவேன் - என்
மேலுள்ள அன்பால் எனைப்பற்று வோர்க்கும்
மேலும்மேல் அவ்வினை பழக்குவேன்

உயிருள்ள வரைக்கும் உடலுள்ள வரைக்கும்
ஒவ்வோர் அணுவிலும் தமிழ் மணம் - அவை
அயர்வுற்று மறையினும் ஆழ்வெளி பரவினும்
அங்கங்கும் கிளர்ந்தெழும் தமிழினம்.

நன்றி : நன்றி : ஊற்று - மார்ச்சு 2008
உதைப்பதற்கே
ஒரு காலைத் தூக்கி நின்றேன்.

செந்தமிழால் பாடு கென்று நீ கேட்ட
படிநின்றன் திருமுன் நின்று
நந்தமிழர் பாடுதற்குத் தடை செய்து
குரைத்திட்ட நாய்கள் தம்மை
முந்திஅந்தக் கூற்றுவனை உதைத்ததுபோல்
உதைத்தொழிக்க முயன்றி டாமல்,
எந்தவகை பொறுத்திருந்தாய் அம்பலத்தில்
ஆடுகின்ற இறைவா சொல்லாய் !

விருப்புடனே தமிழ் கேட்டு மகிழ அந்தச்
சொறிநாய்கள் விடாமை கண்டேன்
உருத்தெழுந்தேன் ஒருகாலைத் தூக்கிவிட்டேன்
உதைக்க மனம் ஒப்பவில்லை
தெருப்பொறுக்கி நாய்களை என் வெறுங்காலால்
உதைப்பதுவும் சிறப்பே காலிற்
செருப்பிருந்தால் - ஆர்க்காட்டுச் செருப்பிருந்தால் -
உதைத்திருப்பேன் செம்மையாக

நன்றி : இரா.தி - தெளிதமிழ் இதழ் மீனம் 2008
உரிமைக் குரல்
ஆதிக்க வெறிபிடித்த
ஆணின் தொடைபிளந்து
குருதியள்ளிப் பூசும்வரை
கூந்தலை முடியேன் எனக்
குரலெடுத்துக் கொப்பளித்தான்
பாஞ்சாலி.

ஆருயிர்க் கணவனவன்
கள்வனல்ல என நிறுவி
மீனாட்சி மதுரையென
மேன்மையுறச் சொல்லும்
ஆணாட்சி மதுரையினை
அனலிட்டாள் கண்ணகி.

ஆண்துணையற்ற வேளை
அடுபுலி வந்தபோதும்
அஞ்சாமல் முறமெடுத்து
புலியையே விரட்டினாள்
புறநானூற்றுத் தாய்.

ஆண்டவருக்கே அறிவூட்டவும்
ஆற்றுப்படுத்தி வழிகாட்டவும்
ஆற்றலும் உரிமையும் பெற்றிருந்தாள்
அரும்புலவர் அவ்வை.

பல்கலைக் கழகத்தில்
பட்டங்கள் பெறவில்லை
பல நாடுகள் சென்று
பணம் திரட்டி வரவில்லை என்றாலும்
பெண்ணுரிமை வெளிச்சமாய்
பேசப்பட்டே வருகிறது.

இந்தக் காலப் பெண்களின்
உரிமைநிலை எண்ணினால்
விரல்கள் அய்ந்துமே
மடங்கியே இருக்கிறது.

பெண்ணடிமை தீர
அவள் பெறும் கல்வியெலாம்
உரிய துணை செய்யுமென
உறுதியாக நம்பினோம்.

உடைமைகள் அடைய
உதவிய கல்வி
உரிமைகள் அடையும் வகையில்
ஊனமாகவே இருக்கிறது.

ஆணிடமிருந்து இன்று
இப்படியாகக் கேள்விகள் எழுகின்றன.
படித்துவிட்டோம் என்ற திமிரா?
பதவிக்கு வந்து விட்டோம் என்ற திமிரா?
பஞ்சாயத்துத் தலைவர் என்ற திமிரா?
பாராளுமன்ற உறுப்பினர் என்ற திமிரா?

ஆணுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்
இத்தகு அதிகாரங்களை மட்டுந்தான்
வழங்கியதா நம் கல்வி?

உரிமைக்குப் போராட
உயர்கல்வியும் பயன்படவில்லையே...

கோளாறு நம் கல்வியில் மட்டுமல்ல
நம் புரிதலிலும் இருக்கிறது.

பல வேளைகளில்
பதவி - ஆதிக்கம் - வாய்ப்பு
இவைகளை உரிமை என்றெண்ணி
உளம் மயங்கிக் கிடக்கிறது
பெண்ணியம்.

அதிகாரம் - ஆதிக்கம் - உரிமை
இவற்றின் உண்மைப் பொருளறிந்து
உரிமைக் குரலெழுப்ப
ஒன்றாவோம்
தோழியரே.

நன்றி : பாவலர் வையவன்
சிந்தனையாளன் - ஏப்ரல் 2008

எத்தனை வேடங்கள்
பிறந்து தவழுகையில்
பெரியதாய் ஏதுமில்லை.

அரைபாவாடை கட்டுகையில்
அம்மாவுக்கு உதவ வேண்டும்.

அண்ணன், தம்பி, அப்பாவுக்கு
ஏவல் செய்தால் பொறுப்பானவர் பட்டம்,

அந்தியிலே வாசல் தெளித்து
பாத்திர பண்டங்கள்
தேய்த்து வைத்த பின்தான்
படிக்கப் போகவேண்டும்.

பூப்பெய்தி பூரிக்கையில்
மூடிய அறையில் முடங்க வேண்டும்.

பாரம்பரிய உடை அணிந்து
பவிசாக நடக்க வேண்டும்.

நீங்கள் சுட்டியவனுக்கு மாலையிட்டு
சுதந்திரத்தை அடகு வைக்க வேண்டும்.

புன்னகையுடன் வசவுகள் வாங்கி
பூமாதேவி யாக வேண்டும்.,

ஆணை மட்டும் மகவாய்ப் பெற்று
மகராசி யாக வேண்டும்,

பணியிடந்தனிலே குரலினை அடக்கணும்
தனித்துவத்தையே தாரை வார்க்கணும்,

மஞ்சள் குங்குமம் தரிக்கும் வரை
மகாலட்சுமி என்கிற பட்டம்.

வளர்ந்து வருகையில் தந்தையின் காப்பு
மண்ம் முடிக்கையில் கணவனின் காப்பு
முதுமையடைந்ததும் மகனின் காப்பு.

காப்பதற்கென்ன நான் கண்ணகி சிலையா ?
ஆறறிவு படைத்த அரிய பெண்மணியா?

நன்றி : லியோனி ராசன் - நெய்வேலி
மானுட நம்பிக்கை மார்ச்சு 2008

வேலைக்குச் செல்லும் பெண்ணே
மேலே உரசும் எருமை மாடுகள்
முதுகின் மேல் மூச்சு விடும்
நச்சு நாகங்கள்
பார்வையால் கொத்தும்
பிணம் தின்னிக் கழுகுகள்
எட்டிப்பார்க்கும் ஒட்டகங்கள்
வழியில் நிற்கும் கொழுத்த
கழுதைகள்
அதிகார வர்க்க கடுவன் பூனைகள்
தெரியாமல் பட்டதாய்
தொட்டுப் பார்க்கும் குள்ள நரிகள்
சந்தர்ப்பம் என்னும் உறுமீனுக்காய்
ஒற்றைக் காலில் நிற்கும்
கொக்குகள்
எப்படிச் சமாளிக்கிறாய்
தனியாக ஒரு மிருகக்காட்சி சாலையை.

பெண் நிதானமாய் பதில் சொன்னாள்.

எனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது
சிங்கம் - அது பெண் சிங்கம்

நன்றி : நெல்லையப்பன் - கடலூர்
தங்கமங்கை இதழ் மார்ச்சு 2008

தமிழ் காக்க எழுகவின்றே
சீர்மேவும் நம்தமிழை வளர்த்துக் காத்தல்
செந்தமிழர் கடமையென உணர்தல் வேண்டும்
பாரெங்கும் கணினிக்கும் இணையத்திற்கும்
பைந்தமிழின் எழுத்தொலியே ஏற்ற தென்று
பாராட்டும் மொழியாகப் பரவும் பாங்கைப்
பயன்தெரிவார் வளர்க்கின்றார் மேலை நாட்டில்
ஆர்ப்பாட்டம் ஆரவாரம் செய்தும் ஈங்கே
ஆங்கிலத்தைப் போற்றுவது முறையு மாமோ?

தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் கடைப்பெயர்கள்
தமிழிலில்லை தமிழெழுத்தில் ஆங்கிலந்தான்
தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேசும் பேச்சில்
தமிழில்லை தமிங்கிலமே பேசு கின்றார்
தமிழ்நாட்டின் திரைப்படத்தில் செய்தித் தாளில்
தொலைக்காட்சி ஊடகங்கள் போன்ற வற்றில்
தமிழணங்கின் சிறப்பையெலாம் கெடுக்கின்றார்கள்
தமிழினமே தமிழ்காக்க எழுக வின்றே.

நன்றி : புலவர் செ.இராமலிங்கன்
கண்ணியம் - மார்ச்சு 2008

அழுகிறேன்
புத்தனை வணங்கும்
நாடு
எங்கள்
உயிர் பறிக்கிறது
புத்தன் பிறந்த
நாட்டின்
ஆயுதத்தால்.

அரசியலை விட்டு
மடத்துக்கு
வந்தான்
புத்தன்.

இங்கே
மடத்தை விட்டு
அரசியலுக்கு
வருகிறான்
பிக்கு.

தோளில்
புத்தன் சுமந்த
ஆடுகளை...
தமிழர் வீடுகளில்
திருடி
வயிற்றில் சுமந்தது
பெளத்த
சிங்களப் படை.

பிச்சா பாத்திரம்
ஏந்தும்
பெளத்தத்தின்
சட்டத்தால்
உணவுத் தடை
கண்டான்
என் தமிழன்.

உயர்ந்த
புத்த விகாரங்களில்
இங்கே
உறுமிப் பறக்கிறது
வாள் தாங்கிய
சிங்கக் கொடி

தமிழச்சியின்
முலைகளை
பல்லால்
கடித்துக் குதறுகிறான்
கண்டி
தலதா மாளிகையில்
புத்தனின்
பல்லை
வணங்குகிறவன்.

சிங்கள பெளத்த
வான்படை
சிதறடித்த
எங்கள்
வீடுகள்
போலவே

உடைந்து
நொறுங்கி
அழுகிறேன்
நான் -
தமிழனுக்காகவும்
புத்தனுக்காகவும்.

நன்றி : காசி ஆனந்தன்
தமிழர் கண்ணோட்டம் இதழ் - ஏப்ரல் 2008.
கண்டியிலே கோயில் கொண்ட புத்ததேவா - உன்னைக்
கைதொழுவார் கைகளிலே எங்கள் சாவா?
பிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா - உன்னைப்
பின்பற்றுவார் கைகளிலே வெடி குண்டா ?

புத்தம் சரணம் ஏசாமி, எங்கும் அவலம் ஏ சாமி, சர்வம் நாசம் ஏ சாமி.

உன்கோயில் வாசலிலே தீபம் எரித்தார் - எங்கள்
ஊரில் வந்து பார் அவரே வீட்டை எரித்தார்.
உன்மலர் கால்மீதில் பூச் செண்டுகள் போட்டார் நாங்கள்
துடிதுடிக்க எம்மண்ணில் குண்டுகள் போட்டார். (புத்தம் சரணம்)

காயம்பட்ட புறாவுக்கு மருத்து தந்தாய் - நீ
மருந்து தந்து புறாவை காத்து மகிழ்ந்தாய்
தூயவனே மருந்தில்லாமல் சாகின்றோம் பார் - உன்னைத்
தொழுதவரால் சுடுகாடு போகின்றோம் பார். (புத்தம் சரணம்)

அரசை விட்டெறிந்து அன்பு நீ செய்தாய் - இவர்
அன்பை விட்டெறிந்து அரசு செய்தார்.
அரசமரத்தில் பிணம் தொங்குதய்யா - உன்
அடியார்களால் நாளும் இங்கு தொல்லையா ? (புத்தம் சரணம்)

தலைவா உன் பல்லை இங்கே தொழுது களித்தார் - இவரே
தங்கள் பல்லால் தமிழர்களின் உடல் கிழித்தார்.
கொலைஞர்களின் வெறியாட்டம் முடிவதென்னாள் - கண்ணீர்
கொட்டும் எங்கள் மண்ணில் வானம் விடிவதென்னாள்? (புத்தம் சரணம்)

ஏணிகள்
கடுமையா உழைச்சும்
காடுகரைய விற்றும்
ஆசையோடு
படிக்கவைச்சான் மகனை
கீழத்தெரு ராமசாமி

எங்கோ
பெரிய வேலையாம்
எல்லோரும்
பெருமையா சொன்னார்கள்

தாயார் மரணத்துக்குப் பின்
தனியாகிப்போன
தகப்பனை

காப்பகத்தில் கொண்டுவிட
சொந்தக் காருல
வந்திருக்கானாம்
சூட்டும்
கோட்டுமாக.

கூலிவேலை செய்து
குடிசையிலே வாழ்ந்தாலும்
குடிகார எம்மகன்
கால் செருப்புத்
தோலுக்கு பெறுவானா
இவன்?

நன்றி : முத்தண்ணன்
புதிய தென்றல் இதழ் - மார்ச்சு 2008

சிங்கப்பூரில் தமிழ் மறைந்தால்....

சிங்கப்பூரில் தமிழ் மறைந்தால் அதற்குத் தமிழ் நாட்டுத் தமிழரே கரணியமாவார் - சிங்கை இளங்கோ அடிகளின் சிந்தனையுரை.

சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் செங்கோலோச்சி வருகிறது. மக்கள் தொகையில் 7 விழுக்காடே இருந்தும் அங்குள்ள தமிழர்கள் அதை சாதித்துள்ளோம். ஆனால் தமிழ் நாட்டிலிருந்து வந்து போவோர், அதைப் பாதுகாப்பதற்கு மாறாகச் சீரழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தமிழர்கள் வாழும் ஏனைய சில வெளிநாடுகளைப் போல சிங்கப்பூரிலும் தமிழ் ஏற்றம் இழந்தால், அதற்குத் தமிழ் நாட்டுத் தமிழர்களே கரணியமாக இருப்பார்கள். சிங்கப்பூர் குடிகளாகிய தமிழர்கள் கரணியமாக இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு சிங்கை இளங்கோ அடிகளாகத் திகழும் பன்னூலாசியிரியர் பாத்தென்றல் முருகனடியான் அவர்கள், சென்னையில் தனக்களிக்கப்பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்குகையில் உள்ளக் குமுறலுடன் உரைத்தார்.

எழுகதிர் வாசகர் வட்டம் சார்பில் பாத்தென்றல் முருகனடியான் அவர்களுடன் - உவப்பத்தலைகூடல் - நிகழ்ச்சி 30-1-08 அன்று சென்னை பாவாணர் நூலகச் சிற்றரங்கில் அனைத்திந்திய மின்வாரியக் கணக்கீட்டாளர் சங்கத் தலைவர் த. கணேசன் அவர்கள் த்லைமையில் நடைபெற்றது. பொறிஞர் சி,பா. அருட்கண்ணனார், சிற்பி கோ.வீர பாண்டியன், கவிசுரபி. சுப.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க எழுகதிர் ஆசிரியர் அருகோ - வரவேற்புரை கூறினார். பாத்தென்றலுக்குப் பொன்னாடை அணிவித்தார்.

விழுப்புரம் தமிழ் உணர்வுப்பாடல் வெளியீட்டுக் குழுமம் தலைவர் இரா.செம்பியன் - பாரதியைப்போல் - என்ற தலைப்பில் பாத்தென்றல் முருகனடியானைப் பாராட்டிக் கவிதைபாட, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர்.மு. இராமச் சந்திரன், தென்மொழி துரைமா. பூங்குன்றன், தமிழம் - பன்னீர்செல்வம், புலவர் தங்க ஆறுமுகம், ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்.

ஏற்புரை கூறிய பாத்தென்றல் தொலைக்காட்சிகளால் தமிழ் தொலைந்து வருவதைக் குறிப்பிட்டுத் துன்பப் பட்டார். தமிங்கிலததைப் பரப்பிவரும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், மற்றும் இதழ்களால் சிங்கப்பூரிலும் தமிழ் சிதைந்து வருவதைக் குறிப்பிட்டுச் சிந்தை நொந்தார்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி போன்ற தலைவர்களின் கடும் முயற்சியால் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் மூலம் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் உணர்வும், தமிழின ஒற்றுமையும் கட்டி வளர்க்கப்பட்டன. எங்கள் நாட்டுத் தந்தை லீ.குவான் யூ அவர்களின் பேரறிவால் - பேருழைப்பால் விளைநிலமோ, மூலப்பொருள்களோ - இல்லாத சிங்கப்பூர் இன்று அண்டை நாடுகள் எல்லாம் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஆனால் சிங்கப்பூர் குடிமக்களல்லாத, தமிழ்நாட்டிலிருந்து அங்கு வந்து போகும் தமிழர்களாலும், அங்கு வேலை நிமித்தம் தங்கியுள்ள தமிழ்நாட்டுக் காரர்களாலும் - தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் சிதைவு ஏற்படுகிறது என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒருவேளை இன்று சிங்கப்பூரில் தமிழுக்கு உள்ள உயர்நிலை குலையுமானால் அதற்கு அவர்கள்தான் கரணியமாக இருப்பார்கள் என்பதை நான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டு, எனக்குச் சிறப்புச் செய்த, என்னைப் பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். இலக்கிய எழுச்சியுரையாக அவரின் ஏற்புரை இருந்தது.

நன்றி : எழுகதிர் - மார்ச் 2008
தமிழகத் தமிழ் வளர்ச்சி என்ற கட்டுரையில்...

அரசுப்பணியில் இருக்கும் வரைக்கும் ஆட்சியாளர்களின் முதுகு சொரிந்து, சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, காலத்தைக் கடத்திவிட்டு, ஓய்வு பெற்ற பிறகும் தாம் முதுகு சொரிந்து விட்ட திறமையை எடுத்துக் காட்டி, மறுபடியும் ஓர் ஆய்வுக்குழு, திட்டக்குழு என்ற பெயரில் போய் ஒட்டிக் கொண்டு - சாகும் வரைக்கும் - கால நீட்டிப்பைப் பெற்றுத் திட்ட வரைவை - முடிக்காமலேயே - செத்துத் தொலைப்பது - அல்லது திட்ட நோக்கையே திசை திருப்பி மக்களை மென்மேலும் - அழுத்தும் வகையில் அறிக்கைகளை முடித்துக் கொடுப்பது - என்று தான் இன்று வரைக்கும் - திட்ட வரைவுகள் - நிகழ்ந்து வருகின்றன. சேர்ந்திருக்கின்றன.

அதிலும் பொய்யை மெய்யாக்கும் (?) பேச்சுத்திறன் கொண்டவர்கள், வழக்காடித் தீர்பெழுதிக் களைத்துப் போனவர்கள், வாழ்நாள் முழுவதும் திரைமறைவிலேயே கையூட்டுப் பெற்று வெற்றி கண்டவர்கள் - தலைமையேற்கும் ஆணைக்குழுக்களின் நிலைப்பாடுகள் - நிரம்பவே நாம் பாரத்து - நொந்து - சலித்து - நலிந்து போயிருக்கின்றோம்.

விடுதலை பெற்று விட்டதாகக் கூறப்படும் கடந்த அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நாம் எந்த முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். விடுதலைக்கு முன்னர் ஒரு பவுன் தங்கம் வெறும் எட்டு உருபாவுக்கே கிடைத்தது. இன்று அதன் விலை எட்டு ஆயிரம் உருபா ஆகிறது. விலை உயர்வு என மக்கள் கருதுகிறார்கள். ஆட்சியாளர்களோ - எட்டாயிரம் உருபா அளவிற்று வாங்குந்திறன் உயர்ந்திருக்கிறது - என்பார்கள். உண்மைதானா அது? பொருளியல் அறிவர்களைக் கேட்டுப் பாருங்கள். இதனைப் பணமதிப்பு வீழ்ச்சி என்றே பகருவார்கள். கொஞ்ச நஞ்ச மல்ல - 60 ஆண்டுகளில் ஆயிரம் மடங்கு வீழ்ச்சியில் கிடக்கிறோம். ஆட்சியாளர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இந்த ஆயிரம் மடங்கு வீழ்ச்சி நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தும். அதன் தொடக்க நிலைகள்தாம் உலக மயமும், பொருளாதார மண்டலமும்,

ஆம் ! ஆட்சியாளர்கள் நம்மை அடிமையாக வெள்ளையனுக்கு மறுபடியும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, இவ்வறுமை ஆழ்சேற்றிலிருந்து மீள்வது எப்படி? பாட்டாளி மக்கள் கட்சி ஒரு மாற்றுத் திட்டத்தை வடிவமைத்து வழங்கியிருக்கிறது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட திட்ட வரைவு எனக் கருதலாம். ஆனாலும் ஒன்றை நாம் மறந்து விடுவதற்கில்லை.

நாட்டு மருத்துவத்தில் ஒரு முறை வைத்திருக்கிறார்கள், அது, நோய் நாடி - நோய் முதல் நாடி - அது தனிக்கும் வாய் நாடி - வாய்ப்பச் செயல் - என்பது தான்.

நோயாளிக்கு மருந்து கொடுக்கும் முன் - அவர் குடலைத் தூய்மைப் படுத்தும் கழிச்சல் மருந்து கொடுத்த பின்னரே நோய் தீர்க்கும் மருந்து கொடுப்பார்கள். அவ்வழியையே நாமும் பின்பற்ற வேண்டும்.

முதலில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அதிலும் திரைப்படத் துறையிலிருந்து வருபவர்கள் கட்சி தொடங்குவதையே முற்றாகத் தவிர்க்க வேண்டும். காசுக்காக எப்படியும் நடிப்பவர்கள் - காசுக்காக எப்படியும் நடந்து கொள்வார்கள் தாமே? அப்படித்தானே தமிழ் நாட்டு அரசுகள் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் - அரசையே ஏமாற்றி வெள்ளையும் கருப்புமாக வாங்கிக் குவித்த - அத்தனை நடிகனுமே - ஆட்சிக் கனவில் மிதந்து - அரசியல் கட்சிகளைத் தொடங்குகிறன் என்றால் - நாம் இன்னும் புரிந்து கொள்ளாமலேயே குடிநாயகம் பேசுவது நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தானே?

மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, குடிநீர், உடல்நலம், கல்வி, போக்குவரத்து - இன்ன பிற முகாமைத் தேவைப் பணிகளை - அரசுடமை ஆக்குதல் வேண்டும். நம் மண்ணையும், மண்வளத்தையும் பிறர் சுரண்டிச் செல்ல இடந்தரக்கூடாது. இந்தியா ஒரே நாடு, ஒருமைப்பாடு - என்கிற ஏமாற்றுக் குரல்களையெல்லாம் - ஏற்றுக் கொள்ளக் கூடாது. இது ஒன்றும் பிரிவினை வாதம் அல்ல. தமிழ்நாடு தவிர்த்த இந்திய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஏற்று - நடைமுறைப்படுத்தி வரும் நல்ல கொள்கைதான். நமக்கு மட்டும் விதி விலக்கு ஏன் ?

நன்றி : தேமதுரத் தமிழோசை - ஏப்ரல் 2008
ஆசிரியர் உரையில் திருமிகு ஆனைமுத்து...

வெள்ளையன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்த தொழில் திறமைகளையெல்லாம் அழித்தான். 16 முழத்துணியை ஒரு கைப்பிடிக்குள் அடக்க முடியும் - அவ்வளவு நயமான - மெல்லிய துணியை டாக்கா மக்கள் நெய்தனர். அவர்களின் திறமையை ஒழித்திட வேண்டி - மான்செஸ்டர், கிளாஸ்கோ துணிகளை இங்கு விற்றிட வேண்டி, டாக்கா நெசவு நிபுணர்களின் கட்டை விரலை வெட்டினான்.

சேலம் கஞ்சமலை, தாமிரபரணி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இரும்பு உருக்கும் சிறுசிறு உலைகள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன. செப்பீல்டில் இரும்பு செய்யப்படுவதற்கான இரும்புத் தாதுவை இந்தியாவிலிருந்து ஏற்றிக் கொண்டுபோய் - அங்கே உருக்கி - இரும்பு விட்டங்களும் - தூண்களும் - தண்டவாளங்களும் செய்து இந்தியர் தலையில் சுமத்துவதற்கா, நம் உருக்கு உலைகளை அழித்தான்.

அவுரிச்சாயம் இயற்கையானது, கெட்டியானது, பளபளப்பானது - கெடுதல் இல்லாதது - 1900 க்குப் பிறகு வேதிப பொருள்களால் ஆன செயற்கைச் சாயத்தை அறிமுகப்படுத்தி, கோடிக்கணக்கான இந்திய அவுரி வேளாண்மைக் காரர்களை நசிக்க வைத்தான். நான் 8 வயது முதல் 17 வயது வரை வடக்கலூர் அகரத்தில் பாழடைந்த அவுரிச்சாயத் தொட்டியில் விளையாடினேன் (1933 - 1942)

தமிழர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கினார்கள். கத்தி செய்தார்கள். என்பதற்கான சான்றுகள் சேலம் கஞ்சமலையிலும், ஆதிச்ச நல்லூரிலும் இன்றும் உள்ளன.

வெள்ளையன் காலத்தில் வேளாண் மக்கள் தழை, மரம், முள், தேங்காய், பனங்காய் இவற்றை வெட்டிட வீடுதோறும் கொடுவாள், வாங்கு (வளைவானது) கத்தி, சூரிக்கத்தி, பிச்சுவா (கட்டெறி), ஈட்டி, அம்பு, வில் - எல்லாவற்றையுமே வைத்திருந்தனர். சிலர் உடைவாளும் வைத்திருந்தனர். அவற்றை அன்றாட வேலைகளுக்கும், மக்களின் நல்ல பயன்பாட்டிற்குமே பயன்படுத்தினர், எங்கோ, எப்பொழுதோ, அரிதாக மனிதர்களை வெட்டி மாய்க்கவும் பயன்படுத்தினர்.

மேலே கண்ட கத்தி வகைகள் அல்லது ஆயுதங்களை இன்றும் அய்ம்பது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வைத்துள்ளனர்.

இந்தியர்கள் ஆயுதங்களை, கருவிகளை வைத்திருக்கக் கூடாது என்று ஆங்கிலேயன் எண்ணிணான். கி.பி.1600 வாக்கில் வெள்ளையன் பயன்படுத்திய துப்பாக்கி, பீரங்கி, தோட்டா, வெடிமருந்துகள் இவற்றுக்கும் ஆயுதம் (arms, ammunitions) என்றுதான் பெயர். அவை மக்களையும் விலங்குகளையும் - சுட்டுக் கொல்வதற்கென்றே செய்யப்பட்டவை. பயன்படுத்தப் பட்டவை. எனவே இவற்றை arms - ஆயுதம் என்று சட்டத்தில் குறிப்பிட்டான். இவை படைத்துறை Army சார்ந்தவை.

அதேபோல, மக்கள் தம் பயன்பாட்டுக்கு வைத்திருந்த கத்தி, கொடுவாள், பிச்சுவா இவற்றையும் - ஆயுதங்கள் - arms என்றே 1878 ஆம் ஆண்டின் இந்திய ஆயுதங்கள் சட்டத்தில் (The Indian Arms Act 1878 ) எழுதிக் கொண்டான். இவற்றை சமூகப் பயன்பாட்டிற்கான ஆயுதங்கள் - Civilian weapons - என்றும் பிரித்து அதே சட்டத்தில் காட்டினான். மக்களை அச்சுறுத்தவே இப்படிச் செய்தான்.

சுதந்திர இந்தியாவில் மெத்தப் படித்த அறிஞர்கள், தேசியக் கட்சிகள், பொதுவுடைமைக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் இவற்றில் இருந்தனர். வெள்ளையன் உருவாக்கித் தந்த - 1860 உரிமையியல் சட்டம், 1860 இந்தியக் குற்றத் தண்டனைச் சட்டம், 1878 இந்திய ஆயுதங்கள் சட்டம், 1935 இந்திய அரசுச் சட்டம் - என்கிறவற்றை எதையுமே அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, ஒரு சுதந்திர நாட்டுக்கு - சுதந்திரம் பெற்ற மக்களுக்கு உரிய புதிய சட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என முனையவில்லை.

ஏனெனில் இருப்பதில் தலைகீழ் மாற்றம் - என்பதை இவர்களில் எவருமே விரும்பவில்லை. ஏற்கெனவே இருக்கிற சட்டங்களை அவ்வப்போது திருத்தி, எப்படியோ காலத்தை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிற காட்டுமிராண்டிக் காலத்துச் சிந்தனைகளிலேயே - எல்லாக் கல்வி மான்களும், கட்சிகளின் தலைவர்களும் - சட்ட அறிஞர்களும் தோய்ந்து கிடக்கின்றனர். ...................

நன்றி : சிந்தனையாளன் இதழ் ஏப்ரல் 2008 - தலையங்கம்.
ஆசிரியர் உரையில் சா. அந்தோனி வியாகப்பன்

படிப்படியாக எல்லாவற்றையும் இழந்து வருவதில் நம் தமிழினத்தைத் தவிர வேறொன்றினை எடுத்துக் காட்டாகக் கூறமுடியாது. ஒகேனக்கல் யாருக்குச் சொந்தமானது? எங்கு எல்லை முடிகிறது? என்பது குறித்து ஒரு மிகப்பெரும் தகராறே நடந்து கொண்டிருக்கிறது. சுற்றி வாழும் இனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழகத்தின் வளத்தையும், தமிழனின் இரத்தத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. நாம் கேட்பாரற்று வீதியில் படுத்திருக்கும் நாய் போல ஆனோம் என்று ஒருவர் என்னோடு வேதனையில் பகிர்ந்து கொண்டார்.

கன்னடத்திலிருந்து வந்து தமிழகத்தின் தண்ணீருக்குள் நீராடினால் பரவாயில்லை. நீரும் ஆறும் தரையும் மேகமும் எங்களுடையது என்று வீண் திமிறோடு திரிபவர்களுக்கு கர்நாடக போலீஸ் காவல் காத்திருக்கிறது. தமிழக போலிஸ் சூட்டிங் பார்ப்பது போல வேடிக்கை பார்க்கிறது. மறுவாரம் பா.ம.க. போராட்டம் நடத்தும் போது தடியடி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ஏன் இந்தப் பாரபட்சம்? ஏன் இப்படி ஆனோம் ? காவல் காக்கும் இந்த மாவீரர்கள் கர்நாடகத்திற்குள் போயிட்டு வந்திட முடியுமா?

நாம் ஏன் இப்படி உணர்வற்றுப் போனோம் ? எவன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்கிற சொரணையற்ற ஜென்மங்களாக மாறுவதற்குக் காரணமென்ன? எப்போதும் மக்களைக் குறை கூறுவதில் தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். தவறு செய்யும் ஒரு மக்கள் பிரதிநிதியை மக்கள் சேர்ந்து அவருக்கு மேல் உள்ள அதிகாரியிடம் சென்று முறையிடுகிற போது கண்டு கொள்ளாமல் விடுவதும், அதை ஒரு பொருட்டாக நினைக்காத தன்மையும், ஒரு சிரிப்போடு அனுப்பிவிடுவதும் ஒரு காரணம் என்பதை அறிய வேண்டும். மேல் அதிகாரி தனக்குக் கீழ் உள்ளவனை கண்டிக்கத் துப்பில்லாதவனாக போய்விட்ட அவலம் போலவே இந்த ஒகேனக்கல் பிரச்சனையும் உள்ளது.

மக்களிடம் உணர்வற்றுப் போவதற்குக் காரணம் மக்களின் போராட்ட நாடி நரம்புகளை குற்றுயிராக்கிவிட்டு மக்கள் பேசவில்லை என்று கூறுகிற தன்மையும் ஒரு காரணம். கர்நாடகத்தில் மக்களை வழிநடத்த வேண்டிய உள்ளூர் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் இனவெறி கொண்டு அலைகின்றன. ஆனால் இங்கு மாபெரும் தமிழினக் காப்பாளர்கள் இருந்தும் கிடப்பில் போடப்பட்ட கோப்புகள் போல புழுதியடைந்து கிடக்கிறார்கள். அங்கு தலைவர்கள் தூண்டிவிடுகிறார்கள். பாதுகாப்பிற்கு பக்கபலமாக அரசே நிற்கிறது. இங்கு தலைவர்கள் தூங்குகிறார்கள். இழிவாய்ப் பார்க்கவும், அடித்து நொறுக்கவும் நாய்கள் கூட ஏவுவதற்குத் தயங்காமல் அரசே நிற்கிறது. இங்குதான் என்றில்லை உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் நிலை அவலமாக உள்ளது.

இலங்கையில் கொன்று குவிக்கும் சிங்களர்களின் கொடுங்கோல் தன்மையை இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் ஆதரித்து எழுதுகின்றன. தமிழர்களின் போராட்டத்தை இழிவாகவும், ஒன்றுமில்லாத தன்மையாகவும் மாற்றி செய்தி வெளியிடுவதெல்லாம் நம் தமிழகத்தில் தான் நடைபெற முடியும். பக்கத்து மாநிலத்தில் அவர்கள் மாநிலத்து மக்களைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது தவறாக எழுதிவிட முடியுமா? அப்புறம் அலுவலகமே இல்லாமல் ஆக்கி விடுவார்கள்.

தமிழ் மக்களின் இன ஓர்மைக்கும், போராட்டத்திற்கும் தலைவர்களும் அரசும் ஒத்துழைப்புக் கொடுக்காதவரை இங்கு மாபெரும் போராட்டமோ, விடிவோ ஏற்படப் போவதில்லை. மேலும் நம்மவர்கள் பேசிப் பேசியே பாழாய்ப் போனவர்கள். பேச்சை நம்பி நம்பியே ஏமாந்தும் போனவர்கள். இனிக்கப் பேசினால் கருப்புக்கட்டி கையில் வந்துவிடுமா? அது தெரியாமல் இழந்தவர்கள். போராட்டத்துக்கும் கூட பேசிப் பேசியே தான் வெல்ல முடியும் என்று நினைத்தால் இருப்பதையும் உருவிவிட்டு பிறந்த மேனியாக சுற்றியுள்ளவர்கள் நம்மை மாற்றிவிடுவார்கள் ! என்ன செய்யப்போகிறோம்

நன்றி : உயிர்த்த பார்வை - ஏப்ரல் 2008
கல்வி வரியின் நிலைமை என்ன ?

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் குடிமக்களிடமிருந்து சொத்துவரி ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது, சொத்துவரி கட்டுவதோடு ஒவ்வொருவரும் கல்வி வரியென ஒரு தொகையையும் கட்டுகிறார்கள். அனைவருக்கும் கல்வி - என்னும் இலக்கை அடைய அனைத்துக் குடிமக்களின் பங்களிப்பும் தேவையென்ற நிலைமையில் இந்தக் கல்விவரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் வசூலிக்கப்படும் கல்வி வரி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த செலவழிக்கப்படுகிறதா? அப்படி ஒழுங்காகச் செலவழிக்கப் பட்டால் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பும் தரமும் உயர்ந்திருக்குமே? என்ற வினாக்கள் எழலாம்.

199 இல் வெளியிடப்பட்ட அரசாணை ஒன்றைப் பார்ப்போம் - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் கல்வி வரியாக வசூலிக்கப்படும் தொகை முழுமையாகப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகச் செலவிடப்படுவதில்லை என்றும், உள்ளாட்சியின் ஆளுகையிலுள்ள பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையை மாற்ற மேற்படி வரித்தொகை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இதை அரசு கவனமாகப் பரிசீலித்தது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் வசூலிக்கும் கல்வி வரியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் ஆளுமையிலுள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் உயர், மேல் நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் மட்டுமே செலவிடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கல்வி வரியாக வசூலிக்கப்படும் மொத்தத் தொகையில் குறைந்த பட்சம் 25 சதவீதம் தொகையாவது பள்ளிக் கட்டிடங்களின் பராமரிப்பிற்குச் செலவிடப்பட வேண்டும்,

கல்வி வரியாக வசூலிக்கப்படும் தொகையைப் பொதுக் கணக்கிற்கு மாற்றம் செய்யக் கூடாது.

இந்த அரசாணை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறதா எனப் பார்க்கத் தகவல் அறியும் உரிமைச் சட்ட வழிமுறையைப் பயன்படுத்தித் திருச்சி மாநகராட்சியை மாதிரியாகப் பரிசீலிக்கலாம் என விண்ணப்பித்தோம்.

2004 - 05 ஆம் ஆண்டுகளில் மட்டும் வசூலிக்கப்பட்ட கல்வி வரி 2 கோடியே 74 லட்சம் ரூபாய். 2005 - 06 ஆம் ஆண்டில் மாநகராட்சியால் வசூலிக்கப்பட்ட வரி 2 கோடியே 91 லட்சம். 2006 - 07 ஆம் ஆண்டில் 2 கோடியே 59 இலட்சம். ஆனால் மாநகராட்சியால் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்பட்ட தொகை, வசூலிக்கப்பட்ட கல்வி வரித் தொகையில் பாதிதான். உதாரணத்திற்கு 2005 -06 இல் செலவழிக்கப்பட்ட தொகை 95 இலட்சம் தான். ....

நன்றி மனித உரிமைக் கங்காணி இதழ் - மார்ச் 2008

ஜப்பான் நாட்டில் தமிழருக்கு அஞ்சல் தலை

தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்க உதவியதற்காகத் தமிழர் ஒருவரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை ஜப்பான் அரசு வெளியிட்டு அவரைக் கெளரவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முதியவர் 86 அகவை நிரம்பிய முத்து. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சூசோ மோட்டுசு நாகா இவரது பேனா நண்பர். இவர் தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்க ஆர்வம் கொண்டார். அப்பணியில் ஈடுபட அவருக்கு முத்து உதவியுள்ளார்.

வள்ளுவர், வள்ளலார், பாரதியார் ஆகியோரது படைப்புகளுக்கு ஜப்பான் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த உதவிக்காக ஜப்பான் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கெளரவித்ததுடன். இந்த அஞ்சல் வில்லையை ஜப்பான் நண்பர் முத்துவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வழி செய்தல் வேண்டும் என்றான் பாரதி. அரசு இதில் உரிய அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், பிற மொழியினர் தாமாகத் தேடி வந்து தமிழ் இலக்கியங்களைத் தம் மொழியில் மொழி பெயர்த்துக் கொள்வதுடன், அவரது உருவம் பொறித்த அஞ்சல் வில்லையையும் வெளியிட்டு அவரைச் சிறப்பித்துள்ளது. பாராட்டுக்குரியது. அவருக்குக் கிடைத்த சிறப்பு தமிழுக்குச் சிறப்பாகும். நம்மூர் அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் விளம்பரப் பொருளாய், ஆபததுக்கு உதவும் பண்டமாய் இருக்கிறதே தவிர, உண்மையான தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டதாய் இல்லை. இதைப் பார்த்தாவது இங்குள்ளவர்களுக்கு ஊக்கம் வந்தால் சரி.

நன்றி : மண்மொழி - மீனம் 2039


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061