வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 24 - 05 - 2008...பாவலரேறு பெருஞ்சித்திரனார்...

ஆரங்கே? தமிழ்மகனா? இங்கே வா வா !
அன்றிருந்த நின்முன்னோர் தொகுத்தளித்த
பேரெங்கே? ஊரெங்கே? பிழைப்பு மெங்கே?
பேச்செங்கே? மூச்செங்கே? விளங்கி நின்ற
சீரெங்கே! சிறப்பெங்கே? முகம் நாணாத
செந்தமிழ்த்தாய் உலாவர நீ செய்து தந்த
தேரெங்கே? வீறெங்கே? இலக்கியஞ் செய்
திறமெங்கே? உரமுற்றும் போன தெங்கே?

கொடை யெங்கே? நடையெங்கே? மறவர் ஊர்ந்த
கொல்களிறு சூழ்ந்துவருந் தூவெண் கொற்றக்
குடையெங்கே? படையெங்கே? ஆரங் கென்று,
குரலுயர்த்தி விரல்நீட்டி அயலார்க் கிட்ட
தடையெங்கே? நின்னாணை தவறி னோரின்
தலையெங்கே என்பாயத் தருக்கு மெங்கே ?
தொடையெங்கே? பாவரர்தங் கூட்ட மெங்கே?
தொல்பெருமை நின்னைவிட்டுப் போன தெங்கே?

வாய்மையெங்கே? அருளெங்கே? சான்றோர் எங்கே?
வான்தடவி முகில்முட்டுங் கலைகள் எங்கே?
தூய்மையெங்கே? ஒழுங்கெங்கே? கணவற் பேணித்
தொல்மறவக் கூட்டத்தை ஈன்று தந்த
தாய்மையெங்கே? பெண்மையெங்கே? தவறு நேரின்
தம்முயிரை வெறுத்தொதுக்கும் மானமெங்கே?
நோய்மையிலாத் திறமெங்கே? உள்ள மெங்கே?
நொடிக்குநொடி தாழ்ந்தமிழ்ந்து போன தெங்கே?

தந்திறனால் அல்லாமல் உயிர்வா ழாத
தாளெங்கே? ஆண்மையெங்கே? நேர்மை யெங்கே?
செந்தமிழ்த்தீம் பாமணக்கும் வாய்கள் எங்கே?
செழும்பாடல் மகிழ்ந்துண்ணுஞ் செவிகள் எங்கே?
சிந்திசைக்கும் தெருக்களெங்கே? பாணர் எங்கே?
சித்துபயில் துறவோர்தம் மறைகள் எங்கே?
மந்திபயில் சோலைகளும் மலைகள் தாமும்
மறம்பயிலும் களமாகிப் போன தெங்கே?

அன்றிருந்த அறவல்லார் யாத்துத் தந்த
அறமெங்கே? பொருளெங்கே? இன்பமெங்கே?
குன்றிருந்த விளக்கெனவே உலகோர்க் கீந்த
குறள்நெறிக்கு நடைமாறாத் தமிழன் எங்கே?
இன்றிருந்த நாகரிகப் போலிப் போக்கின்
இழிநிலைக்கு முடிவெங்கே? விடிவுமெங்கே?
மன்றிருந்த தமிழெங்கே? அதுபோ மாயின்
மறுநொடியில் நானெங்கே? நீதான் எங்கே?

நன்றி: புகழ்ச்செல்வி இதழ் - கும்பம் 2039
தமிழுக்குப் பகைவன் தமிழனே.

தமிழுக்கு எத்தனை கேடுகள் - அதுவும்
தமிழ்நாட்டின் தமிழனால் இழிவுகள்.
தமிழுக்கு எத்தனை கொடுமைகள் - அதுவும்
தமிழ்வேண்டா என்பதே தமிழர்கள்,
தமிழுக்கு எத்தனை பகைமைகள் - அதுவும்
தமிழனும் ஆரியனும் துணைவர்கள்.
தமிழக்கு எத்தனை தடைகள் - அதுவும்
தமிழனால் தடைபோட்ட வழக்குகள் !

தமிழன்னை கால்களில் தளைகள் - என்
தமிழனே ஆங்கில அடிமைகள்.
தமிழ்வழி பாடில்லை கோயிலில் - ஏன்
தமிழனே ஆரியனின் தாள்களில் !
தமிழ்வழி பள்ளிகளில் இல்லையே - ஏன்
தமிழாய்ந்தத் தமிழமைச்சு இல்லையே
தமிழ்ப்பெயர் சூட்டாத தமிழர்கள் - ஏன்
தனித்தமிழ் அறிவானோ சோதிடன்.

தமிழரிடை ஏனில்லை ஒற்றுமை? - சொல்
தமிழர்களைப் பிரிப்பதால் சாதிகள் !
தமிழரிடை சாதிமத மோதலேன்? - சொல்
தலைவிரித்து ஆடுவதால் சாதிப்பேய்
தமிழரிடை இனமானம் இல்லையேன் - சொல்
தன்தாயை மதியாத தமிழனால்.
தமிழரிடை தமிழுணர்வு இல்லையேன்? - சொல்
தன்மானம் தமிழனுக்கு இல்லையே.

பூம்புகார் வெ. நிலவன்

நன்றி புகழ்ச்செல்வி கன்னி இதழ் 2038
போரிசைப் பெண்பா

ஆடவனின் வீட்டினிலே அடியெடுத்து வைப்பதற்கு
இயற்சீரும் வெண்சீரும் கொடுப்பாள் - சீர்தான்
இல்லையெனில் வாழாது தடுப்பாள் - மாமி
வெண்பாவின் இலக்கணமாய்த் தடிப்பாள்.

ஆணெல்லாம் அளவடியாய் நாற்சீரும் பெற்றிங்கு
அகிலத்தை மூன்றடியால் அளப்பார் - பெண்ணோ
ஈற்றடியில் முச்சீராயத் தவிப்பாள் - வீட்டில்
அைச் சொல்லாய்ப் பொருளற்றும் கிடப்பாள்.

பார்ப்பதற்குச் சிலநேரம் தனிச்சொல்லாய்த் தெரிந்தாலும்
முதற்சீரின் எதுகைக்காய் முகிழ்ப்பாள் - விகற்பம்
கொண்டாலும் வேலிக்குள் இருப்பாள் - குடும்ப
இலக்கணத்துச் சுமையெல்லாம் பொறுப்பாள்.

மாமுன்னே நிரையாக விளமுன்னே நேராக
மாமியுடன் நாத்தியுடன் மாற்றம் - கணவக்
காய்முன்னே நேராகத் தோற்றம் -உன்னைக்
கனியென்றால் கொள்வார்கள் சீற்ற்ம்.

ஆணெழுதும் எழுத்தும்நீ அவரசைக்கும் அசையும்நீ
நின்றசீர் அவரென்றும் வருஞ்சீர்நீ - இதுதான்
பெண்பாலின் இலக்கணமாம் புவக்கு - உன்தன்
செப்பலோசை கேட்காதவர் செவிக்கு.

நாள்பார்த்து மலர்சூட்டி நல்லதுணை தானென்று
ஆள்பாரத்து சேர்க்கின்றார் உன்னை - கடைந்த
காசுக்குப் பிறப்பெடுத்த வெண்ணெய் - கடைசியில்
விரல்விட்டு ஆட்டுகிறார் கண்ணை.

வீட்டினிலே வெளியினிலே அலுவலக வழியினிலே
என்னதான் செய்தார் உனைக்கேட்டு - நீயும்
ஓயாமல் பாடுகிறாய் பின்பாட்டு - கொஞ்சம்
உணர்ச்சி கொண்டு பாடடிநீ பெண்பாட்டு.

குறளாக, சிந்தாக குறுகிவிட்ட பெண்ணே நீ
பஃறொடையாய்ப் பல்கிவிடு பெருத்து - உடனே
நேரிசையை இன்னிசையை நிறுத்து - உரிமைப்
போரிசையை ஓயாமல் முழக்கு.

நன்றி : பாவலர் வையவன்

நன்றி : சிந்தனையாளன் மே 2008.
போர்களத்தில் வெற்றி நாட்டு

தீவினிலே நாள்தோறும் தமிழர் சாவைத்
திட்டமிட்டுச் சிங்களவன் நடத்து கின்றான்
காவினிலே பூப்பறித்தல் போல வங்கே
காடையர்கள் பெண்கற்பைப் பறிக்கின் றார்கள்.

சாவினிலே நிலவுரிமை பெறுவ தற்குச்
சரித்திரத்தைத் தமிழரங்கே எழுது கின்றார்
நாவினிலே சுவைநக்கி நமக்கேன் என்றே
நாயெனவே இருப்பதுவோ தமிழா இங்கே !

துப்பாக்கி ரவைகளினை நெஞ்சி வேற்றுத்
துடிதுடிக்க மண்மீதில் வீழு கின்றார்
எப்பக்கம் திரும்பிடினும் இராணு வத்தின்
எறிகுண்டால் உடல் கருகிச் சாயு கின்றார்,

ஒப்பரிய தமிழீழம் காண்ப தற்கே
ஒருவயதுக் குழந்தையுமே எழுந்து நிற்க
எப்படித்தான் இதைப்பார்த்தும் உணர்வே யின்றி
எருமையென இருக்கின்றாய் தமிழா இங்கே.

சிந்துகின்ற குருதிக்கோ அளவே யில்லை
சிங்களவர் கொடுமைக்கோ எல்லை யில்லை
சந்ததியைப் பூண்டோடு அழிப்ப தற்கே
சாத்தான்போல் முப்படையால் தாக்கு கின்றார்,

சொந்தமென்னும் எண்ணமின்றித் தமிழா இன்னும்
சொரணையின்றி இருப்பதுவோ சங்கம் காட்டும்
முந்தயஉன் வீரத்தைச் செயலில் காட்டு
மூண்டெழுந்த போர்க்களத்தில் வெற்றி நாட்டு.

பாவலர் கருமலைத் தமிழாழன்.

நன்றி தமிழர் முழக்கம் - மேழம் இதழ்
விதை நீ விறகு நீ

கனிதரும் மரம்தரு விதைமுகம் காண்கிலோம்
எரிதரு விறகுடல் இனியது தீயினுள்

உணர்வினில் ஒளியில் உயிர்தரு தொண்டினில்
உனைவெல எவருளார்? எனினும் நீ விறகுதான்
கனிமரம் அருளிய கண்படா வித்துதான் !

எரிகிறாய் தோழனே, இயற்றியே அருள்கிறாய் !
எனினும்,
மேன்மையில் உன்நிலை வீழ்ந்தநின் இனநிலை
ஒருபடி உயர்ந்ததோ ஒரு கணம் எண்ணிடு !

உனக்கு
அங்குமந் நிலைமைதான் இங்குமத் தொடர்ச்சியே
எங்குபோய் உரியதை எடுத்திடப் போகிறாய் !

கடுகுநீ குறைவிலாக் காரம்உண் டுன்னிலே
சிறுதுளித் தீப்பொறி சீரினில் குறைவில்லை
இவ்வரும் உண்மைகள் இங்கெவர் அறிகிலர் ?

மாளிகை நுழையநீ மந்திரப் படிகளாம்
உள்நுழைந் திட்டதும் உனக்கவண் எவ்விடம் ?

உரியதை அடைந்திட உறுதிகொள், போரிடு !
கறிவேப் பிலையாய்க் கிடந்த
காலம் ஓடட்டும் கண்விழி தோழனே !

முனைவர் முரசு நெடுமாறன்

நன்றி செம்பருத்தி - ஏப் 2008
வினைத்திட்பம்

ஈயச்சட்டியின் கதகதப்பினை
கிளறி சோறு போடும்
ஆயாக்களின் உடல் பெருத்து இருக்கிறது
சத்துக்களை அவர்கள் எடுத்துக் கொண்டு
உணவினை மட்டும் போடுவதால்.

ஒட்டு மொத்த குழம்பிற்குமாய்
போடப்படும் ஒரேயொரு உருளைக் கிழங்கு
யாருக்கு விழுகிதோ அவன்
முகத்தில் குலுக்கல் சீட்டு
விழுந்த பெருமிதம்.

ஆடுகள் நிழல் தேடிச் செல்லும்
அந்த உச்சி வேளையின்
சீருடை அணிவகுப்பில்
ஒரேயொருவன்
அரைஞாண் கயிறு தாங்கும்
டிரவுசர் பையைத் தடவிப் பார்த்துக் கொள்கிறான்

தட்டில் விழும் சோற்றில்
ஒரு பங்கு எடுத்து வைக்க
அவனிடம் பத்திரமாய் இருக்கிறது
பாலீதின் பையும்
தங்கச்சி பாப்பாவின் நினைவும்.

எஸ். சத்யகணபதி

நன்றி அம்ருதா மே 2008
செம்பியம்

091. மறதி இன்றேல் மனித னில்லை
092. மற்றவர் குறையை மறப்பவர் உயர்ந்தோர்
093. மருந்தளவு குறைய விருந்தளவோ டுண்க
094. மணமற்ற மலர்போல் குணமற்ற மனிதர்.
095. மண்ணாழ உழுபவர் மனம்போல விளையும்
096. மண்ணுக்கு வந்துதான் மலையகிலும் மணம்பரப்பும்.
097. மனத்திட்பம் உள்ளவர்க்கே வினைத்திட்பம் கைவரும்.
098. மனந்தான் மனிதனை மனிதனாக் குவதே.
099. மடையனும் கணவனே மாலையிட் டானபின்.
100. மன்னுயிரனைத்தும் மண்ணுக்கே உரியவை.

101. இயற்கையும் செயற்கையும் இணைந்ததே வாழ்க்கை.
102. இன்பமும் துன்பமும் வினைபடு பொருளே.
103. இன்றே என்பது முயற்சியின் முனைப்பே.
104. இகழ்வர நாணும் இயல்பே சால்பு.
105. இருப்பதை மறைப்பது இழப்பதே போலும்.
106. இருந்துமில்லை என்பார் இரப்பா ரின்கீழ்.
107. இடும்பை என்பது இல்லாத இடமேது.
108. இறவாப் புகழினை எய்துவர் சிலரே.
109. இறைவனைக் காண மறைவழிச் செல்க.
110. இரந்துண் பதிலும் பெருந்தன்மை உண்டா.

111. உழைப்பும் ஊதியமும் துலையிடல் வேண்டும்.
112. உழவும் தொழிலும் உலகின் உயிராம்.
113. உண்டுறங்கிக் கிடப்பாரைக் கண்டுறங்கு மாக்கம்.
114. உழைக்காமல் உண்பார் களைக்கொப் பாகும்
115. உள்ளதை மறைத்தால் இல்லாமல் போகும்.
116. உணர்வில் லாதார் களர்நில மாவர்.
117. உரிமையை மறுப்பவர் பெருமையே அழியும்.
118. உணர்ச்சி யற்றார் உயிரிந்தும் செத்தார்.
119. உண்டான போது கொண்டாடும் உலகம்.
120. உருவமும் அறிவும் ஒரோவழி இணையும்.

121. ஊசியின் வேலையை உலக்கை செய்யாது.
122. ஊர்ப்பழிக் கஞ்சுபவர் பேர்கெட்டுப் போகாது.
123. ஊக்கம் ஒருவனை ஆக்கும் கருவியே.
124. ஊஞ்சல் ஓய்ந்தாலும் உள்ளம் ஓயாது.
125. ஊன் உண்பாரின் ஊனும் பிரிதின் ஊன்.
126. ஊழ்படுத்தும் பாடே உலகம் படும்பாடு.
127. ஊரெல்லாம் தனக்கென்பார் உப்பானாற்று நீரே,
128. ஊருக்குத் தானென்பார் உண்ணும் நன்னீரே.
129. ஊன்றும் விதையெல்லாம் ஒன்றுபோல் முளைக்காதே.
130. ஊர்வலத்தைப் பார்த்தால் ஊர்வளந் தெரியும்.

131. எண்ணியார் இயற்கைபோல் எல்லாம் நடக்கும்.
132. எண்ணத்தின் இயல்பே செயலின் வடிவம்.
133. எப்படியும் வாழலாம் என்பாரே மிகுதி.
134. என்தலை எழுத்தென்ப தியலாதார் கூற்றே.
135. எறும்பு கரும்பிற்கு எங்கிருந்தும் வந்துவிடும்.
136. எட்டிப் பழமானாலும் எடுத்தொன்றைத் தரமாட்டார்.
137. எடைபோட்டுப் பாரத்த்தா கொடைபெற்றுக் கொள்வார்.

நன்றி தேமதுரத் தமிழோசை இதழ் ஏப்ரல், மே - 2008.
நரன் கவிதைகள்

எறும்புகள் பற்றிய குறிப்பு

(அ)
சற்று நேரத்திற்கு முன்
வேலியோரத்தில்
இற்ந்துகிடந்த வண்ணத்துப் பூச்சி
மெல்ல ஊர்ந்து செல்கிறது தரையில்
அதன் கீழே
மிகப் பெரிய இறக்கை முறைத்த
எறும்புக் கூட்டம்.

(ஆ)
சமையல் குறிப்பு
புத்தகத்தில்
ஜிலேபி செய்வது எப்படி ?
என்ற பக்கத்தில்
இறந்து கிடந்தது
இரண்டு எறும்புகள்.

(இ)
எவ்வளவு கத்தியும்
கேளாமல்
அமர்ந்து விட்டான்
பேருந்து இருக்கையில்
மயிரிழையில்
உயிர் பிழைத்த எறும்பு
சத்தமாய்த் திட்டியது
செவிட்டு....

(ஈ)
புத்தகத்தை
தலைகீழாக
கவிழ்த்து உதறினேனா
அதிலிருந்து
விழுந்து ஓடியது
எறும்பென்ற ஓரெழுத்து.

நன்றி : மணல் வீடு இதழ் 1 மே சூன் 2008
ஆங்கிலத்தில் அரசாணை

தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வகை செய்யும் சட்ட முன் வடிவு 1956 ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேறியது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் தேதி அரசிதழிலும் வெளியானது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலை உறுதியானது.

தமிழில் எவ்வாறு அரசு அலுவலகங்களை நடத்துவதென அறிவுரை கூறவும், இத்திட்டத்ைதைச் செயற்படுத்துவதில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க ஆவன செய்யவும் 1957 இல் தமிழ் ஆட்சி மொழித் திட்ட நிறைவேற்றக் குழுவும் அமைக்கப்பட்டது. மாவட்டத் தலைநகரங்களில் தமிழ் ஆட்சி மொழித் துறை உருவாக்கப்பட்டது. தமிழில் கடிதப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 1958 ஆம் ஆண்டு, தைப் பொங்கல் நாளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 1963 இல் மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் அமல்படுத்த ஆணையிடப்பட்டது.

படிப்படியாக அரசு அலுவலகம் அனைத்திலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த 1971 இல் உத்தரவிடப்பட்டது.

சட்டப்பேரவை மற்றும் அரசுச் செயலகத்தில் பிறப்பிக்கப்படும் ஆணைகள், அரசிதழ்கள், விதிமுறைகள், ஆங்கிலத்தில் வெளியிட்டாலும், ஆங்கிலத்துடன் தமிழுக்கும் நிகர்நிலை தந்து அவ்வாணைகளின் தமிழாக்கம் பிரசுரிக்கப்பட வேண்டும் என 1989, மே 27 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் இவை எல்லாம் வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே உள்ளன. கடந்த 19 ஆம் தேதி வெளியான அரசிதழில் ஆங்கிலமே இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு நிகர்நிலை கொடுத்து ஆங்கிலத்துக்கு இணையாக மொழியாக்கம் செய்யப்படவில்லை.

( தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் வருவதற்கு முன்பே ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் கி.பி. 1816 இல் எல்லீஸ் கலெக்டராக இருந்தபோது முதலில் திருக்குறளை மொழி பெயர்த்தார். அதில் புறநானூறு, சீவகசிந்தாமணி, பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டினார் - - உவேசா காலத்திற்கு முற்பட்டவர் எல்லீஸ். மேலும் எல்லீஸ் அக்காலத்தில் இரண்டு வராகன் தங்க நாணயத்தில் திருவள்ளுவரின் உருவத்தைப் பொறித்துள்ளார். இதுபோல் எலியட்ஸ் கவர்னராக இருந்தபோது - ஆங்கிலேயர்கள் தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசுப் பணியில் இருந்து நீக்கப் படுவார்கள் என்று அறிவித்தார். தன் மகனுக்குக்கூட, அவர் சலுகை காட்டவில்லை. எலியட்ஸின் மகன் தமிழ்த் தேர்வில் தோற்றுப் போனதால் அவரை அரசு வேலையில் இருந்து நீக்கி விட்டார் - தகவல் புலவர் ச.மருதமுத்து )

நன்றி : யாதும் ஊரே இதழ் மே 2008
தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளும் தமிழும்

தமிழகமெங்கும் 1000 த்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இருக்கும் என்று நம்பலாம். வள்ளுவர், பாரதி, பாரதிதாசன் எனப் பல்வேறு தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் பெயரால் அல்லது மொழி சமூக முன்னேற்றம் என்பதன் பெயரால் இவை இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட தமிழ் மன்றங்கள் பல தமிழுக்காக என்ன செய்கின்றன - என்று கேட்டால் விடை சுழியம் தான்.

காரணம், இதில் பல அமைப்புகள், அமைப்பாளர்களின் சுயநல நோக்கில்தான் செயல்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது சில முறை - மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மற்றும் பிரமுகர்களைச் சிறப்பு விருந்தினராக, பரிசளிப்பாளராக, அழைத்து வந்து, விழாக்கள் நடத்தி - கொண்டாடி - அவர்களோடு அறிமுகம், உறவு ஏற்படுத்திக் கொண்டு - அதன் மூலம் தங்கள் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்கின்றன.

இவர்கள் என்றைக்காவது உள்ளூர் மட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களில் தமிழ்வழிக் கல்வி பற்றி ஒரு பரப்புரை, விழிப்புணர்வு இயக்கம் நடத்தியது உண்டா?? தமிழ்வழி மாணவர்களை அவர்தம் பெற்றோர்களைச் சந்தித்து உரையாடி அவர்களை ஊக்குவித்ததுண்டா?? தமிழுக்காகத் தமிழகம் தழுவி நடைபெறும் போராட்டங்களோடு எப்போதாவது தங்களைப் பிணைத்துக் கொண்டதுண்டா? எதுவுமிருக்காது. (இவர்கள் தான் மாவட்ட அளவில் - தமிழ் அறிஞர்கள் - தமிழாளர்கள் - தமிழ்க் காப்பாளர்கள் - தமிழ் இலக்கியச் செம்மல்கள் - இவர்கள் தங்களை விட்டு வெளியே வருவது கிடையாது. புகழ், பாராட்டு, பணம், பதவி எனத் தமிழின் பெயரால் சுகமாக இருப்பவர்கள் - இவர்களின் குழந்தைகள் ஆங்கிலத்தல் படித்து வெளிநாட்டில் வேலையில் இருக்கும். உண்மையான தமிழ் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காதவர்கள்)

இப்படி அல்லாமல் தமிழ் அமைப்புகள் ஊருக்கு ஊர் பிரச்சாரத்தில் இறங்கி. தமிழுக்காகத் தொண்டாற்றத் தொடங்கி - தமிழ்நாட்டில் அனைத்துக் கல்வியும் தமிழில், தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை - என்கிற இரு கோரிக்கைகளை மட்டும் முன் வைத்துப் போராடி வென்றுவிட்டால் போதும். பிறகு தமிழ் நாட்டில் - தமிழ்வழிப் பள்ளிகள் தானாய்த் தழைக்கும், தமிழ் மொழியும் தானாய் செழிக்கும் - செய்வார்களா?

நன்றி : மண்மொழி இதழ் - வெளியீடு 22 விடைத் திங்கள் 2039
என்று தீரும் மக்கள் ஏக்கம் ?

சே. முகமது நேசர். திண்டுக்கல்

இந்தியா ஒளிர்கிறது. இந்தியா வளர்கிறது இந்தியா பணக்கார நாடாகிறது என்ற ஆட்சியாளர்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி என்றால் 120 கோடி மக்கள் உள்ள இந்த நாட்டில் 53 பில்லியனர்கள் இருக்கிறார்களாம் (100 கோடி 1 பில்லியன் ) ஆசியாக் கண்டத்திலே இது மிக அதிகமாம்.

உலகக் கோடீசுவரர்கள் வரிசையில் 5 ஆவது மற்றும் 6 ஆவது இடத்தில் அம்பானி சகோதரர்கள் உள்ளார்களாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு திருபாய் அம்பானி ஒரு சாதாரண வியாபாரியாகவே இருந்துள்ளார். இப்போது முகேசு அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து எழுத்தியிரண்டாயிரம் கோடி. அவர் தம்பி அனில் அம்பானி சொத்து மதிப்பு ஒரு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் கோடி. இருவரின் மொத்த மதிப்பு மூன்று லட்சத்து நாற்பதாயிரம் கோடிகள்.

இந்தியாவில் உள்ள 53 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு பதின்மூன்று லட்சத்து அறுபத்து நான்காயிரம் கோடிகள். இந்தியாவின் இந்தாண்டு (2008-09) நிதி நிலை அறிக்கையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து இரு நூற்ற எண்பத்தேப கோடி. இது 53 பில்லியனர்களின் சொத்து மதிப்பில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவேயாகும். மேலும் இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பானது அடுத்த ஆண்டு பற்றாக்குறையைவிட இருபத்தைந்து மடங்கு கூடுதலாகும்.

நடப்பு நிதியாண்டின் வருவாய்ப் பற்றாக்குறை ஐம்பத்தைந்தாயிரத்து நூற்று எண்பத்தி நான்கு கோடி . இது இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பில் நான்கு புள்ளி 05 சதம் மட்டுமே. அதாவது இந்த 53 பணக்காரர்கள் தங்கள சொத்தில் நூற்றுக்கு நான்கு ரூபாய் கொடுத்தால் வருவாய் பற்றாக்குறை சரியாகிவிடும், கொடுப்பார்களா ?

மேற்கண்ட புள்ளி விவரங்களையெல்லாம கொடுத்திருப்பது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஸ் டுடே என்கிற வணிக இதழ். இந்தியப் பணக்காரர்கள் சிறு தியாகம் செய்தால் இந்திய அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை நீங்கிவிடும் என்று எழுதியிருப்பதோடு. உலகக் கோடீசுவரர்களின் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கர்களான வாரன் பபெட், பில்கேட்சு போன்றவர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமாகவும், சமூக விரோதமாகவும் கோடிகளைக் குவித்திருக்கும் இன்னும் பலர் இருப்பது அந்த இதழுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதையெல்லாம் பறிமுதல் செய்தாலே இந்தியாவிற்கு பற்றாக்குறை என்பதே வராது.

ஊழலைவிட கொடிய தீவிரவாதம் வேறில்லை. என்று முன்னாள் ஊழல் ஒழிப்பு ஆணையர் திரு.விட்டல் குறிப்பிட்டாரி. அதே நேரத்தில் ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. அப்போது பாரதிய சனதா ஆட்சி வாசுபேயி பிரதமர். சட்ட ஆணையம் பரிந்துரை செய்த அந்தச் சட்டத்தை இயற்றுவதற்குப் பதிலாக - மனித உரிமைகளைப் பறிக்கின்ற "பொடா" சட்டத்தை இயற்றினார். ஊழல் பேர்வழிகளைப் பாதுகாத்து அவர்களிடம் பெருந்தொகைகளை வசூல் செய்து கொண்டவர்கள். தன் மொழிக்காகவும், இனத்துக்காகவும் குரல் கொடுத்தவர்களைத் தேச விரோதிகள் என்று கூறி, பொடா சட்டத்தில் தண்டித்தார்கள். உண்மையான தேச விரோதிகளைக் கண்டறியும் நாள் எந்த நாள்? அவர்கள் சொத்துகளைப் பறிக்கும் நாள் எந்த நாள் ? என்று தான் பெரும்பான்மையான சாதாரணக் குடிமக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கோடிகளைக் குவிப்போர் வெகு சிலர். வாடி வதங்குவோர் மிகப் பலர் - இதுவே இந்தியாவின் வளர்ச்சியாம்.

நன்றி : யாதும் ஊரே இதழ் - மீனம் 2039
....தலைவர் எனப்படுபவர் யாரெனின்...!

முனைவர் சுப. உதயகுமார்

.......தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 1,40,000 மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். 12,618 கிராமப் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 551 சிறப்பு நிலை பஞ்சாயத்துகள், 50 மூன்றாம் நிலை நகர்மன்றங்கள், 102 நகர் மன்றங்கள், 6 மாநகர மன்றங்கள் - எனும் இவ்வமைப்புக்கு இப்பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பதவியினைப் பெருவதால் மட்டுமே ஒருவர் தலைவராகிறார். ஆளுமை இயல்புகள அடைந்து விடுகிறார் என்றால். நமது மாநிலத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் தலைவர்கள் இருக்க வேண்டும். கட்சித் தலைவர்களையும். அரிதாரம் பூசிய நடிகர், நடிகை தலைவர்களையும் சேர்த்துக் கொண்டால் மூனறில் ஒரு பகுதியினர் தலைவர்களாகவே யிருக்க வேண்டும்.

எங்கும் தலைவர் எல்லோரும் தலைவர். இதுதான் இன்றையத் தமிழகத்தின் உண்மைநிலை. ஆளுமை இயல்புகளும், திறமைகளும் இப்படி பொதுவுடைமையாக்கப்பட்டு விட்டதால், தலைவர்களைப் பிரித்தறிய அவர் தம் பதவிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய பதவி என்றால் பெரிய தலைவராகவும், சிறிய பதவி என்றால் சிறிய தலைவராகவும், உருப்படாத பதவி என்றால் இன்னும் உருப்பெறாதத் தலைவராகவும் கொள்ளப்படுகிறார்கள். தங்களால் தாம் வகிக்கும் பதவிக்கு யாதொரு சிறப்பும் சேர்க்க வக்கற்றோர், வகையற்றோர், ஏதாவது பதவியின் மீதேறி தம்மைத் தூக்கி நிறுத்திக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

தேர்தலில் வெற்றிபெறும் வரை, வாக்காளரின் கால்களில் விழுந்து தம்மை ஒரு சேவகனாகக் காட்டிக் கொள்ளும் இந்தத் தலைவர், வென்ற பிறகு ஒரு குறுநில மன்னனாக, நிலப்பிரபுவாக, ஜமின்தாராக மாறிவிடுகிறார்.

வேலைக்காரன் என்பது கேவலமான சொல்லோ, தத்துவமோ அல்ல. வேலை செய்பவன் வேலைக்காரன். நம்மில் அனைவருமே அரசுக்கோ, தனியார் ஒருவனுக்கோ அல்லது தனக்கோ - வேலை செய்கிறோம். சோம்பேறியாக யாசித்து ஏய்த்து. திருடி வயிறு வளர்ப்பதுதான் கேவலமே தவிர வேலைக்காரனாய் வினைஆற்றுவது அல்ல.

பாப் கிரீன்லீஃப் என்ற சிந்தனையாளர் கண்டறிந்த சேவகத் தலைமைத்துவம் என்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியது.

வேலைக்காரன் அடிமையுமல்ல. உங்கள் உறவினருமல்ல. இரண்டு நிலைகளுக்கும் இடையே நிற்கும் உதவியாளர். உற்ற நண்பர். கர்மயோகி எனலாம். இந்த வேலைக்காரத்தன்மையே நம் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

பதவியினைப் பெற்றுவிட்டதாலேயே தான் தலைவர் எனக் கொள்வது, கொண்டாடுவது, கும்மாளமிடுவது பேதமையின் உச்சம். தாடிகளெல்லாம் தாகூராகி விடுவதில்லை. மீசைகளெல்லாம் மகாகவி ஆகிவிடுவதில்லை - அது போலவே பதவி பெற்றோரெல்லாம் தலைவராகி விடுவதும் இல்லை.

கரவொலி இதழ் - மார்ச்சு ஏப் 2008
..ஸ்டேட்டஸ் - கருதி குடிக்கும் மங்கையர்

1972 முதல் புதிய குடிகார சந்ததி, தமிழ்நாட்டில் உருவானது, அதைத் திருத்தவே முடியவில்லை. சிகரெட் ஏந்தாத ஹீரோ இல்லை.

தண்ணியடிக்காத வில்லன் இல்லை. சென்னையில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் மாணவர் குழு சமூகத்தைப் பாதிக்கும் தீமைகள் குறித்து ஆய்வு நடத்தியது.

1000 பேரிடம் நடத்திய ஆய்வில் - 18 வயது - நிரம்பிய ஆண்கள், பெண்கள் கருத்துத் தெரிவித்தனர். எந்தப் பொருளாதார நிலையில் இருந்தாலும் 32 சதவீத பெண்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டனர். 26.29 சதவீத ஆண்கள் மது அருந்துகின்றனர். உடல் நிலை காரணமாக மது அருந்துவதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.

பணக்காரப் பெண்கள், ஆண்கள் சொசைட்டியில் தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள மது அருந்துவதாக விளக்கினர். 22.67 சதவீத பெண்கள் சிகரெட் புகைக்கின்றனர். சூதாட்டத்திலும் பெண்கள் மிஞ்சிவிட்டனர். டி.வி.சீரியல் மனதைப் பாதிப்பதாக 55.41 சதவீத பெண்கள் தெரிவித்தனர்.

கணவனைவிடக் கடவுளையே நம்புவதாக 99.34 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். (எந்தக் கடவுள் தண்ணியடிக்கத் தூண்டியதோ பாவம்) போதை மீட்பு ஆலோசனை மையங்களை அரசு துவங்க வேண்டும் என பெரும்பாலோர் எதிர்பார்க்கிறார்களாம்.

மீடியா உலகமே - தி.மு.க.வினர் குடும்பங்கள் - கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கள்ளக்காதல், முறை தவறிய கள்ள உறவுகள், நுட்பமான சதிப் பின்னல், இவைதான் டி.வி. சீரியல்களில் பிரதானமாக உள்ளன. தடுமாறும் இளைஞர்களை., இளைஞிகளை - டி.வி. சீரியல்கள் கலாச்சாரச் சீரழிவில் தள்ளி விடுகின்றன.

நன்றி : குமரிக்கடல் இதழ் - மே 2008

தமிழ் மெல்லச் சாகுது

சென்ற திங்களில் ஒருநாள் என் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய சூழலில் நான் சென்றேன். அவர் வீட்டில் இரண்டு வயதுள்ள ஒரு மழலை என்னை அங்கிள் என்றான். நான் உடனே என்னை மாமா என்று அழையெனச் சொன்னதும் உடனே அந்த மழலை அழகாய் மாமாவெனச் சொல்லி என்னுடன் விளையாடினான்.

அந்த நேரம் வெளியில் சென்ற என் நண்பர் வீட்டில் வரவும். தாத்தா என்று அவரிடம் சென்றான். உடனே அந்த மழலையிடம் என்னைக் காட்டி இவர் யார் என உரைக்கையில் அந்த மழலை மீண்டும் அங்கிள் என்றது. நான் உடனே தாத்தாவை கிராண்ட் பாதர் என்று சொல்லாமல் அவரைத் தாத்தா என்றாய், என்னை மட்டும் அங்கிள் என்று சொல்லி அந்நியனாக்கி விட்டாய் என்று கூறினேன்.

ஆக அந்த மழலைக்கு நாம் என்ன சொல்லித் தருகிறோமோ அதை அந்த மழலை சொல்லிவிடும் - என்று நான் சொன்னவுடனே அந்த மழலையின் தாய்க்குச் சினம் வந்து உடனே தன் தந்தையிடம் இனி நீங்கள் என் குழந்தையிடம் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என அதட்டினார். அது என்னை மிகவும் பாதித்தது. இவ்வளவும் நம் தமிழன் வீட்டில் நடந்த செயல். அப்போது வந்த உணர்வுதான் இந்தப்பாட்டு

தாய்ப்பால் குடிக்கும் முன்பே தாயிடம்
தமிழ்ப்பால் கேட்டிடு தந்திட மறுத்தால்
கள்ளிப் பாலினை அவளுக்குக் கொடுத்து
கல்லறைப் பக்கம் ஒதுக்கி வைத்திடு.


நன்றி : புகழ்ச்செல்வி இதழ் - மீனம் இதழ் 2039


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061