வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 20 - 06 - 2008...பாவலரேறு பெருஞ்சித்திரனார்...

எந்தக் கட்சியில் நீ இருந்தாலும்
இனத்தை மறந்திடாதே - தமிழா
இனத்தை மறந்திடாதே - உன்
சொந்தக் குடும்பம் தனைப்பல கருத்தால்
சுட்டுப் பொசுக்கி டாதே - தமிழா
சுட்டுப் பொசுக்கிடாதே.

எந்தத் திசையில் நீ இருந்தாலும்
ஏற்றந் துறந்திடாதே - தமிழின்
எழிலைத் துறந்திடாதே - பழங்
கந்தலை யுடுத்துக் கஞ்சியை யருந்தினும்
கனிவை யிழந்தி டாதே - இனக்
கருத்தை யழித்தி டாதே.

எந்த நிலத்தினில் நீ இருந்தாலும்
இயல்பை மாற்றிடாதே - இனத்தின்
இணைப்பை யறுத்தி டாதே - உன்
முந்தையர் வாழ்ந்த முதுதமிழ் நாட்டின்
மொழியை மறந்திடாதே - உணர்வை
மூளி யாக்கிடாதே.

எந்தப் படையினில் நீ இருந்தாலும்
இனத்தை எதிர்த்திடாதே - தமிழா
எதிரிக் குழைத்திடாதே - உன்
சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே
சூழ்ச்சி நினைத்திடாதே - பகைவன்
சோற்றில் நனைந்திடாதே.


நன்றி: தேமதுரத் தமிழோசை ஆடவை 2039
மணல் சிலை கண்டு மயங்கிக் கிடப்பதா ?

ஏட்டுச் சுரைக்காய் கையில் எடுத்து
எவனோ தொகுத்த கல்வியைக் கொடுத்து
வீட்டுப் பாடமாய் எதையோ கிழித்து
விதைகள் இல்லா விளைச்சல் செய்கிறாய்
மாட்டு வண்டியில் பூட்டிய மாடுபோல்
மழலை இனத்தை சிறையில் வைக்கிறாய்
காட்டு விலங்குபோல் அறிவே இல்லாது
கார்இருள் பாதையில் நாட்டைச் சமைக்கிறாய்

தாய்மொழி மறக்க வைத்து அயலவன்
தாளுக்குச் செருப்புகள் தைக்கிறாய் நஞ்சுக்
காய்மொழி ஆங்கிலம் கற்றே உன்றன்
கால்தடம் மறந்து தொலைந்து போகிறாய்
நாய்போல் கிளிபோல் பேசிடும் உன்வாய்
நன்மொழி பேசிட இயம்பிட எழாதோ
தாய்வழி சுரந்த தண்டமிழ் மொழியை
தலைமுறை படிக்க வைக்கக் கூடாதா

இனத்தின் மூத்தவன் இமயம் வென்றவன்
எல்லா மொழிக்கும் தாய்னெ நின்றவன்
பணத்தின் மேல்கொண்ட காதலால் இன்று
பிணத்தின் மேல்கால் வைத்து நடப்பதா
சினத்தின் மறவனாய் பொங்கி எழுந்தவன்
சிம்புட் பறவையாய் ஓங்கிப் பறந்தவன்
மனத்தின் வழியாய் மடமை களைந்தவன்
மணல்சிலை கண்டு மயங்கிக் கிடப்பதா?

புழுவாய் மாற்றான் மொழியில் நெளிந்து
புழுத்ததும் போதும் மடிந்ததும் போதும்
முழுதாய் உன்மொழி வென்று நிலைத்திட
முறையாய்ப் பேசுவாய் முறையாய் எழுதுவாய்
எழுவாய் தமிழா என்உயிர்த் தோழா
எங்கும் இன்தமிழ் சொல்லி மகிழ்வாய்
உழுவாய் நண்பா எண்திசை எங்கும்
உயர்மொழி விதைத்து விண்மலர் பறிப்பாய்

பரணிப் பாவலன்

நன்றி புகழ்ச்செல்வி இதழ் - ஆடவை 2039
உரைவீச்சுகள்

காவிரி நீர் வேண்டாம்
தமிழகத்திற்கு
மாற்றுப்பயிர்
செய்து கொள்கிறோம்
நாங்கள்

சப்பாத்தி
கள்ளி
பேரீச்சை

- வள்ளுவனார்
தன்மானம் இதழ்

---------------

விளையாடப் போகிறோம் நீயும் வாடி

கல்வி இல்லை
படித்தாலும்
எதையோ படிக்கிறோம்
எங்கோ
நம்மை இழப்பதற்காக

தொழில் நாசம்
வேலை இல்லை
பணி நிரந்தரம் இல்லை
கடன், கண்ணீர்
வட்டி, குட்டி
எல்லாக் கணவர்களும் தற்கொலை
விற்பனைக்குக் குழந்தைகள்
விபச்சாரத்திற்குப் பெண்கள் என
மூளைக்கு எட்டுவதெல்லாம்
அநீதிகளும், பிரச்சனைகளும்

எல்லா
நான்கு சுவர்களுள்ளும்
நிறைவேறாத
ஆசைகளும், லட்சியங்களும்
ஏக்கங்களும், கனவுகளும்
காரணம் தெரியாத கண்ணீருடன்
நம் தோழியரும்

நம் தந்தைகளையும்
சகோதரர்களையும்
உன்னையும் என்னையும்
மூளையில் கடித்து
ரத்தம் குடிக்கும்
அடாவடிகளை
அடித்து விரட்டாமல்
எப்படிப் பொறுப்பது ?

வாருங்கள்
எல்லா சுவர்களையும் உடைத்து
தோழிகளாய் ஒருங்கிணைவோம்

முடங்கிக் கிடக்கும்
ஆடவர்களை இழுத்துக் கொண்டு
பொறிகளாய் விரைவோம்

நம்மை
வாழத் தகுதியற்றவரென
நம் மூளையில்
முழங்குபவனை
இல்லாமல் செய்வதற்கு

வரமாட்டாயா தோழி - நம்முடன்
சேரமாட்டாயா நீ
சரிதான்.

மணிப்பூர், மனோரம்மாவைப்போல
உலகின் அதிகாரப் பேய்கள்
எத்தனை பெண்களையும்
காமப் பன்றிகளாய் பிராண்டினாலும்

நம் பிறப்புறுப்புகளை
எத்தனை தோட்டாக்கள்
சிதைத்தாலும் - உன்
சொரணைகெட்ட கண்கள்
காணப் போவது இல்லையே

நம் எதிரிகளோடு
நேருக்கு நேராக விளையாட
நாங்கள் போகிறோம் தோழி
நீ இரு

உன் பாய் ஃபிரண்டோடு
செல்போனில் பேசு
சினிமாவுக்குப் போ
நிம்மதியாய்த் தூங்கு

- புதியவன் - அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நன்றி சாளரம் இதழ் எண் 6

ஓரெழுத்தொரு மொழி

தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் 256, இந்த 246 எழுத்துகளில் 42 எழுத்துகள் ஓரெழுத்துச் சொல்லாக விளங்குகின்றன. இந்த 42 எழுத்துகளுக்கு உள்ள பொருளைத் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

ஆ - பசு
ஈ - கொடு, பறக்கும் பூச்சி
ஊ - இறைச்சி
ஏ - அம்பு
ஐ - அழகு, தலைவன், வியப்பு
ஒ - வினா, மதகு
ம - பெரிய, விலங்கு
மீ - மேலே, உயரம்
மு - மூப்பு
மே - மேன்மை, மேல்
மை - கண்மை, இருள்
மோ - முகர்தல், மோதல்
தா - கொடு, கேட்பது
தீ- நெருப்பு
தூ - வெண்மை, தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம், தைத்திங்கள்
பா - பாட்டு, நிழல், அழகு
பூ - மலர்
பே - நுரை, அழகு
பை - பசுமை, உறை
போ - செல்
நா - நாக்கு
நீ - நின்னை
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - நோவு, வருத்தம், நோவு
கா - சோலை, காத்தல்
கூ - பூமி, கூவுதல்
கை - கரம், உறுப்பு
கோ - அரசன், தலைவன், இறைவன்
வா - அழைத்தல், ஏவல், வருகை
வீ - பூ, அழகு
வை - கூர்மை, வைதல், வைத்தல்
வெள - கெளவுதல், கொள்ளை அடித்தல்
சா - மரணம், பேய், சாதல்
சீ - இகழ்ச்சி, திருமகள்
சே - எருது
சோ - மதில்
யா - மரம்
நொ - நொண்டி, துன்பம்
து - கெடு, உண், பிரிவு

நன்றி ஊற்று - மே 2008

உலகின் முதன் மொழி தமிழ் - முதல் மகன் தமிழன்

1) இந்திய மொழிகளில் செம்மொழி என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மொழிகள் இரண்டு அவை 1. தமிழ் 2. சமற்கிருதம்

2) சமற்கிருதம் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளோ, நாணயவியல் சான்றுகளோ இதுவரை கிடைக்கவில்லை. முதல் சமற்கிருதக் கல்வெட்டுக் காணப்படுவது கிபி 150 இல்தான்

3) தமிழ் மொழியிலுள்ள கல்வெட்டுகள் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன.

4) ஆதிச்சநல்லூர்ப் புதைபொருள் ஆராய்ச்சியில் கிமு எட்டாம் நூற்றாண்டுத் தாழியில் இருக்கும் தமிழ் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

5) மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பியன் கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கற்காலக் கோடரியில் சிந்துவெளித் தமிழ் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கிமு 2500 க்கும் முற்பட்டது

6) சிந்து வெளி நாகரிகம் தமிழர்களுடையது என நிலைநாட்டப்பட்டுள்ளது, தமிழர் என்னும் தமிழ்ப் பெயர் சமற்கிருதத்தில் திராவிடர் என்று குறிக்கப்படுகிறது

7) சிந்து வெளிக்கு முற்பட்ட தமிழர்களுடைய நாகரிகத்தைப் பற்றிக் கடல்கோள்களால் அழிந்த குமரக்கண்டம் கூறிக் கொண்டிருக்கிறது. முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று நம்பப்படுகிறது.

8) முதல் மனிதனுடைய தோற்றத்தைப் பற்றிக் கூறும் பைபிளில் பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது

9) எபிரேயத்தின் தாய்மொழி தமிழே என்றும் தலைப்பில் ம.சோ.விக்டர் நூல் எழுதியுள்ளார்.

முனைவர் மு,தெய்வநாயகம்

நன்றி தெளிதமிழ் விடை 1
படித்தவன் மதிக்கத் தகுந்தவன் தானா ?

பேரா.ம.இலெ.தங்கப்பா

கல்வி கல்வி என்று இன்றைய இளைஞர் குமுகாயமே கல்வியின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது, தேர்வுகளில் மிகுந்த் மதிப்பெண் பெறுதல், முதல் இடங்களைப் பிடித்தல், சிறந்த மேற்கல்வி நிலையங்களில் இடம் பெறுதல் - முதலானவை பந்தய ஓட்டங்கள் போலவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கல்விக்காக ஆயிரமாயிரம் கோடிப் பொருளை நம் அரசுகள் செலவிடுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களை உண்டாக்கி அவற்றில் உலகத்தகைமை வாய்ந்த கல்வியை வழங்குவதாக நம் நடுவணரசு பெருமைப் பட்டுக் கொள்கின்றது

படித்தவன் பதவிபெற்றுப் பகட்டாக வாழ்கின்றான். குமுகாயத்தில் உயர்மதிப்புப் பெறுகிறான், படிப்பில்லாதவன் மிகத் தாழவாக மதிக்கப் படுகின்றான். படித்தவன் எல்லா ஏந்துகளோடும் வாழ்க்கையை இனிதாக நுகர்கிறான், நம் குமுகாயத்தின் தலைமை இலக்கே கல்வியாகத்தான் இருக்கிறது.

உயர் கல்வி கற்றவன் கடவுளாக மதிக்கப்படுகிறான். போகுமிடங்களிலெல்லாம் பாராட்டப் படுகின்றான். கல்வி, கல்வி - இன்றைய நம் இளைஞர்களின் மூளைகளிெல்லாம் இந்தக் கல்விதான் அரித்துக் கொண்டிருக்கிறது.

அப்படி என்ன சிறப்பிருக்கின்றது இந்தக் கல்வியில்? இந்தக் கல்வி மாந்தனை மாந்தனாக்குகிறதா? மாந்தப் பண்பை வளர்த்திருக்கின்றதா? நாட்டுக்குச் சிறந்த குடிமக்களை உருவாக்கித் தந்துள்ளதா? ஒன்றையும் செய்யவில்லையே.

இன்று மிக உயர்தரமுடையது என்று அரசு பெருமைப் பட்டுக் கொள்ளும் தொழிலநுட்பக் கல்வி முதல் எளிய தொடக்கக் கல்விவரை, கல்விக்காக நம் அரசுகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாகச் செலவிடுகின்றன. உழைக்கும் மக்களின் வியர்வையும், குருதியுமே வரிப்பணமாக அரசின் ைக்க்குச் சென்று படிப்பவர் கைக்கு மாறுகின்றது. படிப்பவன் முழுதும் சொந்தச் செலவில் படிக்கவில்லை. குமுயாயம் செலவு செய்து அவனைப் படிக்க வைக்கின்றது. ஆயினும் இவ்வாறு கல்வி கற்றவன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றானா?

கடுகளவேனும் மாந்த நேயத்தைக் கடுகளவேனும் குமுகாயத்தின் மீது பரிவைக். கடுகளவேனும் அண்டை அயலார் மீது பற்றுதலை, அல்லலுற்றார் மீது இரக்கத்தைப் படித்தவனிடம் காண முடிகின்றதா? படிப்பு இவற்றை உண்டாக்கியிருக்கின்றதா?

மருத்துவம், கல்வி, புத்தாக்கம் - போன்ற ஆக்க வினைகளில் படித்தவர்கள் ஈடுபடுவது உண்மைதான், என்றாலும் இவையும் ஊதியத் தொழிலாகத்தான் மேற்கொள்ளப் படுகின்றனவே தவிர, உண்மையான மக்களன்பால் மேற்கொள்ளப் படுகின்றனவா? சரி, இவை ஆக்க வினைகள் என்று ஏற்றுக் கொண்டாலும், எத்தனை விழுக்காடு இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்? மிகமிகக் குறைவுதான். எஞ்சிய கோடிக் கணக்கான இளைஞர்கள் ஆட்சி இயந்திரத்திலும், அதற்குத் தீனியிடும் வறட்டுத் தொழில்களிலும்தானே முடங்கிக் கிடக்கின்றனர். இன்றைய தொழில்நுட்ப எந்திர நாகரிகத்தில் தவிர்க்க முடியாத ஓர் உறுப்பு என்பதைத் தவிர இன்றைய கல்வி எந்த வகையில் பெருமைக்குரியதாக உள்ளது?

பொருள் ஈட்டுவதற்கான வழிவகைகளைத் தெரிந்து கொள்வதும், அவற்றைப் பயன்படுத்தித் திறம்படப் பொருளீட்டுவதிலும் , பின் ஈட்டிய பொருளைப் பாதுகாப்பதும் - ஆகிய இவற்றைப் பற்றிய உலகியல் அறிவையே வாழவியல் அறிவு என்று நினைத்து விடுகின்றோம். இவை தொடர்பான செயல்களே வாழ்க்கைச் செயல்களாகவும் கொள்ளப்படுகின்றன.

இன்றைய கல்வி இளைஞர்களை இப்படிப் பொருளீட்டும் இயந்திரங்களாக ஆக்கியிருப்பதைத் தவிர அவர்கட்கு வேறு எத்தகைய சுவையான வாழ்க்கையை வழங்கியிருக்கின்றது ? ..............

நற்றமிழ் - ஆடவை 15
தமிழனுக்குத் தமிழ் உணர்வு ஏற்றுக

முனைவர் ச.சீ. இராசகோபாலன்

தலைப்பே ஒரு நெருடலாக இருக்கிறதோ ! ஆனால் அதுவே இன்றைய தமிழகத் தமிழனுக்குத் தலையாய தேவை.

விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் தாய்மொழிக் கல்விக்காக வாதிட வேண்டியுள்ளது என்றால் அது ஒரு வெட்கக்கேடு என்றே கருதலாம். உலகம் தழுவி அனைத்து நாடுகளிலும் தாய்மொழியே பயிற்றுமொழியாக இருப்பதாலேயே அந்நாடுகளில் பொரும்பாலோர் எழுத்தறிவு பெற்றவர்களாக இருப்பது மட்டுமன்றி, சிந்தனையாற்றல் மிக்கவர்களாக மக்கள் திகழ்கின்றனர்.

அய்க்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமை சாசனமும், தாய்மொழி வழிக் கற்றலையே குழந்தைகளின் உரிமையெனப் பறை சாற்றுகின்றது. நம் நாட்டுப் பாராளுமன்றம் இயற்றிய தேசியக் கல்விக் கொள்கையும், அதனை நடைமுறைப்படுத்த ஆக்கப்பட்டுள்ள தேசிய பள்ளிக் கல்விக் கலைத்திட்ட வரைவும் தாய்மொழி வழியிலேயே கற்பிப்பதை முன்னிறுத்துகின்றன.

இவற்றையெல்லாம் சிறிதும் கருத்தில் கொள்ளாது தமிழ்நாட்டில், தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலவழிக் கல்வி பட்டி தொடியெல்லாம் பரவிவிடுதல் தமிழ்ப் பற்றின்மையையே காட்டுகின்றது. இதனால் ஏற்படுகின்ற பாகுபாட்டால் எளிய மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப் பெறாமல் போகும் நிலையிலும், அவர்கள் வெகுண்டெழாதது நம் தமிழகத்தில் மட்டுமே நிகழும். தமிழுணர்வு இல்லாமையாலேயே சிதம்பரத்தில் தேவாரம் இசைக்க மறுக்கப்பட்ட போது நாடு தழுவிய அளவில் அனைத்துத் தமிழரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மூடநம்பிக்கைள். சடங்குகள். ஆகியவற்றில் சிக்கிச் சொந்த அறிவை இழந்தது மட்டுமின்றி. மொழிப்பற்றும் இல்லாதவராக இன்று தமிழர்கள் ஆக்கப்பட்டது வெட்கக்கேடு. சிந்தனைகள் வழி நின்று அவர்களை விடுவித்து வங்காளிகள், மராத்தியர், ஏன் கன்னடர் போல் மொழி உணர்வு மிக்கவர்களாக உருவாக்கும் நாள்தான் உண்மையான விடுதலை நாள் எனலாம்,,,,,,,,,,,,,,,

சிந்தனையாளன் சூன் 2008
கானல் நீராகும் சமச்சீர்க் கல்வி

- இரா, சிவக்குமார்

வெல்லப்போவது யார்? ஆதிக்க சக்திகளா? அரசியல் உறுதியா?

கல்வி முறையில் ஏற்றத் தாழ்வுகளைப் போக்குவதற்காக உருவாக்கப்பட்ட சமச்சீர்க்கல்வி முறை இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்படாது என்பது உறுதியாகிவிட்டது. அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லாததே சமச்சீர்க் கல்விமுறை தாமதமாவதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

பணமுதலைகளிடமும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடமும் - கல்வித்தாய் - சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறாள். மாநிலக் கல்வி வாரியம், பதின்நிலைப் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஓஎசுஎசஎல்சி. எனப் பலக் கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது இன்றைய கல்வி முறை. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கோட்பாடுதான் சமச்சீர்க்கல்வி.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமச்சீர்க்கல்வி உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது.

சமச்சீர்க் கல்விக்குச் செயல் வடிவம் கொடுப்பது தொடர்பாகத் தமிழக அரசு 8-9-2006 இல் குழு ஒன்றை அமைத்தது.

இக்குழு அதன் அறிக்கையை தமிழக அரசிடம் 2007 சூலைமாதம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வறிக்கையை ஆய்வு செய்ய இ.ஆ.ப. அதிகாரி விசயகுமார் தலைமையில் ஒரு நபர் ழுழு அமைக்கப்பட்டது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர்க்கல்வி இந்த ஆண்டும் நடைமுறைக்கு வரவில்லை,

சமச்சீர்க் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்று கல்வி வணிகர்கள் அஞ்சுகிறார்கள்.

நன்றி பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் இதழ் சூன் 2008


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061