வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 - 08 - 2008


...பட்டங்களால் வளருமோ பைந்தமிழ்...

பட்டங்கள் தந்தால் வளருமோ
பைந்தமிழ்? பாராட்டி வான்
எட்டும் சிலைகள் எடுத்தால்
வளருமோ? ஏத்தி மகிழ்
மட்டிகட் கீயும் பரிசால்
வளருமோ? மைந்தர் கட்குக்
கட்டாய மாக்கினால் அன்றோ
வளர்ந்திடும் கல்வியிலே ?

இல்லாப் புலவர் பெயராலே
இன்றைக் கிருப்பவர்க்குச்
செல்வம் வழங்குவ தால்,மொழி
ஆயும் செயலதனைக்
கலலார்க் களிப்பதால் வாழுமோ ?
தாய்த் தமிழ்க் கல்விதனை
எல்லார்க்கும் ஈவதால் மட்டுமே
வாழும் இருந்தமிழே

இரா. திருமுருகனார்

நன்றி : தெளிதமிழ் கடகம் இதழ்
....செய்திகள் எண்ணங்கள்....

இலவசக் கல்வி, மாநில, மத்திய அரசுகளுக்கு நோட்டீசு !

வாய்ஸ் கன்ஸ்யூமர் கவுன்சில் சார்பில் சென்னை ஐகோர்டில், 14 வயது உடைய குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வி அமல்படுத்தவும், கல்விக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கவும் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அளிக்கவும், இலவசக் கல்வியை அளிக்கவும் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது, ஆனால் சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளானாலும் இந்தியாவில் எந்த ஒரு மாநில் அரசும் இதை நடைமுறைப் படுத்தாமல் போனாலும் இதைப் பற்றிப் பேசுவதுகூட கிடையாது.

இலவச, கட்டாயக் கல்வியானது அடிப்படை உரிமை என்பதால் இதைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அடிப்படை உரிமைகளை புறக்கணிக்கக் கூடாது.

உண்மையில் சட்டத்திற்க விரோதமாகவே இதுவரையிலும் கல்விக் கட்டணம் அதுவும் கட்டுப்பாடு இல்லாமல் பள்ளி நிர்வாகங்கள் பெறுகின்றன.

எனவே 14 வயது வரையிலான குழந்தைகள் படிப்பதற்குக் கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும். அவர்களுக்கு இலவச கட்டாயக் கல்வியை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : திராவிட ராணி - ஆகஸ்ட் இதழ் 2008
...பெட்ரோலுக்கான உரைவீச்சுகள்...

தானம்

உடலில் ஓடும்
குருதிக்கு
தருகிறார்கள்
குருதி தானம்..

யாரும் தருவார்களா
என்
வண்டிக்கு
பெட்ரோல் தானம்

மா. திருவாசகம், கோலாலம்பூர்

ஏற்றம்

காய்கறி விலை
ஏற்றம்
வீட்டில் வளர்த்தோம்
அரிசி விலை ஏற்றம்
ரொட்டிகள்
சாப்பிடத் தொடங்கினோம்
பெட்ரோல் விலை ஏற்றம்
எங்கே போய் வளர்ப்பது

த.கலைவாணி. தெலுக் இந்தான்

போராட்டம்

எங்களுக்கு உணவில்லை
போராட்டம்
நடத்துகிறோம்
எங்கள் வண்டிக்கு
உணவில்லை
வண்டிகள் நடத்துமா
போராட்டம்.

தேன்மொழி செனாவாங் நெகிரி செம்பிலான்

வாழ்க்கைத் தரம்

உலகச் சந்தையில்
பெட்ரோல்
விலை ஏற்றம்..
என்று
ஏறும் உலகச்
சந்தையில்
எங்கள் வாழ்க்கைத் தரம்.. ?

சிவா, பெட்டாலிங் ஜெயா

வண்டிக்காக

நேற்றுக்
குடும்பத்திற்காக
உழைத்தோம்...
இன்றும்
கூடுதலாக உழைக்கின்றோம்..
எங்கள் வண்டிகளின்
பெட்ரோலுக்காக

மணிமேகலை, கூலிம்

வயிறுகள்

எங்களது
வண்டிகளின்
பெட்ரோலுக்காக
அடிக்கடி நீரால் மட்டும்
நிரப்பிக் கொள்கிறோம்
எங்களின் வயிறுகளை...

சிவமணி, கோத்தா தீங்கி

பெட்ரோல்

ஒருமுறை
தனக்கென வாகனம்
வாங்க
நினைக்கிறவன்
கண்டிப்பாக நினைத்துப்
பார்க்க வேண்டும்
அதற்காக ஒவ்வொரு முறையும்
பெட்ரோல்
வாங்குவதை...

வாசுகி, சுபாங் ஜெயா

நன்றி : செம்பருத்தி இதழ் - அகஸ்ட் இதழ் 2008
...நெருப்பாய்ச் சுடு...

கிடை ஆடுகளாய்
வந்தார்கள்
மார்வாடிகள், மலையாளிகள்
கடைபோட்டு
மேய்கிறார்கள்.. தமிழ்நாட்டில்

ஒரு மொழி
பேசுகிறவனுக்கு
ஒரு நாடு
அவனவன் மொழி பேசுகிறவன்
அவனவன் நாட்டில்
நாங்கள்
தமிழைப் பேசுகிறோம் - ஆனால்
எந்த நாட்டில் வாழ்கிறோமென்றே
தெரியவில்லை

இல்லாத இந்தியாவில்
இந்தியனாக
செலலாத திராவிடத்தில்
திராவிடனாக வாழ்கிறோம்
எங்கள் நாட்டில்
தமிழர்கள்
இருக்கிறார்களோ
இல்லையோ
குழப்பவாதிகள்
கோடிக்கணக்கில் பிறக்கிறார்கள்

தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்தார்கள்
அவர்கள்
பிழைத்துக் கொண்டார்கள்
தமிழைத்
தண்டவாளத்திலேயே நிறுத்திவிட்டு

ஆங்கிலப் பள்ளிக்கு வெளியே
தமிழ் முட்டிக்கால் போட்டு
தண்டம் கட்டுகிறது
தமிழ் நாட்டில்
தாய் மொழிக்குத் தண்டனை
தேன் வந்து பாய்ந்த காதில்
இரத்தம்
வேற்று மொழி நெரிசலில்
தமிழ் விழி பிதுங்கும் அவலம்

நிறத்தை இழந்து
நிலத்தை இழந்து
சொந்த மண்ணில் வாழாதே
உரிமை பறிக்கும் கயவர்களை
ஏறிமிதி
எதிரியை
நெருப்பாய் சுடு

நன்றி : புதிய தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்டு இதழ்
...மாண்டுதானே கிடக்கிறோம் தினமும்...

இரா. நவமணி

மீனுக்கு
புழு உணவு
மீன்
மனிதனுக்கு உணவு
மனிதன் ?

யார் சிந்திய
கண்ணீர்
கடலில்
இவ்வளவு தண்ணீர் ?

மீன் பிடிக்கப்
போனவர்களெல்லாம்
கண்ணீரோடுதான்
கரை சேருகிறார்களா ?

துப்பாக்கிகளுக்கு
நடுவே
தூண்டிலில் தொங்கும்
மீன் போல வாழ்க்கை

பாதுகாப்பு
என்ற பேரில்
பறிமுதல்கள்
கடலுக்குள்

விலைவாசி
என்ற பேரில்
மடியை அவிழ்ப்பு
கரையில்

கடலுக்குள் போய்
மீண்டு வந்தாலும்
கரையில்
மாண்டுதானே
கிடக்கிறோம்
தினமும்

நன்றி - கடலார் - ஆகஸ்டு இதழ் 2008

...முத்துமாரியே...

தமிழேந்தி

ஆடிமாசம் பொறந்தாச்சு முத்துமாரியே - உனக்கு
ஆடுகோழி படைப்போண்டி முத்து மாரியே
பாடுபட்டோர் பலநாளா முத்துமாரியே - அதுக்குப்
பலனை ஒண்ணும் காணலியே முத்துமாரியே.

முண்டகண்ணி காளியாத்தா எத்தனைபேரு - உனக்கு
முக்குசந்து பாக்கியில்லே எத்தனை வூடு
சண்ட போட்டு ரெக்கார்ட்டேன்சு சீரிய்ல் லைட்டு - பெருசா
சவுண்டுபாக்சு வச்சிருக்கோம் பட்டைய கிளப்பு.

பாழப்போன பட்டையத்தான் விட்டு தொலைச்சோம் - புதுசா
பாரின்சரக்க உள்ளஎறக்கி மப்புள தெளச்சோம்
கூழுதண்ணிய எத்தனநாள் குடிப்படி தாயே - இந்தா
கொத்துக்கறி சிக்கன்பீசு வெளுத்திடு நீயே.

எல்லையம்மா இதுவரைக்கும் காவல்காத்தியே - இப்போ
எவனெவனோ நுழைஞ்சுபுட்டான் கண்டு கிடலியே
தில்லிக்காரன் இங்குதின்னு தீர்த்தது கொஞ்சம் - இப்போ
தேசங்கடந்து வராரானுக வந்தது பஞ்சம்.

வேப்பிலையை உனக்குக்கட்டி வேடிக்கை பார்த்தோம் - அதையும்
வெளிநாட்டான் புடுங்குறானே எங்கடி கேட்போம்
பேட்டன்ரைட்டு வாங்கிட்டோண்ணு பீத்தறானங்கோ - அய்யய்யோ
பீயைக்கூட சென்ட் அடிச்சு மாத்த றானுங்கோ.

மஞ்சள்அப்பி பச்சையம்மா கொஞ்ச முடியுமா - அதுக்கும்
மதிப்புப் போட்டு வித்துட்டானே பொழுது விடியுமா ?
நெஞ்சில் ஈரம் இல்லையேடி எதுக்கடி நீங்க - எங்க
நெலத்தையெல்லாம் புடுங்குறாங்க தெருவுல நாங்க

கோயில்குளம் எங்கயுமே குண்டு வெடிக்குது - உன்
கோபுரத்த பாரு நாயும் மோப்பம் புடிக்குது
தாயி உனக்கு இத்தனையும் தெரிஞ்சு நடக்குதா - உன்
சக்திஎன்ன பஞ்சராகிப் பொசுங்கிக் கெடக்குதா.

எத்தனையோ ஆடிவந்தும் நிலைமைமாறலே - எங்க
ஏழைமக்க வாழ்க்கையிலே துன்பம் தீரலே
முத்துமாரி.. பாட்டுச்சத்தம் காதைக் கிழிக்குது - அடி
முண்டக்கண்ணி.. எங்கசனம் உன்னைப் பழிக்குது.

நன்றி : சிந்தனையாளன் - ஆகஸ்ட் இதழ் 2008
...பெண்மை அல்ல திண்மை...

- சி. விநாயகமூர்த்தி -

பெண்மையென்றால்
மென்மை மட்டுமே என்பது பொய்யுரை

அடுப்படியில் விறகாய் வெந்து
இடுப்பொடிய குடங்கள் சுமந்து
சித்தாளு வேலையில்
ஏழாம் மாடி ஏறி இறங்கி
தலைவலிக்க கருங்கல் சுமக்கும்
தேக்கு போன்ற தேகம்
மென்மை தானா ?

உயிர் வாதையில் துடிதுடித்து
உதிரம் வடித்து
செத்துப் பிறப்பது போல்
பிரசவிக்கும் பெண்தேகம்
மென்மையென்பதில்
உண்மையே இல்லை.

காலங்காலமாய் பெண்ணின் சொத்து
கற்பென்பார்
கற்பென்பது திண்மையென்று
திருக்குறள் விளக்கும்

யாதுமாகி நிற்கும் மகா சக்தியைப்
பெண்ணென்பார் பாரதியார்
மகா சக்தியை வெளிப்படுத்தி
மதுரையை எரித்தாளாம் ஒருத்தி.

காலனை வென்றதாய்
கதிரவன் உதயம் நிறுத்தியதாம்
புனைந்த புராணங்களும்
பெண்மை திண்மையென்று தான்
வன்மையாய் வலியுறுத்தும்.

புறநானூற்றைப் புரட்டிப் பாருங்கள்
புலி வாழ்ந்த குகையாய்
ஈன்ற வயிறு இங்குண்டென்பாள் ஒருத்தி.

தந்தையும் தலைவனும்
களத்தில் மாய
பால குமாரனையும் படைக்கனுப்பினாள்
வேறொருத்தி
வாளேந்திய வேலுநாச்சி வரை
வரலாறு படைத்த வீராங்கணைகள் ஏராளம்

பாப்பாவைக் கூப்பிடு
பாரதி போதித்தது மென்மையல்ல
பாதகம் செய்பவரை
மோதி மிதித்துவிட, முகத்தில் உமிழ்ந்துவிட
அக்கினிக் குஞ்சு அறிவுறுத்தினான்.

பொம்மையாய் பெண்மையை முடக்கவே
பெண்மை மென்மையென்று
இனிக்கும் நஞ்சை ஊட்டுவார்..

செம்புலப் பெயல்நீர் போல்
சேரும் காதலில் மென்மையும்
சிறுமை கண்டால் வன்மையும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவே...

நன்றி : புதிய பெண்ணியம் இதழ் 2008
...காலம் ...

கவிஞர் கஸ்தூரிநாதன் - குழிபிறை

பிள்ளையாய் பிறந்த காலம்
பிறகுநான் தவழ்ந்த காலம்
துள்ளியே திரிந்த காலம்
பள்ளியில் படித்த காலம்
பாவையை பிடித்த காலம்
வெள்ளமாய் திரண்ட காலம்
வீணான கெட்ட காலம்

காதலில் கொஞ்ச காலம்
காமததில் கொஞ்ச காலம்
நோதலில் கொஞ்ச காலம்
நோய்தனில் கொஞ்ச காலம்
வேதனை கொஞ்ச காலம்
வீணுக்கு கொஞ்ச காலம்
ஆதலால் வாழ்ந்த காலம்
அனைத்தும் கெட்ட காலம்

கனவிற் மிதந்த காலம்
கற்பனையில் பறந்த காலம்
தினமும் நான் நடந்த காலம்
திகைத்து நான் கிடந்த காலம்
மனதுக்குள் அழுத காலம்
மற்றவர்கள் வதைத்த காலம்
நினைவுகள் குறைந்த காலம்
நினைத்திட்டால் கெட்ட காலம்

பகையினை வளர்த்த காலம்
பாதை நான் தொலைத்த காலம்
வகையின்றி உழன்ற காலம்
வாழ்வெலாம் சூழன்ற காலம்
தகையிலா இந்தக் காலம்
தாரகை உதிர்த்த காலம்
சிகையென கொல்லும் காலம்
முடியட்டும் எனது காலம்

நன்றி : இனிய நந்தவனம் இதழ் 2008
...எண்ணிப் பார்ப்பீர் ...

பாவலர் கருமலைத் தமிழாழன்

நாட்டையாளும் கட்சிகளும் குண்ட ரோடு
நட்புக்கொண்டே ஆட்சியினை நடத்து கின்றார்
ஆட்சியினை எதிர்க்கின்ற கட்சி யிங்கே
அவர்போல தாதாக்கள் கரங்கள் கோர்த்தார்
மாட்சியுடன் இருந்தகாவல் துறையும் தீயோர்
மடிதாங்கம் அடியாளாய் ஆன தின்று
சாட்சியுடன் வன்முறைகள் நீதிமன்றில்
சட்டத்தைச் சாய்க்கிறது கேட்பா ரில்லை.

வன்முறைகள் எவ்வாறு செய்வ தென்று
வழிகாட்டும் திரைப்படங்கள் குற்றம் செய்தும்
இன்றுள்ள சட்டத்தில் சிக்கி டாமல்
இருப்பதற்கே வழிகூறும் சின்னத் திரைகள்
பெண்கொலைகள் கடத்தல்கள் செய்வோர் தம்மைப்
பெருந்தலைவர் போலுயர்த்தும் செய்தித் தாள்கள்
பண்பாட்டைச் சீரழிக்கும் ஊட கங்கள்
பார்த்திருந்தும் கோழையராய் முடங்கும் மக்கள்

வேடிக்கை பார்ப்பதிலே ஆர்வம் காட்டி
வெற்றுச்சொல் வீரராக இருக்கும் மக்கள்
வாடிக்கை இதுயெவன்றே சிந்தை கொண்டு
வாய்மூடீ உமையராய் இருக்கும் மக்கள்
பேடிகளாய் எதிர்த்தொருசொல் பேசுதற்கும்
பெருமச்சச் சூழலுக்குள் இருக்கும் மக்கள்
கூடியொன்றாய் எழுந்துவிட்டால் நாட்டிற் குள்ளே
குற்றங்கள் நடந்திடுமோ எண்ணிப் பார்ப்பீர்

நன்றி : கவிதை உறவு - ஆகஸ்ட் இதழ் 2008
...கவிதையும் நானும்...

- சேதுபதி -
காலை உலாவலில்
கவிதை சொன்னது
நீ என்னைச் செய்கிறாய்
நான் உன்னைச் செய்கிறேன்
இருவர் செயலில்
சிறப்பவர் யாராம்,

சந்தேகமில்லை
நான்தான்

நான் என்றால்
நான் தான்

நீ
என்னில் இருந்து

பிறந்த கவிதை
அதனால்
உன்னைப் பெற்ற
என்னை விடவும்
சிறப்பது நான்தான்
எப்படி,

உன் மொழிச் சிறைக்குள்
முடங்கிக் கிடக்காது
என்வானம்
வெளியில் வா

இறுகிக் கிடந்த
இலக்கணக் கதவைப்
படீரென உடைத்து
வெளி உண்டாக்கிய
கவிதை சொன்னது

நான் என்பதே
பன்மைதான்
தோழனே...

அறிஞர்கள் கூடி
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
கவிதைக் கழகு
பொய் எனல் மெய்யே
பொய் எனல் பொய்யே
நேரம்
ஆக ஆக
பொய்யும் மெய்யும்
கட்டிப் புரண்டு
அடித்துக் கடித்துப்
பிறாண்டிப் போட்ட
கூச்சலில்
கும்பல் குவிந்தது.

முண்டியடித்து உள்ளே புகுந்து
எட்டிப் பார்த்தால்
கவிதையைக் காணோம்
விட்டு விலகிக் களைத்து
ஓர் மரத்தடி நிழலில் ஒதுங்கிச்
சற்றே கண்மூடத்
தென்றலாய்த் தீண்டி
சிரித்தது
கவிதை

நன்றி: தொடரும் இதழ் 2008
...என்றுவருந் தமிழொன்றே ஆளும் நாளே...

- மருதநாடன் -
ஆங்கிலத்தைக் கலந்தொருவன் பேசக் கண்டால்
அவன்கழுத்தை நெரிப்பதற்கென் கைகள் நீளும்
ஈங்கிவரைத் தமிழ்த்தாயா பெற்றுப் போட்டாள்?
ஏனயலான் மொழியினியும் நமக்கு வேண்டும் ?
தாங்குகின்றார் ஆங்கிலத்தை ஆட்சியாளர்
தாய்மொழியைப் புறக்கணித்தல் நன்றோ பாரில்
யாங்கணுளர் தமிழரைப்போல் மொழியி ழந்தோர்
என்றுவருந் தமிழொன்றே ஆளும் நாளே..?

இந்தியினைப் பேசுபவர் தமிழ ரொத்த
இனந்தானே அவன் தமிழைப் படிக்கின்றானா ?
இந்தியினும் தமிழ் சிறந்த மொழியா மன்றோ
ஏன்தமிழிங் காட்சிமொழி யாக வில்லை
எந்தவொரு தகுதியினால் இந்தி மட்டும்
இந்நாட்டு மொழியென்று சட்டஞ் செய்தார்
அந்தவொரு தகுதிதமிழ்க் கிலையென்பாரேல்
அந்நாட்டில் நாமிணைந்தே இருக்கலாமோ,

நன்றி : தேமதுரத் தமிழோசை இதழ் 2008
...யாழன் ஆதி கவிதைகள்...

மல்லிகைப்பூ கொல்லையில்
அஞ்சு பத்து ஆடி ஓய்ந்த நேரத்தில்
அந்தியில் மலர்ந்திருக்கும்
மல்லிகைகளைப் பறிப்போம்
சட்டைப் பையில் நிரப்பிய
கர்வத்தோடு
வீடேறுகையில்
வாசலில்
பூஞ்செடிக் குச்சியோடு அம்மா


இன்னும் தேடுகிறேன்
என்னைச் சுற்றியிருந்த
மாணிக்கம் பெரியப்பா
முனிரத்தினம் சித்தப்பா
லேசாய் முதுகு வளைந்த
சுப்புரப்பா
கோல் விளையாடி கையொடிந்த
வெங்கடேசன்
அதனால் ஓடிப்போன
பாண்டியன்
எவரெவரோ யெததனைப் பேரோ
எல்லார் வாழ்க்கைகளையும்
நான் தொலைத்த
என் வாழ்க்கையையும்.


கெண்டைக்கால் தசைகள்
மேலேறி கல்லாய் நிற்க
தொடை தசைக் கட்டுகள்
பிளவுப்பட்டுத் தெரிய
கபாடி விளையாடுவார்கள் அண்ணன்கள்
எப்படியாவது பிடித்துவிட தோணும்
பட்டையைப் போய் அவர் தொடுவதற்குள்
என் சின்ன கைகளால்

நன்றி : விழிப்புணர்வு - ஆகஸ்ட் இதழ் 2008

...உயிர் எழுத்து...

- யாழன் ஆதி -
ஒற்ைக் கண்ணீர்த் துளியென
இரவின் மீதொரு துயரம்

உயர்ந்த கம்பங்களில்
தெறிக்கின்றது வெளிச்சம்

தார்ச்சாலையின் நீண்ட தனிமையில்
கொதிக்கிறது துயில்

இருளடைந்த வயிற்றுக்குள்
நிரம்பியிருக்கின்றன கைகள்.

நூலறுந்த பகல் பட்டம் சிக்கிய
இரவின் துன்ப வனத்தில்
எழும்புகிறது பாடக் கனவு.

கால்மடக்கி உடல் குறுக்கி
தலை தொங்கி காலத்தின் கைகளில்
பதுங்குகிறது உழைப்புத் தளிர்

இரக்கமற்ற சுரண்டலின்
குன்றாத வெப்பத்தில்
கனறுகிறது துரத்தப்பட்ட சுவாசக்காற்று

உழைத்துப் பசித்த அயர்வில்
தளும்பி நிற்கிறது
சாத்திய இமைகளோடு உயிர் எழுத்து

வெட்கமேயில்லாமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு
மல்லாந்து தூங்குகிறது தேசம்.

நன்றி : தலித் முரசு இதழ் 2008


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061