நமக்கான பாடத்தை நாமே உருவாக்குவோம்
நம் மழலையர்களை ஆற்றலுள்ளவர்களாக வளர்த்தெடுப்போம்


தமிழம் வலை - வெளிநாட்டுத் தமிழர்களுக்கான தமிழ் கற்றல்
5 ஆண்டுகளுக்கான பாடத்திட்டம்.

நிலை 1

அ) எழுத்து அறிமுகம் : அனைத்து எழுத்துகளையும் எழுத, படிக்க, செய்தித்தாளில் வட்டமிட, பயிற்சி அளித்தல்.
ஆ) இணைத்துப் படித்தல் : இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்க, சொற்களைப் படிக்க, தொடர்களைப் படிக்கப் பயிற்சி.
இ) வட்டமிடுதல் : 25 ஆவது அட்டை வரை ( ஐ வரிசை வரை ) செய்தித்தாளில் கற்ற எழுத்துகளை வட்டமிடும் பயிற்சி அளித்தல்.
ஈ) படித்தல் : பிறகு செய்தித்தாளில் உள்ள சொற்களைப் படிக்கும் பயிற்சி, பிறகு தொடர்களைப் படிக்கும் பயிற்சி தருதல்.

நிலை 1 இன் நிறைவில் மாணவர்களுக்குச் செய்தித்தாளைப் படிக்கத் தெரியும்.

நிலை 1 = 32 வாரங்கள் ( ஓராண்டு காலத்திற்குள் இந்தப் பயிற்சி நிறைவு செய்யப்படும் )

நிலை 2

அ) இலக்கணப் பயிற்சிப் புத்தகம், இதழ்கள், நூல்கள், இணைப்புப் பக்கங்கள் வழியாகச் சொற்களஞ்சியம் பெருக்குதல், தெளி தமிழ்ச் சொற்களை அறிய வைத்தல், சூழலுக்கு ஏற்றவாறு வினாக்கேட்டு விடையளிக்கப் பயிற்சி தருதல். பேச அறிமுகம் செய்தல்.

ஆ) படித்த குறிப்புகளைப் புரிந்து கொள்ளுதல், அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல். குறிப்புகளைச் சுருக்கிச் சொந்தமாக எழுதப் பயிற்றுவித்தல். எளிய சொற்றொடர்களை எழுத, தான் பார்த்தவை பற்றிய குறிப்புகளை எழுத. தான் கண்ட நிகழ்வுகளைச் சிறுகதையாக எழுத ஊக்குவித்தல், எழுதிய குறிப்புகளையும் சிறுகதைகளையும் வகுப்பறையில் படிக்கச் செய்தல், சிறுகதைகளை குரல் ஏற்ற இறக்கத்துடன் படிக்க அறிமுகம் செய்தல். இயலுமானால் அதை நிகழ்த்தியும் காட்டலாம்.

இ) தான் பார்த்த பறவைகள், விலங்குகள், பொருள்கள், நிகழ்வுகள் பற்றிக் குறிப்புகள் எழுதுதல், குறிப்புகளை எளிய கவிதை வடிவில், அல்லது இசையோடு பாடுகிற பா வடிவில் எழுதப் பயிற்சி தருதல்.

ஈ) தான் பார்த்த பறவைகள், விலங்குகள், பொருள்கள், நிகழ்வுகள் பற்றி குறிப்புகள் எழுதி, வகுப்பறை மேடையில் நின்று கொண்டு பேசுதல், பாடுதல். கையெழுத்து ஏடு நடத்தில் அதில் படைப்பாக்கங்களைப் பதிவு செய்தல்.

நிலை 2 இன் நிறைவில் மாணவர்களுக்குப் படித்ததை புரிந்து கொள்ளவும், தான் பார்த்த, கேட்டவற்றைச் சொந்தமாக எழுதவும், எழுதியதை மேடையில் பேசவும் தெரியும்.

நிலை 2 = 64 வாரங்கள் ( நிலை 2 முதலாண்டு, நிலை 2 இரண்டாமாண்டு என்று இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் )

நிலை 3

நிலை இரண்டில் குறிப்புகள், சிறுகதைகள், பாக்கள் என்பவை எளிமையாகவும், குறைந்த வரிகளைக் கொண்டதாகவும் இருக்கும். நிலை 3 இல் இவை நுட்பமாகவும், ஆழமாகவும் இருக்கும்

அ) தரமான கட்டுரைகள், மரபுப்பாடல்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற நூல்களைக் கொடுத்து அவற்றைப் படித்துப் புரிந்து அதில் உள்ள நுட்பங்களையும் சிறப்புகளையும் பகிர்ந்து கொள்ளுதல்.

ஆ) மரபுப் பாடல்களுக்கான எளிய இலக்கண அமைப்பை விளக்கி அது போல எழுதப் பயிற்றுவித்தல்.

இ) சங்க இலக்கியப் பாடல்களைக் கொடுத்து அதில் உள்ள நுட்பங்களை அறியச் செய்தல்.

ஈ) கதை, கவிதை, துணுக்கு, கட்டுரை, போன்ற படைப்பாக்கங்களை எழுத ஊக்குவித்து, அவற்றை மாணவர்களே நடத்துகிற கையெழுத்து இதழில் பதிவு செய்து சுற்றுக்கு விடுதல்.

உ) ஒவ்வொரு வாரமும் தரம் வாய்ந்த ஒரு தலைப்பில் பேசவும், அதில் உள்ள குறை நிறைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தல்.

நிலை 3 இன் நிறைவில் மாணவர்கள் தரமான சிறுகதைகள், பாக்கள், கட்டுரைகள் போன்ற படைப்பாக்கங்களை எழுதவும், அதன் தொடர்பாக மேடையில் ஏறிப் பேசவும் தெரியும். .

நிலை 3 = 64 வாரங்கள் ( நிலை 3 முதலாண்டு, நிலை 3 இரண்டாமாண்டு என்று இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் )

ஒவ்வொரு நிலைக்கும் அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தரப்படும்.
வெற்றி என்பது தேர்வுகளின் அடிப்படையில் அல்ல.
வெற்றி என்பது அந்த நிலைக்கான அடைவுகளை அடைந்திருத்தலே அடிப்படையாகக் கருதப்படும்.
அடைவுகளைக் குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே ஒரு மாணவர் வெற்றிகரமாக நிறைவு செய்தார் என்றார் அவருக்குச் சான்றிதழ் முன்னதாகவே வழங்கப்படும்.
எங்கள் நோக்கம் ஆண்டுகளைக் கடத்துவது என்பதல்ல. அடைவுகளை நிறைவாக அடைவது என்பதே ஆகும்.
தமிழைக் கற்றுணர்ந்து தமிழர்களாக மேலெழ அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

உலகிலுள்ள நம் தமிழ் மழலையர்கள் தமிழைத் தெளிவாக் கற்று, தமிழுணர்வோடு நிமிர்ந்த தமிழராக மேலெழ வழி அமைப்போம்.
தொடர்புக்கு : http://www.thamizham.net - thamizhamnasan@hotmail.com, pollachinasan@gmail.com - 9788552061, skype ID : pollachinasan1951