கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 53

எது பிழை? எது சரி ?

1. கிருட்டிணன் - கிருட்டினன்

கிருஷ்ணன் என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் கிருட்டினன் என்று எழுதுவதே மரபு. கர்ணன் என்பது தமிழில் கன்னன் என்றே வரும். க்ருஷ்ணவேணி என்பது கிருட்ணவேணி என்று எழுதப்படும்.

2. சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே

சுவர் + இல் = சுவரில் - சுவரில் எழுதாதே என்பதே சரியான தொடர். சுவற்றில் என்று எழுதினால் வரண்டு போன இடத்தில் என்பது பொருளாகும்.

3. ஒரு ஆடு - ஓர் ஆடு

ஒன்று என்பது ஒரு எனத் திரிந்துள்ளது. ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்று எழுதுவதே வழாநிலையாம்.

4. ஓர் அரசன் - அரசன் ஒருவன்

ஒரு என்ற சொல் உயிரெழுத்துகளுக்கு முன்னும், யகர ஆகாரத்தின் முன்னும் ஓர் என்று ஆகும் என மேலே கண்டோம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது தவறு. அரசன் ஒருவன் என்று எழுதுவதே சரியாகும். இதுபோலவே அரசர் பலர் என்று வரும்.

5. கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது

கடை அருகில் இருக்கிறது என்பதே சரி.

6. பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்

முயற்சித்தல் என்ற வினைச் சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுவதே சரியாகும்.

7. அலமேல் மங்கை - அலர் மேல் மங்கை

அலர் மேல் மங்கை என்பதே சரியாகும். அலர் என்றால் பூ. பூவின்மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை.

8. நாட்கள் - நாள்கள்

கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள் ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள் என்றே எழுதுக.

9. எந்தன் - என்றன்

என்றன் என்பதே சரி. என் தன் என்றன் என்றே வரும் ( என்- ஒருமை, தன்- ஒருமை) (எம் - பன்மை, தம் - பன்மை) எம் தம் எந்தம் என்றே வரும் ( எம் - பன்மை, தன் - ஒருமை - எந்தன்) இது தவறான புணர்ச்சியாகும்.

10. சாற்றுக்கவி - சாற்றுகவி

சாற்றுக்கவி என்று "க்" மிகுந்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால், சாற்றுக்கவி என்பது வினைத்தொகையாகும். வினைத் தொகையின் முன் வல்லினம் மிகா.

11. வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்

வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது. அதுபோலப் புல், நீர், தாகம் ஆகியவற்றுக்கும் பன்மை கிடையாது. ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும். ஆடு புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு. பல ஆறுகளின் நீர்க் குடித்தேன் என்பதே சரி. நண்பர்களின் தாகங்களை நீக்கினேன் என்பது தவறாகும். நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

12. மனதை - மனத்தை

மனம் ஐ மனத்தை என்றே வரும். பணம் ஐ பணத்தை என்றே வரும். பணதை என்று வருமா? தனம், வனம், சினம், கனம், இனம், பிணம் ஆகிய சொற்களுடன் ஐ சேரத் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும்.

13. திருநிறைச் செல்வன் - திருநிறை செல்வன்

திருநிறைச் செல்வன் என்று வல்லினம் மிகுந்து வருதல் தவறாகும். திருநிறை செல்வன் என்பது வினைத்தொகை. வினைத் தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறை செல்வன், திருவளர் செல்வி, திருவளர் செல்வன் என்று வல்லினம் மிகாமல் எழுதுக.

14. புள்ளாங்குழல் - புல்லாங்குழல்

புள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் என்று பொருள். எனவே மூங்கில் குழாயிலிருந்து உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை)

15. கலை கழகம் - கலைக்கழகம்

கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருள்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுந்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருள்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

16. பெறும் புலவர் - பெரும் புலவர்

பெறும் புலவர் என்றால் பரிசைப் பெருகின்ற புலவர் எனப் பொருள்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள்ள பெரிய புலவர் எனப் பெருளாகும். எனவே செயலறிந்து எழுதுக.

17. தந்த பலகை - தந்தப் பலகை

தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருள்படும். தந்தப்பலகை என்று வல்லினம் மிகுந்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருள்படும். எனவே இடமறிந்து எழுதுக.

18. செடி கொடி - செடிக்கொடி

செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருள்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுந்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருள்வரும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.

19. நடுக்கல் - நடுகல்

திருக்குறள், முழுப்பழக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிற சொற்களைப் போல நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம், ஆனால் நடுகல் என்பது வினைத் தொகையாக இருப்பதால் (நட்டகல், நடும்கல், நடுகின்ற கல்) வினைத்தொகையில் வல்லினம் மிகா.

20. காவேரி - காவிரி

காவிரி என்ற சொல்லிலிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது, வளர்ப்பது என்னும் பொருள் உண்டு. (கா - சோலை) காவிரிப்பூம்பட்டினம், காவிரிநாடன் என எழுதுவதே சிறப்பாகும்.

21. வேலைக் கொடு - வேலை கொடு

வேலைக் கொடு என்றால் கூரிய ஆயுதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். வேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலையைக் கொடு என்ற பொருள் தரும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

22. எத்தனை - எவ்வளவு

இச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்ணைக் குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்? எவ்வளவு துணி வாங்கினாய் என எழுதுதல் வேண்டும். எவ்வளவு அழகு என்பதே சரி.

23. ஆம் - ஆவது

ஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சோந்து வருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது என்பது வரிசை முறையைக் குறிக்கும். சான்று : முதலாம் பாகம், இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு, ஆறாவது பதிப்பு.

24. கருப்புக் கொடி - கறுப்புக் கொடி

கறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும். நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். கருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக அகரமுதலிகளிலும் காணப்படுகிறது. கருப்பு என்பதற்குக் கரும்பு என்ற பொருளும் உண்டு (கருப்பஞ்சோலை). கருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும். எனினும் காக்கை கருமை நிறமானது என்றும் நீக்ரோ கறுப்பு இனத்தவர் என்றும் எழுதுவது நன்று.

25. பெண்ணையார் - பெண்ணையாறு

பெண்ணையார், பாலார், அடையார் என்பன பிழைகளாம். பெண்ணையாறு, பாலாறு, அடையாறு என்பனவே சரியாகும்.

26. முப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று

முப்பத்தி மூன்று என்பது பிழை. முப்பத்து மூன்று என்பதே சரி. முன்னூறு என்பது பிழை. முந்நூறு என்பதே சரி. ஐநூறு என்பது பிழை. ஐந்நூறு என்பதே சரி. எட்டு நூறு எனல் வேண்டா. எண்ணூறு என்க. பனிரெண்டு என்பது பிழை. பன்னிரண்டு என்பதே சரி.

27. பெரும் ஓசை - பேரோசை

பெரும் ஓசை என்பது பிழை. பேரோசை என்பதே சரி. முப்பெரும் விழா என்பது பிழை. முப்பெருவிழா என்பதே சரி.

28. 5 ம் நாள் - 5 ஆம் நாள்

5 ஆம் நாள் என்பதே சரி. இதுபோலவே 6 ஆவது ஆண்டு என்பதே சரி ( 6 வது ஆண்டு அல்ல)

29. சிலவு - செலவு

சிலவு என்று பலரும் எழுதுகின்றனர். (செல்லுதல் - செலவு) எனவே செலவு என்று எழுதுக.

30. சுதந்திரம் - சுதந்தரம்

சுதந்திரம் என்று எழுதாதீர். சுதந்தரம் என்றே எழுதுக. சுந்தரராமன், சுந்தரமூர்த்தி என்றே எழுதுக.

31. பட்டணம் - பட்டினம்

இரண்டும் ஊர்ப்பெயர்ச் சொற்களே. பட்டணம் நகரத்தைக் குறிக்கும். பட்டினம் கடற்கரை சார்ந்த ஊரைக் குறிக்கும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278