கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 67

செய்தித்தாள் படித்தலுக்கான புதிய அணுகுமுறை

ஒரு மொழியின் தெளிவான புரிதலுக்கு அடித்தளமாக இருப்பது படித்தல் திறன். மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இந்தப் படித்தல் திறன் செம்மையாகக் கைவரப் பெற்றால் அம்மொழியை ஆளுமையோடு இயக்கலாம்.

தமிழ் படித்தலுக்கான திறனை வளர்ப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்ததன் விளைவாக சூளேசுவரன் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் கண்டறியப்பட்ட முறையே இந்த அணுகுமுறை. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் திரு.ம.நடேசன் அவர்களது வழிகாட்டுதலில் இந்த அணுகுமுறையானது முழுமைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த அணுகுமுறையின் வழி - முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மிக எளிமையாகப் படித்தல் திறனை அடைவார்கள். இதற்காக வடிவமைக்கப்பட்ட 8 தாள்கள் நமது தமிழம் இணைய தளத்தில் Freee download பகுதியில் இலவசமாக வலையிறகிக் கொள்ள வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் கற்பிக்கிற பாடங்களை இலவசமாகப் பெற சொடுக்கவும்.  இது pdf முறையில் உள்ளது. இந்த எட்டு தாள்களை வண்ணத்தில் அச்செடுத்து மாணவர்களுக்குத் தந்து ஊக்குவிக்கலாம்.

தற்பொழுது அனைவருக்கும் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய பயிற்சிக் கையேட்டில் - இந்த எட்டு தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஆசிரியரின் செயலாய்வு நிறைவாகத் தரப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிலுள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்நூலானது வழங்கப்பட்டுள்ளதோடு, பயிற்சியும் தரப்பட்டுள்ளன.

இந்த அணுகுமுறையின் படிநிலைகளாவன.

1. எழுத்தை அறிமுகப்படுத்துதல்
2. கற்ற எழுத்துகளைச் செய்தித்தாளில் மறுநாள் வட்டமிட்டு மீள்பார்வை செய்தல்.
3. கற்றுக் கொண்ட எழுத்துகளிலிருந்து உருவாகும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளின் பட்டியலைத் தந்து அதை மாணவர்களாகவே இணைத்துப் படிக்க ஊக்குவித்தல்.
4. செய்தித்தாளில் உள்ள கற்ற எழுத்துகளில் ஏதேனும் இரண்டை வட்டமிட்டுப் படிக்க ஊக்குவித்தல்.
5. உயிர் மெய் எழுத்துகளைக் கற்பிக்கும் பொழுது - உயிர் மெய் எழுத்துகளுக்கான குறியீடுகளை அறிமுகப்படுத்தி, குறியீடுகளுக்குரிய ஓசையை அறிமுகப்படுத்தி, குறியீடுகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டுப் பயிற்சி செய்து, குறியீடுகளை மணாவர்கள் மனதில் பதிய வைத்துப் பிறகு - குறியீடுகளை எழுத்துகளோடு இணைத்து ஒலிக்கப் பயிற்சி தருதல்.
6. உ, ஊ வரிசை எழுத்துகளில் மிகக் குறைந்த எழுத்துகளே பயனாகுவதாலும், இதன் வடிவம் மாறுபட்டு புதிய வடிவமாக இருப்பதாலும் - இவ்வரிசை எழுத்துகளை "ஒள" வரிசை எழுத்துக்குப் பிறகு அறிமுகம் செய்தல்

மாணவர்கள் பேராற்றல் உடையவர்கள். அவர்களை முதல் வகுப்பிலேயே ஊக்குவித்துப் படிக்க வைத்தால் போதும். அவர்களது பின்வரும் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளும் நுட்பமுடையதாகவும், சுவையுடையதாகவும் இருக்கும்.

வாய்ப்புள்ளவர்கள் இதனைப் படியெடுதது, படிக்கும் மாணவர்களுக்குத் தந்து ஊக்குவிக்கவும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278