கல்வி ஆராய்ச்சிகள்  
 
வரிசை எண் : 75
  
ல, ள, ழ - வேறுபாடுகளைச் சரியாக ஒலிக்கப் பயிற்சி. 
சுடரொளித் தாத்தா - அம்பத்தூர்
  
   
  
இதைக் கேளீரோ, சொல்லீரோ, ஆய்வில் ஆழீரோ ! 
 
நீர் அழுக்குத் துணியை வெளுக்க அலுக்கலாமோ ? 
 
ஏழெட்டு எள்ளெடுக்க வில்லெடுப்பாயோ?  
 
மன்னர் வாளேந்தி, வில்லேந்தி புகழேந்தினர்.  
 
தாழையூர் காளையும் வாலை ஆட்டியது.  
 
வாளோடும் வில்லோடும் போர்நடத்திப் பாழோ?  
 
விழாவிலே விலாநோகச் சிரிப்போ ! 
நீ விளாங்கனி உண்டவனோ ? 
 
கதிரொளியும் கடலொளியும்  
என்றும் ஒழியாது. 
 
ஆழ்கடலில் ஆள் இறங்கி  
முத்துக்கல் எடுத்தானே! 
பல களம் கண்டவன் 
இந்தக் கிழவனா! 
 
சொம்பில் என்ன பாலா? 
தம்பி கையில் கோலா? 
தங்கை கையில் வேலா? - இது  
வாழைப் பழத்தோலா ?  
 
கையிலென்ன வாளா ? 
கழுத்தின் கீழே தோளா?  
கொட்டும் பூச்சி தேளா? - இது  
எழுத்தைத் தாங்கும் தாளா? 
 
பாட்டுக்குண்டு தாளம் 
கொட்டும் கெட்டி மேளம் 
கொல்லையிலே சோளம் 
கொட்டும் குப்பைக் கூளம் 
 
சாலை மேலே பாலம்  
நேரம் என்றால் காலம்  
கூர்மை ஈட்டி சூலம் 
கூவிக் கூறு ஏலம்.  
 
ஆடு என்பது மேழம் 
நடுக் கடல் ஆழம் 
யானை என்பது வேழம் 
யாழ் உடையது ஈழம்.  
 
படிப்பில் நீயும் ஆழ் 
படிக்காவிட்டால் பாழ் 
குடிக்க வேண்டும் கூழ் 
வெற்றி கண்டு வாழ்.  
 
நாட்டை நீயும் ஆள் 
நடக்க  உதவும் கால் 
விழுது விடும் ஆல் 
எதுவும் நல்ல நாள்.  
 
இரவில் பூக்கும் அல்லி 
சுவரில் ஏறுது பல்லி 
சிறுவர் செல்வர் பள்ளி 
சிறுமி பெயர் வள்ளி.  
 
பாப்பா நீ அழகு. 
தாத்தாவேடு பழகு. 
இது விடியற்காலை பொழுது. 
வயலில் ஏர் உழுது. 
நீ வரி வரியாய் எழுது. 
வரப்பில் பாப்பா ஏன் அழுது ? 
ஊரில் இல்லை பழுது. 
 
கீழை ஊரிலே  
சோலை ஒன்றிலே  
காலைப் பொழுதிலே 
தாழங்காட்டிலே 
காளை ஒன்றுமே 
கீழும் மேலுமாய் 
வாலை ஆட்டியே  
ஆளை முறைக்குதே.  
 
குதிரை வண்டி இழுக்குது. 
கொள்ளைத் தின்று கொழுக்குது.  
இரும்பு நெருப்பில் பழுக்குது.  
சேற்றில் காலும் வழுக்குது.  
புளிய மரத்தை உலுக்கலாம். 
உலுக்கிக் கையும் அலுக்கலாம். 
கிலுகலுப்பை குலுக்கலாம். 
அடைமழையும் வலுக்கலாம். 
கெட்ட மரம் உளுக்கலாம். 
அழுக்குத் துணியை வெளுக்கலாம். 
கழுத்து நமக்குச் சுளுக்கலாம்.  
கிழக்கு நாளும் வெளுக்கலாம் 
 
 
 
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
 
 |