கல்வி ஆராய்ச்சிகள்
மொழி கற்பித்தல் 01

பிற நாடுகளில் வாழுகிற நம் தமிழ் மழலையர்களுக்கான தமிழ்க்கல்வி எப்படி அமைய வேண்டும் ?

1. அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் நேரம் மிகக் குறைவாகவே உள்ளது (வாரம் 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே) எனவே இந்தக் குறைவான நேரத்திற்குள் எப்படி முழுமையாகக் கற்பிப்பது என்று திட்டமிட வேண்டும்.

2. வீட்டுச் சூழலில் தமிழ் பேசிக் கொண்டிருந்தால், மழலையர்களுக்கான சொற்களஞ்சியம் பெருக்குதல் எளிமையானதாக இருக்கும். இல்லையேல் சொற்களஞ்சியம் பெருக்குவதற்கான செயற்பாடுகளும் திட்டமிடப்பட வேண்டும்.

3. வகுப்புக்கு வருகிற 1 அல்லது 2 மணி நேரத்தை எப்படி ஈர்ப்புடனும், சுவையாகவும், செறிவாகவும் ஆக்குவது என்பதற்காகவும் திட்டமிட வேண்டும்.

4. கற்பிக்கும் கருவிகள், கற்பித்தலுக்கான அணுகுமுறைகள் மற்றும் மாணவர்களுக்கான செயற்பாடுகள் என்பவை எளிமையாகவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரியும் வகையிலும், சூழலில் எளிமையாகக் கிடைப்பதாகவும் இருக்குமாறு திட்டமிட வேண்டும்.

தமிழ் கற்பிப்பதன்வழி நாம் எதிர்பார்க்கும் இறுதி இலக்கு என்னவாக இருக்க வேண்டும் ?

தமிழ்ச் சொற்களைப் படித்தல்,
தமிழ்ச் சொற்களை எழுதுதல்,
தான் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பேசுதல்,

படித்ததைப் புரிந்து கொண்டு அதனை தன்னியல்பாகச் சொல்லுதல்,
தான் நினைப்பதைப் படைப்புகளின் வழியாக (கதை, கவிதை, கட்டுரை) வெளிப்படுத்துதல்,
மேடையில் ஏறி சுருக்கமாகவும், விளக்கமாகவும், செறிவாகவும் பேசுதல்,

மேலுள்ளவை இலக்காக இருந்தால் சரியாக இருக்குமல்லவா ?

தமிழகத்தில்.....

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஆய்வு செய்ததில் 20 விழுக்காடு மாணவர்கள் முழுமையான படித்தல் திறனை அடையாமலிருப்பது கண்டறியப்பட்டது. ( இவர்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் 32 அட்டைகள். 12,000 மாணவர்களில் 10,000 மாணவர்கள் மூன்றே மாதத்தில் திறனை முழுமையாக அடைந்தார்கள்) (படித்தல் திறன் என்றால் என்ன? - மாணவர்களிடம் செய்தித்தாளைக் கொடுத்தால் அதை அவர்கள் தடங்கலில்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்). ஆறு ஆண்டுகளாக அவர்கள் பள்ளியில் படித்தது என்ன ? வினாவிற்கான விடை எழுதுதல், மதிப்பெண்களை அதிகமாகப் பெற வழி கண்டறிதல், முதல் மாணவன் என்ற தகுதிக்காக ஓடுதல் என்பதாகவே கல்வி சுருங்கிப் போய் விட்டது.

மெக்காலே உருவாக்கிய - அடிமைக் கூலி எழுத்தர்களுக்கான கல்வி முறை அப்படியே இருக்கிறது. நமக்கான, நம் சூழலுக்கான புரிதல் திறன் மிகுந்த, ஆற்றலுள்ள, வீறுடைய கல்விமுறை புதியதாகக் கண்டறிந்து வடிவமைக்கப்படவில்லை. இருப்பதை வெட்டி, ஒட்டி, வண்ணமயமாக அடுக்கி, படங்களை இணைத்து, புதிய தொழில் நுட்ப ஈர்ப்புகளை இணைத்து வடிவமைப்பவர்களாகவே இன்றைய கல்வியாளர்கள் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கல்வியாளர்கள் வாய்ப்பு வரும் பொழுது கல்வியாளர்களாக இருக்கிறார்களே தவிர, முழுநேரக் கல்வியாளர்களாக வாழ்வதில்லை, ஆறுமுகநாவலர் முழுமையான கல்வியாளராக வாழ்ந்தார்.

ஆறுமுகநாவலரின் பாலபாடம் நூல் 1, 2, 3 ஆகிய மூன்று நூல்களையும் படித்துப் பாருங்கள். தமிழ்க்கல்வியை மிக எளிமையாக முறைபடுத்தி இருப்பார். எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே உளவியல் அடிப்படையில் எளிமையாக, அருமையாக அமைக்கப்பட்ட இந்தப் - படிநிலை வரிசை - வியப்பூட்டுவதாக இருக்கும். ( தமிழம்.வலையின் நாள் ஒரு நூல் பக்கத்தில் பாலபாடம் மூன்று நூல்களும் உள்ளன)

உலக அளவில் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துகிற புத்தகங்களையும், ஆசிரியர் கையேடுகளையும் வாங்கி, இந்தக் கோணத்தில் கூர்ந்து பாருங்கள். உண்மை விளங்கும்.

தமிழ் கற்பித்தல் என்பதை நான் - ஒரு மொழி கற்பித்தலுக்கான - அடிப்படைச் செயற்பாடாகக் கருதிப் பார்க்கிறேன்.

ஒரு மொழியை எளிமையாகக் கற்பிப்பதற்காக நான் கண்டறிந்த படிநிலையைக் கீழே வரிசைப்படுத்துகிறேன். இதே படிநிலையைப் பயன்படுத்தினால் உலகத்தில் உள்ள எந்த மொழியையும் எளிமையாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

மொழி கற்பித்தலுக்கான படிநிலை வரிசை

1. மொழியின் அனைத்து எழுத்துகளையும் ஒலி வடிவில் மாணவர்களுக்குள் பதியவைப்பது. (பாடல் வடிவில்)

2. மொழியின் எழுத்துகளை எழுதுமுறையின் அடிப்படையிலும், எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் வரிசைப்படுத்தி - அந்த வரிசையில் எழுத்துகளை அறிமுகம் செய்து - மாணவர்கள் பயிற்சி செய்ய ஊக்குவிப்பது.

3. முதல் நாள் கற்ற எழுத்துகளை அடுத்த நாள், செய்தித்தாளில் வட்டமிடச் செய்து கற்ற எழுத்துகளை மீள்பார்வை செய்யப் பயிற்சி தருவது.

4. கற்ற எழுத்துகளின் தொடர்ச்சியான நினைவூட்டலுக்காகவும், படித்தல் திறனை எளிமையாக்குவதற்காகவும், கற்ற இரண்டு எழுத்துகளை எவ்வாறு இணைத்து ஒலிப்பது என்று அவர்களாகவே முயற்சி செய்து, உள்வாங்கி, பதியவைப்பதற்காக - இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பயிற்சியை - தொடர்ச்சியாக அனைத்து நிலையிலும் அமைத்துத் தருவது.

5. இரண்டு மற்றும் மூன்றெழுத்துச் சொற்களை (சூழலிலுள்ள சொற்களை மட்டும்), விரும்பினால் படங்களுடன் அறிமுகம் செய்து, படிக்க வைத்து, புரியவைத்து, அவர்களாகவே சொற்களஞ்சியம் ஆக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவது.

6. இரண்டு அல்லது மூன்றெழுத்துச் சொற்களை இணைத்துத் தொடர்களை உருவாக்கி, அந்தத் தொடர்களைப் படிக்க வைத்து, புரிய வைத்து, அவற்றைப் பேச ஊக்குவிப்பது.

7. தொடர்களை இணைத்து சிறுகதைகளை, பாடல்களை, படக் குறிப்புகளை உருவாக்கி, அதனைப் படிக்க வைத்து, புரிய வைத்து, அவர்களாகவே அது பற்றிப் பேச ஊக்குவிப்பது.

8. தான் பார்த்ததை, எளிமையாகவும், பிழையில்லாமலும் (இங்கு தான் முறையான இலக்கணம் வருகிறது. அதுவும் இயல்பானதான இருக்க வேண்டும்) எழுதவும், பேசவும் ஊக்குவிப்பது.

9. தான் பார்க்காததை கற்பனையாக எழுத, பேச ஊக்குவிப்பது.

10. தன்னுள் எழுவதை செறிவாகவும், இலக்கிய நயத்துடனும் எழுதவும், பேசவும் ஊக்குவிப்பது.


மேலே வரிசைப்படுத்தியுள்ள பத்து நிலைகளும், என் 29 ஆண்டுக் கல்விப்பணியில், என் பட்டறிவில் நான் கண்டறிந்து உணர்ந்தவை. உளவியலுக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தப் பட்டவை.

கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், பெற்றோர்களுடனும் இயங்கி மேலுள்ள பத்து நிலைகளில் ஐந்து நிலைகளுக்கான பாடங்களை உருவாக்கி விட்டேன். ஒவ்வொரு பாடங்களும் மாணவர்களிடம் சோதனை செய்து, பிறகு பிழை நீக்கப்பட்டு, எளிமையாக்கப் பட்டு, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் முழுமையாக அடைவு பெற சோதனை செய்யப்பட்டே இறுதிப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றை உலக மக்கள் பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழம் வலையின் கல்வி பகுதியில் இணைத்துள்ளேன். இந்த முறை புரியாமல் இருந்து, ஏதாவது ஒரு மாணவனால் படிக்க இயலவில்லை என்றால், அந்த மாணவருக்காகவும் உருவாக்க இயலும். எப்படியாவது நம் தமிழ் மக்கள், தமிழ் மொழியை, எளிமையாகவும், விரைவாகவும் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

தமிழம் வலை இணையதளத்தில் (www. thamizham.net) கல்வி (Education) என்ற பக்கத்தைப் பார்க்கவும்

அன்புடன்
பொள்ளாச்சி நசன் (தமிழ்க்கனல்) - pollachinasan@gmail.com - 890 300 2071 -