கல்வி ஆராய்ச்சிகள்
மொழி கற்பித்தலுக்கான அளவுகோல்


ஒரு நிலத்தில் 10 மூட்டை நெல் விளைந்துள்ளது என்றால் அந்த நிலத்தை நல்ல நிலம் என்று சொல்கிறோம். அதே நிலத்தில் 15 மூட்டை நெல் விளைந்தால் சிறந்த விளைச்சல் என்றும், அதுவே 5 மூட்டையாகக் குறைந்து விட்டால் விளைச்சல் சரியில்லை என்றும் கூறுகிறோம். ஆக நிலத்தில் விளையும் விளைச்சலைக் கொண்டு அந்த நிலத்தை அளக்கிறோம். நிலத்தில் கிடைக்கும் விளைச்சல் இங்கு அளவுகோலாகிறது. விளைச்சலின் அடிப்படையில் நிலத்தின் பெருமை கூடுகிறது.

கல்வியில் இப்படி அளப்பதற்கான அளவுகோல் இல்லை. கல்விக்கான அளவுகோல் இல்லாததால்தான் - கல்வி நிலையங்கள் பெரியதாக விளம்பரங்கள் செய்து - இத்தனை விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர் என்ற அறிவிப்பை வெளியிட்டுத் - தானே தலைசிறந்த நிறுவனம் என்று பறைசாற்றுகிறது. மாயையில் சிக்கிய பெற்றோர்களும் விளம்பரங்களைப் பார்த்து நிறுவனங்களில் சேர்த்து விடுகிறார்கள்.

அண்மையில் ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரம் உயரமான கட்டங்கள் - மருத்துவம், பொறியியல், மேலாண்மை என அனைத்தும் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு மாணவன் திடீரென்று ஓடிவந்து கையில் உள்ள சங்கிலியால் அடுத்தவனை அடித்தான். இரத்தம் சொட்டச் சொட்ட அவன் ஓடினான். அவனைத் துரத்திக் கொண்டு ஒரு கும்பல் ஓடியது. 10 நிமிடத்திற்குள் எதுவுமே நடக்காதது போல அமைதியானது. யாரும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இது பல்கலைக் கழகம் / கல்லூரி நிலை என்றால் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.

மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள் எந்தத் திறனும் இல்லாமல் வெளிவருகிறார்கள். மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூகவியல் - என வரிசைப்படுத்தப்பட்டுள்ள பாடங்களில் கூட புரிதல் ஏதுமற்று - வினாவிற்கான விடை எழுதுகிற இயந்திரங்களாகத்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களது உள்ளார்ந்த திறன்கள் வளர்த்தப்பட வில்லை. தமிழகத்தில் இந்த நிலை தொடருகிறது.

கல்வியை அளப்பதற்கான அளவுகோல் இல்லை. அளவுகோல் ஒன்று இருக்குமானால் கல்வி நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது. அளவுகோலுக்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும். இப்பொழுது வினா விடைக்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்குகிறார்கள். புரிதல் இல்லை. இந்த நிலையை மாற்ற கல்விக்கான அளவுகோல் வேண்டும் என்று பல ஆண்டுகளாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்விக்கான அளவுகோல் - மொழிப்பாடத்திற்கு - உருவாக்கி விட்டேன்.

ஒரு இதழ் - தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசமாக அனுப்பி, வெளிநாட்டு மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. தமிழ் பேசும் தமிழ்நாட்டு மழலையர்களையே வினா விடைக்கான இயந்திரமாக மாற்றுகிற இவை - எப்படி வெளிநாட்டுத் தமிழ் மழலையர்களை வளர்த்தெடுக்கும் என்று நினைத்தேன். அதன் விளைவு இந்த - கல்விக்கான அளவுகோல் - உருவாகியது.

இந்த அளவுகோலை - மொழிப் பாடத்திற்கு மட்டும் உருவாக்கியுள்ளேன். மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள பாடத்திட்டமாக இதனை வடிவமைத்துள்ளேன்.மொழி கற்பித்தல் எப்படி அமைய வேண்டும் ?

1) மொழியிலுள்ள எழுத்துகளை - எழுத - ஒலிக்க - அறிமுகம் செய்தல்
2) கற்ற இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்க ஊக்குவித்தல்
3) சொற்களை படித்தல், தொடர்களைப் படித்தல்
4) சொற்களை எழுதுதல், தொடர்களை எழுதுதல்
5) படித்த மற்றும் எழுதியவற்றைப் புரிந்து கொள்ளுதல்
6) தான் விரும்பியவற்றை சொந்தமாக எழுதுதல்.


மேற்கூறிய படிநிலைகளில் மொழிகற்பித்தல் அமையுமானால் உலகிலுள்ள எந்த மொழியையும் விரைவில் கற்பித்து விடலாம்.

வெளிநாட்டிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு 3 மொழிகள் தவிர்க்க முடியாததாக அமைகிறது.

1) தாய்மொழியான தமிழ்
2) ஆங்கிலம்
3) சூழலிலுள்ள பிற மொழி

தாய்மொழியைத் தொடக்க நிலையிலிருந்தும் ( 3 + ), ஆங்கிலத்தை மூன்றாம் நிலையிலிருந்தும் ( 7 +), சூழலிலுள்ள பிற மொழியை ( 10 +) ஆறாம் நிலையிலிருந்தும் கற்பிக்கத் தொடங்கலாம். தாய்மொழியும், சூழலிலுள்ள பிற மொழியும் - மாணவர்களுக்கு இயல்பாகவே பேச்சு வழக்கில் புகுத்தப்படுவதால் - மிகக் குறைந்த ஆண்டுகளுக்குள் இந்த மொழிகளில் மாணவர்கள் புலமை அடைந்து விடலாம்.

ஆங்கிலத்திற்கான - மொழிப் புலமை என்பதைவிட - சொற்களஞ்சியம் பெருக்குதல் என்பதுதான் - முதன்மையானதாக இருக்கிறது. எனவே இதற்காக - பட அகராதி - வீடியோ அகராதி - என்கிற தொழில் நுட்ப உதவியுடன் - மாணவர்களை அணுகும் பொழுது - மிகக் குறைந்த ஆண்டுகளில் ஆங்கிலத்திலும் மொழிப்புலமை அடைந்து விடுவார்கள்.

வெளிநாட்டிலுள்ள தமிழ் மழலையர்கள் தங்களது தாய்மொழியான தமிழைப் புறம் தள்ளி தற்பொழுது வாழ்கிறார்கள். சூழலில் தமிழ் இல்லை என்றும், பணிக்குச் செல்ல பிற மொழியே உதவுகிறது என்றும் தமிழைப் புறம் தள்ளுகிறார்கள். பெற்றோர்களும் இதைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது.பெரும்பாலான தமிழர்கள் தாயகத்திற்கு வரும்பொழுதுதான் இந்த இழப்பை உணருகிறார்கள். தாய்மொழி என்பது உயிர்த் துடிப்போடு இயங்கவைப்பது. எனவே தமிழ் மழலையர்கள் எளிமையாகத் தமிழ் கற்பதற்கான அனைத்துச் செயற்பாடுகளிலும் தமிழம் வலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறது. பள்ளி நடத்துபவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்மொழி வளர்த்த இயங்குபவர்களுக்கும் - தமிழம் வலை - தன்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் - இலவசமாக - அனுப்ப விரும்புகிறது. தமிழம் வலை இணையதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் வலையிறக்கி நம் தமிழ் மழலையர்களுக்குத் தந்து அவர்களது தமிழ்க் கற்றலை ஊக்குவிககலாம்.

கற்றல் கற்பித்தலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் மின்அஞ்சல் செய்யவும். உங்கள் பிரச்சனைக்கான தீர்வினை முறைபடுத்தி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நம் தமிழ் மழலையர்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.


வெளிநாட்டிலுள்ள தமிழ் மாணவர்களுக்கான மொழிப் பாடத்திட்டம்

( சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொடர்கள்தான் அளவுகோல்கள் )
நிலை
தமிழ்
ஆங்கிலம்
சூழலிலுள்ள பிற மொழி
மழலையர்
நிலை
ஊக்கச் செயற்பாடுகள், அடிப்படையான எழுத்துகள் அறிமுகம், ஒழுங்கு, கட்டுப்பாடு
இல்லை
இல்லை
முதல்
நிலை
தமிழ் எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல், செய்தித்தாள் படித்தல்,
சிறுவர் பாடல்களை அபிநயத்துடன் பாடுதல், நடித்தல்
இல்லை
இல்லை
இரண்டாம்
நிலை
எளிய உரையாடல், சூழலுக்கு ஏற்ப உரையாடுதல், நடித்தல்,
சிறுவர்கதை படித்தல்,
சிறுவர் பாடல்கள் அபிநயத்துடன் பாடுதல், எளிமையான சங்கப் பாடல்களும், தற்காலப் பாடல்களும் அறிமுகம் செய்தல்
இல்லை
இல்லை
மூன்றாம்
நிலை
எளிய சிறுகதை படித்தல், எளிய கவிதை படித்தல், படித்தவற்றை சிறு தொடர்களாக எழுத ஊக்குவித்தல், சிறுவர்களுக்கான சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள்
அறிமுகம். மாணவர்கள் பாடல் பாடுதல், பாடலை உணர்தல்,
ஆங்கிலத்தில் எளிய பாடல்கள் அறிமுகம், ஆங்கில எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல்,
செய்தித்தாள் படித்தல்
இல்லை
நான்காம்
நிலை
கதை படித்தல், கவிதை படித்தல், உரைநடை படித்தல் - படித்துப் புரிந்ததை குறிப்பு எழுதுதல். எடுத்துக் கூறுதல், விளக்குதல், சங்ககால, தற்கால இலக்கியப் பாடல்கள் அறிமுகம். பாடல்கள் பாடுதல், உணர்தல், விளக்குதல்
எளிய ஆங்கிலப் பாடல்களை
அபிநயத்துடன் பாடுதல், ஆங்கிலத்தில் உரையாடுதல், சிறுவர் கதை படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சூழலைக் காட்டி, சூழலிலுள்ள சொற்களைக் கற்பித்தல், சொற்களைத் திரட்டுதல்,
பதிவு செய்தல்
இல்லை
ஐந்தாம்
நிலை
தற்கால இலக்கியப் பாடல்களைப் படித்தல், எளிய சங்ககால
இலக்கியப் பாடல்களைப் படித்தல், சிறுவர் கதை உரைநடை படித்தல், படித்தவற்றைப் பேசுதல், எழுதுதல், நடித்துக் காட்டுதல்.
ஆங்கிலத்தில் உரையாடுதல், சூழலுக்கு ஏற்ப உரையாடுதல்,
சிறுவர் கதை படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்.
இல்லை
ஆறாம்
நிலை
தற்கால, சங்ககால இலக்கியப் பாடல்களைப் படித்தல், தரமான
சிறுகதைகள், கட்டுரைகள் படித்தல், படித்தவற்றைச் சொந்தமாக பேசுதல் எழுதுதல், நடித்தல், சொந்தமாகக் கதை, கவிதை எழுதுதல்
ஆங்கிலம் பேசுதல், உரையாடுதல், பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு பேசவைத்தல், சிறுவர்கதைகள் படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்
சூழலிலுள்ள மொழியில் எளிய பாடல்கள் அறிமுகம், எழுத்துகள் அறிமுகம், செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை, இணைத்துப் படித்தல், சொற்கள் படித்தல்,
செய்தித்தாள் படித்தல்
ஏழாம்
நிலை
தற்கால, சங்ககால இலக்கியப் பாடல்களைப் படித்தல், உள்வாங்குதல், தரமான
சிறுகதைகள், கட்டுரைகள், படித்தல் படித்தவற்றை உணர்ந்து பேசுதல், நடித்தல், சொந்தமாகப் படைப்புகள் ஆக்குதல்.
ஆங்கில இலக்கியப் படைப்புகள் அறிமுகம், கவிதை, சிறுகதை, கட்டுரை படித்தல் உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், சிறு சிறு தொடர்களை சொந்தமாக எழுதுதல்
எளிமையான பாடல்களை
அபிநயத்துடன் பாடுதல், எளிய உரையாடல், சிறுவர்கதை படித்தல், நாடகம் நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்
எட்டாம்
நிலை
தற்கால சங்ககால இலக்கியப் படைப்புகளைப் படித்தல், உள்வாங்குதல், படித்தவற்றை உணர்ந்து மேடையில் பேசுதல், நடித்தல், சொந்தமாகக் கதை,
கவிதை, கட்டுரைகள்
உருவாக்குதல்
ஆங்கிலக் கவிதை, சிறுகதை, கட்டுரை படித்தல், உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், பயன்பாட்டிலுள்ள சிறு சிறு பத்திகளைச் சொந்தமாக எழுதுதல், சூழலுக்கு ஏற்ப பேசவைத்தல்
பாடல்கள் பாடுதல், பயன்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப பேசவைத்தல்,
சிறுவர்கதைகள் படித்தல், கதை மற்றும் உரையாடலுக்கு ஏற்றவாறு நடித்தல், சொற்களஞ்சியம் பெருக்குதல்,
ஒன்பதாம்
நிலை
மேற்கூறியவாறே
வடிவமைக்கவும்
ஆங்கிலச் செய்தித்தாள் படித்து படித்தவற்றை தொகுத்துரைத்தல் - படித்ததை எளிய நடையில் எழுதுதல் - ஆங்கிலப் படைப்பாக்கங்கள் படித்தல், அது போல எழுதப் பயிற்றுவித்தல், தான் விரும்புவதைச் சொந்தமாக எழுதுதல்,
சூழலிலுள்ள மொழியின்
இலக்கியப் படைப்புகள் அறிமுகம், படித்தல், உணர்தல், கலந்துரையாடுதல், சொற்களைத் தொகுத்தல், சிறு சிறு தொடர்களை சூழலிலுள்ள மொழியில் சொந்தமாக எழுதுதல்.
பத்தாம்
நிலை
மேற்கூறியவாறே
வடிவமைக்கவும்
மேற்கூறியவாறே
வடிவமைக்கவும்
சூழலிலுள்ள மொழியில் படித்த கவிதை, கதை, கட்டுரை ஆகியவற்றைத் தொகுத்துரைத்தல், எழுதுதல், சொந்தமாக எழுதுதல், சூழலில் உள்ளவற்றை சொந்தமாக எழுதுதல்

சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொடர்கள் அந்த அந்த நிலைக்குரிய / பாடத்திற்குரிய அளவுகோல்களாகும். இந்த அளவுகோலை மாணவர்கள் அடைவதற்கு, ஆசிரியர்கள் செயற்படவேண்டும். தேர்வுமுறையை விட மாணவர்களது கற்றல் வெளிப்பாட்டுப் பதிவுகளே அளவுகோலை அடைந்ததற்கான சான்றுகளாகக் கருதப்படும்..
தமிழ்க்கனல் - தமிழம் வலை
pollachinasan@gmail.com - mobile: 890 300 2071