இணையத்திற்கு வந்த நூல்கள் - 12

உலகத் தமிழ் ஆசிரியர்
மாநாடு 2006 மலர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி


2006 திசம்பர் 16, 17
சென்னை 16.

உலகத் தமிழ் வல்லுநர்களை ஒன்றிணைத்து, கற்றல் கற்பித்தல் தகவல் தொழில் நுட்பக் கலந்துரையாடலை முதன்மைப் படுத்தி, சென்னையில் 2006 இல் நடத்தப்பட்ட உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலர் இது. சரியான தமிழ்த்தாய் வாழ்தினை மலரில் வெளியிட்டிருப்பதோடு, கற்பித்தல் நுட்பம் தொடர்பான பல கட்டுரைகளையும் கொண்டுள்ளது இந்த மலர். மாநாட்டில் இலண்டன் சிவகுருநாதபிள்ளை, இரா திருமுருகனார், கணபதி ஆகியோரின் பகிர்வு மறக்க முடியாதது.

ஆயிஷா

இரா.நடராசன்,

பாரதி புத்தகாலயம்,
7.இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 18

விலை : ரூ 5.

ஒரு அறிவியல் நூலுக்கான முன்னுரை என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள சிறுகதை. அறிவியல் நூல்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்பதை முதன்மைப்படுத்துகிற கதை. குறும்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் இயல்பான ஆற்றலுக்கு ஈடுகொடுக்காத கல்வித் துறையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ள அருமையான கதை. நான் மனித நேயமுள்ள தரமான அறிவியல் ஆசியராக இருக்க வேண்டும் எனத் தூண்டுகிற கதை. ஆயிஷாக்கள் இன்றும் இங்கே இருக்கிறார்கள் எனக் காட்டுகிற கதை.

என் தமிழ் இயக்கம் - 7

முனைவர் இரா.திருமுருகனார்,

பாவலர் பண்ணை ஒளியச்சகம்
60.மறைமலை அடிகள் சாலை,
புதுச்சேரி - 605 001

விலை : ரூ 60.

திருமுருகனார், தமிழாக, தமிழுக்காக, தமிழரது மேன்மையை நெஞ்சில் நிறுத்தி வாழுபவர். தெளிதமிழிலும், குறைகண்டவிடத்துச் சுட்டிக் காட்டுவதிலும் உண்மைத் தன்மையுடையவர். வணங்குதற்குரிய தமிழராக வாழும் அவரது சூழல் தமிழ்ச்சூழல். அவரைச் சுற்றி இயங்கிய இயக்கத்தை, தொடர்புகளை, காட்சிகளை நுட்பமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கப் படிக்கத் தமிழுணர்வு மிகும். ஒவ்வொரு தமிழரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.

ஓவியர் புகழேந்தியின்

புயலின் நிறங்கள்

ஓவியர் புகழேந்தி

தமிழ்த்தாய் வெளியிடு,
கிளிநொச்சி.
கவிதைகள்
கவிஞர் காசி ஆனந்தன்,
இன்குலாப்,
ஆங்கிலப் பெயர்ப்பு தியாகு

மண் மீட்புப் போரில் தன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு என அறிவித்துத் தொடருகிறது இந்த ஓவியக் கண்காட்சி. இதில் 23 ஓவியங்கள் விடுதலைக்கான விதையை விதைக்கின்றன. ஓவியத்திற்கான கவிதைகள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுகின்றன. நூலில் ஓவியங்கள் மட்டுமல்லாது படைப்பு குறித்த கட்டுரைகளும் உள்ளன. ஓவியக் கண்காட்சி கண்டு எழுதிய பார்வையாளர்களின் குறிப்பையும் நூலில் இணைத்துள்ளது இந்நூலுக்கான கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

பத்தாண்டு வளர்ச்சி

விஜயரத்தினம் சிவசுப்பிரமணியம்.

V. Sivasupramaniam,
P.O.Box .644.
Seychelles,

vijaratnamsiva@hotmail.com

சீசெல்சு நாட்டில் உள்ள தமிழர்களின் வாழ்முறை கலை பண்பாட்டோடு இணைந்து உள்ளதை ஒரு பத்தாண்டு காலத்திற்கு ஆய்வுசெய்து அதனை நூலாக்கியுள்ளார் ஆசிரியர். இசை, நடனம், நாடகம் எனத் தமிழ்க் கலைகளோடு தொடர்புடைய செய்திகளைத் திரட்டி, புகைப்படங்களுடன் தந்துள்ளார். வேற்று மொழி பேசும் சூழலிலும் தமிழ் மொழியை, பண்பாட்டைப் பேணுவதில் காட்டுகிற தொடர்ச்சி வாழ்த்துதற்குரியதாக உள்ளது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.

நாட்டுப்புறவியல்

முனைவர். மு.இளங்கோவன்.

வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு, உள்கோட்டை,
கங்கைகொண்ட சோழபுரம்
பெரம்பலூர் மா. 612 901

விலை : ரூ 80.

நாட்டுப்புறவியல் பற்றிய ஆய்வு நூல். தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிற நாட்டுப்புற பாடல்களைப் பட்டியலிட்டுக்காட்டி, இவற்றின் பல்வேறு வகைகளை சான்றுகளுடன் முறைபடுத்தி, இப்பாடல்களை மானிடவியலோடு பொருத்திக்காட்டி விளக்குவது சிறப்பாக இருக்கிறது. இப்பாடல்கள் தமிழர்களின் அடையாளங்களாக, பதிவுகளாக விளங்கி வாழ்முறையைக் காட்டுவதைக் காணும் போது நெஞ்சு நிறைகிறது. தரவுகளைத் திரட்டுவதில் நூலாசிரியரின் நுட்பம் வெளிப்படுகிறது.

கம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் பயிற்சி

மா. ஆண்டோ பீட்டர்.

சாப்ட்வியூ பதிப்பகம்,
தமிழ்க்குடில்,
118 நெல்சன் மாணிக்கம் சாலை,
சென்னை 29

விலை : ரூ 22.

தமிழில் விசைப்பலகை ஏன்? இவை பயனாகும் இடங்கள். கணினியில் தமிழ், எழுத்துருக்கள், டாம் மற்றும் டாப் வகை எழுத்துருக்கள், யுனிகோட் வகை எழுத்துருக்கள், அச்சாக்கும் முறைகள், தமிழ் மென்பொருள் விற்பனை, தமிழ் மொன்பொருள் தளங்கள், தரப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைப்பலகை, தட்டச்சு, ஒலியியல், ஆங்கில விசைப்பலகை அமைப்பு முறை என்ற கருத்துருக்களோடு, பொள்ளாச்சி நசன் எழுதியுள்ள தமிழ் 99 தட்டச்சுப் பயிற்சிக்கான பயிற்சிப்பாடங்கள் அடங்கிய நூல்.

முல்லை இதழ்கள்

முனைவர். இளமுருகன்.

முல்லை பதிப்பகம்,
323/10 கதிரவன் காலனி,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை 40

விலை : ரூ 15.

முதல் 5 இதழ்களுக்குப் பாவேந்தர் ஆதரவாளராகவும், முல்லை முத்தையா தொகுப்பாளராகவும், 6,7,8,9 இதழ்களுக்கு முல்லை முத்தையாவே ஆசிரியராகவும், இறுதி 3 இதழ்களுக்கு தொ.மு.சி ஆசிரியராகவும் இருந்து வெளிவந்த முல்லை இதழின் ஆய்வுத் தொகுப்பு நூல் இது.
முல்லை மு.பழநியப்பன் தொகுத்துள்ள முல்லை இலக்கியக் களஞ்சியத்திற்கான (440 பக்க அளவில் ரூ 175 விலையுள்ள) நூலுக்கான அறிமுகவுரை போல அமைந்துள்ள நூல் இது.

உரையாடல் வழி தமிழ்

பேரா. வ.கணபதி

சாந்தா வெளியீட்டகம்,
13(5)ஸ்ரீபுரம் 2 வது தெரு,
இராயப்பேட்டை,
சென்னை 14.

விலை : ரூ 90.

வேற்று மொழியினர் எளிமையாகத் தமிழ்ப் படிப்பதற்கான அணுகுமுறையை உடைய நூல் இது. தமிழ் எழுத்துகள் மற்றும் சொற்களுக்கான ஒலிபெயர்ப்புக் குறிப்புகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. தமிழ் பேச, படிக்க, எழுத உதவுகிற விளக்கங்களுடன் பயிற்சிகளை உள்ளடக்கியது. சொற்கள் அறிமுகம், எழுத்து எழுதுமுறை, தொடர்கள் அறிமுகம் எனத் தமிழ்க் கற்றலை எளிமைப் படுத்தியுள்ளது. சூழலுக்கு ஏற்ற உரையாடல், வழக்கிலுள்ள சொற்கள் அறிமுகம் எனக் கற்போருக்குப் பயனாகுகிற வகையில் உள்ளது.

மாற்றிக்கொள்ள
விருப்பமில்லை

பொன். குமார்

21/15 புது திருச்சிக்கிளை
வடக்குத் தெரு,
லைன் மேடு, சேலம் 6

விலை : ரூ 20.

அடிக்கடி, தாலியை அடகுவைத்து,
படிக்க வைப்பாள்,
இன்று அதுவுமில்லை,
விதவையாகிவிட்டாள் - அம்மா.

இது போன்ற நெஞ்சில் நிலைத்து நிற்கும் உரைவீச்சுகளை உள்ளடக்கிய நூல் இது. இந்நூலிலுள்ள சில உரைவீச்சுகள் இந்த வலையேற்றத்தின் சிற்றிதழ்ச் செய்தி இதழில் (இதழ் எண் : 57) உளளன.

படித்து மகிழவும் - பொள்ளாச்சி நசன்.

கிராஃபிக்ஸ் அனிமேசன்

மா. ஆண்டோ பீட்டர்.

பெரிகாம், நூல் வெளியீடு,
37.அஜீஸ்முல்க் 2 வது தெரு,
ஆயிரம் விளக்கு,
சென்னை - 6

விலை : ரூ 88.

கணினிச் செய்திகளைத் தமிழில் தருவது வணங்குதற்குரியது. இந்த வகையில் இந்த நூலில் நான்கு மென்பொருள்களின் அடிப்படையானது விளக்கப்பட்டுள்ளது. போட்டோஷாப், அடோப் பிரிமியர், 3 டி ஸ்டுடியோ மேக்ஸ், மேக்ரோ மீடியா டைரக்டர் - என்ற நான்கு மென்பொருள்களை இயக்குவதற்கான அடிப்படையான செயல் முறைகளைப் படத்துடன் இந்த நூல் விளக்குகிறது. தமிழில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிகச் சிறப்பாக இதனை எழுதியுள்ளார் திருமிகு ஆண்டா பீட்டர் அவர்கள்.

இலக்கணம் இனிக்கிறது

முனைவர்.இரா.திருமுருகனார்,

ஏழிசைச் சூழல்,
62.மறைமலை அடிகள் சாலை,
புதுச்சேரி - 605 001
பேச : (0413) 220 1191

விலை : ரூ 55.

இசையிலும், இலக்கணத்திலும், தெளிதமிழிலும் நுட்பமும் ஆழமும் உடைய முனைவர் இரா.திருமுருகனாரின் கட்டுரைகளடங்கிய தொகுப்பு இது. இலக்கணம் இனிக்கிறது, மரபு பிறழ்வுகள், நடைமுறைத் தமிழும் இலக்கணமும் (சிக்கலும் - தீர்வும்), எழுத்தறியார் தமிழில் யாப்பிலக்கண அமைப்புகள், தனித்தமிழ், இனிய சொல் விளையாட்டுகள் என்கிற எட்டு கட்டுரைகளடங்கியது. இவற்றுள் இனிய சொல்விளையாட்டுகள் புதிய நுட்பம் காட்டுபவை. குறுவட்டுகள் உருவாக்க அடித்தளமாக இருப்பவை.

நிர்வாணம்

முனைவர் ஸ்ரீதரன்,

புதினம் வெளியிடு,
38. Moffat Road.,
London. SW17 7EZ
puthinam5@hotmail.com

விலை : ரூ 20.

புதினத்தில் வெளிவந்த 32 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள், வெளி இரண்டும் உள்ளன. இரண்டும் ஒத்திசைக்கும் போது அவன் புனிதனாகிறான். தேடல் இரண்டையும் ஒத்திசைக்க வைக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் மக்களின் நிலை வினாக்குறியானதே. இருப்பும், உயர்வும், மேலெழ - மக்களின் செயலனைத்தும் நிர்ணயிக்கப் படுகின்றன. உண்மையைக் காட்டி வழிநடத்துவது உயர்வானது. இந்த நூல் வழிகாட்டும்.

கப்பலோட்டிய தமிழர்கள்

ராஜகோபால்,

Thamilan Publishers.
38. Moffat Road,
LONDON SW17 7 EZ
England.

வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்கிற தலைப்பில் சுவையாக, நாமே கடலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கப்பலோட்டியின் கதை இது. பிரச்சனைகள், கடலின் அமைதி, சீறி எழும் கடலலைகள், திக்குத் தெரியாது தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு, கரையைக் காணும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, தமிழர்களின் திறன், கூட்டுமுயற்சியின் வெற்றி - என்பன போன்ற பல்வேறு உணர்வலைகளை உருவாக்குகிற நூல் இது. அன்னபூரணி என்ற அந்தக் கப்பலை நெஞ்சு சுமக்கிறது.

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,