தமிழர்கள் பயன்படுத்திய ஈமத்தாழி

இறந்த மாந்தன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறக்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவனது மறுபிறவிக்குத் தேவைப்படும் உடம்பிற்கான எலும்புகளையும், அவன் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள் போன்றவற்றையும் மண்பாண்டங்களில் வைத்துப் புதைக்க வேண்டும் என்று சங்ககால மாந்த சமுதாயம் கருதியது.


இதனாலேயே இதற்கென உருவாக்கிய ஈமத் தாழியை தாயின் அகண்ட கருப்பை வடிவத்தில் உருவாக்கினர். ஈமத்தாழியின் கழுத்துப் பகுதிக்கும் சற்று கீழே காட்டப்படும் தொப்புள் கொடியின் வடிவமைப்பு இக்கருத்தாக்கத்தை வலுப்படுத்தும்.

நிலத்தின் கீழே மாந்தரின் தோராய உயரமான 5 அடிக்குக் கீழேயே இந்த ஈமத்தாழிகள் பொதுவாகப் புதைக்கப்பட்டன. இருப்பினும் நிலத்தைத் தோண்டத் தொடங்கிய ஒரு அடிக்குக் கீழேயே ஈமத்தாழியுடன் தொடர்புடைய சிறு சுடுமண் கலன்கள் கிடைக்கின்றன. அவற்றுள் மாந்தர் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள், எலும்பு மிச்சங்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து ஈமத்தாழியில் புதைக்கப்பட்ட மாந்தரின் சுற்றமும் நட்பும் அவனுக்கு விருப்பமான பொருள்களை ஈமத்தாழி புதைக்கப்பட்ட பிறகு நிலத்தில் அவன் நினைவாக இந்தச் சிறு மண்கலங்களில் புதைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

கருத்தும் படமும் உதவி : திரு.மகேசுவரன், காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், கோவை.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,