1715 இல் அச்சிட்ட நூல்

முதன் முதலில் மக்கள் செய்திகளைப் பாறைகளிலும், மரங்களிலும் செதுக்கிப் பதிவு செய்து வைத்தனர். கிடைத்த பச்சிலைகள், இயற்கைப் பொருள்களின் உதவியோடு பறைகளில் எழுதிவைத்துப் பதிவு செய்தனர். இவை கோடுகளாகவும், படங்களாகவும், செய்திகளை உள்ளடக்கி இருந்தன. செய்திகளின் பெருக்கம் அதிகமாக அதிகமாக பதிவு செய்வது விரிவாகவும் விளக்கமாகவும் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுதுதான் அவை எழுத்துருக்களாகின.

வட்டம், கோடு, முக்கோணம், சதுரம் என வடிவங்களின் இணைப்பாக எழுத்துகள் தோன்ற ஆரம்பித்தன. பாறைகளிலும், செப்பேடுகளிலும், மரப்பட்டைகளிலும், சுட்ட மண்ணிலும், பனையோலைகளிலும் இவ்வகை எழுத்துகளில் தங்களது நினைவலைகளைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

பதிவுகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடிய பொழுது, பதிவு செய்வதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டிய நிலை உருவானது. இந்தக் காலக்கட்டத்தில் தோன்றியதுதான் அச்சுக்கலை, மரம், சுட்ட மண், பாறை, உலோகம் என்பவற்றில் எழுத வேண்டியதன் மறு உருவம் வெட்டி எடுக்கப்பட்டு, வண்ணத்தில் தோய்த்து அழுத்தும் பொழுது ஒன்றுபோலவே பல உருவானது கண்டு மகிழ்ந்தனர். அச்சுக்கலையில் தொடக்கம் சிறகடித்தது.

தொழிற்புரட்சியின் ஒரு பிரிவாக இந்த வகையிலான இயந்திரங்களின் பெருக்கமும் நடைபெற்றன. கட்டை எழுத்துகளிலும், உலோக எழுத்துகளிலும் அச்சாக்கத் தொடங்கினர். ஆங்கிலேயருடைய நுழைவால் பெற்ற பயன் இது. 1715 இல் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. கிருத்துவ மதத்தைப் பரப்புகிற செய்திகள் அடங்கிய விவிலிய நூல் அச்சாக்கப்பட்டது.

அன்றுவரை, பாறைகளிலும், செப்பேடுகளிலும், பனையோலைகளிலும், திரைச் சீலைகளிலும் இருந்த தமிழ் எழுத்துகள் முதன் முதலாகத் தாளில் அச்சாக்கப்பட்டது. இப்படி அச்சான விவிலிய நூலான புதிய ஏற்பாட்டின் முதல் பக்கத்தைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம். நன்றி : கண்ணியம் இதழ் - சனவரி 2006


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,