இசையமுது
பாவேந்தர் பாரதிதாசன்சிறார் பொறுப்பு
இன்று குழந்தைகள் நீங்கள் -- எனினும்
இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்
இன்று குழந்தைகள் நீங்கள்!
பல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,
பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,
அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!
அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!
------------
தூய்மை
தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!
வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!
உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!
துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் ல்லை -- சமயப்
புகைச்சலும் ல்லை -- மற்றும்
புன்செயல் ல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!
-----------
தமிழ்
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
-----------
தமிழ்ப் பள்ளு
ஆடுவமே பள்ளுப் பாடுவமே!-தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே-ஆடுவமே!
கோடுயர் வேங்கடக் குன்றமுதல்-நல்ல
குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே
நாம்-ஆடுவமே...
மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர்-தமிழ்
மக்களென் றேகுதித் தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம்-நல்ல
கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே
நாம்-ஆடுவமே...
மூலமென்றே சொல்லல் முத் தமிழாம்-புவி
மூர்க்கம் தவிர்த்ததும் அப்புத்தமுதாம்!
ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே-புவி
நாம் எனவே குதித் தாடுவமே!
நாம்-ஆடுவமே...
வானிடை மிதந்திடும் தென்றலிலே-மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ-இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே!
நாம்-ஆடுவமே...
கவிதைகள், காவியம், உயர்கலைகள்-உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம்-இங்குக்
குறையில வாம் என்றாடுவமே!
நாம்-ஆடுவமே...
-----------
எழுச்சி
தமிழனே இது கேளாய்-உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி துாக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
தமிழனே இது கேளாய்
தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
கனிச்சாறு போற்பல நுாலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும தமிழ்செய்த தொண்டு
தமிழனே இது கேளாய்
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்
-----------
எந்நாள்?
அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?
அந்த வாழ்வுதான்
இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார்
இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்;
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்!
புலி, வில், கயல் கொடி மூன்றினால்
புது வானமெங்கும் எழில் மேவிடும்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை,
பிற மாந்தர்க்கும் உயி ரானதே
பெறலான பேறு சிறி தல்லவே!
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
பாண்டியன்மேற் காதல்
பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி,
பாண்டியன் என் சொல்லை...
ஈண்டி மயலில்நான் துாண்டிலில் மீனாய்
மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட,
பாண்டியன் என் சொல்லை...
தமிழிசைப் பேச்சும், செங்கோலோச்சும்;
தடக்கை வீச்சும், காதலைப் பாய்ச்சும்,
இமைப்பினில் ஓடி அவனைத் தேடி
என்னகம் நாடி வாடிபோடி
பாண்டியன் என் சொல்லை...
பிரிந்திடும் போது நெஞ்சு பொறாது;
வரும்போது பேசா திருக்க ஒண்ணாது
எரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல்
என்னுயிர் தாவிடும் அன்னவன் மேல்
பாண்டியன் என் சொல்லை...
------------
தமிழன்
தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்;
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
தமக்கொரு தீமை. என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!
----------
உலகின் நோக்கம்
உவகை உவகை உலகத்தாயின் கூத்து!-வந்து
குவியுதடா நெஞ்சில்
உவகை உவகை!
எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி!
உவகை உவகை!
அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய்-இடையினின்
றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம்
தவழப் புதுநகை மின்னித் துலங்கும்
தாய்நின் றாடிய அடிஇடி முழங்கும்
உவகை உவகை!
தொடுநீள் வானப் பெருவில் ஒருகையில்-பெரும்புறம்
துாளா ஆகிடவரு கதிர்வேல் ஒருகையில்
அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி
ஆடும் திறல்கண் டோடும் பகைதான்
உவகை உவகை!
அகலொளி விளக்கு நிலவினில் அவள்ஆடும்-ஆடிநின்
ஆறந்தமி ழின்பத் தென்பாங்கிற் பாடும்
துகளறு விண்மீன் துளிகள் பறக்கத்
துடிஇடை நெளியும் துணைவிழி உலவும்
உவகை உவகை!
------------
உழத்தி
களை யெடுக்கின்றாள்-அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ
களையெடுக்கின்றாள்!
வளையல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!
கவிழ்ந்த தாமரை
முகம் திரும்புமா? -அந்தக்
கவிதை ஓவியம்
எனை விரும்புமா?
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?- களை
.செந்நெல் காப்பது
பொதுப்பணி செய்யல்!-ஆம்.
என்ற நினைவினால்
என்னருந் தையல்,
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை
----------
ஆலைத் தொழிலாளி
ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின்...
காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,
வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே....
மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே...
குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும்
குந்திப்பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும்
வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே...
-----------
இரும்பாலைத் தொழிலாளி
அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ருயிராம்!
பழுப்பேறக் காய்ச்சிய இரும்பினைத் துாக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி-இவ்
வழுக்கு துணிக்குள்ளே...
பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி லைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே....
அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
.அறம்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ. என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே...
வெய்யில்தாழ வரச் சொல்லாடி-இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்எனறு
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கூரைக்குப்பின்னால் இருக்கும் தென்னை-அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?
வெய்யில் தாழ வரச் சொல்லடி
தாய் அயலுார் சென்றுவிட்டாள்; நாளை-சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள்
மாறிவிட்டால் சை எல்லாம் துாளே
வெய்யில் தாழ வரச் சொல்லடி.
------------
கூடைமுறம் கட்டுவோர்
கசங்கு சீவடி பரம்பு சொற்றடி
கைவேளை முடித் திடலாம்-நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயபைக் கொடுத் திடலாம்
பிசைந்து வைத்துள மாவும்தேனும்
பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்
கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே-இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப்பதுதான் வேலை
காடுவெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண்ணாட்டி
சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது-நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடியாது
பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும்-அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.
-----------
பூக்காரி
சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!
பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து.....
தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு
பூவை .என்பேர் பூவை. என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து....
காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து - பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ !
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து....
----------
குறவர்
காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்
சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக்கை
புதுப் புதுக்கண் காட்டினாள்
ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்
தேடத்தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடுபட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!
-----------
தபாற்காரன்
வருகின்றார் தபால்காரர்-கடிதம்
தருகின்றாரோ இல்லையோ?
வருகின்றார் தபால்காரர்!
தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்
குரியதோ என் தந்தைக் குரியதோ?
வருகின்றார் தபால்காரர்!
வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோ
மாமியார் வரைந்ததோ?
திருமணாளர் வரைந்த தாயினும்
வருவதாய் இருக்குமோ இராதோ?
வருகின்றார் தபால்காரர்!
அன்பர் அவர் வருவதாயினும்
ஆடி போக்கியோ விரைவிலோ?
இன்று போதல் நுாறாண்டு போதலே
அன்றி நாளைஎன் பதுவேன் சாதலே!
வருகின்றார் தபால்காரர்!
----------
சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்
மந்தையின் மாடு திரும்பையிலே-அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!
தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன்
துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன்
எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி!
கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்
.கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக்
கோடை படுத்திடும் நாளில்?. என்றாள்
.தொட்டியின் தண்ணீர் கொதிக்கு. தென்றான்-.நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு. தென்றான்.
-----------
ஓவியக்காரன்
ஓவியம் வரைந்தான்-அவன் தன்
உளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு
வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே
ஓவியம் வரைந்தான்!
கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே
ஓவியம் வரைந்தான்!
காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன் கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்
ஓவியம் வரைந்தான்!
---------
தமிழ்நாடு
சேரன் செங்குட்டு வன்பிறந்த
வீரம் செறிந்த நாடிதன்றோ?
சேரன் செங்குட்டுவன்...
பாரோர் புகழ் தமிழ்ச் சேயே
பகை யஞ்சிடும் தீயே
நேரில் உன்றன் நிலையை நீயே
நினைந்து பார்ப் பாயே.
சேரன் செங்குட்டுவன்...
பண்டி ருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழுதுமே
கண்டி ருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணு றக்கம் ஏனோ?
சேரன் செங்குட்டுவன்
-----------
தமிழ்
வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே!
வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வெண்ணிலாவும் வானும் போலே!
வையகமே உய்யுமாறு
வாய்த்த தமிழ் என்அரும்பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்)கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
வெண்ணிலாவும் வானும் போலே!
------------
அன்றும் இன்றும்
பண்டு தமிழ்ச் சங்கத்தை
உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,
விண்டு புகழ்ந்து பாடி
இன்னும் வியக்கின்றார் இப்பாரெல்லாம்.
அண்டும் புலவர்க் கெல்லாம்
அந்நாள் மன்னர் கொடுத்த கொடை தானே,
தண்டமிழ் இந்நாள் மட்டும்
சாகாமைக்கே அடிப்படை மானே!
புலவர் நினைப்பை யெல்லாம்
பொன் னெழுத்தால் பதித்து நுாலாக்கி,
நலம் செய்தா ரடிமானே
நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி!
இலை என்று புலவர்க்கோ
எடை யின்றிப் பொன்த்நதார் மூவேந்தர்,
கலை தந்தார் நமக்கெல்லாம்
அதனால் இன்றைக்கு நாம்தமிழ் மாந்தர்!
---------
பெற்றோர் ஆவல்
துன்பம் நேர்கையில் யாழ்எ டுத்துநீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?-எமக்
கின்பம் சேர்க்கமாட்டாயா?-நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட்டாயா?-கண்ணே
அல்லல் நீக்கமாட்டாயா? துன்பம்...
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க-எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க-நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?-கண்ணே
ஆடிக் காட்டமாட்டாயா? துன்பம்...
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது-யாம்
அறிகி லாத போது-தமிழ்
இறைவ னாரின்திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட்டாயா?-நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? துன்பம்...
புறம்இ தென்றும்நல் லகம்இ தென்றுமே
புலவர்கண்ட நுாலின்-நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் கமாட் டாயா?-தமிழ்ச்
செல்வம் கமாட்டாயா? துன்பம்
---------------
ஆண்பெண் நிகர்
ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை
வாணிகம் செய்யலாம் பெண்கள்!-நல்
வானுார்தி ஓட்டலாம் பெண்கள்!
ஆணுயர் வென்பதும்....
ஏணை அசைத்தலும் கூடும்-அதை
யார் அசைத் தாலுமே ஆடும்!
வீணை மிழற்றலும் கூடும்-அதை
யார் அசைத் தாலுமே ஆடும்!
வீணை மிழற்றலும் கூடும்-அது
மெல்லியின் விரலுக்கா வாடும்?
நாணமும் அச்சமும வேண்டும்-எனில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும்.
ஆணுயர் வென்பதும்...
சேயிழை மார்நெஞ்ச மீது-நாம்
சீறுபுலி யைக்காணும் போது
தீயதோர் நிலைமைஇங் கேது?-நம்
தென்னாட்டின் அடிமைநில் லாது.
துாயராய்த் தொண்டாற்ற வேண்டும்-பல
தொழிற்கல்வி யுங்கற்க வேண்டும்.
ஆணுயர் வென்பதும்...
-----------
பெண்கள் கடன்
மேகலையும் நற்சிலம்பும் பூண்டு-பெண்ணே
வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு!
போகவில்லை அகம்புறுமும், நாலிரண்டும் நெஞ்சம்
புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்
மேகலையும் நற்சிலம்பும்...
தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய்-பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!
கமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்
தமிழர் மரபினை உன்னுயிர் என்பதைக் கண்டாய்.
மேகலையும் நற்சிலம்பும்...
மூவேந்தர் கொடி கண்ட வானம்-இன்று
முற்றிலும் கான்கிலாய் ஏனும்
ஓஓஎனப் பகை தானும்
ஓடவே காத்திடுக மானம்
காவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில்
கதலியும் செந்நெலம் பயனைப் புரிந்தமணி வீட்டில்,
மேகலையும் நற்சிலம்பும்...
-------------
தந்தை பெண்ணுக்கு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
பண்ணுவார் என்னைவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் ருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த த்தமிழ் நாடு -- பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,