நாலடியார் பாடல்கள்

நன்றி : சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் தெளிபொருள் விளக்கமும் நூல்
உரையாசிரியர் : வை.மு.சடகோபராமாநுஜாசாரியர், சே.கிருஷ்ணமாசாரியர். (1921)9 ஆம் அதிகாரம் - பிறர்மனை நயவாமை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
83


புக்கவிடத் தச்சம் போதரும்போ தச்சந்
துய்க்குமிடத் தச்சந் தோன்றாமற் காப்பச்ச
மெக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ
வுட்கான் பிறனில் புகல்.

( பாடலின் விளக்கம் )

இச்செய்யுளின்வழி பிறன்மனை புகுபவரது அச்சத்தின் தன்மை விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. காமங் காரணமாகப் பாவ வழியில் நிற்பவர்களாகிய பெண்வழிச் செல்பவரும், விலைமகளிரோடும், இழிகுலமகளிரோடும் கூடி இன்பமனுபவிப்பவரும், அறத்தையும், பொருளையும் இழத்தலேயன்றி, பிறன்மனை நயப்பவர் அச்சத்தாலும் தாம் கருதிய இன்பத்தையும் இழக்கின்றாராதலால், அச்சத்தின் கொடுமையைத் தனியே கூறவேண்டுவதாயிற்று.


12 ஆம் அதிகாரம் - மெய்ம்மை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
112


தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை
யெக்காலுங் குன்ற லிலாரவ- ரக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந்
தேவரே தின்னினும் வேம்பு

( பாடலின் விளக்கம் )

அக்காரம் மிகத்தாழ்ந்தவர் தின்றாலும் இன்சுவை உடையதாவது போல தக்கார் எப்பொழுதும் நற்குணமுடையவராவர். வேம்பு தேவர்கள் தின்றாலும் கைப்பையே உடையதாவது போல, தக்கவரல்லாத அயோக்கியர் எப்போதும் துர்க்குணங்களையே யுடையவராவார் என்பதாம் - எடுத்துக்காட்டு உவமையணி.


13 ஆம் அதிகாரம் - தீவினையச்சம்

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
125


பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.

( பாடலின் விளக்கம் )

அறிவுடையார் தமக்குட் செய்து கொண்ட நட்பு முன் சுருங்கிப் பின் பெருதகுதற்கும், அறிவிலார் தமக்குட் செய்து கொண்ட நட்பு முன்பெருகிப் பின் சுருங்குதற்குங் காரணம், தமக்குள் ஒருவர் ஒருவருடைய குணத்தை முன் அறியாமலிருத்தலும், பின் அறிதலுமென்க. "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையர் நட்பு" என்னுந் திருக்குறளை நோக்குக.


14 ஆம் அதிகாரம் - கல்வி

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
134


வைப்புழிக் கோட்படா வாய்த் தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பி னரசர் செறின் வவ்வா
ரெச்ச மென வொருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற் றல்ல பிற

( பாடலின் விளக்கம் )

செல்வப் பொருள்கள் கள்ளராலும் ஞாதியர் முதிலியோராலுங் கவர்ந்து கொள்ளப்படும். பிறர்க்குக் கொடுத்தாற் செலவழிந்து போம். கொடுங்கோன் மன்னராற் கொள்ளை கொள்ளப்படும். கல்விப் பொருளுக்கு இத்தன்மையான அபாயங்கள் ஒன்றும் இல்லை. ஆதலால், செல்வப் பொருளினுங் கல்விப் பொருளே சிறந்த தென்பது கருத்து. வேற்றுமையணி - செல்வத்தினுங் கல்வி சிறந்ததென்பதற்குக் காரணங்காட்டி, அதனை மக்கட்குச் செய்யவேண்டுவது கடமை யென்பது, இதனாற் கூறப்பட்டது.


14 ஆம் அதிகாரம் - கல்வி

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
135


கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதி
னாராய்ந்
தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகிற் றெரிந்து.

( பாடலின் விளக்கம் )

கல்வி கடற்போற் பரந்தும், ஆயுள் நாள் மிகக் குறுகியும், அவ்வாழ்நாளிலும் கற்கவொட்டாது தடைசெய்யும் பல வகையாகிய பிணிகள் மிக்கும் இருத்தலால், பெறுதற்கரிய மனிதசனமெடுத்தோர் சாரமானவற்றைப் படித்து உய்யக்கடவரென்பதாம்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,