பழமொழி நானூறு
ஆசிரியர் மூன்றுறை அரையனார்


1. கல்வி
1
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே யில்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்'.

2.
சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்
'கற்றொறுந்தான் கல்லாத வாறு'.

3.
விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட ! என்னை
'பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்'.

4.
ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.

5.
உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்றும்
கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
'கற்றலின் கேட்டலே நன்று'.

6.
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்'.

7.
புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
'பாம்பறியும் பாம்பின கால்'.

8.
நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்றென்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.

9.
சுற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'.

10.
விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
'மதிப்புறத்துப் பட்ட மறு'.

2. கல்லாதார்
11.
சுற்றானும் சுற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
'நாவற் கீழ்ப் பெற்ற கனி'.

12.
கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்!
'வினாமுந் துறாத உரையில்லை; இல்லை
கனாமுந் துறாத வினை'.

13.
கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அரு கிற்பார்க்கும்
'சொல்லாக்கால் சொல்லுவ தில்'.

14.
கல்வியான் ஆய சுழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீயவாம் - எல்லாம்
இவர்வரை நாட! 'தமரையில் லார்க்கு
நகரமும் காடுபோன் றாங்கு'.

15.
கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை ஒருவற்கு - நல்லாய் !
'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு'.

16.
கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் 'முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு'.

3.அவையறிதல்
17.
கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் ! 'தோற்பன
கொண்டு புகாஅர் அவை'.

18.
ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'.

19.
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் 'முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு'.

20.
கல்லாதும் கேளாதும் கற்றாரவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்(று) - எல்லருவி
பாய்வரை நாட! 'பரிசழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இலர்'.

21.
அகலம் உடைய அறிவடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
'பாண்சேரி பற்கிளக்கு மாறு.

22.
மானமும் நாணும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல் 'நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல்'.

23.
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளிக் கூறல்
'மிளகுளு வுண்பான் புகல்'

24.
நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்'.

25.
நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
'கடலுளால் மாவடித் தற்று'.

4. அறிவுடைமை
26.
அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'.

27.
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
பாயிருள் நீக்கும் 'மதியம்போல் பன்மீனும்
காய்கலா வாகும் நிலா'.

28.
நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட!
'கற்றறிவு போகா கடை'.

29.
ஆணம் உடைய அறிவினார் தந்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
'யானையால் யானையாத் தற்று'.

30.
தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'.

31.
பொற்பவும் பொல்லா தனவும் புனைந்திருந்தார்
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'.

32.
பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்து
வேயின் திரண்டதோள் வேற்கண்ணாய் 'விண்ணியங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்'.

33.
அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின் றதனால்
'திருவினும் திட்பம் பெறும்'.

5. ஒழுக்கம்
34.
விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் -பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர ! அஃதன்றோ
'நெய்த்தலைப்பால் உக்கு விடல்'

35.
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட ! 'நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு'.

36.
தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது
நின்னடை யானே நடஅத்தா ! 'நின்னடை
நின்னின்(று) அறிகிற்பார் இல்'.

37.
நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
'ஓர்த்தது இசைக்கும் பறை'.

38.
தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியனுலகில் 'வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்'.

39.
கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்(து) ஈண்டிய
'கல்தேயும் தேயாது சொல்'.

40.
பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்
தணியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப!
'பிணியீ டழித்து விடும்'.

41.
உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வதொன் றில்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப !
'பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல்'.

42.
ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்(கு) எனல்வேண்டா 'தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்'.

6. இன்னா செய்யாமை
43.
பூவுட்கும் கண்ணாய் ! பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடத் திண்ணன்பி னார்க்கேயும்
'நோவச்செய் நோயின்மை இல்'.

44.
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனம்பொன் அவிர்சுணங்கி பூங்கொம்பர் அன்னாய்!
'தனக்கின்னா இன்ன பிறர்க்கு'.

45.
ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்
'கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்.

46.
நெடியது காண்கிலாய் நீயொளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
'முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்'.

47.
தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்'

48.
மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்
'கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்'.

49.
நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்
கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் - சான்றவர்க்குப்
பார்த்தோடிச் சென்று கதம்பட்டு 'நாய்கவ்வின்
பேர்த்துநாய் கவ்வினார் இல்'.

50.
காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து) ஊக்கல் 'குறுநரிக்கு
நல்லாநா ராயம் கொளல்'.

7. வெகுளாமை
51.
இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி
'நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு'.

52.
ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப !
'தெளியானைத் தேறல் அரிது'.

53.
உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல 'நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்'.

54.
எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்
வைதாராக் கொண்டு விடுவர்மன் - அஃதால்
புனற்பொய்கை ஊர! 'விளக்கெலி கொண்டு
தனக்குநோய் செய்து விடல்'.

55.
தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க - பரிவில்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.

56.
கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்
பொய்யாகத் தம்மை பொருளல்லார் கூறுபவேல்
மையார உண்டகண் மாணிழாய் ! என்பரிவ
'செய்யாத செய்தா வெனில்?'

57.
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்
முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப்
'பசுக்குத்தின் குத்துவார் இல்'.

58.
நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவுரை
பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ
'தீயில்லை ஊட்டும் திறம்'.

59.
சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால் - ஒறுத்தாற்றின்
வானோங்கு மால்வரை வெற்ப! பயனின்றே
'தானோன் றிடவரும் சால்பு'.

8. பெரியாரைப் பிழையாமை
60.
அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! 'குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று'.

61.
ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.'

62.
எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் 'எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்'.

63.
முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர ! 'ஈனுமோ
வாழை இருகால் குலை'.

64.
நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே
கொடும்பாடு உடையான் குடி'.

9. புகழ்தலின் கூறுபாடு
65.
செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம்படார் - எய்த
நலத்தகத் தம்மைப் புகழ்தல் 'புலத்தகத்துப்
புள்ளரைக் கால் விற்பேம் எனல்'

66.
தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்'.

67.
தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'.

68.
பல்கிளையுள் பார்த்துறான் ஆகி ஒருவனை
நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்
உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
'நிரையுள்ளே இன்னா வரைவு'.

10. சான்றோர் இயல்பு
69.
நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
'தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா யிரவர்க்கு நேர்'.

70.
ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் 'பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி'.

71.
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
'ஈடில் லதற்கில்லை பாடு'.

72.
இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு
அணிமலை நாட ! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'.

73.
கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன றறிவாரின் மாணமிக நல்லால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா 'கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல்'.

74.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப !
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.

75.
பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.

76.
எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்
எனச்செய்தார் மாணா வினை'.

77.
தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை -ஏய்ப்பார்முன்
சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
'வில்லோடு காக்கையே போன்று'.

78.
மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப !
'கடலொடு காட்டொட்டல் இல்'.

79.
நிரைதொடி தாங்கிய நீள்தோள்மாற்(கு) ஏயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கண் குற்றம்
மரையா கன்றூட்டும் மலைநாட! 'மாயா
நரையான் புறத்திட்ட சூடு'.

80.
கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
'குன்றின்மேல் இட்ட விளக்கு'.

11. சான்றோர் செய்கை
81.
ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.

82.
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்(டு) அறிவாம்என்(று) எண்ணி இராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! 'சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன்'.

83.
மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?
மையுண்(டு) அமர்ந்தகண் மாணிழாய்! 'சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்'.

84.
ஆண்டீண்டு எனவொன்றோ வேண்டா அடைந்தாரை
மாண்டிலா ரென்றே மறைப்பக் கிடந்ததோ?
பூண்தாங்கு இளமுலை பொற்றொடி! 'பூண்ட
பறையறையார் போயினார் இல்'.

85.
பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ ! 'கடனன்றோ
ஊரறிய நட்டார்க்கு உணா'.

86.
தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு'.

87.
இறப்ப எமக்கீ(து) இழிவரலென்(று) எண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
'தால அடைக்கலமே போன்று'.

88.
பெரிய குடிப்பிறத் தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
'பூவோடு நாரியைக்கு மாறு'.

89.
சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே -தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய் ! 'மோரின்
முதுநெய் தீதாகலோ இல்'.

12.கீழ்மக்கள் இயல்பு
90.
மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்'

91.
தக்காரோ(டு) ஒன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரைத் தாம்சேறார்
கொக்கார் வளவய லூரா! 'தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல்'.

92.
தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத எல்லாம் கணக்கு?'.

93.
பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
'உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு'.

94.
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும் 'ஆகாதே
உண்டது நீலம் பிறிது'.

95.
தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே யாயினும் நன்கொழுகார் 'கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு'.

96.
காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும் 'குறும்பூழ்க்குச்
செய்யுள(து) ஆகும் மனம்'.

97.
கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்(று) 'அஞ்சாதே
தின்பது அழுவதன் கண்'.

98.
மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீட்டதற்குத்
தக்கது அறியார் தலைசிறத்தல் - எக்கர்
அடும்(பு)அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'.

99.
மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து) உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்
காணாக் களிக்கும் களி'.

100.
உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
'முழங்குறைப்ப சாண்நீளு மாறு'.

101.
அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து) அறிகலர் ஆகிச்சி தைத்தெழுப
கல்லாக் கயவர் இயல்போல் 'நரியிற்(கு) ஊண்
நல்யாண்டும் தீயாண்டும் இல்'.

102.
கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.

103.
நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
'குரங்கினுள் நன்முகத்த இல்'.

104.
ஊழாயி னாரைக் களைந்திட்(டு) உதவாத
கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும்
தீஞ்சொல் மழலையாய் ! தேனார் 'பலாக்குறைத்துக்
காஞ்சிரை நட்டு விடல்'.

105.
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர ! அதுவன்றோ
'நாய்மேல் தவிசிடு மாறு'.

106.
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற மாண்ட மனமுடையர் ஆகாத
'கூதறைகள் ஆகார் குடி.'


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,