புறநானூறு
பாடல் எண் 182


புறநானூற்றுப் பாடல்

( கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதியது - இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னர் கலமூர்ந்து செல்கையில் கடலில் கலங்கவிழ்ந்து மாண்டார். இதனால் அவரது பெயர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்றாயிற்று. கடலுள் மாய்வதற்கு முன், தமிழ்ச் சான்றோர்களது சான்றாண்மையை வியந்து கூறுவதாக இப்பாடலை எழுதியுள்ளார் )

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

கஅஉ


உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியரும் உண்டலுமிலரே முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே


( பாடலின் விளக்கம் )கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி - தமெக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெரியோர் உளராதலால் இவ்வுலகம் உளது. இன்றேல், இது மண்புக்கு மாயும் என்ற கருத்தால் - தமெக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் அதனைத் தமித்திருந்துண்ணார். யாரையும் வெறார். பிறர் அஞ்சுவ தஞ்சுவர். அஞ்சி அதனைத் தீர்த்தற்கண் சோம்பார். புகழ் பொருட்டுத் தம் உயிரையும் ஈவர். பழியால் உலக முழுதாளும் உயர்வு வரினும் வேண்டார். மனக் கவலையும் கொள்ளார். இவ்வியல்பினோடு பிறர் நலம் பேணும் பெரியோர் உளர். அவரால் இவ்வுலகம் உளதாகின்றது - என்று இப்பாடலைப் பாடியுள்ளார்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,