புறநானூறு
பாடல் எண் 195


புறநானூற்றுப் பாடல்

பாடலைப் பாடியவர் : நரிவெரூஉத் தலையார். இந்தப்பாட்டின் வழி, இவர் காலத்தில் சான்றோர் சிலர் பரிசிற்றுறையிலும், அகத்துறையிலும் தம் புலமை வளத்தையும், போர்த்துறையில் மெய் வளத்தையும் பயன்படுத்தக் கண்டு நன்னெறிக்கண் பயன்படுமாறு அறிவுறுத்த முற்பட்டு இப்பாடலை எழுதியுள்ளார்.

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

௧௯௫


பல்சான் றீரே பல்சான் றீரே
கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படை கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை இரங்குவீர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் அதுதான்
எல்லாரு முவப்பது
அன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே


( பாடலின் விளக்கம் )நரைத்து முதிர்ந்த சான்றீரே, கூற்றுவன் போந்து நும்முயிரைப் பற்றுங்கால் நீவீர் வருந்துவீர்கள், உங்களால் மக்கட்கு நல்லது செய்தல் இயலாதாயின், அவர்கட்குத் துன்பம் விளைக்கும் துறையில் வேந்தர்களையும், பிறரையும் ஊக்குதலாகிய அல்லது செய்தலை ஒழிமின். அதுவே எல்லார்க்கும் உவப்பைத் தருவது, நன்னெறியுமாவது எனத் தெருட்டியுள்ளார்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,